Published:Updated:

``மழையே இல்லைனாலும் விவசாயம் செய்வேன்!” - கழிவு நீரில் விவசாயம் செய்யும் அரியலூர் விவசாயி

``மழையே இல்லைனாலும் விவசாயம் செய்வேன்!” - கழிவு நீரில் விவசாயம் செய்யும் அரியலூர் விவசாயி
``மழையே இல்லைனாலும் விவசாயம் செய்வேன்!” - கழிவு நீரில் விவசாயம் செய்யும் அரியலூர் விவசாயி

எங்கள் பகுதி மக்கள் தண்ணீரை அதிகமாகச்  செலவு செய்கிறார்கள். அதனை நான் விவசாயம் செய்ய பயன்படுத்திக் கொள்கிறேன். எங்கள் பகுதியில் 5  மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன,

”நிலத்தடியில் தண்ணீர் இல்லை... ”மழை பெய்யவில்லை... அதனால் விவசாயம் செய்யவில்லை" எனவும் விவசாயிகள் சொல்லக் கேட்டிருப்போம். அதில் இவர் வித்தியாசமானவர். வீடுகளிலிருந்து வெளியாகும் சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரை  பயன்படுத்தி அதன் மூலம் நெல் விவசாயம் செய்து வருகிறார்  அரியலூரை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி செல்வம். நெல் விவசாயத்திலும் மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பர்ய நெல் ரகங்களையே விவசாயம் செய்தும், விதை தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியும் வருகிறார் செல்வம். இவர் முழு நேர விவசாயி அல்ல. பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பரதூர் கிராமத்திலுள்ள அவரது வயலில் சந்தித்துப் பேசினோம்.                           

நம்மிடம் பேசிய செல்வம், “ நான் பொதுப் பணித்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். என் குடும்பம் விவசாயக் குடும்பம். 12-ம் வகுப்பு படிச்சு முடிச்சிட்டு, தஞ்சாவூரில் ஐ.டி.ஐ-யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து விட்டு  கர்நாடகாவில் உள்ள மண்டியா பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பகுதியும், டெல்டா பகுதியைப் போல, செழிப்பானதாக  இருக்கும். அங்குள்ள விவசாயிகள் நீரை அதிக அளவில் விரயம் செய்து, நீர் மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாமல் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள். இதைக் கவனித்த நான், ‘நாம் ஏன் காசுக்காக மொழி தெரியாத ஊருல ஒருத்தவன் கிட்ட கைகட்டி வேலை பாக்கணும்?’ நம்ம ஊருலயே விவசாயம் பண்ணினால், நம்மளே பலருக்கு வேலை கொடுக்கலாமே" என நினைச்சு, சொந்த ஊருக்கே  வந்தேன். அப்போது (2007ல்)  டி.என்.பி.எஸ்.சி., தேர்வெழுதியதில், பொதுப்பணித் துறையில் வேலை கிடைத்ததால் விவசாயம் பக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தேன்.

ஆனால், அம்மா தொடர்ந்து நெல், கரும்பு ரசாயனத்தில் சாகுபடி செய்துகொண்டு வந்தார். கடந்த 2011-ல் எனது நண்பர்களின் மூலமாக, திருச்சியில் நம்மாழ்வார் ஐயா கலந்து கொண்ட இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்துக்கிட்டேன். அப்போதுதான்,  கெமிக்கல் உரம், கெமிக்கல் பெஸ்டிசைட் அடிக்காமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்யலான்னு தெரிந்துகொண்டேன்.  நண்பர்களுடன் சும்மா பொழுது போக்கிற்காக போனவன் இயற்கை விவசாயம் குறித்து முழுமையா தெரிந்துகொண்டேன். தொடர்ந்து ஐயா நடத்திய  2 பயிற்சிக் கூட்டங்களிலும் கலந்துக்கிட்டேன். ஐயா சொன்ன வழி முறைகளைக் கடைபிடிச்சா ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துச்சு . நாம ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது ன்னு நினைத்தேன். அதன் பிறகு நண்பர்கள் மூலமாகத்தான் ’பசுமை விகடன்’ இதழும் அறிமுகமாயிற்று. தொடர்ந்துப் படிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த ஆண்டிலேயே அடி உரமாக ஆட்டுக்கிடை போட்டேன். ஐயா சொன்னது போலவே, தக்கைப்பூண்டு விதைத்துப் பூக்கும் நேரத்தில் மடக்கி உழுதேன். இப்படி இரண்டு முறை செய்து மண்ணை வளப்படுத்தினேன். தொடர்ந்து கோ-43 ரக நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்தேன். நெல் நாற்று வளர்ச்சியிலே வித்தியாசம் தெரிந்தது. கணிசமான மகசூலும் கிடைத்தது. தொடர்ந்து மாப்பிளைச் சம்பா நெல்லைச் சாகுபடி செய்தேன். தற்போது வரை இயற்கை முறையில் தான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்.

”இரசாயன உரம் போட்டால் அதிக விளைச்சல் எடுக்கலாம். நிறைய லாபம் சம்பாதிக்கலாம், என விவசாயிகளிடம் பரப்பப்பட்ட ஆசை வார்த்தையால் தான், நமது பாரம்பர்ய நெல் ரகங்களை இழந்தோம்.” எனப் பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையில் படித்த பிறகு, எனது பார்வை பாரம்பர்ய நெற்களை மீட்டெடுக்கும் முயற்சியின் பக்கம் திரும்பியது. கடந்த ஒரு வருடமாக 28 விவசாயிகளுக்கு இலவசமாக மாப்பிளை சம்பா விதை நெல் கொடுத்துள்ளேன்.” எனப் பேசியவர், கழிவு நீரில் விவசாயம் செய்யும் முறை குறித்து பேச ஆரம்பித்தார்,

”எங்கள் பகுதியில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் உள்ளது. காவிரியில் தண்ணீர் வந்தால் மட்டுமே எங்கள் பகுதியில் விவசாயம் செய்யும் முடியும். அப்படி வரவில்லை என்றால் விவசாயமே இல்லை என்ற சூழல் இருக்கிறது. எங்கள் பகுதி மக்கள் தண்ணீரை அதிகமாகச்  செலவு செய்கிறார்கள். அதனை நான் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன். எங்கள் பகுதியில் 5  மேல்நிலைத் தண்ணீர் தேக்கத் தொட்டி உள்ளது. ஒவ்வொரு தெருவிற்கும் 10 பொது பைப்புகள் வீதம் மொத்தம் 300 பைப்புகள் வரை உள்ளது. இதில், எங்கள் தெருவில் உள்ள 5 பொது பைப்புகள் மற்றும் 15 வீடுகளில் உள்ள சொந்த பைப்புகளில் இருந்து குடங்களில் தண்ணீர் பிடிக்கும் போது வீணாகும் தண்ணீர்,  பாத்திரம் கழுவும் தண்ணீர், குளியலறை கழிவு தண்ணீர் ஆகியவற்றை வீணாகச் செல்ல விடாமல், கால்வாய் போல அமைத்து எனது வயல் அருகில் வந்து சேரும் படி அமைத்துள்ளேன். இந்தத் தண்ணீர் சேகரமாகும் இடத்தில் இருந்து கழிவு நீரை  வயலுக்கு ஊற்றிக்கொண்டிருந்தேன்.  தற்பொழுது மோட்டார் வைத்து இறைத்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு முறையில் பில்டர்  செய்த பிறகு (வடிகட்டிய பிறகு)  விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன்.

முதலில் வாய்க்காலில் வரும் தண்ணீர் கசடு கலந்து வரும் என்பதால் சல்லடை துணியை ஒரு அடிக்கும் சுற்றி கட்டிவிடுவேன். அதிலேயே பாதி தண்ணீர் பில்டர் ஆகி வந்துவிடும். இரண்டாவது முறையாக  பிளாஸ்டிக் டப்பா முழுவதிலும் துளை போட்டுக்கொண்டு அதற்குள் பைப் ஹோஸ் மூலமாக காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை  5 முதல் 7 மணி வரை  வயலில் தண்ணீரைப் பாய்ச்சி வருகிறேன்.                                 

பாரம்பர்ய நெல் ரக விதை கிடைக்காமல் நான் கஷ்டப்பட்டேன். நான் பட்ட கஷ்டம் மற்ற விவசாயிகள் படக்கூடாது என்பதற்காக, என்னைத் தொடர்பு கொள்ளும் மாப்பிளை சம்பா நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் 28 பேருக்கு,  ஒரு விவசாயிக்கு 5 கிலோ வீதம் 28 விவசாயிகளுக்கு முதல்கட்டமாக 140 கிலோ விதை நெல்லை இலவசமாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால், அந்த விவசாயிகள், அதனைச் சாகுபடி செய்து அதனை அடுத்த வருடத்தில் இரண்டு மடங்காக  என்னிடம் திருப்பித் தரவேண்டும். இது நம்பிக்கையின் அடிப்படையிலான ஒப்பந்தம் அப்போதுதான் இன்னும் அதிக விவசாயிகளுக்கு இந்த பாரம்பர்ய நெல் விதை போய்ச் சேரும். 500 விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கிட வேண்டும் என்பது என் இலக்கு.” என்று முடித்தார் செல்வம்.

கழிவு நீரை விவசாயம் பயன்படுத்தும்போது அதைச் சரியாக வடிகட்டிய பின் பயன்படுத்த வேண்டும். இதுபற்றி மண்புழு விஞ்ஞானி, சுல்தான் இஸ்மாயில் பேசும்போது, "கழிவுநீரில் விஷங்களும் கலந்துள்ளன. கழிவுநீரைச் சுத்தம் செய்கிறோம் என்று, அதன் கழிவுகளை வயலில் கொட்டினால் நிலம் கெட்டுப் போய்விடும். இப்போது உள்ள சூழ்நிலையில் கழிவுநீரை பரிசோதனை  செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகு முறையாகச்  சுத்திகரித்த பிறகே கழிவுகளையும், நீரையும் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு