Published:Updated:

பட்டினப்பாக்கத்தில் ஒரு போட் சர்வீஸ்... அசத்தும் `கடல்காரி’ அன்னத்தாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பட்டினப்பாக்கத்தில் ஒரு போட் சர்வீஸ்... அசத்தும் `கடல்காரி’ அன்னத்தாய்!
பட்டினப்பாக்கத்தில் ஒரு போட் சர்வீஸ்... அசத்தும் `கடல்காரி’ அன்னத்தாய்!

சீனிவாசபுரத்தின் பின்னீர் ஓடையில், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மனிதர்கள் போவதற்கு கட்டைப்படகை இழுத்து உதவுவதுதான் அன்னத்தாயின் வேலை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சீனிவாசபுரம் குறுகிய தெருக்களில் நடக்க தொடங்கியவுடன், ஆட்கொண்டது மீன் வாசனை. குறுக்கு தெருக்களுக்குள் இருக்கும் உப தெருக்களுக்குள் நடந்துகொண்டே போனால், 148-வது ப்ளாக்கை ஒட்டி இருக்கும் கடைசி வீட்டிற்கு வெளியில் உட்கார்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார் அன்னத்தாய். 

சென்னை எம்.ஆர்.சி நகருக்கு பின்பக்கம் இருக்கிறது சீனிவாசபுரம். பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியே அமைந்த வீடுகளும், பின்னீர் ஓடைக் கரைகளில் அமைந்திருக்கும் வீடுகளும் சேர்ந்ததுதான் சீனிவாசபுரம். சீனிவாசபுரத்தின் பின்னீர் ஓடையில், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மனிதர்கள் போவதற்கு கட்டைப்படகை இழுத்து உதவுவதுதான் அன்னத்தாயின் வேலை.

``எனக்கு திருநவேலில சாத்தான்குளம்தான் பெறந்த வீடு. பல தலைமுறையளுக்கு முந்தியே இங்கன வந்தாச்சு” என்பவரின் நெல்லை மொழிக்கு எந்த சிதைவுமில்லை. ``பட்டினப்பாக்கத்துல மீன்காரவுகளும், வீட்டு வேல பாக்கறவுகளும்தான் பிரதானமா இருக்காங்க. இப்பவும் கூட எம்மக எம்.ஆர்.சி நகர்ல அப்பார்ட்மென்ட் வீட்டாளுகளுக்கு வீட்டு வேல பாக்குது” என்னும் அன்னத்தாய், பட்டினப்பாக்கத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பல கதைகள் சொல்கிறார். 

சீனிவாசபுரத்திலிருந்து ஓடையைக் கடந்து எதிர்பக்கம் போகிறவர்களும், அங்கிருந்து சீனிவாசபுரம் வருபவர்களும் 2 ரூபாய் கொடுத்துவிட்டு போக்குவரத்துச் செலவை முடித்துக்கொள்கிறார்கள். ``முன்னாடியெல்லாம் நடந்துபோகும் அளவுக்கு தண்ணியிருக்கும். முச்சூடும் நடந்தே அந்தாக்குல போயிரல்லாம். இப்போ நிறைய தண்ணி இருக்குறதால இப்படி ஒரு ஏற்பாடு. மீன்காரங்க கிட்ட பழைய கட்டபோட்ட வாங்கி, இரண்டு ரூபாய் வாங்கிட்டு எங்க மக்களுக்கு உதவியாயிருக்கேன். ஷேர் ஆட்டோ பிடிச்சு அந்தப்பக்கம் போறது சின்ன விஷயமில்ல. வீட்டு வேலை பாக்கப் போகும்போது 40, 50 ரூபா அதுக்கே செலவு பண்ணா தாங்குமா? எனக்கு அவ்வளவு சந்தோஷமாயிருக்கு. கட்டட வேலை செய்ய வாற பிள்ளைகளுக்கும், வீட்டு வேலை செய்யறவுகளுக்கும் காலைல பயணம் என்னாலதான்” - வெற்றிலைக் கறைச் சிரிப்போடு, மாலை வரை கயிற்றை இழுத்து எல்லோரையும் கரை சேர்க்கிறார் அன்னத்தாய். 

`ஓடையைக் கடந்துபோவது எல்லாருக்கும் பயமில்லாம இருக்குமா’ என்று கேட்டவுடன், அவர் அளித்த பதில்தான் பட்டினப்பாக்கத்துக்காரர்களின் ஒட்டுமொத்த குரலும். கடலையும், கடல் சார்ந்த இடத்தை தங்களால்தான் பார்த்துக்கொள்ள முடியும் என்று சொல்கிறார்கள் அம்மக்கள்.

``இங்க தண்ணிதான வாழ்க்கையே. கடலே பிழைப்பா இருக்க மக்ககிட்ட ஓடை பயமான்னு கேப்பீயளா? அடையாற சுத்தப்படுத்த நாங்க எதுக்கு பெரும்பாக்கம் போகணும். கடலில்லாத எடம் எங்களுக்கு பாலை மட்டுமில்ல, நரகம். கடல் மண்தான் எங்களுக்கு வேணும். போன வாரம் கடல் வந்து 60 வீடுகளுக்கு மேல வாரிப்போயிருக்கு. இங்கன இருக்க எஸ்டேட்லயே எங்களுக்கு மாற்று வசதி கொடுக்கக் கேக்குறோம்” என்றார் 65 வயதுக்குரிய நிதானத்துடன். ``ரெண்டு வாரம் முன்னுக்க, சொந்தக்காரவுக வீடுங்க இடிஞ்சு விழுந்ததுக்கு மனு கொடுக்க போனப்ப, `பட்டா நிலத்தில இருக்கீகளோன்னு’ அதிகாரிங்க பேசிருக்காங்க. அழுதுச்சு அம்மா” என்றார் அன்னாத்தாயின் மகள் ஷீலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு