Published:Updated:

காசிமேட்டில் கிடைக்கும் 'தமிழ் பீட்ஸா!' - அட்டலாப்பத்தின் சுவையான வரலாறு

காசிமேட்டில் கிடைக்கும் 'தமிழ் பீட்ஸா!' - அட்டலாப்பத்தின் சுவையான வரலாறு

நம்ம `காசிமேடு' நாயகம் ஆயா சுடும் தமிழ் பீட்ஸாவைச் சாப்பிட்டால், ``இதான் டா சூப்பர் பீட்ஸா!'' என்று எல்லோரும் குதூகலிப்பார்கள்.

காசிமேட்டில் கிடைக்கும் 'தமிழ் பீட்ஸா!' - அட்டலாப்பத்தின் சுவையான வரலாறு

நம்ம `காசிமேடு' நாயகம் ஆயா சுடும் தமிழ் பீட்ஸாவைச் சாப்பிட்டால், ``இதான் டா சூப்பர் பீட்ஸா!'' என்று எல்லோரும் குதூகலிப்பார்கள்.

Published:Updated:
காசிமேட்டில் கிடைக்கும் 'தமிழ் பீட்ஸா!' - அட்டலாப்பத்தின் சுவையான வரலாறு

உலகத்தில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் பீட்ஸாவுக்கென்று உள்ள மரியாதை அகில உலகிலும் அலாதிதான். `காக்கா முட்டை' படத்தில் பீட்ஸா சாப்பிட்ட அந்தக் குடிசைவாழ் பசங்க, ``இதுக்கு நம்ம ஆயா சுட்ட தோசையே பரவாயில்லைடா!'' என்று க்ளைமாக்ஸில் சொல்வார்கள். ஒருவேளை நிஜவாழ்க்கையில் அந்தப் பசங்க நம்ம `காசிமேடு' நாயகம் ஆயா  சுடும் தமிழ் பீட்ஸாவைச் சாப்பிட்டால், ``இதான் டா சூப்பர் பீட்ஸா!'' என்று குதூகலிப்பார்கள்.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தையொட்டியிருக்கும் மீன் மார்க்கெட்டின் நுழைவாயிலிலேயே சின்னதாய்க் கூரை வேய்ந்து பீட்ஸா சுட்டு வியாபாரம் செய்கிறார் நாயகம் ஆயா. விறகு வைத்து அடுப்புமூட்டி மண் சட்டிகளையே `மைக்ரோ ஓவன்' போல பயன்படுத்தி சுடச்சுட மணக்க மணக்க `தமிழ் பீட்ஸா' சுட்டுக் கொடுக்கிறார் இந்த ஆயா . 40 ரூபாய்க்கு ஒரு பீட்ஸாவை வாங்கி கொஞ்சமாய் பிட்டு வாய்க்குள் தள்ளினால்... ப்ப்ப்ப்பா..! சும்மா சொல்லக் கூடாது. சுவை நம் நாவைச் சுண்டியிழுக்கிறது. ஒரு முழு பீட்ஸாவைச் சாப்பிட்டால் அதன் தித்திப்புச் சுவை அன்று முழுவதும் நம் நாக்கில் தங்கி விடுகிறது.

ஒரு சனிக்கிழமை காலை 8 மணிக்கு மீன் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்த நேரத்தில் காசிமேட்டுக்குச் சென்றிருந்தேன். கடையின் நடுநாயகமாய் அமர்ந்திருக்கும் நாயகம் ஆயாவிடம் இந்த `தமிழ் பீட்ஸா'வின் வரலாற்றைக் கேட்டேன். வெட்கத்தோடு பேச ஆரம்பித்தார் நாயகம் ஆயா,                                                                     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

       ``நான் இந்த ஆர்.கே நகர் சிங்கார வேலன் நகர்லதான் குடியிருக்கேன். என் பூர்வீகமே இந்த காசிமேடுதான். பரம்பரை பரம்பரையா மீன்பிடித் தொழில்தான் எங்க குடும்பத்து ஆம்பளைக செய்வாக. எங்க பாட்டி 50 வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பலகாரத்தை வீட்டு வாசல்ல சுட்டு வியாபாரம் பார்த்துச்சு. அதோட கைப்பக்குவம் எனக்கும் அப்படியே வந்துருச்சு. நான் 23 வருஷமா இந்தப் பலகாரத்தைச் சுட்டு விக்கிறேன். ரொம்ப நாளா இதை ஏரியா சனங்க `அட்டலாப்பம்'னு சொல்லி வாங்குவாங்க. ஆனா, இது இனிப்பு பீட்ஸானு சில வருஷமா இதைச் சாப்பிட்ட ஆட்கள் சொல்லிச் சொல்லி அப்படியே ஆயிடுச்சு. கடந்த ரெண்டு வருஷமா `பீட்ஸாக் கடை ஆயா'னு பேரு வாங்கிட்டேன். இவ்வளவுக்கும் நான் வாரத்துல சனி ஞாயிறு கிழமைகள்ல மட்டும்தான் இதைச்சுட்டு விப்பேன். மீன்பிடித் தொழில் நசிஞ்சாலும் குடும்பத்தைத் தனி ஆளா காப்பாத்த இந்த பீட்ஸா வியாபாரம்தான் துணையா இருக்கு. 3 பொண்ணு, ஒரே பையன். மூணு பொண்ணுகளையும் இந்த வியாபாரம் பார்த்தே கரையேத்திட்டேன். பையன் மட்டும் ஃபைபர் படகு வெச்சு மீன் பிடிக்கிறான். பொண்ணுகளும் மருமகள்களும் ஒத்தாசையா கடைக்கு வியாபாரத்துக்குக் கூட வருவாங்க. விடியக்காலை 4 மணிக்கு அடுப்பைப் பத்த வெச்சா அன்னிக்கு மதியம் 1 மணி வரைக்கும் வியாபாரம் பார்ப்பேன். சனிக்கிழமையைவிட ஞாயித்துக்கிழமை கூட்டம் அள்ளும். மீனு வாங்க வர்ற சனங்க `என்ன இது புதுசா இருக்கே?'னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டு அப்படியே ரெகுலரா வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. மீன் வாங்க காருல வர்ற ஆளுங்ககூட, முதல்ல தயக்கத்தோட இந்த பீட்ஸாவை வாங்கி டேஸ்ட் பண்ணுவாங்க. இதோட சுவை பிடிச்சதும் அடுத்தடுத்த வாரம் பார்சல்லாம் வாங்கிட்டுப்போவாங்க. இதுலயே முட்டை போடாம வெஜிடேரியனாவும் செஞ்சு கொடுப்பேன். முட்டைகள் அளவு கூடிட்டா அதோட டேஸ்ட்டே தனியா இருக்கும். எக்ஸ்ட்ரா காசு கொடுத்து நிறைய முட்டைய ஊத்திச் சுட்டுக் கொடுக்கச் சொல்லி வாங்கிட்டுப் போவாங்க சிலபேரு. அதனால லாபத்தைக்கூட பெருசாப் பார்க்காம, சுகாதாரம சுத்தமான பொருள்கள்ல செஞ்சு கொடுக்குறேன். அதனால 1000 ரூபாய்க்குப் பொருள் வாங்கி இதைச் சுட்டேன்னா 1500 ரூபாய்க்கு விப்பேன். 500 ரூபாய் லாபம் நிக்கும். குறைஞ்ச லாபம்னாலும் நல்ல பேரு கிடைக்குதே. அது போதும்.'' என்றவரிடம், ``இவ்வளவு வரவேற்பு இருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய கடையாப் போட்டு வியாபாரத்தைப் பெருசாக்கலாமே ஆயா?'' என்று கேட்டேன். 

 ``ஆமாப்பா... அந்த யோசனையும் எனக்கு இருக்கு. பணம் வேணுமேனு தயக்கமா இருந்துச்சு... இனி பண்ணலாம்னு இருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி லோக்கல்ல பேக்கரி ஆர்டர்லாம் வந்தது. ஆனா, பொறுப்பா செய்ய கொஞ்சம் உடம்புக்கு முடியாமப் போச்சு. இப்ப ரெண்டு வருஷமா உடம்புக்கு பரவாயில்லை. அதனால இந்த யோசனைய செஞ்சுட வேண்டியதுதான். ஆனாலும் இந்த மீன் வாசத்தோட இப்படிச் சின்னதாக் கடற்கரையிலயே கடையப் போட்டு அதுல வியாபாரம் பார்க்குற சுகமே தனிப்பா! இன்னிக்குக் கூட ஒருத்தர் புதுசா வாங்கிச் சாப்பிட்டுட்டு அவரோட செல்போன்ல வீடியோவும் போட்டோவும் பிடிச்சுட்டுப் போயிருக்காரு. `இதே கைப்பக்குவத்துல `உனக்கு கடை வெச்சுக் கொடுத்தா பண்ணுவியா ஆயா?'னு கேட்டுட்டுப் போயிருக்காரு. நாலஞ்சு பேரு என்னை வீடியோ புடிச்சு கம்ப்யூட்டர்லலாம் (ஃபேஸ்புக்) போட்டிருக்காங்களாமே... என் மருமக கொண்டு வந்து காட்டுனா. `காசிமேடுல தமிழ் பீட்ஸா சுடும் ஆயா'னு போட்டிருந்துச்சு அதுல. ரொம்பப் பெருமையா இருக்குது. ஆனா, பயமாவும் இருக்குது தம்பி. இந்த நல்ல பேரை நாம கடைசிவரை தக்க வெச்சுக்கணுமே!'' என்று சொல்லியபடி மாவைச் சட்டியில் ஊற்றி, தேங்காய் துறுவலைத் தூவி, ஏலக்காய் வாசம் மணக்க மணக்க அப்படியே சூட்டு அடுப்புக்குள் வைத்துவிட்டு நம்மைப் பார்த்து பெருமிதாய்ச் சிரிக்கிறார் நாயகம் ஆயா. 

`காசிமேடு' நாயகம் ஆயா பீட்ஸா சுடும் வீடியோ கீழே...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism