Published:Updated:

``கடவுள் ஒருவர்தான்... அல்லாவா, ஜீசஸா, கிருஷ்ணரா யாராகவும் இருக்கலாம்!’’ - பாடகர் மனோ

``கடவுள் ஒருவர்தான்... அல்லாவா, ஜீசஸா, கிருஷ்ணரா யாராகவும் இருக்கலாம்!’’ - பாடகர் மனோ
``கடவுள் ஒருவர்தான்... அல்லாவா, ஜீசஸா, கிருஷ்ணரா யாராகவும் இருக்கலாம்!’’ - பாடகர் மனோ

திரை இசைப் பாடகர் மனோ. 'சொல்லத் துடிக்குது மனசு' படத்தில், 'தேன்மொழி இன்ப தேன்மொழி...' பாடல் தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என 25,000 பாடல்கள், 25,000 பக்திப் பாடல்கள்... என 50,000 பாடல்கள் பாடி இருப்பவர். தென்னிந்தியாவில் இந்தப் பாடகருக்கு அறிமுகம் தேவையில்லை. `எனது ஆன்மிகம்’ பகுதிக்காக இங்கே மனம் திறக்கிறார் மனோ...  

``எங்க சொந்த ஊர் ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்குப் பக்கத்துல இருக்குற ஒரு கிராமம். அம்மா ஷகிதா, அப்பா ரஸூல் ஆர்மோனிஸ்ட். தாத்தா நாகூர் சாஹிப். ஆந்திராவுல இருக்குற இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க பல பேர், இங்கே தமிழ்நாட்டுல இருக்குற நாகூர் தர்காவுக்கு வந்து வணக்கம் செலுத்திட்டுப் போவாங்க. அந்த அடிப்படையில நிறைய பேர், `நாகூர் சாஹிப்’னு குழந்தைகளுக்கு பேரு வைக்கிறதும் உண்டு. 

எங்க தாத்தாவும் திருவரங்கம் கோயில்ல நாதஸ்வரம் வாசிச்சுக்கிட்டிருந்த ஷேக் சின்ன மௌலானாவும் ஒரே குருவிடம்தான் ஷெனாய், நாதஸ்வரம் இரண்டையும் கத்துக்கிட்டாங்க. ஷேக் சின்ன மௌனாலானா பெரிய லெவலுக்குப் போயிட்டார். எங்க தாத்தாவால அப்படிப் போக முடியலை. 

தன் குழந்தைங்களுக்கு... அதாவது எங்க அம்மா, பெரியம்மாவுக்கெல்லாம் ஆர்மோனியம் நாதஸ்வரம், ஷெனாய் எல்லாம் கற்றுக்கொடுத்தார். அந்தக் காலத்துல ஆந்திராவின் நெல்லூர், ஓங்கோல் பக்கத்துல இருக்கிற கிராமங்கள், நகரங்கள்ல  சிவராத்திரி விழா  மற்ற கோயில் திருவிழாக்கள் நடக்கும். சுவாமியை ரதம், பல்லக்கு, தேர்... ஏதோ ஒண்ணுலவெச்சு, ஊரையே வலம் வருவாங்க. அப்படி வலம் வர்றப்போ கூட்டத்துக்கு முன்னாடி ஜமுக்காளம் விரிச்சு எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க நாதஸ்வரம் வாசிப்பாங்க. மல்லீஸ்வரியம்மா, பானுமதியம்மா பாட்டையெல்லாம் வாசிப்பாங்க.

கோடை காலத்துல நடக்கும்  'ராமயணம்', 'மகாபாரதம்' மாதிரியான தெருகூத்து நாடகங்களுக்கு இசையமைப்பார் அப்பா. விடிய விடிய நடைபெறும் இந்த நாடகங்களுக்கு மக்கள் பெரிய அளவில கூடுவாங்க. கிருஷ்ணர், ராமர் போன்ற வேஷங்கள்ல அம்மா நடிச்சுப் பாடுவாங்க. அப்பா ஆர்மோனியம் வாசிப்பார். நான் அப்போ சின்னப் பையன்... நானும் கூடவே போவேன். மழை நாள்கள்ல நாடகங்கள், கச்சேரிகள் இருக்காது. ஆனாலும் வீட்ல ரிகர்சல் நடக்கும். அம்மா பாடுவாங்க... அப்பா பெட்டி
(ஆர்மோனியம்) போடுவார். நாடகத்துல நடிக்கிற மற்ற நடிகர்களெல்லாம் வந்து ரிகர்சல்ல கலந்துக்குவாங்க. அதையெல்லாம் அஞ்சு வயசுலேருந்தே பார்த்து பார்த்து எனக்கும் அது அப்படியே வந்துடுச்சு. சில இடங்கள்ல மைக் பன்னண்டு அடியில தொங்கும். அப்பவே ஒரு ஸ்டூல்ல என்னை நிக்கவெச்சு, 'என் பையன் பாடுவான்'னு சொல்லிட்டு ஆர்மோனியம் வாசிப்பார் அப்பா.

அப்பா எந்த ஊருக்கு நாடகம் போடப் போனாலும், வழியில வர்ற  சர்ச், பள்ளிவாசல்னு பாரபட்சம் பார்க்க மாட்டார். வணங்கி, நமாஸ் பண்ணிட்டு வருவார். கோயில்கள் வந்துச்சுனா கை, கால்களையெல்லாம் சுத்தம் பண்ணி, தேங்காய், பழம், பூ வாங்கிக்கிட்டுப்போய் அர்ச்சனை பண்ணிட்டு வருவார். கோயிலோ, சர்ச்சோ, பள்ளிவாசலோ பாரபட்சம் பார்க்க மாட்டார். 
கடவுள் ஒருவர்தான். அவர் அல்லாவா, ஜீசஸா, கிருஷ்ணரா, கோவிந்தரா யாராகவும் இருக்கலாம். நாம பார்த்ததில்லை. கலைத்துறையைச் சேர்ந்தவங்களா இருக்குறதால எல்லா மதத்தைச் சேர்ந்தவங்களும் நம்மை ஆதரிக்கிறாங்க. நிகழ்ச்சியைப் பார்த்து கைதட்டுறாங்க. 

அந்தப் பழக்கம் எனக்கும் அப்படியே வந்துடுச்சு. தெய்வங்களை வணங்குறதுல எனக்கும் எந்தப் பாரபட்சமும் கிடையாது. ஆந்திராவுல இருந்தா விஜயவாடா, கனகதுர்கம்மாவைக் கும்பிடுவேன். காஞ்சிபுரம்னா காமாட்சி அம்மனை வழிபடுவேன். நாகப்பட்டினம் போனா வேளாங்கண்ணி போகாம வர மாட்டேன். இறைசக்தி மிக்க கோயில்கள் எதுவாக இருந்தாலும் போய் சாமி கும்பிட்டுட்டுத்தான் புறப்படுவேன். கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார். எல்லார் மனசுலயும் இருக்கார். 

இதுக்கு உதாரணமா ஒண்ணைச் சொல்லலாம். 2015-ம் வருஷம்  சென்னையில வெள்ளம் வந்தப்போ, வளசரவாக்கத்துல இருந்த சர்ச்சுல இந்துக்கள்... அதுவும் பிராமணர்கள் பலபேர் வந்து, பொங்கல், வடை, புளியோதரை இதையெல்லாம் பண்ணி மக்களுக்குப் போட்டாங்க. அங்கே  பள்ளிவாசல்ல உப்புமா, பிரெட், ஜாம், சமோசா, குஸ்கா, எல்லாம் செய்து பொட்டலம் போட்டுக் கொடுத்தாங்க. ராஜஸ்தான்ல இருந்து உடைகள், துண்டுகள் போர்வையெல்லாம் வந்தது. இதுல ஏழை-பணக்காரன் வித்தியாசம் எங்கே இருக்கு? பசி எல்லாருக்கும் ஒண்ணுதான். அந்த நேரம்... அந்தத் தருணம்... கடவுளை எல்லாரும் உணர்ந்தாங்க. இதுல எங்க பாரபட்சம் வந்துச்சு? எல்லா கடவுளும் ஒண்ணுதான்.

எனக்கு கடவுள் கொடுத்திருக்கிற வேலை, இசையும் பாடலும்! அதில் நான் கடவுளை உணர்றேன். ஒரு விழாவுல 8 மணி நேரம் பாடுறதுங்கிறது அத்தனை சுலபமல்ல. அமெரிக்கா, கனடாவுக்கெல்லாம் போனா குறைஞ்ச இசைக்குழு உறுப்பினர்களோடதான் போவோம். ஆண் குரல் எல்லாத்தையும் நானே பாடவேண்டியிருக்கும். அவ்வளவு சக்தியைக் கொடுக்கிறது இறைசக்திதான். 
குறிப்பா, இசைத்துறையில கிதார், கீபோர்டு, டிரம்ஸ் இதையெல்லாம் யார் வேணும்னாலும் வாசிச்சிடலாம். ஆனா, குரல்...  அது இறைவன் கொடுத்த வரம். எஸ்.எஸ்.எல்.சியை நாலஞ்சு முறை எழுதினேன். பாஸ் பண்ண முடியலை. அப்போ பதினைஞ்சு வயசுப் பையன் வேஷத்துல ஒரு தெலுங்கு படத்துல நடிச்சேன். அந்தப் படத்துக்கு இசை அமைச்சவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 

அவர்தான்  ''நீ சென்னைக்கு வந்தா உனக்கு நல்ல வாய்ப்பு இருக்கும்'' னு சொன்னார். எனது திரைப்படத் துறை வாழ்க்கையின் முதல் கடவுள் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். அவர்கிட்டே ரெண்டரை வருஷம் உதவியாளரா இருந்தேன். அப்போதான் திரை இசையைப் பத்தி நல்லா தெரிஞ்சிக்குற வாய்ப்பு கிடைச்சுது. 

அதுக்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு இசை அமைச்சுக்கிட்டிருந்த சக்கரவர்த்திகிட்ட பைலட் சிங்கரா (ட்ராக் பாடகர்) இருந்தேன்.  பைலட் சிங்கர்னா கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவங்கள்லாம் பாடுறதுக்கு முன்னாடி நாம பாடிவெச்சிடணும். அதுக்கப்புறம் அவங்க வந்து அதைக் கேட்டுட்டுப் பாடுவாங்க. அவங்க பாடும்போது அவங்களோட பாவனைகள், வார்த்தைகளைக் கையாளும் விதங்கள் பத்தியெல்லம் தெரிஞ்சிக்கிட்டேன். 

அப்போதான் (1986)இளையராஜாவை வந்து பார்த்தேன். அவர்தான் 'நாகூர் பாபு'னு இருந்த என் பேரைக் கேட்டுட்டு, `ஏற்கெனவே நாகூர் ஹனீபானு ஒருவர் பெரிய பேரோட இருக்கார். அதனால உன் பேரை 'மனோஜ்', 'மனோ'... ரெண்டு பேர்ல ஒண்ணை சொல்லு’னு சொன்னார். அப்போ சித்ரா பாட வந்து பத்து மாதங்கள் ஆகி இருந்துச்சு. `மனோ, சித்ரா இணைந்து பாடிய பாடல்கள்னு டைட்டில்ல போட்டா நல்லா இருக்கும்’னு சொன்னார். `நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க சார்’னு சொன்னேன். 

பாசில் சார் படம் 'பூவிழி வாசலிலே' படத்துல டைட்டில் ஷாங் பாடவெச்சார். ஆனா, அதுக்கு முன்னாடியே 'சொல்லத் துடிக்குது மனசு' படத்துல 'தேன் மொழி எந்தன் தேன்மொழி...' பாடல் ரிக்கார்டிங் ஆகிடுச்சு. `பூவிழி வாசலிலே’ படம் ரிலீசாகிடுச்சு. இளையராஜாவோட இசையில மட்டும் 1,400 பாடல்கள் பாடி இருக்கேன்.  

`வேலைக்காரன்’ படத்துல 'வேலை இல்லாதவன்தான்...' பாட்டை ரஜினிக்குத்தான் பாடுறேன்கிறதே எனக்குத் தெரியாது. வெங்கடேஷ் மாஸ்டர்தான் `நீ யாருக்குப் பாடி இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?’னு சொல்லி விஷயத்தைச் சொன்னார். அன்னிக்கு நான் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் ஒரு சின்னப் பாடகன். எனக்கு சூப்பர்ஸ்டாருக்கு பாடுற வாய்ப்பை ராஜா சார் தந்தார். இது முழுக்க முழுக்க இறைவனோட திருவருள்தான்கிறதை நான் முழுசா நம்புறேன்'' - உள்ளம் நெகிழச் சொல்கிறார் பாடகர் மனோ.