Published:Updated:

``ரஜினியைப் பார்க்க வந்து, அம்புலிமாமால சேர்ந்தது தெய்வ சித்தம்!’’ - ஓவியர் ஸ்யாம் #WhatSpiritualityMeansToMe

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``ரஜினியைப் பார்க்க வந்து, அம்புலிமாமால சேர்ந்தது தெய்வ சித்தம்!’’ - ஓவியர் ஸ்யாம் #WhatSpiritualityMeansToMe
``ரஜினியைப் பார்க்க வந்து, அம்புலிமாமால சேர்ந்தது தெய்வ சித்தம்!’’ - ஓவியர் ஸ்யாம் #WhatSpiritualityMeansToMe

இவர் படம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே இல்லை என்று சொல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வியர் ஸ்யாம்... `உழைப்பு... உழைப்பு... உழைப்பு’ இது மட்டுமே இவருக்குத் தாரக மந்திரம். இவர் படம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு நுட்பமான ஓவியங்களையும் வெகு எளிதாக ஊதித் தள்ளிவிடுவார். ஓவியர் ஸ்யாமை`எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்...


``என் சொந்த ஊர் ராஜபாளையம். நாலு வயசுலேயே என்னைக் குற்றாலம் போகிற வழியில இருக்குற வேதப்பாடசாலையில சேர்த்துவிட்டுட்டாங்க. அங்கேயே தங்கி வேதப்பாடங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். காலையில குளிச்சு முடிச்சதும், தாமரை இலையில வெண் பொங்கல் தருவாங்க. அதுல உப்பு, உரைப்பு எதுவுமே போட மாட்டாங்க. அப்படியே சாப்பிடுவோம். அவ்வளவு ருசியா இருக்கும். 
தினமும் காலையில ஆத்துல குளிச்சிட்டு, அறுகம்புல் பிடுங்கிட்டு வருவோம். அதை எப்படிப் பிடுங்கணும்கிறதைக்கூட குரு சொல்லித் தருவார்.  

பாடசாலையில பெரிய ஹால் இருந்தது. இரவில் அங்கேதான் எல்லாரும் தூங்குவோம். தரையில சாக்பீஸால ஒரு செவ்வகமான கட்டத்தை வரைஞ்சு, அதுல படுத்து உறங்குவோம். அந்த ஹால்ல இருக்குற சுவர்ல ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. `இதையே நீ சுவராக நினை!'. அப்போ எனக்கு அதுக்கு அர்த்தம் புரியலை. ஆனா, காலப் போக்குல அதுல புதைஞ்சுகிடந்த ரகசியங்கள் புரிஞ்சுது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இதெல்லாமே எனக்கு அங்கேயே பாடமா அமைஞ்சுது. 

அங்கேயிருக்குற துளசி மாடத்துக் கீழே, `உன்னை மற்றவர்களுக்குப் பிடிக்கணும்னா, மற்றவர்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்க நீ பழகு'னு ஒரு வாசகம் எழுதியிருப்பாங்க. 

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எனக்கு எட்டு வயசா இருந்தப்போ, எங்க வீட்டு பூஜை அறையில ஒரு சிவன் படம் இருந்துச்சு. நாலடி உயரமிருக்கும். அந்தப் படத்துல சிவபெருமான் உட்கார்ந்தநிலையில கண்களை மூடி, தவமிருந்துகிட்டிருப்பார். 
மோன நிலையில சிவன் அமர்ந்திருப்பதை ஹாலில் இருக்கும் ஷோபாவில் உடகார்ந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். அப்படி ஒருநாள் பார்த்துக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு சிவன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துட்டு மூடிட்டார். இப்போ சொன்னா, இதை ஒரு பிரமைனு சொல்லுவாங்க. ஆனா, அன்னிலருந்து அந்தப் படத்தைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். 

ஒரு முறை குருகுலத்துக்குப் போயிட்டு, லீவுல வீட்டுக்கு வந்து பார்த்தா அந்த சிவன் படத்தைக் காணோம். என்னால வருத்தத்தைத் தாங்க முடியலை. வீட்டுல கேட்டேன். `அதுவா... வீட்டுல சிவன் படம் இருக்கக் கூடாதுன்னுட்டாங்க. அதுதான் பெத்த நாச்சியார் கோயில்ல கொண்டு போய் வெச்சிட்டோம்’னு சொன்னாங்க. 

உடனே கோயிலுக்குப் போய் சிவன் படத்தைத் தேடினேன். காளி, ஆஞ்சநேயர், ஐயப்பன்னு நிறைய சாமிப் படங்கள் இருந்துச்சு. அந்த சிவன் படத்தை மட்டும் காணோம். அங்கே ஒரு சாது படுத்திருந்தார். அவர் கிட்ட `ஒரு பெரிய சிவன் படத்தைப் பார்த்தீங்களா?’னு கேட்டேன். அவர், `இந்த வயசுல சிவனைத் தேடாதே’னு சொன்னார். 

சக்தி விகடன் - சிவமகுடம் தொடருக்காக ஸ்யாம் வரைந்த ஓவியங்கள்

வீட்டுக்கு வந்தேன். சிவன் படம் இருந்த இடத்துல பெருமாள் படம் இருந்துச்சு. அப்புறம் பெருமாள் படத்தையே பார்த்துக்கிட்டு இருக்க ஆரம்பிச்சேன். இது ஏதோ எனக்கும் கடவுளுக்குமுள்ள தொடர்பு மாதிரியே இருந்துச்சு. பிறகு, நிறைய ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். அப்படியே கால ஓட்டத்துல பள்ளிப் படிப்பை முடிச்சேன். சுவாமிப் படங்கள், இயற்கைக் காட்சிகள், நடிகர்கள்னு நிறைய வரைய ஆரம்பிச்சேன். கடவுள் என்கூடவே இருந்து என்னை வெளிப்படுத்துறாருனு நினைப்பேன். 

உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிச்சப்போதான் ஒரு சம்பவம் நடந்துச்சு. ஏற்கெனவே படங்கள் வரைஞ்சு தர்றதுனால எனக்கு ஒரு பெரிய நண்பர்கள் கூட்டம் இருந்துச்சு. என்னைப் போட்டியாவே நினைக்கிற ஒரு நண்பனும் இருந்தான். அவன் ரஜினிகாந்துக்கு அவர் படத்தைப் பாராட்டி கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்துக்கு பதில் கடிதமா ரஜினிகாந்த்தோட ஆட்டோகிராஃபோடகூடிய புகைப்படமும் ஒரு கடிதமும் ரஜினி சார் ஆபீஸ்லேருந்து வந்திருந்துச்சு. எங்க தெருவே அல்லோலகல்லோலப்பட்டது. அப்போ என் நண்பர்கள்ல பலர் அவன் பக்கம் போய் சேர்ந்துட்டாங்க.

நான் வரைஞ்ச ஓவியங்களை எல்லாம் எடுத்துக்கிட்டு ரஜினி சாரை நேர்லயே பார்த்து கையெழுத்து வாங்கலாம்னு சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். சென்னையில எனக்கு யாரையும் தெரியாது. நான் வணங்கும் சிவபெருமானும் திருச்செந்தூர் முருகனும்தான் துணை. 
அப்பா அம்மாகூட ரயில்ல ஏதாவது ஒரு ஊருக்குப் போனா அங்கேயிருக்குற க்ளாக் ரூம்ல பொருள்களைக் கொடுத்துட்டு ஊரைச் சுத்திப் பார்க்குறது வழக்கம். அதே மாதிரி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லயே குளிச்சு முடிச்சுட்டு, ரஜினியைப் பார்க்கலாம்னு ஏவி.எம் ஸ்டூடியோவுக்குக் கிளம்பி வந்துட்டேன். அங்கே வேற ஏதோ படத்தோட ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்துச்சு. 

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் என்னைக் கூப்பிட்டு, `என்ன விஷயம்?’னு கேட்டார். நான் வரைஞ்ச ஓவியங்களைக் காண்பிச்சேன். அவர் ஒருத்தரைக் கூப்பிட்டு, என்னை நடிகர் சிவக்குமார்கிட்ட அனுப்பிவெச்சுட்டார். அவர் என் ஓவியங்களைப் பார்த்துட்டு, வேலை தேடி வந்திருக்கிறதா நெனைச்சுட்டார். நான் சிவக்குமார் படம் எதையும் வரைஞ்சிருக்கலை. அதனால அவர் வீட்டுக்கிட்ட இருந்த பெட்டிக்கடையில அவர் படம் எதுவும் இருக்கானு தேடி, ஒரு புக்குல இருந்த அவர் படத்தை பென்சில் டிராயிங் பண்ணினேன். அதை எடுத்துக்கிட்டுப் போய் அவரைப் பார்த்தேன். அவர் வெளியில எங்கேயோ கிளம்பிப் போயிட்டார்னு அவரோட உதவியாளர் சொன்னார்.

திரும்ப நான் ஏவி.எம் ஸ்டூடியோவுக்கே போனேன். அங்கே இருந்த லைட் பாய் ஒருத்தர் என்னைப் பார்த்துட்டு, `தம்பி... நீ அங்கே இங்கேனு அலையாதே. நேரா அம்புலிமாமா பத்திரிகை ஆபீஸுக்குப் போ. அங்கேதான் உன்னை மாதிரி ஓவியர்கள் நிறைய தேவைப்படுவாங்க’ன்னார். அங்கே போனேன். மறுநாள்  வாங்கன்னாங்க. ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தங்கிட்டேன். மறு நாள் அங்கே எனக்கு வேலை கிடைச்சுது. 350 ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தாங்க. அன்னிக்கு சஷ்டி. நான் வேலை தேடி வரலை. இது அதுவா நடக்குது.    

இந்த விஷயம்னு இல்லை... நிறைய இது மாதிரி நடந்திருக்கு. குமுதம் ஆபீஸ்ல வேலை கிடைச்சது, நக்கீரன் கோபால் அண்ணன்கிட்ட வேலை பார்க்காதபோதே அவர் சம்பளச் சான்றிதழ் கொடுத்தது, பேங்க் மானேஜர் வீட்டு லோன் கொடுத்ததுனு... என் வாழ்க்கையில எல்லாமே தானாகவே நடக்குது. சிவனும் திருச்செந்துர் முருகனுமே இரண்டு கண்களாக என்னை வழிநடத்துகிறார்கள்.

வெளி நாட்டு கிறிஸ்தவ நிறுவனம் ஒண்ணுலருந்து `பைபிள் கதைகளை படங்களாக வரைஞ்சு தர முடியுமா?’னு கேட்டிருந்தாங்க. மொத்தம் ஒரு லட்சத்து எண்ணூறு படங்கள்... மூணு வருஷத்துல முடிக்கச் சொன்னாங்க. நான் ரெண்டு வருஷத்துல முடிச்சுக் கொடுத்தேன். 

என்னைப் பொறுத்தவரை செய்யும் தொழில்தான் தெய்வம். தெய்வம்தான் என்னை வழி நடத்துறதா நினைக்கிறேன். நான் மட்டும் அன்னிக்கு ரஜினியைப் பார்த்து கையெழுத்து வாங்கியிருந்தா, ராத்திரியே ரயிலேறி ஊருக்குப் போயிருப்பேன். ஆனா, தெய்வத்தோட சித்தம் வேறயா இருந்திருக்கு’’ என்கிறார் ஸ்யாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு