Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!
நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!

நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

பிரீமியம் ஸ்டோரி

ன்றைய மெட்ராஸ் நகரத்தின் பெருவணிகர்களாக ஒருகாலத்தில் வலம்வந்தவர்களின் சுவடுகள் மட்டுமே நம்மிடம் இன்று மிஞ்சியுள்ளன. பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அன்றைய மெட்ராஸின் வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்டவர்கள் ஆர்மீனியர். கி.பி.780-ல் தாமஸ் கனா என்பவரே இந்தியா வந்த முதல் ஆர்மீனியர். பட்டுப் பாதை (சில்க் ரோடு) மூலம் தரைவழியாக இந்தியா வந்த ஆர்மீனியர் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் குடியேறி வணிகம் செய்து வந்தார்கள். ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் பிரிட்டிஷாருக்கும் இந்திய நவாபுகளுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தங்களில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள் இவர்களே. வணிகம் செய்யச் சென்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டாமல் நியாயமான முறையில் வாணிபத்தை மட்டுமே தங்கள் குறிக்கோளாகக்கொண்டு ஈட்டிய செல்வத்தை அந்தந்த நாட்டுக்காகச் செலவிட்டவர்கள் இவர்கள். 

நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!

ஆர்மீனியா என்ற நாடு உருவாவதற்கு முன்பே, அதன் முதல் அரசியலமைப்புச் சட்டம் உருவான இடம் நம்ம சென்னை. சாந்தோமில் உள்ள புனித ரீட்டாஸ் தேவாலயத்தில் ‘ஆர்மீனிய நாட்டின் நினைவாக’ என்று நினைவுக்கல் அமைத்திருக்கிறார்கள் ஆர்மீனியர். க்வாஜா பெட்ரஸ் உஸ்கான் (1680-1751) என்ற ஆர்மீனியரே, அன்றைய மெட்ராஸ் நகரை சாந்தோம் மலையுடன் இணைக்கும் பணியைச் செய்தவர். 1728-ம் ஆண்டு அடையாற்றின் குறுக்கே மர்மலாங் பாலத்தைக் கட்டியதன் மூலம்  இத்திட்டம் நிறைவேறியது. இதன் நினைவாக நான்கு மொழிகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டு இன்றைய சைதாப்பேட்டை பாலத்தின் ஓரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 1726-ம் ஆண்டு புனித தோமையார் மலையின் அடி வாரத்திலிருந்து அதன் உச்சி வரை கல்லினால் படிக்கட்டுகள் அமைத்த வரும் இவரே.  

நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!

1746-ல் சென்னையைச் சூழ்ந்த பிரெஞ்சுப் படைகள் உஸ்கானின் அசையும் சொத்துகளைப் புதுச் சேரிக்குக் கவர்ந்து சென்றன. ஆங்கிலேயரின் சிறந்த நண்பராக ஒயிட் டவுன் பகுதியில் வசிக்க அனுமதிக்கப்பட்ட ஒரே ஆர்மீனியர் உஸ்கான் மட்டுமே. பிரெஞ்சு இந்தியாவின் கவர்னரான டூப்ளே துரையின் சமாதானத் தூதையும் உஸ்கான் ஏற்கவில்லை. `ஆங்கிலேயரோடு தொழில்புரிகிறோம், அவர்களுக்கே விசுவாசமாக இருப்போம்' என்று தன்னிலை மாறாமல் இருந்தார் உஸ்கான். இறக்கும்தருவாயிலும் தன்வசம் உள்ள சொத்துகள் அனைத்தையும் ‘டு த சிட்டி ஆஃப் மெட்ராஸ்’ என்று சென்னை நகருக்கு எழுதி வைத்தவர் இவர். இவரது உடல், இவர் கட்டிய வேப்பேரி தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது இதயம் மட்டும் ஆர்மீனிய நாட்டின் நியூ ஜுல்ஃபா நகரத்து தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தந்தை ஹருத்துன் ஷுமோவியான் (1750 –1824), ஆர்மீனிய தேவாலய குருவாக 1784-ல் சென்னை வந்தவர். 1794-ம் ஆண்டு `அஸ்தரார்' என்ற இந்தியாவின் முதல் ஆங்கிலம் அல்லாத இதழைச் சென்னையில் தொடங்கி, நடத்தினார். முதல் ஆர்மீனிய இதழும் இதுவே. ஆர்மீனிய இதழியலின் தந்தை எனவும் ஷுமோவியான் அழைக்கப்படுகிறார். ஆர்மீனிய மற்றும் லத்தீன் மொழிகளில் வெளிவந்த இந்த இதழ், ஏனோ 1796-ல் நிறுத்தப்பட்டுவிட்டது. 1772-ல் ஆர்மீனிய தேவாலயம் புனரமைக்கப்பட்டபோது பேருதவி செய்த ஆகாஷாமியரும் ஆர்மீனியப் பெருவணிகரே. இவரது கல்லறையும் ஆர்மீனியத் தேவாலயத்தில் உள்ளது. 

நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!

சென்னை ஜார்ஜ் டவுனின் ஆர்மீனியன் தெரு, பெரும்பான்மை ஆர்மீனியப் பெரு வணிகர்கள் வசித்த இடமாக இருந்தது. இவர்கள் பட்டு, நவரத்தினங்கள், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றை வணி கம் செய்து வந்தார்கள். இங்குள்ள ஆர்மீனியன் கன்னிமரியாள் தேவாலயம் 1712-ம் ஆண்டு ஆர்மீனியரால் கட்டப்பட்டு 1772-ம் ஆண்டு புனரமைக்கப் பட்டது. ஒரு காலத்தில் ஆர் மீனியரால் மிகச்சிறந்த நூலகமாகவும் இந்தத் தேவாலயம் விளங்கியது. ஏறத்தாழ 350 ஆர்மீனியர்களின் கல்லறைகள் இந்தத் தேவாலயத்தில் இப்போ தும் உள்ளன. அவர்கள் செய்து வந்த வணிகத்துக்கு ஏற்றவாறு கத்தரிக்கோல், எடைத்தராசு, ஜெபமாலை போன்ற வற்றுடன் கல்லறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆர்மீனியன் தேவாலயத்தின் தனிச்சிறப்பு, அதன் மணிக்கூண்டு. வெவ்வேறு அளவிலான 150 கிலோ எடை கொண்ட இதன் ஆறு மணிகளே சென்னையின் மிகப்பெரிய மற்றும் கனமான மணிகள். 1754 முதல் 1837 வரை வெவ்வேறு காலகட்டத்தில், லண்டனின் பிக்பென் மணியைச் செய்த தாமஸ் மேயர்ஸ் கம்பெனியால் இந்த மணிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிறு காலையும் ஒன்பது மணிக்கு இந்த மணிகள் ஒன்றாக இசைக்கப்படுவதைக் கேட்பது பேரானந்தம் அளிக்கும்.

சமீபத்தில் ஹருத்துன் ஷுமோவியான் அவர்களது நினைவுதினச் சிறப்புப் பிரார்த்தனை நடைபெறுவதை அறிந்து, அங்கே சென்ற நமக்குப் பெரும் ஆச்சர்யம். பாரீஸ், லண்டன் என உலகின் பல மூலைகளிலிருந்தும், கொல்கத்தா, ஒடிஷா, பெங்களூரு என இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் புலம்பெயர் ஆர்மீனியர் வந்திருந்தனர். 

நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்!

இன்றும் இந்தியாவில் ஏழு அப்போஸ்தலிக்க தேவாலயங் களும், கொல்கத்தாவின் ஆர்மீனியன் கல்லூரியும், தாவீதின் பெண்கள் பள்ளியும் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

உஸ்கானின் நினைவுக் கல்வெட்டை மீட்டெடுக்கும் பணியை யார் செய்வது என்பது இழுபறியாகவே உள்ளது. ஆர்மீனியன் தேவாலயம் வெறும் சுண்ணாம்பாலும் கல்லாலும் கட்டப்பட்ட கட்டடம் அல்ல. புலம்பெயர்ந்த ஒரு சமூகத்தின் ஒன்றுகூடும் இடமாகவும், ஆர்மீனிய - தமிழ் உறவுகள் சந்திக்கும் இடமாகவும், இந்த நகரை ஆண்டு அனுபவித்த பெருவணிகர்களின் மிச்சமாகவும் நம் கையில் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு