Published:Updated:

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் மின் கட்டண வசதி

Vikatan Correspondent

சென்னை, டிச.2,2010

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டம், தமிழகம் முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ##~~##

இத்திட்டத்தினை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழகம் முழுவதிலும் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தினை துவங்கி வைத்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியது:

தமிழகத்தில் சுமார் 1.77 கோடி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களும், 7502 உயர்மின் அழுத்த மின் நுகர்வோர்களும் பெருகி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதமாகும். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் இவ்வளர்ச்சி பல்கி பெருக வாய்ப்பு உள்ளது. சுமார் 1 கோடி மின் நுகர்வோர்கள் மாதந்தோறும் தங்களது தாழ்வழுத்த மின் கட்டணங்களை 2,711 வசூல் மையங்கள் மூலமாக செலுத்தி வருகிறார்கள்.

தற்போது 15 நாட்கள் மின் கணக்கீடு மற்றும் 15 நாட்கள் வசூல் என்ற முறை நடைமுறையில் உள்ளது. வசூல் மையங்கள் பரவலாக இருந்தபோதிலும் மின் கட்டணத்தை இறுதி நேரத்தில் செலுத்த வரும் மின் நுகர்வோர்களின் கூட்டம் சில நேரங்களில் சில இடங்களில் அதிகமாக இருப்பதால், நுகர்வோர்கள் நீண்ட வரிசையில் நின்று கட்டணம் கட்டும் சூழ்நிலைக்கு உள்ளாகிறார்கள்.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் (தற்போது தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) தாழ்வழுத்த மின் கட்டணத்தை இணையதளத்தின் மூலம் செலுத்தும் பல்வேறு வழிமுறைகளை ஏற்கனவே சென்னையில் செப்டம்பர் 2008-ல் தொடங்கப்பட்டு படிப்படியாக கோவை மண்டலத்துக்கும் ஜுன் 2010 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதுவரை, சென்னையில் மட்டுமே இந்த திட்டம் அமலில் இருந்து வருகிறது. தற்போது, இந்த திட்டம் தமிழகம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சென்னையில் மட்டுமே அமலில் இருந்து வந்தது. கடந்த ஜுன் மாதத்தில் கோயம்புத்தூர் நகரத்துக்கும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. தற்போது, மாநிலம் முழுமைக்கும் விரிவு செய்யப்படுகிறது. இதனால், வீட்டில் இருந்தே பொதுமக்கள் தங்களது மின்கட்டணங்களை செலுத்தலாம். இந்த வசதி, உயர்மின் அழுத்த வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது, போக்குவரத்து வசதி குறைவாகவுள்ள கிராமப்புற பகுதிகளில் முகாம் வசூல் மூலமாக மின் கட்டணங்கள் வசூலித்து கைப்பிரதி ரசீதுகள் வழங்கும் வசதி நடைமுறையில் உள்ளது. இவ்வசதியை மேலும் செம்மையாக்கும் வகையில் 500 அச்சுப்பொருத்திய கையடக்கக் கருவிகள் அனைத்து மண்டலங்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இவ்வசதி விரைவில் அனைத்து மண்டலங்களுக்கும் செயலாக்கப்படவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையில் மாதம் 30 நாட்களும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கோவை மண்டலத்திலும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் மேலும் 25 லட்சம் கொண்ட ஈரோடு மண்டல தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கும் டிசம்பர் 1 முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதுதவிர, மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் மேலும் சில வசதிகள் செய்யப்படவுள்ளன. அதன்படி, இணையதளம் மூலம் குறைந்த மின் அழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும் வசதி, வங்கிக் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா); வங்கி இணையதளம் (நெட் பேங்கிங்) மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி (வங்கி வலைதளம்-எச்.டி.எப்.சி, பாரத ஸ்டேட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா); ஏ.டி.எம். மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஆகியவை மாநிலம் முழுவதும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேற்கண்ட இணைய வசதிகளை தமிழகம் முழுவதும் உள்ள மின்நுகர்வோர்களை சென்றடைய 3 கோடி ரூபாய் செலவில் வன்பொருளும், மென்பொருளும் நிறுவப்பட்டு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது," என்றார் ஆற்காடு வீராசாமி.