`ஸ்கூல் அட்மிஷனுக்குப் போட்டா போட்டி ...' - இப்படி ஒரு தலைப்பின் கீழ் உள்ள செய்தி, நிச்சயம் ஒரு தனியார் பள்ளி பற்றியதாக இருக்கும் என்பதே பலரின் யூகம். ஆனால், ஓர் அரசுப் பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்க்க, போட்டியிட்டு முந்துகின்றனர். அட்மிஷன் நாள்களில், திருவிழா மைதானம்போல மாறுகிறது பள்ளி வளாகம் என்று சொன்னால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும். ஆம் ! திருப்பூர் , பாண்டியன் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்தான் இந்தச் சேர்க்கைத் திருவிழா ஆண்டுதோறும் நிகழ்கிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தேகொண்டே வரும் சூழலில், இந்த ஆரோக்கியமான மாற்றம் எப்படிச் சாத்தியமானது ? அந்தப் பள்ளியின் ஆசிரியர் சந்தோஷிடம் பேசினோம் .
``திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எங்கள் பள்ளி. சென்செக்ஸ் பணி தொடர்பாக மக்களைச் சந்திக்கச் செல்லும்போதே பள்ளியைப் பற்றிய விவரங்களைக் கூறும் நோட்டீஸைக் கொடுத்துவருவோம். அதைத் தவிர, நாங்கள் கவனம் செலுத்துவது பள்ளியின் மேம்பாட்டில்தான். தற்போது, எங்கள் பள்ளியில் 641 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் இத்தனை மாணவர்கள் படிக்கும் தொடக்கப் பள்ளி மிகச் சொற்பமே. இதுவே எங்களுக்குப் பெருமையான ஒன்று. நான் இந்தப் பள்ளியில் 2005-ம் ஆண்டில் சேர்ந்தேன். அப்போது, 800-க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். அதனால், அருகிலேயே இரண்டு பள்ளிகளை அரசு தொடங்கியது. அதன்பிறகும் நானூற்றுக்குக் குறையாமலே மாணவர் எண்ணிக்கை இருந்தது. அது மேலும் அதிகரித்து 641 என உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் புதிய எண்ணிக்கை 230 கடந்துவிட்டது. 15 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் . இன்னும் இரண்டு காலியிடங்கள் உள்ளன .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளியின் கட்டடங்கள் அனைத்தும் புதியவை என்பதால், பெற்றோரின் கவனத்தை அவை ஈர்த்துவிடுகின்றன. மாணவர்களுக்குச் சுமையாக அல்லாமல், மகிழ்ச்சியோடு படிக்கும் சூழலை வகுப்பறைகளில் உருவாக்கித் தருகிறோம். பரதநாட்டியம், செஸ், யோகா உள்ளிட்டவற்றையும் பயிற்றுவிக்கிறோம். இவை, மாணவர்களின் உற்சாகத்தைத் தக்கவைக்கின்றன. மாணவர்கள் பங்களிப்பில் கடை ஒன்றையும் பள்ளியில் வைத்திருக்கிறோம். பொதுவாக, பள்ளிகளில் தரப்படும் புராஜெட்டுகளை, பெற்றோர்களே வீட்டில் செய்துகொடுப்பது, மாணவர்களின் கற்பனை ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. புராஜெக்ட்டின் நேர்த்தியைவிட மாணவர்களின் ஆர்வமும், அதைச் செய்யும் விதத்தில் இருக்கும் புதுமையுமே முக்கியமானவை. இதை மனதில்கொண்டு, நாங்கள் தரும் புராஜெட்டுகளுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்யும் கடையைப் பள்ளியிலே அமைத்துள்ளோம். இது, புராஜெட்டுகளை முழுக்க முழுக்க மாணவர்களே செய்யும் வகையில் நல்ல பலனைத் தருகிறது.
இரண்டு ஸ்மார்ட் கிளாஸ் அறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து பார்க்கும் விதமான பெரிய திரை உடையது. மற்றொன்றில் ஏசி வசதியும் உள்ளது. கணினிகளும் அதற்கான ஆசிரியர்களும் இருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்துச்செல்வோம். அங்கு அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கித்தரவும் செய்வோம். எங்கள் பள்ளியின் வளர்ச்சியில் பெற்றோர்கள் காட்டும் அக்கறை மகத்தானது. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோரையும் இணைக்கும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளோம். அவற்றில் மாணவர்களைப் பற்றியும் அவர்களுக்குத் தேவையானவற்றையும் பகிர்ந்துகொள்கிறோம். இவை அனைத்தும் சிறப்பாக நடைபெற முக்கியமானவர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜா.ஜோசப். அவரின் அக்கறையும் முயற்சியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் இவற்றைச் சாத்தியப்படுத்தி வருகின்றன.
எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு உண்டு. அதனால், என் வகுப்பறை சுவரில் ஓவியங்கள் வரைந்தேன். இதைப் பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் தங்கள் பணத்தை அளித்து, அதை இன்னும் விரிவுபடுத்த உதவினர். அனைத்து வகுப்புகளுக்கும் இதுபோல செய்ய கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஆகும். இதுவரை 55,000 ரூபாய் செலவழித்து வரைந்திருக்கிறோம். மீண்டும் தொகை கிடைக்கும்பட்சத்தில் முழுமையாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் " என்கிறார் பெருமையுடன் .
அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவது , நாட்டின் ஆரோக்கியத்துக்கான அடிநாதம்!