Published:Updated:

ஸ்டெர்லைட் வேதாந்தா எவ்வளவு கழிவுகளை வெளியேற்றியது தெரியுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

`வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வருடாந்திரமாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது’ என்று அண்மையில் ஒரு பேட்டியில் அதன் நிறுவனர் அனில் அகர்வால், கூறியிருந்ததை இங்கே ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம். 

ஸ்டெர்லைட் வேதாந்தா எவ்வளவு கழிவுகளை வெளியேற்றியது தெரியுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!
ஸ்டெர்லைட் வேதாந்தா எவ்வளவு கழிவுகளை வெளியேற்றியது தெரியுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரு டன் என்பதன் அளவுகோல் நமக்கு எளிமையாகப் புரிய வேண்டும் என்றால், `நமது உள்ளங்கை அகலத்திலான ஒரு மூட்டையைப் போல ஆயிரம் மூட்டைகள்!’ அப்படியாகப் புரிந்துகொண்டால், எட்டாயிரம் மூட்டைகளை அதாவது 8 டன்னையும் இப்போது நம்மால் எளிதாகக் கற்பனை செய்து புரிந்துகொள்ள முடியும்தானே! அந்த எட்டாயிரம் மூட்டைகளும் கழிவுகள் என்றால்... அந்தக் கற்பனை நம்மை முகம் சுளிக்க வைக்கிறது இல்லையா! இப்படியாக ஒவ்வொரு நாளும் எட்டாயிரம் மூட்டைக் கழிவுகள் நம் மீது திணிக்கப்பட்டால்... நிச்சயம் நாம் கொந்தளிப்போம் அல்லவா! இருபது வருட காலமாக நம் மீது இந்த அளவில், மூட்டை மூட்டையாகக் கழிவுகள் திணிக்கப்படுகின்றன என்றால் நமது கொந்தளிப்பு நியாயமானதாகவே இருக்க முடியும்! 

வெளிநாட்டு நிறுவனமான வேதாந்தா தூத்துக்குடியில் இயக்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து புற்றுநோயை உண்டாக்கும் ஆர்செனிக் கழிவுகள் இப்படித்தான் வெளியேற்றப்பட்டன. அதாவது, நாளொன்றுக்குச் சராசரியாக 8 ஆயிரம் கிலோ கிராம்! இதை வெளியிலிருந்து யாரும் சொல்லவில்லை; ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட ஒரு தர அறிக்கையைத் தணிக்கை செய்த கணக்குகளே தெரிவிக்கின்றன. 

வேதாந்தாவின் ஆலோசனைக் குழுமமான மத்திய அரசின் NEERI கடந்த 2005-ம் ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கையில் 0.0579% ஆர்செனிக் கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009, 2010-ம் ஆண்டுகளில் அந்த நிறுவனம் இறக்குமதி செய்த தரக்குறைவான `காப்பர் ஓர்’களில் இரண்டு மடங்கு... அதாவது 0.12% ஆர்செனிக் கழிவுகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

தரக்குறைவிலான `காப்பர் ஓர்’ வாங்கியதன் மூலம், ஸ்டெர்லைட் வேதாந்தா 4.8 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தியுள்ளது. அதையும் அந்தத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.; இப்படிப்பட்ட நிர்வாகத்தால், ஆலையைச் சுற்றித் தேவையான அளவில் பசுமைச்சூழல் இல்லாத நிலை ஏற்பட்டது. அதோடு சேர்ந்த அதிக அளவிலான ஆர்செனிக் நச்சு வெளியேற்றம்தான், பொதுமக்களை பாதித்துள்ளது.

பசுமைச் சூழல் (GreenBelt) தான் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளையும் காற்று மாசினையும் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

சென்னை ஐ.ஐ.டியின் கெமிக்கல் இன்ஜினீயரிங் துறையின் முன்னாள் பேராசிரியர் சுவாமிநாதன் இதுபற்றிக் கூறுகையில், ``மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைகளின்படி 102.8 மீட்டர் அளவிலான சிம்னிகள் இருக்க வேண்டிய இடத்தில், 60 மீட்டர் அளவிலான சிம்னிகளே வேதாந்தா நிறுவனத்தால் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ஸ்டெர்லைட்டின் சல்பர் அமில ஆலையிலிருந்து காற்றில் வெளியேறும் கழிவுகள் அதிகரிக்கின்றன. அதனால், காற்றில் சல்பர் அளவும் அதிகமாகிறது. மேலும், ஆர்செனிக் கழிவுகளால் சூழலை மாசுபடுத்தியதோடு அதிலிருந்து ஆதாயமும் அடைந்துள்ளது வேதாந்தா! உதாரணத்துக்கு வருடாந்திரமாக 

4 லட்சம் டன் ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்திக்காகப் பரிந்துரை அளவுகளின்படி 173 ஹெக்டேர் அளவிலான நிலம் தேவை. இதில் திடக் கழிவுகளைச் சேமித்து வைக்கும் 65 ஹெக்டேர் நிலமும், காற்று மாசுக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான 1.5 ஹெக்டேர் நிலமும் அடக்கம். ஆனால் 2007-ல் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற அந்த நிறுவனத்தின் வசம் 102.3 ஹெக்டேர் நிலம் மட்டுமே இருந்தது. 173 ஹெக்டேர் நிலத்தில் 43 ஹெக்டேர் அளவுக்குப் பசுமைச்சூழலை அந்த நிறுவனம் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், குறைந்த அளவிலான நிலமே நிறுவனத்தின் கையிருப்பில் இருந்ததால் பசுமைச்சூழலையே அவர்கள் உருவாக்கவில்லை. இதன்மூலம் செலவைக்குறைத்து  லாபத்தை அதிகரித்துள்ளனர்.

`வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வருடாந்திரமாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது’ என்று அண்மையில் ஒரு பேட்டியில் அதன் நிறுவனர் அனில் அகர்வால், கூறியிருந்ததை இங்கே ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம்.