Published:Updated:

மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

ஆர்.ஜெயலெட்சுமி

றுப்பு... இந்நிறத்தின் மீது ஏன் வெறுப்பு? உலகம் முழுவதுமே கறுப்பு நிறத்தவர்களை இரண்டாம்பட்சமாகவும் அடிமைகளாகவும் நடத்தும் மனப்போக்கு இருந்து வருகிறது. இதை வணிக நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு `சிவப்பு நிறமே அழகு’ என மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன.   

மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

ஆனால், ‘அழகுக்கு நிறம் ஓர் அளவுகோல் அல்ல’ என்பதை ஓர் இயக்கமாகவே மாற்றியவர் நடிகை நந்திதா தாஸ். மின்னஞ்சல் மூலமாக  அவர் நமக்களித்த பிரத்யேகப் பேட்டி இது.

``விமன் ஆஃப் வொர்த் (Women of Worth) அமைப்பின் நிறுவனர் கவிதா இமானுவேல், நிறப்பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தார். அதன் முக்கியத்துவம் உணர்ந்து, இவ்வியக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். பெண்களுக்கு நிறம் குறித்த புரிதலை,  ஏற்படுத்துவதற்கான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.  இப்போதுள்ள சூழலில் இவ்விஷயத்தைப் பற்றிப் பேசுவதை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இதில் என் பணி என்பது கடலில் விழும் ஒரு துளி நீர் போன்றதுதான். இருந்தபோதும், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துளியாக மாறினால், நிச்சயம் மக்கள் மனதில் நல்ல மாற்றத்தை விதைக்க முடியும்.

தொடக்கத்தில் ‘கறுப்பே அழகு' (Dark  is Beautiful) என்ற ஸ்லோகன் மூலம் கறுப்பு நிறம் கொண்ட பெண்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த முயன்றோம். நேர்மை, ஆரோக்கியம், திறமை மூன்றும் இருந்தால் மனம் அழகாகும்; மனம் அழகாக இருந்தால் முகமும் பொலிவாகும் என்பதை எடுத்துச் சொன்னோம். நிறத்தைவிட நமது பண்புகள், திறமைகள் ஒவ்வோர் இடத்திலும் நம்மை உயர்த்தும் என்பதைப் புரியவைத்தோம். இதன்மூலம் அவர்களின் சுய மதிப்பீடு அதிகரித்தது. 

நிறத்துக்கு முக்கியத்துவம் தராமல்  நமக்குப் பிடித்த துறையில் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ‘Stay Unfair, Stay Beautiful’ என்ற ஸ்லோகனை வெளியிட்டோம்.

எந்த விஷயத்தையும் `பாசிட்டிவ்'வாகப் பார்ப்பது என் இயல்பு. நான் ஒருபோதும் என் நிறம் குறித்துச் சிறுமையடைந்தது இல்லை. இருந்தபோதும், சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னிடம் ‘வெயிலில் செல்லாதே’, ‘இதைப்பயன்படுத்திப் பார்... சிவப்பாகிவிடுவாய்’ என எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அழகுச் சாதனப்பொருள்கள் விற்கும் கடைகளுக்குச் சென்றால், சிவப்பழகுப் பொருள்களை என்னிடம் விற்க முயல்வார்கள். ‘நான் அழகாக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம்’ என்று அவர்களிடம் தீர்க்கமாகக் கூறி விடுவேன். சினிமாத்துறைக்கு வந்த பின்னர் இயக்குநர்கள், கேமராமேன்கள்கூட எனக்கு டிப்ஸ் கொடுப்பதுண்டு. அவற்றையெல்லாம் தவிர்த்துவிடுவேன்.
சினிமா விமர்சனத்தில் என்னைப் பற்றி எழுதும்போதுகூட என் நிறத்தை அடிப்படையாக வைத்து ‘டார்க் அண்ட் டஸ்கி’ என்றே எழுதுவார்கள். என்னைப்போன்ற நிறம் உள்ளவர்கள் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் பொருத்தமானவர்கள் என நினைக்கின்றனர். அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொண்டதே இல்லை. சர்வதேசப் படங்களில் நடிக்கும் அளவுக்கு நந்திதா தாஸ் வளர்ந்தது இந்தக் கறுப்பு நிறத்துடன்தான்.

க்ரீம், சோப்பு மூலம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை கிடைக்கும், காதல் திருமணம் கைகூடும் என்றெல்லாம் விளம்பரங்களில் காட்டுவது மக்களை முட்டாளாக்கும் செயல். பெண்கள் ஒரு போகப் பொருளாகவே பார்க்கப்படுகின்றனர். நிறப்பாகுபாட்டுக்கு எதிரான இயக்கங்களும் விவாதங்களும்  வலிமை யடைந்து வருவதால், இவையெல்லாம் விரைவில் மாறும் என உறுதியாக நம்புகிறேன்.’’- நந்திதா தாஸின் கருத்துகளில் அழுத்தம் அதிகம்.

இந்தச் சமூகத்தின் அங்கமான ஒவ்வொரு மனிதருமே நிற பேதத்துக்கு எவ்வாறு துணைபோகிறோம் என்பதை மன சாட்சி யைத் தொடும் வார்த்தை களில் அடுக்கு கிறார் பத்திரிகையாளர் ஜெயராணி.

``நிற வேறுபாடு நம் வீடுகள், கல்விக்கூடங்கள், ஊடகங்கள், பணியிடங் கள் என எல்லா இடங் களிலுமே வேரூன்றி இருக்கிறது. சிவப்பாகப் பிறக்கும் குழந்தைகளே பெற்றோராலும் மெச்சப்பட்டுச் சிறப்புச் சலுகைகளைப் பெறுகின்றன. அவர்களே கல்விக்கூடங்களிலும் வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெறுகிறார்கள். குட் லுக்கிங், பியூட்டிஃபுல் போன்ற ஆங்கிலச் சொற்களுக்கான அர்த்தம் `வெள்ளை' என்பதாகவே நாம் நினைக்கிறோம். கறுப்பாக இருப்பவர்களைக் களையானவர்கள் என ஆறுதல் சொல்லித் தேற்றுகிறோம். ஏன், கறுப்பு என்ற சொல் அழகு என்ற சொல்லோடு இணையாதா, என்ன? வெள்ளையாக இருப்பவர்களுக்கு அவர் களின் நிறமே விசிட்டிங் கார்டாக இருந்து எல்லா வாசல்
களையும் எளிதாகத் திறக்கிறது என்பதே சமூக யதார்த்தம்.

கறுப்பானவர்கள் திறமை குறைவாக இருப்பார்கள், சண்டை போடுவார்கள், எல்லாவற்றிலும் பின்தங்கியே இருப்பார்கள் என்கிற மாயை இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் எல்லாத் துறைகளிலும் வெள்ளை நிறத்த வரை விஞ்சிய கறுப்பர்களின் சாதனை வரலாற்றை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம், அல்லது புறக்கணிக்கிறோம். நம் நாட்டில் அந்த அவலம் இன்னும் அதிகம். தேவதை என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது நம் மனக்கண்ணில் தோன்றும் உருவம் எத்தகையது? நிச்சயமாகச் சிவப்பு நிறம்கொண்ட ஒரு பெண்தான். நூறாண்டுக்கால தமிழ்ச் சினிமாவில் எத்தனை கதாநாயகிகள் கறுப்பானவர்கள்?  இப்படி, திரைப்படங்களில் பார்த்துப் பழகிய தேவதைகளை மட்டுமே ஆண்கள் தேடி அலையும் நிலை உருவாகி யிருக்கிறது. ஆண்களின் திருமண கண்டிஷன் களில் முதன்மையானது, சிவப்பான பெண். மற்றதெல்லாம் அப்புறம்தான். நிறம் கம்மியாக இருந்தாலே வரதட்சணையின் அளவு அதிகரிக்கும். அதோடு, கறுப்பு சருமம் கொண்ட பெண்கள் நிறம், பாலினம் என இரண்டு வகையான பாகுபாடுகளையும் எதிர்கொள்ள நேர்கிறது.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

இந்தியரிடம் வேரூன்றிய இந்த நிறப் பாகுபாடு எண்ணம்தான் அழகு சாதனப் பொருள்களுக்கான சந்தையாகவே இந்தியாவை மாற்றியது. ‘எங்கள் க்ரீமைப் பயன்படுத்தி னால் பத்து மடங்கு சிவப்பாவீர்கள்’ எனக் கூவிக்கூவி விற்பனை செய்யும் நிறுவனங்கள், இதே விளம்பரத்தை மேற்கத்திய நாடுகளில் செய்ய முடியாது. ஏனென்றால், அங்கே அது அப்பட்டமான நிறவெறித் தாக்குதல். ‘என் நிறத்தை ஏன் மாற்றச் சொல்கிறாய்?’ எனக் கறுப்பின மக்கள் போர்க்கொடி தூக்குவார் கள். ஆனால், இங்கே என்ன நடக்கிறது? 20 - 25 ஆண்டுகளாக அழகுசாதனப் பொருள் களையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கள். க்ரீம் மூலம் சிவப்பாக முடியாது என்ற உண்மை தெரிந்தபின்னும் நம் அறிவு அதை ஏற்க மறுக்கிறது. முன்பு பெண்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட ஃபேர்னெஸ் க்ரீம்கள் இன்று ஆண்களுக்காகவும் வருகின்றன.

சமீபத்தில் மத்திய அமைச்சர் தருண் விஜய், தென்னிந்தியர்களைக் கறுப்பர் கள் என்று சொன்ன தற்காகப் போர்க்கொடி தூக்கினோம். தவறு தருண் விஜய்யின் மீது மட்டும் தானா? கறுப்பானவர் களைத் தொடர்ச்சியாக இழிவுபடுத்தும் ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களைப் பற்றி ஏன் நாம் சிந்திக்கவில்லை? அந்த விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஏன் சொரணை இல்லாமல் போனது? நடிகை கங்கனா ரனாவத் சில கோடி ரூபாய் சம்பளம் பெற்றுத் தரும் ஃபேர்னெஸ் விளம்பரத்தில் நடிக்க மறுத்தார். அதற்கு அவர் கூறிய காரணம்... ‘இந்த விளம்பரத்தில் நடித்தால், நிறம் குறைவான என் தங்கையையும் அவரைப் போன்ற பெண்களையும் காயப்படுத்தும்’ என்பதே. இந்த தனிமனித அறம் பலருக்கு இல்லாமல் இருப்பதுதான் பிரச்னை.

தருண் விஜய்யின் கருத்துக்காக, தொடர்ச்சியாக விவாதம் நடத்திய நம் ஊடகங்கள், செய்தி வாசிக்கவும் காம்பியரிங் செய்யவும் தேர்வு செய்வதில் எத்தனை பேர் கறுப்பு நிறத்தினர்? செய்தி வாசிப்பதற்கும், நேர்காணல் செய்வதற்கும் அறிவும் திறமையும்தானே அவசியம். அப்படியென்றால் கறுப்பானவர்களில் திறமையானவர்கள் இல்லவே இல்லையா? சினிமாவைப் பிடித்திருந்த சிவப்பு நோய், இப்போது டி.வி-யையும் பிடித்து ஆட்டுகிறது. `கறுப்பாக இருந்தால் காமெடிக்கும் வில்லி கேரக்டருக்கும் மட்டுமே செட் ஆகும்' என்ற சினிமாவின் அவலம் சேனல்களில் பரவியிருக்கிறது.

என் நிறம் குறித்த கவனம் மனதின் அடி ஆழத்தில்கூட எனக்கிருந்ததில்லை. நிறம் மட்டுமல்ல... சாதி, மதம், பாலினம் என இந்த மனிதர்களும் சமூகமும் எதையெல்லாம் சொல்லி நம்மை தாழ்வுபடுத்த நினைக்கிறார்களோ, அதிலிருந்தெல்லாம் விலகி விடுதலை உணர்வைப் பெற்றிட வேண்டும்.’’ - ஜெயராணியின் வார்த்தைகளில் சமூகக் கோபமும் அக்கறையும் ஒன்றோடு ஒன்று கோத்திருந்தன.

நம் நிறத்தில் நாம் பெருமை கொள்வோம்!

மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

``சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களில் நடிப்பதைப் புறக்கணிக்க வேண்டும்!”

ஸ்ரீபிரியா (நடிகை)


``என் நிறம் என் மர பணுவில் இருந்து எனக்குக் கிடைத்தது. அதை ஏன் நான் மாற்ற நினைக்க வேண்டும்? பெண்கள் சிவப்பழகோடு இருக்க வேண்டும் என்பது மூடநம்பிக்கையின் திணிப்பு. அதைப் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விளம்பரங்களுக்கு சென்சார் தேவை. நடிகர், நடிகைகளும் சமூகப் பொறுப்போடு இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நான் கறுப்பாக இருப்பதாகப் பலர் பரிகசித்தபோதும் நன்றாகப் படித்தேன். சினிமா துறையில் ஓர் இடத்தைப் பிடித்தேன். மக்கள் என் நிறத்தால் என்னை நிராகரிக்கவில்லை; கொண்டாடியே ஏற்றுக்கொண்டார்கள். காரணம், என் நடிப்புத் திறமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு. மகாத்மா காந்தியில் தொடங்கி, கறுப்பு சருமத்துடன் சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். கறுப்பு என்பது நம் இயல்பு, சிறப்பு என்ற விழிப்பு உணர்வை இனியும் தாமதிக்காமல் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.’’

மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

‘`தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்ததில்லை!”

கிருத்திகா (ஐடி பணியாளர், சென்னை)


‘`எங்கள் வீட்டில் அப்பா சிவப்பு, அம்மா கறுப்பு. நான்கு குழந்தைகளில் நான் மட்டும் கறுப்பு. ‘கருத்தம்மா’ என்பதே என் பட்டப்பெயர். அப்போதெல்லாம் என் அக்கா என்னை அப்படி அழைப்பவர் களிடம் சண்டை போடுவாள். ஆனால், நான் எப்போதுமே என் நிறத்தை அங்கீகரிக்கும், கொண்டாடும் மனநிலையிலேயே வளர்ந்தேன். பி.இ. படித்தேன். இன்ஃபோசிஸில் ட்ரெய்னியாகப் பணியில் சேர்ந்து சிஸ்டம் அனலிஸ்ட்டாக கடந்த பத்து ஆண்டுகளாகப் பணிபுரிகிறேன். என் நிறத்துக்காக எனக்கு எவ்வித சலுகைகளும் மறுக்கப்பட்டது இல்லை. எனக்குள் எந்த ஒரு தருணத்திலும் தாழ்வுமனப்பான்மைக்கு இடம் கொடுத்ததில்லை. என் நிறமே என் அடையாளம்!”

மாற்றம் வரட்டும் - அழகுக்கு நிறம் அளவுகோல் அல்ல!

‘`சருமத்தின் நிறத்தைவிட ஆரோக்கியமே முக்கியம்!”

சிவக்குமார் (அழகியல் அறுவைசிகிச்சை நிபுணர், சென்னை)


``ச
ருமம் என்பது, மனித உடலில் பெரிய உறுப்பு. அதில் நிறைய  நிறமிகள் உள்ளன. ஒருவரின் நிறத்தைத் தீர்மானிப்பது, மெலனின் பிக்மென்ட் என்கிற நிறமியே. இந்த நிறமியின் அளவைக் குறைவாகக் கொண்டவர்கள் சிவப்பு நிறத்துடனும், அதிகமாகக் கொண்டவர்கள் மாநிறத்துடனும் இருப்பார்கள். புற்றுநோய் உள்பட புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும் கவசமாக இந்தச் சுரப்பி செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த மெலனின் பிக்மென்டைக் குறைக்கும் வேலையைத்தான் சிவப்பழகு க்ரீம்கள் செய்வதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எனில், அது எவ்வளவு முட்டாள்தனமானது?

மேலும், மரபணு சார்ந்த இயற்கை அமைப்பான சரும நிறத்தை எந்த க்ரீம்களாலும், அறிவியலாலும், மருத்துவத்தாலும் செயற்கையாக மாற்ற முடியாது. தொடர்ச்சியாக காஸ்மெடிக் பொருள்கள், க்ரீம்களை அதிக அளவில் பயன்படுத்தினால், அது சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தும். மொத்தத்தில், `அழகு என்பது ஆரோக்கியம்' என்கிற புரிதல் வேண்டும்;  `சிவப்பே அழகு' என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்.”