Published:Updated:

ஒரு குழந்தை, சில மனிதர்கள், பல உலகங்கள்..`கேட்டட்' குடியிருப்பில் வசிப்பவர்கள் செய்ய வேண்டியவை!

ஒரு குழந்தை, சில மனிதர்கள், பல உலகங்கள்..`கேட்டட்' குடியிருப்பில் வசிப்பவர்கள் செய்ய வேண்டியவை!
ஒரு குழந்தை, சில மனிதர்கள், பல உலகங்கள்..`கேட்டட்' குடியிருப்பில் வசிப்பவர்கள் செய்ய வேண்டியவை!

திடீரென இவ்வுலமே பாதுகாப்பற்றதாக, குழந்தைகளை வளர்ப்பது கடினமானதாகத் தோன்றிவிட்டது.

`கேட்டட் கம்யூனிட்டி', `24 மணி நேரப் பாதுகாப்பு' இதுதான் இளம் பெற்றோருக்காகவே திரும்பத் திரும்பச் சொல்லப்படும் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை விளம்பர வாக்கியங்கள். கணவனும், மனைவியுமாக வேலைக்குப் போகையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்ப்பதை விட வேறு என்ன விருப்பம் அவர்களுக்கு இருந்துவிட முடியும்? அதற்காக உரிமையாளராக இருந்தும் வாடகையை ஒட்டிய அளவு `மெயின்டனன்ஸ்' தொகையையும் தர தயாராகத்தான் இருக்கிறோம். அடுத்த எலைட் விளம்பர வாக்கியம் - '100% ப்ரைவஸி'. அதாவது, ஒவ்வொரு வீட்டின் கதவையும், ஜன்னல்களையும், பால்கனியையும் வேறு யார் பார்வைக்கும் படாதமாதிரி கட்டித்தருகிறோம் என்கிறார்கள். உங்கள் வீட்டுக்குள் நடப்பது யாருக்கும் தெரியப்போவதில்லை, போலவே நீங்களும் யார் முகத்தையும் பார்த்து தொலைக்க வேண்டாம், என்பது தற்போது அடுக்குமாடி வீடுகளுக்கான கூடுதல் தகுதி! 

கிராமத்துக்கும், நகரத்துக்குமான மனநிலையிலான வித்தியாசம் என்னவென்று கேட்டால், நகரத்தில் மனிதர்களுக்கு வந்துவிடும் முகங்களின் ஒவ்வாமைதான் என்பேன். கிராமத்துத் திண்ணைகளில் அமர்ந்து வெற்றிலை மென்றுகொண்டிக்கும் பெருசுகள் பத்து சிசிடிவிக்குச் சமம். யார் வீட்டுக்கு யார் வந்தாலும் போனாலும், திண்ணையாரிடம் தகவல் இருக்கும். எப்போதாவது தென்படும் புதிய முகங்களை தெரிந்துகொள்ளும் சுவாரஸ்யம் நகரங்களில் வசிப்போரிடம் எப்படி இருக்கும்? பேருந்து, இரயில், பொது இடங்கள், அலுவலகம் என எங்கெங்கிலும் உடல்கள், முகங்கள், வியர்வை, வரிசைகள், காத்திருப்புகள். கூடடையும் ஒவ்வொரு மனிதனும் தனிமையைத்தான் விரும்புகிறான். இங்கே வசதி என்பதே `ப்ரைவஸி'யின் அளவுதான். வீட்டிற்காக எத்தனைக்கு எத்தனை பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை உங்களைப் பார்க்கும் / நீங்கள் பார்க்க விரும்பும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறையும். 

செக்யூரிட்டியும், சில சிசிடிவி காமிராக்களும் போதும், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றெண்ணியிருந்த மாநகரத்தின் நம்பிக்கையை, அயனாவரத்தில் 11 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் அத்தனையும் `பொய்' என்றாக்கியிருக்கிறது. வேறு யாரையும் விட காவல் பணிக்கென வருபவர்களாலேயே குற்றம் நிகழமுடியும் என்னும்போது, இனி யாரைத்தான் நம்பமுடியும் என்னும் அயர்ச்சி அழுத்துகிறது.

இருபது வீடுகள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் என் தோழி குடியிருப்பு சங்கத் தலைவியாக இருக்கிறாள். தனியார் நிறுவன செக்யூரிட்டி சர்வீஸை நிறுத்திவிட்டு தாங்களே விளம்பரம் தந்து வேலை ஆள் தேர்ந்தெடுக்கிறாள். உண்மையில் இது பெரிய வேலை. பணி நிமித்தம் வருபவரின் அடையாளங்களை சரிபார்ப்பது, முன்பு வேலை செய்த நிறுவனங்களில் அவர்களைப் பற்றி விசாரிப்பது, விடுப்பு எடுத்தால் மாற்று ஏற்பாடு செய்வது என்று குடியிருப்புக்காகவே முழு நேர வேலை செய்து அதற்கான ஊதியமும் பெற்றுக்கொள்கிறாள். பொதுவாக சின்ன குடியிருப்புகளில் உள்ள வேலைகளை அங்கிருக்கும் முதியவர்களோ, குடும்பத் தலைவிகளோதான் ஏற்கிறார்கள். அவர்கள் நேரத்தையும் உழைப்பையும் பெரிதாக யாரும் கருதுவதில்லை. மாறாக அதற்கான ஊதியத்தை அவர்களுக்கு வழங்கினால், திறன்மேம்பாடு அதிகரிக்கும். 

மிகப் பெரிய குடியிருப்புகளில் காவல் பணிக்கென ஆள்களை தேர்தெடுப்பதில் நிறைய உழைப்பு தேவைப்படுவதால், தனியார் செக்யூரிட்டி சர்வீஸோடு ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுதான் நடைமுறையில் உள்ளது. இதில் சாதகம் என்னவென்றால், பயிற்சி என்று ஒன்று அளித்து அனுப்புகிறார்கள். யார் விடுப்பில் போனாலும், வேலையிலிருந்து நின்றுவிட்டாலும் நிறுவனமே மாற்று ஆளை அனுப்பிவிடுவார்கள். பாதகம் என்னவென்றால், நாம் தரும் பணத்தில் கிட்டத்தட்ட பாதிதான் வேலை செய்பவர்களுக்குப் போகிறது. அதனால் அத்தகைய குறைவான சம்பளத்துக்கு, பரிதாபப்படக்கூடிய அளவில் முதுமையில் வாடிப்போயிருக்கும் முதியவர்களையும், ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் எது பேசினாலும் கியா கியா என்றே பதிலளிக்கும் வட இந்தியர்களுமே வருகிறார்கள். இது எல்லாவற்றையும் விட மேலாக செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனங்கள், காவல் பணிக்காகப் பகல் -இரவு ஷிஃப்ட்டாக பத்து நபர்களை அனுப்புகிறார்கள் என்றால் அடுத்த மாதம், சுழற்சி முறையில் அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி, புதிய பத்து நபர்களை அனுப்பி வைக்கிறார்கள். 

இதனால் செக்யூரிட்டிகளின் முகங்கள் நமக்கும், குடியிருப்புவாசிகளின் முகங்கள் அவர்களுக்கும் பரிட்சயமாவதே இல்லை. தனியே அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையை எந்த வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அறியாத செக்யூரிட்டியால் பயன்தான் என்ன?  

குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள பெற்றோர் செய்ய வேண்டியவற்றில் முக்கியமாக சிலவற்றைச் சொல்லலாம். 

சின்ன கிராமம் போல, தனி சமூகம் போலவே மாறிவிட்ட `கேட்டட்' குடியிருப்புகளில் வசிப்பவர்கள் செய்யவேண்டியவற்றைப் பார்க்கலாம். 

1. அடுக்குமாடி குடியிருப்பின் முக்கியப் பயனே பல்வேறு மனிதர்களோடு இணைந்து வாழலாம் என்பதுதான் என்று புரிந்து கொள்ளுங்கள். ஓர் அவசரம் என்றால் ஓடி வரவேண்டிய இடத்தில் இருப்பது உறவினர்களை விட, நண்பர்களை விட அக்கம்பக்கத்து வீட்டார்தான். அவர்களோடு இணக்கமாக இருங்கள். சின்னச் சின்ன விட்டுக்கொடுத்தலில் பல நன்மைகள் உண்டு. 

2. குடியிருப்பு சங்க மீட்டிங்கைத் தவிர்க்க பொய்களை தேடாமல், கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமாகப் பேசுங்கள். தனியே நாட்டுக்கென்று கிளம்பிச் சென்று சேவை செய்ய எல்லோராலும் முடியாதுதான். ஆனால், வசிக்கும் குடியிருப்புச் சங்கத்தில் தன்னார்வலராகவோ நிர்வாகியாகவோ இருந்து பாருங்கள். நாங்கள் முன்பிருந்த குடியிருப்பில் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஜீரோ-வேஸ்ட்டை சாத்தியமாக்கிக் காட்டினார்கள்.

3. கண்காணிப்பு கேமரா என்று ஒன்று இருக்குமே தவிர, அது வேலை செய்கிறதா, அதை யாராவது பார்க்கிறார்களா என்பது எதுவும் நமக்குத் தெரியாது. அதை அவ்வப்போது நிர்வாகிகள் பார்ப்பதும், பார்ப்பதைத் தெரியப்படுத்துவதும் அவசியம்.

4. குழந்தைகளை பார்க், நீச்சல் குளம், நீச்சல் குளத்தையொட்டிய குளியலறை, மொட்டைமாடி இப்படிக் குடியிருப்பின் உள்ளுக்குள்தான் என்றாலும் தனியே  விடாதீர்கள். பாதுகாப்புக்காக அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர் இருக்க வேண்டும்.

5.பொதுவாக ஜனவரி முதல் வாரத்துக்குப் பிறகு, உடற்பயிற்சி கூடமென்பது குடியிருப்பின் ஒதுக்குப்புறமான இடங்களில் ஒன்றாக மாறிவிடும். அதிலும் அதற்கென்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தால், மற்ற நேரங்களில் அதன் சாவி யார் பொறுப்பில் இருக்குமென்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேலும், பூட்டிக்கிடக்கும் வீடுகளையும், பேஸ்மென்ட் பார்க்கிங்கையும், மொட்டை மாடியையும் யாராவது பயன்படுத்துகிறார்களா எனக் கண்காணிப்பதும் முக்கியமான ஒன்று.

6. தனியார் நிறுவனமே என்றாலும், காவல் பணிக்கென அவர்கள் அனுப்பும் ஆட்களின் விவரங்கள் குடியிருப்புச் சங்க நிர்வாகிகளிடமும் இருக்க வேண்டும்.

7. கடைசியாக, உங்களைத் தெரியாவிட்டாலும், உங்கள் குழந்தை குடியிருப்பில் பரிட்சயமானதாக இருக்கட்டும். கலைநிகழ்ச்சிகளில், பிறந்தநாள் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதியுங்கள். மனிதர்களை வாசிப்பதை விட சிறந்த படிப்பொன்றும் இருக்கப் போவதில்லை.
 

திடீரென இவ்வுலமே பாதுகாப்பற்றதாக, குழந்தைகளை வளர்ப்பது கடினமானதாகத் தோன்றிவிட்டது. எல்லா செய்க்யூரிட்டிகளையும் துரத்தி விட்டு, சிசிடிவி கேமரா மட்டும்கொண்டு நாமே கண்காணித்தால் போதுமே என்று வாட்ஸ் அப்பில் விவாதிக்கிறார்கள். ஆனால், இங்கே எல்லோரும் கயவர்கள் என்று பொதுமைப்படுத்துவதோ, மனிதத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கோ அவசியம் வந்துவிடவில்லை என்றே நம்புகிறேன்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேபாளிகள் தமிழ்நாட்டில் காவல் வேலை செய்து வந்திருக்கிறார்கள். வருடக்கணக்கில் தங்கள் துணையைப் பிரிந்து இருக்கும் அவர்கள் மீது ஏதேனும் பாலியல் புகார் கேள்விப்பட்டிருக்கிறோமா? தற்சமயம், அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்தாம் செக்யூரிட்டி வேலைக்கென்று வருகிறார்கள். ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் உழைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவர்கள். அவர்களை கனிவோடும், மரியாதையோடும் நடத்துவது சமூகத்தின் கடமை. 

இதற்கு என்னதான் விடை? 

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

அதாவது, முன்பின் அறிமுகமில்லாதவரை நம்புவதும் நன்கு அறிந்தவரை சந்தேகப்படுவதும் எப்போதும் துன்பத்தையே தரும் என்கிறது குறள். இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம் வாழ்வியலுக்கான, சமூகத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் வள்ளுவத்திடம் எப்போதும் போல் சரணடைவோம்.

அடுத்த கட்டுரைக்கு