Published:Updated:

திடக்கழிவு, நீர் மேலாண்மையில் ஜெர்மனி ஏன் ஸ்பெஷல்? - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

நம் நிலை இப்படியிருக்க, மேலைநாடுகள் இந்தத் திடக்கழிவு மேலாண்மையை எப்படி கையாளுகின்றன என்னும் கேள்வி நம்முள் எழுவது இயல்பே. ஜெர்மனியின் பசுமை நகரமான ஹானோவர் குப்பை இல்லா புது நகரமாக இப்போது ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

திடக்கழிவு, நீர் மேலாண்மையில் ஜெர்மனி ஏன் ஸ்பெஷல்? - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்
திடக்கழிவு, நீர் மேலாண்மையில் ஜெர்மனி ஏன் ஸ்பெஷல்? - விகடன் நிருபரின் நேரடி அனுபவம்

இந்தியாவில் ஒவ்வொரு தெருவின் முடிவும் இவற்றால்தான் நிறைந்திருக்கும். மூக்கைப் பிடித்துக்கொண்டு நகர்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. அதுவும் மழைக்காலங்களில் இதன் கொடுமை இன்னும் அதிகமாகவே இருக்கும். சாலையோரமே குடித்தனம் என்றாகிப் போன பலருக்கு இது பழக்கப்பட்ட ஒன்று. ஆனால், கார் கண்ணாடி மூலம் மட்டுமே ஊரை அளக்கும் சிலருக்கு இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு இது.

இப்படி இந்தியாவின் சாலைகள் எல்லாம் குப்பைகளால் நிறைந்து, வழிந்துகொண்டிருக்கும்போது சிலர் அதை அருவருப்பாகவும் சிலர் அதைத் தற்காலிக ஆதங்கத்தோடும் கடக்க, இன்னும் சிலர் அதை மேலைநாடுகளோடு ஒப்பிட்டு ஏக்கம் கலந்தப் பார்வையோடும் கடந்து போவார்கள். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 62 மில்லியன் டன் கழிவுகள் உருவாகின்றன. அதில் அதிகபட்சம் 7௦ முதல் 8௦ சதவிகிதம் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. இவை சேகரிக்கப்படுவதால் மட்டுமே நாடு சுத்தமாக்கப்படுவதில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஏதோ ஓர் இடத்தில் மீண்டும் இவை குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வெறும் 2௦ சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட மீதமுள்ளவை கேட்பாரற்று துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கின்றன.

நம் நிலை இப்படியிருக்க, மேலைநாடுகள் இந்தத் திடக்கழிவு மேலாண்மையை எப்படி கையாளுகின்றன என்னும் கேள்வி நம்முள் எழுவது இயல்பே. ஜெர்மனியின் பசுமை நகரமான ஹானோவர் குப்பை இல்லா புது நகரமாக இப்போது ஜொலித்துக்கொண்டிருக்கிறது. திடீர் திடீரென்று மழையும் பனியும் மாறி மாறிப் பெய்தபோதும் நகரத்தில் துளி தண்ணீர் தங்குவதில்லை. இங்குள்ள மக்கள் எல்லாவற்றுக்கும் காகிதங்களை உபயோகிக்கும் மக்களாக இருப்பினும் ஒரு குப்பைக்கூளமும் அங்கு இல்லை. சமீபத்தில் நான் ஜெர்மனிக்கு சென்றிருந்தபோது அவர்கள் எப்படி இந்தப் பிரச்னையைச் சமாளிக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன்.

அங்கு குப்பைகள் உருவாகாமல் இல்லை. சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் போடும் குப்பைகளும் வீணாக்கும் பொருள்களும் நம் நாட்டோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகம். இருப்பினும் திடக்கழிவு மேலாண்மையிலும் மாசடைந்த நீரின் மறுசுழற்சியிலும் இவர்கள் கொண்டிருக்கும் திட்டங்கள்தான் இவர்களின் சாலைகளை இன்னமும் மின்னச் செய்துகொண்டிருக்கின்றன.

எந்தக் குப்பையும் குப்பை மட்டும் அல்ல, அதிலும் பெரும் பயன் இருக்குகிறது என்று நம்பும் இவர்கள் குப்பைகளை வகைப்படுத்திக் கையாளுகிறார்கள். அதாவது, நகரத்தின் எல்லா இடத்திலும் நான்கு நிறங்களில் நான்கு வகையான குப்பைத் தொட்டிகள்.

பழுப்புநிற குப்பைத் தொட்டி - உயிரிக்கழிவுகள்

கருப்புநிற குப்பைத் தொட்டி - இதர கழிவுகள்  

மஞ்சள் குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக் குப்பைகள்

நீலநிற குப்பைத் தொட்டி - காகிதம், காகிதம் சார்ந்த குப்பைகள்

இதில் முதல் இரண்டு வகையைச் சார்ந்த குப்பைகள்தான் உடனடி ஆபத்துக்குள்ளானவை. இவற்றை உடனடியாகத் தரம் பிரித்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத உயிரிவாயு நிலையத்துக்குக் கொண்டு செல்லும் இவர்கள் மீண்டும் அதை ஒருமுறை தரம் பிரித்து, உயிரிவாயு தொட்டியில் இடுகிறார்கள். இதிலிருந்து உருவாகும் உயிரிவாயு எரிவாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மீண்டும் ஒருமுறை இரண்டாவது, மூன்றாவது வகையைச் சார்ந்த பொருள்கள் வெவ்வேறு வகையான மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் தங்கும் கழிவுகள் நான்காவது வகையோடு கொண்டு சேர்க்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படுகின்றன. இவற்றை எரிப்பதற்கு எக்கச்சக்க ஆற்றல் தேவைப்பட்டாலும் எரிக்கும்போது வெளிவரும் வெப்பத்தைக் கொண்டு மீண்டும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

அதாவது வெளியிடப்படும் வெப்பத்தின் மூலம் நீரை நீராவியாக்கி டர்பைன்களை இயக்கச்செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதிலும் எரிந்து மிச்சமான சாம்பல் ஊருக்கு வெளியே கொட்டப்பட்டு மணல் கொண்டு மூடப்படுகிறது. இது நிலத்தடி நீருடன் கலந்துவிடும் அபாயம் இருப்பதால் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகிறது. அப்படி எதுவும் ஆபத்து இருப்பின் அது உடனே சரி செய்யப்படுகிறது. இப்படியாகத் தரம் பிரிக்கப்பட்டு எல்லா கழிவுகளும் மேலாண்மைக்கு உட்படுத்தப்படக் குப்பை இல்லா பசுமை நகரமாகத் திகழ்கிறது இந்த ஹானோவர். திடக்கழிவு மேலாண்மை மட்டும் போதுமா என்றால் இல்லை என்ற பதிலோடு இந்நகரம் நீர் மேலாண்மையிலும் முன்னணி நகரமாகத் திகழ்கிறது.

தெருக்கள்தோறும் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இணைக்கப்பட, வீட்டுக்கழிவு நீர் குழாய்களும் இதோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கு நகரத்துக்கான தண்ணீர்த் தேவையையும் அரசே தீர்மானிக்கிறது. அதாவது நம் ஊரைப்போன்று இங்கு யார் வேண்டுமானாலும் நிலத்தடி நீரைக் குழாய் போட்டு எல்லாம் எடுக்க முடியாது. நகராட்சி அமைப்புகள் மட்டும்தான் நீரை வழங்க முடியும். வாட்டர் மீட்டர் என்னும் கருவி ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படும் நீரின் கொள்ளளவு கணக்கிடப்படுகிறது.

தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மூன்று கட்ட சோதனைக்குப் பிறகும் நீர் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மீண்டும் இந்தத் தண்ணீர் ஆற்றிலே விடப்படுகிறது. ஏனெனில், மூன்று கட்ட சோதனைக்குப் பிறகும் தண்ணீரில் ஏதேனும் மிகக் குறைந்த அளவில் கழிவுகள் இருக்கும் என்பதால், அதை ஆற்றுநீரில் விடும்போது நிலத்தடி நீராக மாற்றப்படுகிறது. மீண்டும் அதை நகராட்சியே எடுத்து குடிநீராக விநியோக்கிறது.

இவையெல்லாம் நம் அரசும் மக்களும் அறியாத வழிமுறைகளாக என்றால், நிச்சயம் இல்லை. அபரிமிதமாக நாம் கொண்டிருக்கும் மக்கள் தொகை இதை ஒரு மிகப்பெரிய சவாலாக நம் கண்முன்னே நிறுத்தியிருப்பினும் `சுத்தம் சோறு போடும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனதை நாம் வெறும் ஏட்டளவில் வைத்துக்கொண்டிருப்பதும், இதையெல்லாம் காரணம் காட்டி தப்பித்துக் கொண்டிருக்கும் அரசின் திட்டங்களும்தான் இந்தியாவின் நகரங்களைக் குப்பைக்கூளமாக மாற்றியிருக்கின்றன.

நம் மக்களும், அரசும் நினைத்தால் சுகாதாரமான இந்தியா சாத்தியப்படாத ஒன்று இல்லை. ஏனெனில், உலகளவில் பணக்கார நாடாக இருப்பதைவிட, ஆரோக்கியமான நாடாக இருப்பது முக்கியம் அல்லவா?