Election bannerElection banner
Published:Updated:

என் ஊர் !

மணக்கும் பிரியாணி...நினைக்கும் கவிதை !ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்

வாணியம்பாடி

##~##

''ஜவ்வாது - மலை மகளின் சந்தன முந்தானை.பாலாறு தாய்ப்பால் ஊட்ட, உழும்போது ஒருகணம்ஓய்வுக் காக ஏர் நிறுத்தப்பட்ட நேரத்திலும் துளிர்ப்பதை நிறுத்தாத வளத்துக்கு வாழ்க்கைப்பட்ட ஊர் வாணியம்பாடி!'' என்று அழகு தமிழில் ஆரம்பித்து, தன் ஊரான வாணியம்பாடி குறித்த நினைவு களைப் பகிர்ந்துகொள்கிறார், பேச்சாள ரும் பேராசிரியருமான 'அகடவிகடம்’ அப்துல் காதர்!

''தோல் பதனிடும் தொழிலால், அந்நி யச் செலாவணி அதிகம் சுரக்கும் அட்சய பாத்திரமாக இருக்கிறது வாணியம்பாடி. காலனி ஆதிக்கம் செய்த நாடுகளிலும் இவ்வூரின் காலணி, ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கிறது.

என் ஊர் !

உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட உள்ளூர் முஸ்லிம்கள் வ‌டம்பிடித்துத் தொடங்கிவைப்பார்கள், அருள் மிகு பொன்னியம்மன் ஆலயத் தேரோட் டத்தை. பெரியபேட்டை தர்ஹா இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களால் 'உருஸ்’ திருவிழாவின்போது ததும்பி வழிகிறது. பழைய வாணியம்பாடியில் உள்ள அதி தீஸ்வரர் ஆலயம் வரலாற்றுத் தொன்மை யானது. அதிதீ என்றால் விருந்தினர் என்று அர்த்தம். இங்கு விருந்தினர் ஆக வந்த சிவபெருமான், ஊரும் மக்களும் பிடித்துப்போய்விட்டதால், இங்கேயே கோயில்கொண்டு தங்கிவிட்டார் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை. புதூரின் சர்ச்சும் அதன் ஆதரவில் இயங்கும் ஆதரவற்றோர் மாண வர் விடுதியும் இந்த மண்ணின் மாண்புக்கு அடையாளங்கள்.

நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம், பல கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறது. அதில் ஒன்றுதான் கவிக்கோவும் நானும் 36 ஆண்டுகளாகப் பணியாற்றிய இஸ்லாமிய‌ ஆண்கள் கல்லூரி. முன்னாள் அமைச்சர்கள் சாதிக் பாட்சா, துரைமுருகன், முன்னாள்

என் ஊர் !

சட்டப்பேரவை உறுப்பினர் ஞானசேகரன், நடராசன்  ஆகியோர் எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்கள்.

1984-ல் காஷ்மீரில் ஒரு மாநாட்டுக் காகச் சென்று திரும்பும்போது பிரிவினைவாதத் தலைவர் பிந்தரன் வாலே, பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் சுடப்பட்டதால், பஞ்சாப் எல்லைக் கிராமமான  லகான்பூர் என்ற‌ சிற்றூரில், லட்சக் கணக்கான வாகனங்களை மத்திய அரசு 10 நாட்கள் நிறுத்திவிட்டது. 10 நாட்களும் எங்களோடு லட்சக்கணக் கான மக்களுக்குப் பந்திவைத்து, ருசியான உணவினை அங்கு உள்ள சீக்கிய மக்கள் வழங்கினார்கள். இரண்டு மூன்று நாட்களாகப் பந்தி பரிமாறும்போது என்னையும் என் குடும்பத்தாரையும் கவனித்த ஒரு சீக்கிய‌ சகோதரர், என் ஊர் பற்றி விசாரித்தார். நான் 'வாணியம்பாடி’ என்றேன். உடனே, 'உங்கள் குடும்பம் இந்த சர்வஜன பந்தியில் சாப்பிட வேண்டாம்’ என எழுப்பித் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, மீதி நாட்கள் முழுவதும் அவர் வீட்டிலேயே உணவு அளித்தார். 'ஏன் எங்களுக்கு மட்டும் இந்தத் தனி உபசரிப்பு?’ என்று கேட்டேன். 'நான் ஒரு லாரி டிரைவர். உங்கள் வாணியம்பாடி வழியாகச் செல்லும் போதெல்லாம் அங்குதான் உங்கள் ஊரின் புகழ்மிக்க பிரியாணி சாப்பிடுவேன். எனக்குப் பிரியாணி தந்த ஊர்க்காரரான தங்களை உபசரித்தது நான் சாப்பிட்ட பிரியாணிக்கான நன்றிக்காகவே!’ என்றார். ஆம், பிரியாணிகளின் தலைநகரம் வாணியம்பாடி.

'அந்நிய நாட்டவருக்குக் கட்டட அதிசயம் காட்ட வேண்டும் என்றால் ஆக்ராவுக்கு அழைத்துச் செல்லலாம். கவிதை அழகைக் காட்டவேண்டும் என்றால் வாணியம்பாடியைத் தான் காட்டவேண்டும்!’என்பார் கவிஞர் மு.மேத்தா. ஆம்,  மணக்கும் பிரியாணியும், எந் நாளும் நினைக்கும் கவிதையும் வாணியம்பாடியின் வனப்பு மிக்க அடையாளங்கள்‍!''

என் ஊர் !
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு