Published:Updated:

ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி ஆச்சு 50 வருஷம்... அலோ அது உண்மையா?

ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி ஆச்சு 50 வருஷம்... அலோ அது உண்மையா?
ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி ஆச்சு 50 வருஷம்... அலோ அது உண்மையா?

இன்றைய விண்வெளி சாகசங்களுக்கு முன்னோடியாக இருந்து இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்வான மனிதன் பூமியிலிருந்து 3.50 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவில் கால் பதித்த 50-ம் ஆண்டு இன்று.

பூமியில் இருந்து 3.50 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவில் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய விண்வெளி சாகசங்களுக்கு முன்னோடியாக இருந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்வு அது.


பூமியில் உள்ளது போல் மனிதர்கள் உயிர் வாழ தேவையான பிராணவாயு, தண்ணீர் போன்றவை இல்லாத ஓரிடம் சந்திரன். எனவே மனிதன் அங்கு சென்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. இத்தகைய நிலையில் சந்திரனுக்கு யார் முதலில் செல்வது என்ற ஆய்வில் வல்லரசுகளாக திகழ்ந்த ரஷ்யாவும், அமெரிக்காவும் ஈடுபட துவங்கின. அதன் முதன் முயற்சியாக பூமியை சுற்றி ''ஸ்புட்னிக்'' எனும் விண்வெளிக் கப்பலை 1957-ல் மிதக்க விட்டது. அதன் தொடர்ச்சியாக 1961-ல் ககாரின் என்ற வின்வெளி வீரரை ராக்கெட்டில் அனுப்பி பூமியைச் சுற்றிவிட்டு பத்திரமாக திரும்பி வர செய்து சாதித்தது ரஷ்யா. இதற்குப் போட்டியாக அதே ஆண்டில் ஷெப்பர்டு என்ற விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் பூமியைச் சுற்றிவர செய்தது அமெரிக்கா. இரண்டு ஆண்டுகளுக்கு பின் 1963-ம் ஆண்டு ஜூன் 16-ல் வாலண்டினா தெரஸ்கோவா என்ற இளநங்கையை பூமியைச் சுற்றி பறக்க செய்து பதிலடி கொடுத்தது ரஷ்யா. 

 இரு வல்லரசுகளுக்கு இடையே நடந்த இந்த விண்வெளி பயணப் போட்டியில் தனது நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்டிராங் என்பவரைச் சந்திரனில் காலடி பதிக்க வைத்து சாதனை சிகரத்தை அடைந்தது அமெரிக்கா. சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை 1969 ஜூலை 15-ல் துவக்கியது அமெரிக்கா. அதற்கான ஒத்திகைகளும் முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மறுநாள் இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி முனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 வீரர்களுடன் சந்திரனை நோக்கி 'அப்பல்லோ 11' என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. மறு நாளே தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், சரியான திசையில் ராக்கெட் பயணித்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் பூமிக்கு தகவல் கொடுத்தனர்.


மணிக்கு 3500 மைல் வேகத்தில் சென்ற ராக்கெட் 18-ம் தேதி சந்திரனை நெருங்கியது. மறுநாள் சந்திர மண்டலத்தினுள் புகுந்த ராக்கெட் சந்திரனை சுற்றத் துவங்கியது. 20-ம் தேதி மாலை சந்திரனுக்கு அனுப்பட்ட பிரதான ராக்கெட்டில் இருந்து ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் ஆகிய இருவரும் சந்திரனுக்குள் செல்லக் கூடிய பூச்சி போன்ற வடிவம் கொண்ட 'ஈகிள்' வண்டியினுள் சென்றனர். இரவு 12 மணி நெருங்கவிருந்த வேலையில் இந்தப் பூச்சி வண்டியானது பிரதான ராக்கெட்டில் இருந்து வெளிவந்து சந்திரனை சுற்றியது.  சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பின் சந்திரனை அடைந்தது அந்த வண்டி. அதனுள்ளேயே இருந்தவாறு ஓய்வு எடுத்தனர் வீரர்கள் இருவரும்.
 21-ம் தேதி காலை சரியாக 8.26 மணிக்கு பூச்சி வண்டியில் இருந்த வெளியே வந்த ஆம்ஸ்ட்ராங் நிலவில் தன் கால் தடத்தினை பதித்தன் மூலம் 'நிலவில் கால் பதித்த முதல் மனிதன்' என்ற  அழியாத சரித்திரத்தினையும் படைத்தார். அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்தார். சந்திரனில் சிறிது தூரம் நடந்த இருவரும் அங்கிருந்த கல், மண் ஆகியவற்றை சேகரித்ததுடன், தங்கள் நாட்டு கொடியினையும் அங்கு  நட்டார்கள்


உலகம் வியக்கும் சாதனையினைப் படைத்த விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் மீண்டும் பூச்சி வடிவ வண்டிக்குள் சென்று பிரதான ராக்கெட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்து பூமியை நோக்கி பறந்த அந்த ராக்கெட் 24-ம் தேதி இரவு 10 மணி 19 நிமிடங்களுக்கு பத்திரமாக கொலம்பியா கடலில் வந்து இறங்கியது. உலகின் உயர்ந்த சாதனையினை படைக்க உதவிய 'அப்பலோ 11' ஐ தயாரிக்க 6 ஆண்டுகள் ஆனது. இதற்கு செலவிடப்பட்ட தொகை 1.74 லட்சம் கோடி ரூபாய்.
 இதன் பின்னரும் அமெரிக்கா சந்திரனுக்கு பலமுறை ராக்கெட்டுகளில் மனிதர்களை அனுப்பி பல்வேறு சோதனை நடத்தி வந்தது. ஒரு கட்டத்தில் அங்கு மனிதன் வாழும் சூழல் இல்லை என்பதால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்வத்தை குறைத்து கொண்டது. 

இந்தச் சம்பவம் நடந்தபோது அமெரிக்காவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் அது உண்மையில்லை என்ற பேச்சு கிளம்பியது. முன்னர், ஆனந்த விகடனுக்காக இந்திய விண்வெளி வீரர் திரு. ராகேஷ் ஷர்மாவை நேர்காணல் செய்தபோது இதற்கு அவர் விளக்கமளித்தார்.

"உண்மைதான். ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றார். இங்கேயிருக்கும் தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி.க்காக அடித்துக் கொள்கிறார்களே. அது போல அப்போது அமெரிக்க தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி பசியில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய குழப்பம் அது."

நிலவைத் தொட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கும் அவர் டீமுக்கும் இந்தப் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு