சென்னையின் பரபரப்பானதொரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு சிறுமி கடந்த ஆறு மாதங்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். மனதைப் பதறவைக்கும் இந்தச் செய்திதான் சமூகம், சமூகவலைதளம் என அத்தனை இடங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
``குற்றவாளிகள் நிச்சயம் மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள்...”
``அவர்களுக்கு மரண தண்டனை கூடாது ஆனால் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும்”.
``பெற்றோர்கள் மீதுதான் தவறு அவர்கள் குழந்தையின் நடவடிக்கைகளைச் சரிவரக் கண்காணிக்கவில்லை”
உச்சகட்டமாக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``சிறுமியின் மீதுதான் தவறு. ஆறுமாதங்களாகச் சம்பவம் நடந்திருக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் ஒப்புதல் இல்லாமலா நடந்திருக்கும்?”
என்பது போன்ற கோணல் விவாதங்களும் இதர உணர்ச்சிமிக்க விவாதங்களும் பொதுவெளிகளிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதிகம் பேசப்பட்டு வரும் செய்தி குறித்த பரபரப்பைத் தங்கள் பக்கம் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு ஊடகங்களும் அந்தச் சம்பவத்தின் பல்வேறு கோணங்களை மற்றொருபக்கம் அலசி ஆராய்ந்து வருகின்றன.
குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்கிற உணர்வுநிலையில் சமூகத்தின் அத்தனை தரப்புகளுமே உணர்வுபொங்க இயங்கிவரும் இப்படியான சூழலில் நாம் உணர்ச்சிவசப்படுவதால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் இருக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட அது மிகமிக அவசியமானதும் கூட...
அதற்கு அரசு கடந்த 2012 ம் ஆண்டில் இயற்றிய பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO Act) மற்றும் சிறார் பாதுகாப்புச் சட்டம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சட்டம் என்ன சொல்கிறது?
பாலியல் குற்றத்துக்கு ஆளாக்கப்பட்ட குழந்தையின் சார்பில் புகார் அளிக்கப்படும் சூழலில் அந்தக் குழந்தையை விசாரிக்கும் காவலர்கள் சீருடையில் இருக்கக் கூடாது. விசாரிக்கும் நீதிபதிகள் கூட சீருடையில் இருக்கக் கூடாது.
புகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள் குழந்தை இருக்கும் பகுதியில் உள்ள குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
குழந்தையிடம் விசாரணை மேற்கொள்ளும்போதும், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போதும் குழந்தைகள் மனநல ஆலோசகர்கள் குறிப்பாக Clinical Psychologists உடனிருப்பது அவசியம்.
குழந்தைகளிடம் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளில் கூட சில பரிசோதனைகள் தவிர்க்கப்படவேண்டும் என்று 2013ல் POCSOவில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தம் தெரிவிக்கின்றது.
குற்றவாளிகளை மறைவான இடத்திலிருந்தே பாதிக்கப்பட்ட குழந்தை அடையாளம் காட்ட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில் குழந்தையை விசாரிக்கக் கூடாது.
சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமை குறித்த வழக்குகள் ஒரு வருடத்துக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும். விசாரணையை நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. விசாரணை குறித்த எந்தவித தகவல்களையும் விசாரணை அதிகாரிகளும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களிடமோ அல்லது தெரிந்த நபர்களிடமோ கசியவிடக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் கீழ் இரண்டாண்டுகள் வரை சிறைதண்டனை பெறுவார்கள்.
இவை அனைத்தும் ஏற்கெனவே மன உளைச்சலில் அல்லது அச்சத்தில் இருக்கும் அந்தக் குழந்தைக்கு மேலும் எந்த வகையிலும் உளைச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டியது. மேலும், அந்தக் குழந்தைக்கு மாண்புமிக்கதொரு வாழ்க்கையை மீட்டுத்தருவது அவசியம். அதனால்...
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர் அல்லது இன்னபிற அடையாளங்களைப் பொதுவெளியில் பகிர்வது குற்றம்.
பாதிக்கப்பட்ட குழந்தையுடைய குடும்பத்தினர்களின் வசிப்பிடம் (தெருவின் பெயர் உட்பட) மற்றும் வேலை பார்க்கும் இடம் பற்றிய எவ்விதத் தகவல்களையும் வெளியிடக் கூடாது என்று POCSO வலியுறுத்துகிறது.
குற்றவாளிகளாகக் கூறப்பட்டவர்களின் புகைப்படங்களை விசாரணை முடிந்து அவர்களுக்கான தண்டனை உறுதியாகும்வரை பொதுவெளியில் பகிரக் கூடாது. ஏனெனில் வழக்கின் போக்கினை அது எந்த வகையிலும் மாற்றலாம். இப்படிப் பகிரப்படுவது குறித்தான புகார் அளிக்கப்படும் சூழலில் அதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து அடுத்தமுறை சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் விவாதிக்கும் முன்பு மேலே சொன்ன அத்தனையும் உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.
ஏனெனில் அவர்கள் இந்தச் சமூகத்தின் பிள்ளைகள். அவர்களுக்கான ஓர் எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. இந்தச் சமூகத்தின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாகவும் நம்பிக்கையானதாகவும் கட்டமைத்துத் தரவேண்டியது நமது கடமை.
(POCSO குறித்த சட்ட விவரம் நன்றி: பாடம் ஏ.நாராயணன்)