Published:Updated:

திருஞானசம்பந்தர், ஈசனின் அடிமலர் தொழுது பாடிய திருவிற்கோலம்..! - கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில் #VikatanPhotoStory

திரிபுர சம்ஹார காலத்தில், ஈசன் மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலத்தில் நின்ற திருவிற்கோல கோயிலின் பெருமைகள் கூறும் கட்டுரை!

திருஞானசம்பந்தர், ஈசனின் அடிமலர் தொழுது பாடிய திருவிற்கோலம்..! - கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில் #VikatanPhotoStory
திருஞானசம்பந்தர், ஈசனின் அடிமலர் தொழுது பாடிய திருவிற்கோலம்..! - கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில் #VikatanPhotoStory

`விரித்தவன் அருமறை விரிசடை வெள்ளந்

தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற

எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்

சிரித்தவன் உறைவிடந் திருவிற் கோலமே'

திருஞானசம்பந்த சுவாமிகள், ஈசனின் அடிமலர் தொழுது பாடிய திருத்தலம் திருவிற்கோலம் (தற்போது கூவம் எனப்படுகிறது). கூவம் நதி உற்பத்தியாகும் இடம் இது. சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் அருகே உள்ளது. திரிபுர சம்ஹார காலத்தில், ஈசன் மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலத்தில் நின்றதால் இந்தத் தலம்,  `திருவிற்கோலம்' என்றானது. ஈசன் இங்கு தீண்டாத் திருமேனியர். காலத்துக்கு ஏற்ப நிறம் மாறும் அதிசய லிங்கமாக ஐயன் இங்கு அருள்பாலிக்கிறார்.

தெற்கு திசையிலுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் இந்த ஆலயத்தின் பிரதான வாயில். கோபுர வாயில் வழியாக நுழைந்தால் தெற்கு வெளிப் பிராகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் ஈசன் சந்நிதியை அடையலாம். இது கோபுர வாசல் மட்டுமல்ல, புண்ணிய வாசலும் கூட. கோபுர வாசலின் அருகே விடையாக இருந்து ஈசனைத் தாங்கிய கரிய மாணிக்கப் பெருமாள் கோயில்.

திருவிற்கோல துர்க்கை! சகல தோஷங்களையும் அம்சங்களையும் நீக்கும் அற்புத சக்தி வடிவம். சிவப்புப் பட்டுடுத்தி, சிரித்த முகத்தோடு அருளும் சிவதுர்கை.

அயனுக்கும் மாலுக்கும் விஸ்வரூப தரிசனம் காட்டிய லிங்கோத்பவ வடிவம். மிகப் பழைமையான ஆலயங்களில் மட்டுமே கோஷ்டத்தில் இந்த வடிவம் காணப்படும். ஆக, இந்த திருவிற்கோல ஆலயத்தின் பழைமையை உணர்ந்து கொள்ளலாம். விஷ்ணு வராக வடிவில்  பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் இந்தச் சிற்பத்தில் காணலாம்.

சங்கு சக்கரம் தாங்கி சங்கரரின் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஷ்ணு. திரிபுர சம்ஹாரத்தில் ஈசனுக்குத் துணை புரிந்த ஸ்ரீமன் நாராயணன் ஹரியும் ஹரனும் வேறுவேறில்லை என்று உணர்த்தும் தத்துவம்.

கோஷ்ட கணபதி அருளும் திருக்காட்சி. இந்த தலத்தில் உள்ள  விநாயகருக்கு `அச்சிறுத்த விநாயகர்' என்று பெயர். திரிபுர சம்ஹாரத்துக்குக் கிளம்பிய ஈசன் தன்னைக் கண்டுகொள்ளாமல் சென்றதால் கோபம் கொண்டு ஈசனின் தேரின் அச்சை இந்தக் கணபதி இற்று உடையச் செய்ததால் இந்தப் பெயராம்.

ஞானத்தின் வடிவான தென்முகக் கடவுள். கோஷ்டத்தில் அமர்ந்து குருவாக அருள்கிறார். இவரது தியான கோலத்தையும், சின் முத்திரையையும் கண்டால் அஞ்ஞானம் நீங்கும். மெய்ஞானம் தங்கும்.

கொடிமரத்துக்கு அருகே ஆடல்வல்லானின் அற்புத சந்நிதி. சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜ சந்நிதி இது. சிவகாம சுந்தரியோடு சிவனார் ஆடும் அற்புதக் கோலத்தைக் காண்பது பெரும்பாக்கியம்.

அழகும், பழைமையும் நிரம்பிய சுற்றுப் பிராகாரத் தோற்றம். பிராகாரத்தின் தூண்களிடையே சண்டேச நாயனாரின் சிறு சந்நிதி. ஆழ்ந்த அமைதியும், அற்புதக் கலை வடிவங்களும் நம்மை தெய்விக நிலைக்குக் கொண்டு போகும் என்பது உண்மை.

தூண்கள் அணிவகுக்கும் பிராகாரம். திரிபுராந்தகேஸ்வரர் எனும் திருவிற்கோலநாதர் திரிபுரசுந்தரி நாயகியோடு அருள்பாலிக்கிறார். இந்த தலம் கூபாக்னபுரி என்றும் வழங்கப்படுகிறது. இங்குள்ள கூபாக்கினி தீர்த்த குளத்தில் தவளைகளே இல்லை. தவளைகளைப் பிடித்து வந்து குளத்தில் விட்டாலும் வெளியேறி விடும் அதிசயம் நடக்கிறது.

ஆலயத்தின் சுற்றுப்பாதை அமைதியாகக் காட்சியளிக்கிறது. இங்குள்ள ஈசனுக்கு 4 கி.மீ தொலைவிலுள்ள கூவம் ஆற்று நீரே அபிஷேகத்துக்குப் பயன்படுகிறது. ஒருவேளை கூவம் ஆற்று நீர் அபிஷேகத்துக்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே அபிஷேகிக்கப்படுகிறது.

ஆடல்வல்லான் சந்நிதி மேற்புறத்தில் நடராஜ தரிசனம். இங்குள்ள நடராஜர் காளிக்கு இங்கு அருள் புரிந்தார். காளியோடு இங்கு ஆடிய நடனம் `ரக்ஷீநடம்' எனப்படுகிறது. காளிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இன்றும் இந்த ஆலய திருவிழாவில் 10-ம் நாளில் கொண்டாடப்படுகிறது.