Election bannerElection banner
Published:Updated:

பேசிப் பழகலாம் வாங்க !

கோ.செந்தில்குமார் படங்கள்: பா.கந்தகுமார்

##~##

'அன்புத் தாய்மார்களே... அருமைப் பெரியோர்களே!’ என்று தொடங்கும் சாலமன் பாப்பையாவின் தமிழ் நடையை ரசிப்பவர்களுக்கும், 'அவிய்ங்க, இவிய்ங்க’ என்று மதுரைத் தமிழ்ப் பேசி மயக்கும் திண்டுக்கல் லியோனியை ரசிப்பவர்களுக்கும் நிச்சயம் திருவண்ணாமலை சபரியையும் பிடித்துப்போகும்.  தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, 'அருணை இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பின் மூலம் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்குப் பட்டிமன்றப் பயிற்சி அளித்து வருகிறார் சபரி.

எம்.ஏ., பி.எட். முடித்து 22 ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த 18 ஆண்டுகளாக இந்த அமைப்பை நடத்திவருகிறார். இந்த 'அருணை இலக்கிய வட்டம்’ மூலம் கிராமங்கள் தோறும் சென்று குழந்தைகள், மாணவ மாணவியர்களை வைத்து பட்டிமன்றமும் நடத்துகிறார். பட்டிமன்றங்களின் நடுவர்... இவரேதான்.

பேசிப் பழகலாம் வாங்க !

இவர் கூறுகிறார், ''திருவண்ணாமலை மண்டித் தெருவில் சுமை தூக்கும் ஒரு தொழிலாளியின் மகன் நான். எனக்கு மூன்று வயது இருக்கும்போதே என் தாய் இறந்துவிட்டார்.  அப்பா குப்புசாமிதான் என்னை வளர்த்தார். அவர் படிக்காதவராக இருந்த காரணத்தால், என்னை வறுமையின் பிடியிலும் படிக்கவைத்தார். தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன். அப்பாவுக்கு தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களின் பேச்சு என்றால் உயிர். சுற்றுவட்டாரத்தில் எங்காவது அவர்கள் பேசுகிறார்கள் என்றால், கூடவே என்னையும் அழைத்துச் சென்றுவிடுவார். என்னையும் பட்டிமன்றங்கள், பொதுக்கூட்டங்கள் கேட்பதற்கு ஊக்குவிப்பார். வீடு வந்ததும் அவர்கள் என்ன பேசினார்கள் என்று ஆர்வமாக விசாரிப்பார்.

அவருடைய ஊக்கம்தான் இன்று என்னை இந்த அளவுக்கு வளர்த்து, மற்றவர்களையும் வளர்க்க உதவியாக இருக்கிறது. கல்லூரி நாட்களில் இருந்தே மேடை ஏறி பேசத் தொடங்கினேன். கல்லூரி விட்டு வீடு திரும்பியதும் ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். இந்த அருணை இலக்கிய வட்டம், 18 ஆண்டுகளுக்கு முன்பு சிவஜெயராஜ், வாசு, பிரசன்னா, நாராயணன் போன்ற எனது மாணவர்களால் என்னைத் தலைவராகக்கொண்டு தொடங்கப்பட்டது.

பேசிப் பழகலாம் வாங்க !

நான் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றங்களில் கண்டிப்பாகப் பெரியவர்களுடன் குழந்தைகளும் கலந்துகொண்டு பேசுவார்கள். தீர்ப்பு வழங்கியதும் குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த புத்தகங்களைப் பரிசளிப்பேன். ஒருமுறை ஒரு கிராமத்தில் ஒரு கோயில் விழாவில்  பட்டிமன்றம் நடத்தினோம். 'காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா?’ என்பதுதான் தலைப்பு. 'சமூகத்தில் சமத்துவம் மலர்வதற்குக் காதல் திருமணம்தான் சரியான வழி’ என்று தீர்ப்பு சொல்லிவிட்டு இறங்கினால், 'காதல் திரு மணத்தை ஊக்குவிக்கிறாயா?’ என்று வாக்குவாதம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிறகு கலப்புத் திருமணத்தால் ஏற்படும் நன்மைகளை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.

பேசிப் பழகலாம் வாங்க !

இந்தப் பட்டிமன்றப் பயிற்சி வகுப்புகள் மூலம் 300-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் உரு வாகி இருக்கிறார்கள். நிச்சயம் இத்தகையசமூகச் சீர்திருத்தக் கருத்துகளை அவர்களும் உள்வாங்கிக் கொள்வார்கள், மற்றவர்களுக்கும் கொண்டுசேர்ப் பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'' என்று பூரிக்கிறார் சபரி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு