Election bannerElection banner
Published:Updated:

``லீலா... படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல!" - `மலையாள கிளாசிக்' பகுதி 19

``லீலா... படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல!" - `மலையாள கிளாசிக்' பகுதி 19
``லீலா... படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல!" - `மலையாள கிளாசிக்' பகுதி 19

`மலையாள கிளாசிக்' தொடரின் 19-வது பகுதி. `லீலா' திரைப்படம் குறித்த விரிவான கட்டுரை.

தாச பாப்பி என்கிற புரோக்கர் சி.கே.பிந்துவை அழைத்து வந்திருக்கிறார். குட்டியப்பன் என்றோ ஒருநாள் விரும்பிய பெண்தான். விபசாரத்துக்குத் தயாரானதும் அழைத்து வரப்பட்டிருக்கிறாள். குட்டியப்பன் அவளை வரவேற்று குத்துவிளக்கை ஏற்றச் செய்து பாயை போடச் சொல்கிறான். விளக்கு தலைமாட்டில் இருக்க, பாயில் படுத்துக்கொண்டு உனது அப்பன் செத்துவிட்டதாக வைத்துக்கொண்டு அழு என்கிறான். கண்களை மூடிக்கொண்டு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தூண்டுகிறான். அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை. போலியாக அழ ஆரம்பித்தவள், மெள்ள மெள்ள அதில் இறங்கி அப்புறம் பெருங்குரலெடுத்து ஓவென்று அழுகிறாள். தடுக்கவே முடியாதபடி அழுகிறாள். கொஞ்ச காலம் முன்பு அந்தத் தகப்பன் இறந்ததற்கு அப்புறம்தான் அவள் இந்தக் கேவலமான வேலைக்கு வந்தாள். எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அழுது தீர்க்கிறாள். குட்டியப்பன் அவளை அணைத்துக்கொண்டு அழுகையை நிறுத்திப் பணம் கொடுத்து அனுப்புகிறான். அவளுக்கு ஒரு வேலையையும்கூட சொல்லி அனுப்புகிறான். `லீலா' படத்தின் டைட்டில் முடிந்த உடன் வருகிற முதல் காட்சி இது.

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

உண்மையில் குட்டியப்பனுக்கு என்ன பிரச்னை? பேரு கேட்டவரும் அழகருமாய் இருந்த ஒரு கண்ணியவானுக்குப் பிறந்தவன்தான் இவன். சொத்திருக்கிறது. ஒற்றையாள். கூட ஓர் அத்தையிருக்கிறாள். அவளைக்கூட ஏணி வைத்து மாடிக்கு காப்பி கொண்டு வரச் சொல்லி அவளது கால் உடைவதற்கு இவன் காரணமாய் இருக்கிறான். யாரும் எதிர்பாராத விநோதங்களில் எப்போதுமே ஈடுபடுகிற குட்டியப்பனுக்கு, ஒருநாள் நடுராத்திரியில் ஓர் ஆசை தோன்றி விடுகிறது. பிள்ளேச்சனின் வீட்டைத் தட்டி இரண்டொரு நாள்களில் உடனடியாக ஒரு யானை வேண்டுமென்கிறான். மறுநாள் காலை அவர்கள் யானையைத் தேடிக் கிளம்புகிறார்கள். நடுவே அவன் ஒரு வயதுப் பெண்ணையும்தான் தேடுகிறான்.

படம் இந்த அடிப்படையில்தான் தொடங்குகிறது.

திடுக்கிட வைக்கிற திருப்பங்களோ, வரிசையாய் சென்று முடிகிற ஒரு கதைப் போக்கோ கிடையாது. ஆனால், செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று சேரும் வரையில் எவ்வளவோ முகங்கள். ஆண்களின், பெண்களின் முகங்கள். விபசாரத்திலும் விபசாரத்துக்குப் பக்கத்திலும் இருக்கிற பெண்கள் பலரும் நமக்குத் தெரிய வருகிறார்கள். ஓரிரு இடங்களில் எதிர்பார்த்த அளவில் பெண்கள் இல்லை. ஓரிடத்தில் யானையின் சொந்தக்காரர் இவனை ஓட விடுகிறார். ஒரு வழியாய் ஒரிஜினல் ஸ்பிரிட்டை ராவாகக் குடிக்கிற ஓர் அறுவை சிகிச்சை டாக்டர் மூலம் ஒரு பெண்ணைப் பற்றி அறிய முடிகிறது. சொந்தத் தகப்பனால் கர்ப்பமாகி அபார்ஷன் முடிந்த ஒருத்தி. அடடா, அவள் மிகச் சரியாய் இருப்பாள் என்று குட்டியப்பன் முடிவு செய்கிறான். அப்பனையும் மகளையும் சந்திக்கிறார்கள். அப்பன் அந்தச் சம்பவத்தை ஒரு விபத்து என்கிறான். இப்போதேகூட அவளைக் கூட்டி கொடுக்க அவன் தயார்தான். எல்லோருமாக வயநாட்டுக்குச் சென்று சேர்கிறார்கள். அங்கேதான் யானை இருக்கிறது.

குடித்து முடித்து சாப்பிடுகிற சோறு அவ்வளவு சுவையாய் இருக்கிறது. அந்தப் பெண்ணிடம் எனது அம்மாவின் கையால் சாப்பிட்டது போலிருக்கிறது என்கிறான் குட்டியப்பன். அவளுக்கு `லீலா' என்று பெயர் சூட்டுகிறான். இரவு நெருங்குகிறது. தன்னை மாப்பிள்ளைபோல அலங்கரித்துக்கொள்கிறான் அவன். லீலாவிடம் தயாராகவில்லையா என்று கேட்க அவள் திகைக்கும்போது சிறு தயக்கமுமில்லாமல் அவளது கன்னத்தில் அறைந்து கிளம்பச் சொல்கிறான், அவளது அப்பன். அவனுக்குப் பணம் செட்டில் பண்ணப்பட்டிருக்கிறது. அந்த ஆளை மூர்க்கமாக விலக்கி நிறுத்தி, லீலாவைக் கரம் பற்றி அழைத்துச் செல்கிறான். யானை அவனது சொந்தக்காரனின் வீட்டுத் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இறுதிக் கட்டம்.

ஏற்கெனவே பிள்ளேச்சன் மனம் சரியில்லாமல் இருக்கிறார். அந்தப் பெண்ணின் அபலைத்தன்மை அவரால் தாங்க முடிவதாக இல்லை. அவர் தன் மகளின் ஓர்மையில் துயர் கொண்டு உறைந்திருக்கிறார். ஆளானப்பட்ட கில்லாடியான தாச பாப்பிக்கே திக்கென்று தானிருக்கிறது. லீலாவுடன் வந்து யானையை நெருங்கியவுடன், தான் கண்ட ஒரு கனவைச் சொல்கிறான் குட்டியப்பன். உயரமும் கம்பீரமும் உள்ள ஒரு கொம்பன் யானையை நிற்க வைத்து, அதன் தும்பிக்கையில் சாய்த்து நிற்க வைத்து ஒரு பெண்ணிடம் உறவு கொள்வதாக வந்திருக்கிறது அக்கனவு. அக்கனவை நிறைவேற்றிக்கொள்ள புறப்பட்டு, நீண்ட பயணத்தில் இதோ இப்போது யானையும் லீலாவும் கிடைத்துவிட்டார்கள்!. வா என்று அழைத்துக்கொண்டு லீலாவை அந்த யானையின் தும்பிக்கை மீது சாய்த்து நிறுத்திவிட்டு, அவளை மேலும் கீழும் பார்த்து கன்னங்களை வருடிக் கொடுக்கிறான்.

அவனது கண்களில் காமமே இல்லை.

திரும்பி வருகிறான். வெறுப்புடன் நிற்கிற மற்றவர்களிடம் நாம் இவளை நமது வீட்டுக்குக் கொண்டுபோகலாம் என்கிறான். இவள் இனிமேல் என்னோடுதான் இருப்பாள், நான் இவளைப் பார்த்துக்கொள்வேன் என்கிறான். பிள்ளேச்சன் ஒரே கணத்தில் நிம்மதியாகி, அவனை கை கூப்பித் தொழுகிறார். எங்கோ ஒரு விபசாரி குட்டியப்பனிடம் கேட்டிருக்கிறாள். ரிட்டயர்டு ஆன வேசிகளை கௌரவம் செய்து பொன்னாடை போர்த்திப் பணம் கொடுப்பது இருக்கட்டும். அன்றாடம் தொழிலுக்கு இறங்குகிற ஒரு பெண்ணையாவது ஏதாவது ஓர் ஆண் காப்பாற்றிய வரலாறுண்டா. டாக்டர், லீலாவைப் பற்றிச் சொன்னதும், குட்டியப்பன் தனது மனதுக்குள் லீலாவை தனது மனைவியாக முடிவு செய்திருக்க வேண்டும். அவனது கலவிக் கனவு உண்மையாய் இருக்கலாம். ஆனால், அவன் இதுவரைத் தேடிக்கொண்டிருந்தது தனது மனைவியாய் வரப் போகிறவளைத்தான். அவள் ஒரு விபசாரியாய்கூட இருக்கட்டும்.

ஆர்.உண்ணியின் திரைக்கதையில் எழுந்த குட்டியப்பன் மனிதர்களை அறிந்தவன். அவனுக்கு வாழ்வின் மீது உள்ள இளக்காரம் வந்ததே அந்த மனிதர்களால்தாம். அவனுக்கு அவர்களுடைய பகட்டுகளை, போலித்தனங்களை தெரியும். அவர்கள் ஒருபோதும் நிறைவானவர்கள் அல்ல. அவர்களிடம் அவனுக்கு உள்ள உறவு மிகவும் சந்தேகத்திற்கிடமானது. அவனுக்குப் பாட்டும் இலக்கியமும் குடியும் கூத்திகளும், சில சில்லறை தெருவாசிகளும்தாம் ஆறுதலாக இருந்திருக்கிறார்கள். அவன் யாரையும் பொருட்படுத்தாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். உண்மையில் சடங்குகளில் வாழ அவனால் முடியாது. அதனால்தான் யாரோ ஒரு பாவத்தை தனது மனைவியாய் கொள்ள அவனால் முடிந்து விடுகிறது. ஒரு கோழைத்தனமும் அவனிடம் கிடையாது. சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில், ஆர்.உண்ணி செய்ததில் சார்லி என்கிற கதாபாத்திரத்தைக் காட்டிலும் வியப்பானது, ரத்தமும் சதையுமானது குட்டியப்பன் என்கிற இந்தப் பாத்திரம்.

ஒரு மாத இதழில் இந்தக் கதை தமிழில் வந்தபோது மிகவுமே அசந்துவிட்டேன் எனலாம். நான் சொல்லிப் பலரும் படித்தார்கள். வழக்கம்போல நானும் சிவாவும் இதைப் படமாக எடுத்தால் எப்படி வரும் என்று தொடர்ச்சியாக கதை நினைவில் வரும் போதெல்லாம் பேசியவாறிருந்தோம். ரஞ்சித் உண்ணியுடனே பேசிக்கொண்டிருந்திருக்கிறார். படம் மிகுந்த அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. பிஜு மேனன் திரைக்கதையைத் தெரிந்துதான் நடித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவரது பகடிகள் முதிர்ச்சி கொண்டவை. அதற்கு ஏற்ற உடல்வாகும், குரலும், எள்ளலும் மிக அழகாகப் பொருந்துவதைப் பார்க்கலாம். ஒரு தகப்பனைப்போல பல பெண்களிடமும் நடந்து கொள்வதில் இருக்கிற உளவியல் எடுபடுவது அவரால்தான்.

விஜய ராகவன் எப்போதுமே தன்னை நிலை நிறுத்திப் புகுந்து விளையாடுபவர். அவர்தான் பிள்ளேச்சனாய் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது பல தருணங்களில் மறந்து போகிறது. இதைக் காட்டிலும் தன்னை யாரென்றே காட்டிக்கொள்ளாமல் அதிர வைத்தவர், ஜெகதீஷ். அடேங்கப்பா. அந்தக் கீச்சுக் குரல், கோணல் வாயெல்லாம் எங்கே ஓடிப்போய் ஒளிந்ததோ? மனிதர் இருமிக் கொண்டும், துப்பிக் கொண்டும், தூங்கிக் கொண்டும் மனம் முழுக்க காமம் நிரம்பிய ஒரு வக்கிரப் பிறவியாய் அவதாரம் கொண்டு தங்கப்பன் நாயராக வாழ்ந்து தள்ளியிருக்கிறார். நானறிந்து அவரது தீவிர ரசிகர்களெல்லாம் மனம் புழுங்கியிருப்பார்கள். ஒரு நடிகன் என்றால் அவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் நெகடிவ் பண்றது இல்ல சார் என்கிற தூய்மைவாதிகள் பலரும் நடிக்க வந்துவிட்ட கொடுமையை நாமெல்லாம் அறியமாட்டோமா, அதனால் சொல்கிறேன். அப்புறம் படம் முழுக்கவும் வருகிற இந்திரன். அப்பாவியாய் இருந்து இதுவரை என்னவெல்லாமோ செய்து முடித்திருக்கிறார். இதிலும்கூட அவருடைய மிக பிரத்யேகமான அந்தச் சிரிப்பு எந்த அளவுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

படத்துக்கு வேறு மாதிரி கோணங்களும், வர்ணமும், மூடும் இருந்திருக்கலாம் என்று எனக்கு நினைப்பு. அது தவறாகவும் இருக்கலாம். எடுத்த பொறுப்பை அழகாக நிறைவேற்றியிருக்கிறது ஒளிப்பதிவு. இசை இன்னமுமே கட்டுப்பட்டிருக்க முடியும்.

பொதுவாக இந்திய சினிமாவுக்கு வாய்பாடு வடிவத்திற்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் உண்டு. படம் வரைந்து பாகங்கள் குறித்தால்தான் ஆயிற்று. ஆனால், இது அதை மீறுகிற ஒரு திரைக்கதை. குரோட்டன்களைப் போல வெட்டி வந்து காட்சிக்கு வைக்க முடியாது. எனவே, நல்ல இயக்குநராக இருந்தாலும் ரஞ்சித் இப்படத்தை இயக்க வந்தது படம் கட்டுக்குள் இருக்க ஒரு காரணமாயிற்று. இன்னும் பரந்த வீச்சுள்ள, சற்றே பித்துத் தன்மை கொண்ட பத்மராஜனைப் போன்ற யாரோ ஓர் ஆள் செய்திருக்க வேண்டிய படம். விநோதங்களை டெமோ செய்து காட்டுவது வேறு. படத்தில் விநோதம் வந்து கூடி இருந்து கொள்வது வேறு. மறுபடியும் சொல்கிறேன், நான் ரஞ்சித்தை குறை சொல்லவே இல்லை. இன்னமும் படத்தை வேறு ஒன்றாகக் கொண்டு வந்திருக்கக் கூடிய தருணம் தவறிப் போயிற்று.

ஆனால், இப்படி ஒரு படத்தைச் செய்தே ஆக போராடி, சொந்தப் பணத்தில் எடுத்து, அந்த நேரத்தில் அவருடன் மோதிய முதலைகளுடன் மல்லுக்கட்டி, மிகுந்த தரத்துடனே ரஞ்சித் இப்படத்தைக் கொண்டு வந்தார். மக்களைப் பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றார். அதை மனமார பாராட்டாமல் முடியாது.  துணிச்சல் இல்லாமல் இக்கதையைப் படமாக எடுக்கலாம் என்று யோசித்திருக்கவே முடியாது.

அப்புறம், உண்ணி பற்றி அதிகம் எழுதாமல் போனதற்குக் காரணம் அதைத் தொடங்கினால் அவரைப் பாராட்டுவதிலேயே இந்தக் கட்டுரை முடிந்துபோகும் என்பதால்தான். அவரைப் போன்றவர்கள் தொழிற்படும்போது, எல்லா அற்பத்தனங்களையும் இரு என்று பக்கவாட்டில் தள்ளிவிட்டு, சினிமா தனது முகம் மாற்றும் காலம் வரும்.

குட்டியப்பன் நல்லவனா, கெட்டவனா என்பதில் எதுவும் இல்லை. ஆனால், வாழ்வைப் புரிந்துகொண்டு, அதை விளையாட்டாய் செய்யப்போகும் போது சில விபரீதங்கள் உண்டு. வாழ்வின் லீலைகளைத்தான் யாரால் புரிந்து கொள்ள முடியும்? சகாக்களிடம் தனது மனதில் உள்ளதை பகிர்ந்து கொண்டு லீலாவை எடுத்துக்கொள்ள திரும்பி அவளை நோக்கி நகரும்போது, யானை அவளைத் தும்பிக்கையைக் கொண்டு தூக்கி காலில் போட்டு மிதிக்கிறது. அவள் முடிந்துதான் போகிறாள்.

பாருங்கள், குட்டியப்பனைக் காட்டிலும் விநோதம் கொண்டிருக்கிறது வாழ்வு. அது அவனைத் தனியாய் நிறுத்த முடிவு செய்துவிட்டால் என்ன செய்யமுடியும்?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு