Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...
நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

நிவேதிதா லூயிஸ் - படங்கள்: வேலுதரன் - லெய்னா

பிரீமியம் ஸ்டோரி

ரபு நடை... கேட்பதற்கும் கலந்து கொள்வதற்கும் மிக எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், தனி ஆளாக நினைத்த இடங்களுக்குச் சென்று சுற்றிவிட்டு வருவதற்கும், ஒரு குழுவாக தகுந்த அனுமதிகள் பெற்றுச் சென்று வருவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. முதலில் ‘ரெக்கே’ எனப்படும் பயிற்சி நடை மேற்கொண்டு, தேர்ந்தெடுத்த பகுதியில் உள்ள மரபு மற்றும் வரலாறுசார் இடங்களை அலசி, அவற்றில் எதைப் பார்க்கலாம், எதைப் பார்ப்பதில் சிக்கல் என அறிதல் அவசியம். அதைத் தொடர்ந்து அவற்றின் முழு வரலாற்றைப் படித்தல், நடைக்கான நேரம், அனுமதிகள் பெறுதல் எனப் பணிகள் தொடரும். 

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

மூன்றுமுறை நடையாக நடந்து, துணைச் செயலர் மேஜை வரை அனுமதிகளுக்குக் காத்துக்கிடந்து, `எக்ஸ்கியூஸ் மீ… எனக்கு கவர்னரைத் தெரியும், அவருக்குத்தான் என்னைத் தெரியாது' போன்ற கெஞ்சல்கள்  தொடங்கி சாம பேத தான தண்ட முறைகளை உபயோகித்து, அந்த நடையைத் தொடங்குவதற்குள் மூச்சு முட்டிப்போயிற்று.

`கிரீன்வேஸ் சாலை நடை' என்று பெயர் வைத்தாலும், நடை என்னவோ நீ...ண்ட தாகத்தான் இருந்தது - பெசன்ட் அவென்யூவில் தொடங்கி, காந்தி நகரின் ஒரு புள்ளியைத் தொட்டு, திரு.வி.க பாலம் கடந்து, துர்காபாய் தேஷ்முக் சாலையும் அதன்பின் பசுமைவழிச் சாலையுமாக `ரெக்கே' அன்றே தெரிந்து போனது - மூன்று மணி நேரம் தாண்டும் என்று.     

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

ஒரு ஞாயிறு காலை சரியாக ஏழு மணிக்கு, பதிவுசெய்துகொண்ட இருபது ஆர்வலர்களுடன் பெசன்ட் அவென்யூவில் உள்ள ‘அவ்வை இல்லம்’ என்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் ஆரம்பித்தோம். இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், தென்னிந்தியாவின் முதல் பெண் மருத்துவர், `பத்ம பூஷண்' விருது பெற்றவர், உலகின் முதல் பெண் சட்டமன்றத் துணைத்தலைவர் என பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் டாக்டர் முத்துலட்சுமி, 1930-ல், பிராமணர் அல்லாத பிற சாதி விதவை மற்றும் கைவிடப்பட்ட கைம்பெண்களுக்காகத் தொடங்கிய இலவச தங்கும் விடுதியே `அவ்வை இல்லம்'. இப்போது இருக்கும் இடத்துக்கு, 1936-ல் அவ்வை இல்லம் மாற்றப்பட்ட பிறகு, பள்ளி ஒன்றும், பின்னாளில் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டன.     

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

அவ்வை இல்லத்தை ஒட்டிய பாழடைந்த பங்களாவான ‘சாந்தி’, சாதனைப் பெண்ணான முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தாங்கிய பலகையுடன் சிதிலமடைந்து நிற்கிறது. திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட இந்த வீட்டின்மீது வழக்கு நடைபெறுவதால், வீடு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அடுத்து நாம் நடந்தது சற்றுத் தள்ளியிருந்த ராமாலயம் அரண்மனை. ஆவின் ஜங்ஷன் என்று அழைக்கப்படும் இந்தச் சாலையோரப் பேருந்து நிறுத்தத்தில் முடங்கிக்கிடக்கிறது கேரளத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராமாலயம் அரண்மனை. சட்டச் சிக்கல்களுக்குள் சிக்கித்தவிப்பதுதான் காரணம். மரபு நடையை உடன் நிகழ்த்திய நண்பர்களின் கைகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து நாணயங்களைக் காட்டவும், ஆர்வத்துடன் அதை வாங்கி ரசித்தனர்.

அடுத்துச் சென்றது, சென்னையில் மிகப்பெரிய பெருமாள் சிலை இருக்கும் காந்தி நகர் பத்மனாபஸ்வாமி திருக்கோயில். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு, இதன் வெளிப்புறம் இருக்கும் மகாராஜா சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் சிலையும், 1936-ல் அவர் வெளியிட்ட கோயில் நுழைவுப் பிரகடனக் கல்வெட்டும்தான்.   

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

திவான் சர் சி.பி ராமஸ்வாமி ஐயரின் வழிகாட்டுதலின்பேரில் தான், சாதி பேதத் தடையின்றி அனைவரும் கோயில்களில் வழிபடலாம் என்ற இந்தச் சாசனம் நிறைவேறியது. சென்னையில் நிறுவப்பட்டிருக்கும், வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த சமஸ்தான ராஜா ஒருவரின் சிலை இதுவே. எஸ்பிளனேட் பகுதியில் கேட்பாரற்று இருந்த இந்தச் சிலையை 1991-ல்தான் நலம்விரும்பிகள் இங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள். கோயில் கட்ட, காந்தி நகர் மக்களுக்குத் தானம் வழங்கிய மன்னர், அந்தக் கோயிலிலேயே கம்பீரமாக நிற்கிறார்.   

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

எல்ஃபின்ஸ்டோன் பாலம்... அடையாற்றின் குறுக்கே சாந்தோமை சென்னையுடன் இணைக்கக் கட்டப்பட்ட முதல் அழகிய வளைவுப்பாலம் இது. 1840-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம், அப்போதைய ஆங்கிலேய கவர்னர் எல்ஃபின்ஸ்டோனின் பெயர்தாங்கி இன்றும் நிற்கிறது. குப்பை மேடாக, மாநகரத்தின் கழிவுநீரைச் சுமந்து செல்லும் ராட்சத பைப்புகளைத் தாங்கியபடி காட்சியளிப்பதுதான் அவலம். 1973-ல் இதன் அருகே திரு.வி.க பாலம் கட்டப்பட்ட பின், இந்தப் பாலம் முற்றிலும்  தன் பயன்பாட்டை இழந்துவிட்டது. ஆனால், இந்தப் பாலத்தில் இருந்து அடையாற்றின் காட்சி ஓர் ஓவியம் போல மிளிர்கிறது. ஒருபக்கம் பசுமையான தியோசோஃபிகல் சொசைட்டி, மறுபுறம் செட்டிநாடு அரண்மனை, பிராடீஸ் காஸ்டில் எனும் இசைக் கல்லூரி, நடுவே திமிங்கில வடிவிலான வேல்ஸ் தீவு மற்றும் உடைந்த பாலம் என வரிசை கோக்கின்றன அடையாற்றின் அடையாளங்கள். 

நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்...

நடையைத் தொடர்ந்து, முத்தமிழ் மன்றத்தின் டி.என்.ராஜரத்தினம் அரங்கம் எதிர்ப்புறம் நிற்கிறோம். அதன் சுற்றுச் சுவரில் மூன்று அழகிய ஓவியங்கள்... `இவர்களைத் தெரிகிறதா? யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம்…' என்று கேள்வி எழுப்புகிறேன். எம்.எஸ் என்ற முதல் பெயர் சட்டென வர, சற்றே தயங்கி பாலசரஸ்வதி, டி.என்.ராஜரத்தினம் பெயர்களும் வந்து விழுகின்றன. இந்த அரங்கத்தைக் கையகப்படுத்த இரு முதல்வர்களுக்கிடையே நடந்த அரசியல் பற்றி விளக்கிவிட்டு, `இசை வேளாளர் பேரவை நடத்தும் இந்த மன்றத்தில் எம். எஸ்ஸின் படம் ஏன் இருக்கிறது என்று யோசித்தீர்களா?' என்ற கேள்விக்கு, விடை தெரியாமல் தலையசைக்கின்றனர் சிலர்.தெரிந்தவர்கள் கை உயர்த்துகின்றனர்.காத்திருங்கள், விடையுடன். கணவருடன் இணைந்து சமூகச் சேவை ஆற்றிய துர்காபாய் தேஷ்முக்கின் மருத்துவமனை, அதில் உள்ள நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த அதிசய பாபாப் மரம், எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோஸ், காக்காய் சுடும் ஜோ, அரசின் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம் இயங்கும் பழம்பெரும் கட்டடமான காஞ்சி என்ற `கிராஞ்ச்' மற்றும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் `வசந்த் விஹார்' ஆகியவற்றுடன் அடுத்த இதழில் சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு