Published:Updated:

கார்களின் காதலன்... ஃபியட்டின் ரட்சகன்... குட்பை செர்ஜியோ மார்க்கியோனி!

ஃபியட்டை காப்பாற்றினார், கிரைஸ்லரை கரைசேர்த்தார்... FCA-வின் அறிவிக்கப்படாத தந்தை செர்ஜியோ மார்க்கியோனி நேற்று காலமானார்.

கார்களின் காதலன்... ஃபியட்டின் ரட்சகன்... குட்பை செர்ஜியோ மார்க்கியோனி!
கார்களின் காதலன்... ஃபியட்டின் ரட்சகன்... குட்பை செர்ஜியோ மார்க்கியோனி!

ட்டோமொபைல் ஆர்வலர்களின் இன்ஸ்பிரேஷன் பட்டியலில், என்ஸோ ஃபெராரி, ஃபெரூஷியோ லம்போர்கினி, ஹென்ரி ஃபோர்டு, மசிமோ டம்புரினி போன்றவர்கள் மட்டுமே அதிகம் பேசப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நம் வரலாற்று புத்தகங்களால் மறைக்கப்பட்ட ஒருவர் இருக்கிறார். அவர் நேற்று இந்த உலகத்தைவிட்டு மறைந்துவிட்டார். நம்மில் பலருக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஃபியட்-கிரைஸ்லர் ஆட்டோமோபைலின் முன்னாள் இயக்குநர் செர்ஜியோ மார்க்கியோனிதான் அவர்.

செர்ஜியோ மார்க்கியோனி, ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவர் வாழ்க்கையில் அவர் முன் நின்றதெல்லாம் வேகம், சவால், பயணம், ஃபெராரி, ஃபியட். 1952-ல் இத்தாலியில் பிறந்தார் மார்க்கியோனி. இவரைப் பார்த்தால் ஹாலிவுட் ஃபேமிலி டிராமாவில் வரும் தாத்தாக்கள் ஞாபகத்துக்கு வருவார்கள். காரணம் இவரை கோட் சூட்டில் எல்லாம் பார்க்க முடியாது. எப்போதுமே கறுப்பு ஸ்வெட்டர், கேஸுவல் பேன்ட்டுடன் இருப்பார். டிரெஸ்ஸிங் கேஷுவலாக இருக்குமே தவிர, வேலையில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். வேலை என்று வந்துவிட்டால் ரிசல்ட் மட்டுமே இவர் குறிக்கோள். ஆனால், இவர் எதிர்பார்க்கும் ரிசல்ட் எது என்றுதான் யாராலும் கணிக்க முடியாது.

ஒரு வருடத்தில் 700 கோடி டாலருக்கும் மேலான நஷ்டத்தில் சென்றுகொண்டிருந்த ஃபியட் நிறுவனத்தை மார்க்கியோனி கையில் எடுத்துக்கொண்டார். எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமும் இப்படி ஒரு நஷ்டத்தைச் சந்தித்து மீண்டதாக அதுவரை வரலாறு இல்லை. ஆனால், செர்ஜியோ வந்த 2 ஆண்டுகளில் 800 கோடி டாலர் வருமானம் பார்க்க ஆரம்பித்தது ஃபியட். தற்போது ஃபியட் நிறுவனம் செலவுகள் போக 450 கோடி டாலர் லாபம் பார்க்கிறது.

செர்ஜியோ, வேகமாக முடிவெடுக்கக்கூடியவர். இவர் தலைமையின் கீழ் ஒரு கார் ஸ்கெட்ச் போர்டிலிருந்து விற்பனைக்கு வருவதற்கு அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகும். ஃபியட் நிறுவனத்துக்கு இவர் இயக்குநர் ஆனவுடன் ஃபியட் தொழிலாளர்களில் 1,000 தொழிலாளர்களை வேலையைவிட்டு நிறுத்தினார். பதவி பாரபட்சமே இல்லை. மேல்நிலையிலிருந்து கடைநிலை வரை எல்லா வேலைகளையும் மாற்றினார். பல அடுக்குகளாக இருந்த ஃபியட்டின் நிர்வாகத்தைப் பிரித்தெடுத்து எல்லோருக்குமே முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தார். சிபாரிசில் வேலையே தெரியாமல் கம்பெனியில் இருந்தவர்களை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தூக்கிவிட்டு, அந்த இடங்களில் திறமை அடிப்படையில் இளைஞர்களை நியமித்தார். செர்ஜியோ ரிஸ்க் எடுக்கக்கூடியவர். தனக்குக் கீழ் வேலைசெய்பவர்களும் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், மோசமான விளைவுகளைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். சில ஆயிரம் பேரை வேலையைவிட்டு நிறுத்தினாலும், பல லட்சம் தொழிலாளர்களை, அவர்களின் குடும்பங்களைக் காப்பாற்றியும் இருக்கிறார்.

பிளைமவுத், டாஜ், ரேம், ஜீப், மோபார், இம்பீரியல், டிசோடோ என அமெரிக்காவின் பெரிய கார்களுக்கு பெயர்போன கிரைஸ்லர் 2008 ரெஸஷனில் பாதிக்கப்பட்டு கம்பெனி திவாலாகிவிட்டாதாக, அமெரிக்க அரசிடம் உதவிகேட்டது. எதிர்காலமே இல்லாத ஒரு நிறுவனம் என்று அமெரிக்க அரசே உதவத் தயாராக இல்லை. ஆனால், கிரைஸ்லர் நிறுவனத்தை வாங்கினார் செர்ஜியோ. `கிரைஸ்லர் நிறுவனத்தை எதற்கு வாங்குகிறீர்கள். அப்படி அதில் என்ன இருக்கிறது’ என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு ``ஆட்டோமொபைல் துறை அதன் குறிக்கோளை இழந்துவிட்டது. மக்களுக்குப் பிடித்த காரை உருவாக்கி, அதை லாபத்துக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இது பெரிய வேலை என்றெல்லாம் நினைக்காதீர்கள். சொல்வதற்கு எப்படியோ செய்வதற்கும் எளிமையானது" என்றார்.

2010-ம் ஆண்டு ஜீப் செரோகி வெளியாகி பல பாராட்டுகளைப் பெற்றது. அடுத்து டாஜ் ஹெல்கேட், தொடர்ந்து பல கார்கள். எல்லாமே வெற்றி. 2014-ம் ஆண்டு கிரைஸ்லர் நிறுவனத்தின் மொத்த கடனையும் அடைத்து ஃபியட்டையும் கிரைஸ்லரையும் இணைத்து தற்போது இருக்கும் ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார்.

``ஆட்டோமொபைல் துறையில் லாபம் பார்க்க புதிதாக வருபவர்களுக்குக் குறைந்த சம்பளமும் பழைய ஆட்களுக்கு அதிக சம்பளமும் தரும் முறையை முதலில் நிறுத்துங்கள்" என்று தொழிலாளர்களுக்காக முதன்முறை குரல் கொடுத்த ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவர் இவர்தான். செர்ஜியோ பெரிய கார் காதலர். ஃபெராரி பிரியர். டெஸ்ட் டிராக்கில் எல்லோரும் 200 கி.மீ வேகக்தில் ஃபெராரியை ஓட்டினால் இவர் 300 கி.மீ வேகத்தைத் தொடாமல் விடமாட்டாராம். ஃபெராரியில் மின்சார கார் வருமா என்ற கேள்விக்கு ``அதெல்லாம் என்னை சுட்டுக் கொன்னா மட்டும்தான் வரும்" என்று சொன்னவர்.

செர்ஜியோ மார்க்கியோனி தோள்பட்டையில் அறுவைசிகிச்சை செய்திருந்தார். சிகிச்சை பலனின்றி  நேற்று மரணமடைந்தார். தற்போது இந்தியாவில் இருக்கும் ஜீப் காம்பஸ் முதல் இன்னும் 5 ஆண்டுகள் எந்தெந்த கார் எந்தெந்த தேசத்தில் விற்பனைக்கு வர வேண்டும் என்பது வரை செர்ஜியோ மார்க்கியோனிடம் திட்டம் இருந்தது. இவரின் இறப்பு ஆட்டோமொபைல் துறைக்கு பெரும் இழப்பு!