Published:Updated:

”அழைப்பிதழை கிழித்துப் போட்டால் உரம்!” - கேரள எம்.எல்.ஏவின் சுற்றுச்சூழல் அக்கறை

”அழைப்பிதழை கிழித்துப் போட்டால் உரம்!” - கேரள எம்.எல்.ஏவின் சுற்றுச்சூழல் அக்கறை
”அழைப்பிதழை கிழித்துப் போட்டால் உரம்!” - கேரள எம்.எல்.ஏவின் சுற்றுச்சூழல் அக்கறை

இந்தியர்களின் வாழ்வில் அதிகமான செலவுகளையும் பொருட்சேதங்களையும் சந்திப்பது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்தான். அத்தகைய திருமணங்களை இயற்கையோடு இயைந்ததாக மாற்றுவதன் மூலம் பல்வேறு சூழலியல் விழிப்புணர்வுகளை நம்மால் மேற்கொள்ள முடியுமென்பதை ஆங்காங்கே சிலர் அவ்வப்போது நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். தன் மகளின் திருமணத்திற்குச் சூழலுக்குச் சேதம் விளைவிக்காத மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதங்களில் பத்திரிக்கைகளை அச்சடித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.

தனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திரு. அப்துரஹிமானின் மகள் ரிஸ்வானா என்பவருக்கு ஜூலை 22-ம் தேதியன்று திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்காக அவர் அச்சடித்து விநியோகித்த திருமணப் பத்திரிகைகள் சூழலியல் நன்மை கொண்டதாக இருந்துள்ளது. பெங்களூரில் திருமணங்களுக்கு இதுபோல் சூழலியல் சார்ந்த பொருட்களைச் செய்துதரும் ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன. அவர்களின் மூலமாக அப்துரஹிமான் தனது மகளின் திருமணத்திற்குப் பத்திரிகைகளை அச்சடித்தார். எப்படியும் திருமணப் பத்திரிகைகளை திருமணம் முடிந்தவுடன் குப்பையில் போட்டுவிடுவார்கள் அல்லது அதை மற்ற குப்பைகளோடு எரித்துவிடுவார்கள். அப்படி வீணாகாமல் தடுக்க ஒரு ஐடியா செய்தார்.

அந்தப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டிருக்கும் காகிதங்கள் முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை வைத்துக் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்டது. அத்தோடு பத்திரிகைகள் வைத்துக் கொடுக்கப்படும் கவர்களில் விதைகளையும் இலவசமாகத் தந்துள்ளார் தனூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அது பூக்கள், காய்கறிகளென ஏதேனும் ஒருவகைச் செடி அல்லது மரத்தின் விதையாக வேண்டுமானாலும் இருக்கும். ஆகவே அந்தப் பத்திரிகையை அவர்கள் படித்துவிட்டுக் குப்பையில் போடமாட்டார்கள். காகிதத்தை மணலுக்கு உரமாகக் கிழித்துப் போட்டுவிடலாம். விதைகளை விதைத்து வளர்க்கலாம். கத்தரி, சாமந்தி என்று ஏதேனும் ஒருவகைச் செடியால் அவர்களுக்கு நிச்சயம் பயனேயல்லாமல் வீணில்லை.

இதைப் போலவே பெங்களூரில் பல ஸ்டார்ட் அப்கள் திருமண நிகழ்ச்சிகளுக்குச் சூழலியல் சார்ந்த விஷயங்களைச் செய்துவருகிறார்கள். பத்திரிகைகளில் செதுக்கப்படும் விநாயகர் பிம்பங்கள் பொதுவாக அவற்றைக் குப்பையில் போட விடாமல் செய்துவிடும். அதனால் பத்திரிகைகள் பல வீடுகளில் குவிந்துகிடக்கும். அச்சமயங்களில் அவற்றை ஒட்டுமொத்தமாக எரித்துவிடுவார்கள். அதற்குப் பதிலாக அந்த விநாயகர் பிம்பங்களில் சிறு சிறு செடிகளுக்கான விதைகளை வைத்துவிடுகிறார்கள். அதனால் பத்திரிகைகளைக் குப்பையில் போடுவதைவிட அவற்றைப் புதைத்து வைத்தால் விநாயகர் பிம்பங்களிலிருக்கும் விதைகள் முளைத்துச் செடிகள் முளைக்கும். வீட்டை அழகுபடுத்தும்.

இத்தகைய முயற்சிகளுக்குத் தற்போது செலவுகள் அதிகமாக இருந்தாலும் சூழலின் மீதான அக்கறையும் விழிப்பு உணர்வும் மக்களுக்கு அதிகமாகும் பட்சத்தில் இவற்றுக்கான செலவுகளும் குறையத் தொடங்கும். ஆங்காங்கே இதைப்போன்ற சூழலியல் சார்ந்த சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய தொழில்களைச் செய்துவருபவர்களும் அதே நம்பிக்கையோடுதான் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுற்றுச்சூழல் மீதான அக்கறையோடு தனது இல்லத் திருமண விழாவை நடத்தியுள்ளார். இதன்மூலம் அவர் பலருக்கும் வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளதாகக் கேரளாவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

திருமணங்கள் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் இந்த முயற்சிகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றைப் போலவே விநாயகர் சிலைகளையும் சூழலியல் சார்ந்து தயாரித்து வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தியின்போது பல்லாயிரக்கணக்கான சிலைகள் ஆற்றிலும் கடலிலும் கலக்கப்படுகின்றன. அதனால் நீர்நிலைகளில் ரசாயனக் கலப்பு ஏற்பட்டுத் தண்ணீர் மாசடைகின்றது. இதற்கு மாற்றாக பழைய ரொட்டிகள், தயிர், மாட்டுச் சானம் போன்றவற்றைப் பயன்படுத்து சிலைகள் செய்கின்றனர். இவையெல்லாம் இயற்கையான நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்யக்கூடியவை. அந்த நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலக்கும்போது அதிலிருக்கும் கழிவுகளைத் தின்று நீர்நிலைகளைச் சுத்திகரித்துவிடும். அதேபோல் விதைப்பந்துகளையும் சிலைகளைப் போல் செய்து விற்கும் அவர்கள் ஒருகட்டத்திற்குமேல் அந்தச் சிலைகள் குப்பைகளுக்குப் போனால்கூட மரமாகிச் சூழலுக்குப் பயனளிக்கும் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு பெங்களூரிலிருக்கும் ஏ2 நேச்சுரல்ஸ் என்ற ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த நிறுவனம் டும்கூர் (Tumkur) மாவட்டத்திலிருக்கும் மல்லசந்திரா (Mallasandra) என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து இதைப் போன்ற விதைப்பந்துச் சிலைகளை தயாரித்து வருகிறார்கள். "என் வாடிக்கையாளர்கள் வட்டம் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் சுற்றுச்சூழல் மீதிருந்த அக்கறையை மீட்டெடுத்ததைப் போலவே அனைத்து மக்களையும் இது சென்றடைய வேண்டும். அத்தோடு இது விவசாயிகளுக்கும் ஒரு பகுதிநேர வேலையாக உதவிசெய்து வருகின்றது. நினைத்துப் பாருங்கள் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளாலும் நமக்குப் பிறகு இந்தப் பூமியைச் செழிக்க வைக்கமுடியுமென்றால்! அப்படியொரு வாழ்க்கைமுறைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையில்தான் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்."

உண்மைதான். இன்று திருமணம் செய்யும் அந்த மணமக்களுக்கு நம் வாழ்த்துகள்.