Published:Updated:

`இறைவன் கொடுத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?’ - பைபிள் கதைகள் #BibleStories

`இறைவன் கொடுத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?’ - பைபிள் கதைகள் #BibleStories
`இறைவன் கொடுத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?’ - பைபிள் கதைகள் #BibleStories

`இறைவன் கொடுத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?’ - பைபிள் கதைகள் #BibleStories

வர் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி; அவர் வளர்க்கும் நாய்க்கு `டயமண்ட்' என்று பெயர். அதை அன்பாக வளர்த்துவந்தார். ஒருநாள் மாலை அவர் உலாவச் சென்றபோது, அவரது மேஜையின் மீது எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்காமல் சென்றுவிட்டார். அன்பாக வளர்த்த அந்த நாய், தான் செய்வது என்னவென்று தெரியாமல், தன் காலால் மெழுகுவர்த்தியைக் கீழே தள்ளிவிட்டுவிட்டது. இதனால் மேஜையின் மேல் அந்த விஞ்ஞானி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிப் போயின. அவை வெற்றுக் காகிதங்கள் அல்ல; விஞ்ஞானியின் 20 ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவுகள் அடங்கிய முக்கியமான ஆவணங்கள்.

விஞ்ஞானி வீடு திரும்பியதும், தன் ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய காகிதங்கள் சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். பிறகுதான் இது தனது செல்ல நாயான டயமண்ட்டின் திருவிளையாடல்  என்பது அவருக்குப் புரிந்தது. அவர் வீடு திரும்பியதும், தான் செய்த செயலின் தீவிரம் புரியாத அந்த நாய், வாலைக் குழைத்தபடி அவரை அன்பாக வரவேற்றது. விஞ்ஞானியோ, `சிறியோர் செய்த பிழையெல்லாம் பெரியோர் பொறுப்பது கடனே' என்பதுபோல பதிலுக்கு நாயை தழுவி அணைத்து அன்பு காட்டிவிட்டு தனது பணியைத் தொடர்ந்தார்.  ``டயமண்ட் நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறிய மாட்டாய்...'' என்று அந்த வாயில்லா ஜீவனிடம் சொல்லிவிட்டு மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தார்.

தனது 20 ஆண்டுகால உழைப்பை, ஒன்றுமில்லாமல் செய்ததற்காக அந்த நாயை அவர் உண்டு, இல்லை என்று செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அதனிடம் பொறுமையாக நடந்துகொண்டது பாராட்டுக்குரியது. அந்த விஞ்ஞானி எப்படி தன் வாழ்வில் பொறுமையைக் கடைப்பிடித்தாரோ, அதேபோலதான் நம் ஆண்டவராகிய கடவுளும் நாம் எத்தகைய தவறுகளைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டு நாம் மனம் திருந்தி நடக்க வேண்டும் என்பதற்காக பொறுமையுடன் இருக்கிறார். ஆண்டவராகிய கடவுளின் நீடிய பொறுமையையும் அவரிடத்தில் இருக்கும் பெருந்தன்மையையும் நமக்கு எடுத்துச் சொல்லும்விதத்தில் இருக்கிறது இந்த நிகழ்வு.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, வயலில் தோன்றிய களைகளை உவமையாகக் கூறுவதைப் பார்ப்போம். அதாவது, நிலக்கிழார் ஒருவர் தன் தோட்டத்தில் நல்ல கோதுமை மணிகளை விதைக்க, அவருடைய பகைவரோ அவருக்குத் தெரியாமல் அவரது நிலத்தில் களைகளை விதைத்துவிட்டுச் செல்கிறார். இதையறிந்த நிலக்கிழாரின் பணியாளர்கள் அவரிடம் வந்து, நடந்ததை எடுத்துக்கூறினார்கள். அப்போது அவர் அவர்களிடம், ``களைகளைப் பறிக்கும்போது அவற்றுடன் சேர்த்து கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடை வரை இரண்டையும் வளரவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டார். அறுவடை நேரத்தில் அறுவடை செய்பவர்களிடம், ``முதலில் களைகளை பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டிவையுங்கள். கோதுமையை மட்டும் என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள்'' என்றார்.

இங்கே நிலக்கிழாரின் மூலம் வெளிப்படும் இயேசுவின் வார்த்தைகள், ஆழமாகச் சிந்திக்கவேண்டியவை. நிலக்கிழார் தன் நிலத்தில் கோதுமை மணிகளை விதைத்தபோது, `நல்ல விதைகளை விதைத்தார்’ என்ற வார்த்தைகள், `இந்த உலகம் படைக்கப்பட்டபோது எல்லாம் நல்லவையாகவே இருந்தன. தீமைகள் இடையில்தான் நுழைந்தன’ என்பதைக் குறித்துக் காட்டுவதாக இருக்கின்றன. அதற்கடுத்து களைகளை அகற்றும்போது சிலநேரங்களில் நல்ல செடிகளும் அகற்றப்படும் என்பதால், நிலக்கிழார் எல்லாவற்றையும் கடைசியில், அதாவது `அறுவடையின்போது அகற்றலாம்’ என்கிறார். இந்த வார்த்தைகள் உலக முடிவின்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப்படும் என்பதை எடுத்துச் சொல்கின்றன. ஆனாலும், இறைவன் அவ்வளவு காலத்தைக் கொடுப்பதற்குக் காரணம், அந்த கால இடைவெளியில் தீயவர்கள் மனம் திரும்ப வேண்டும் என்பதே.

சீராக்கின் ஞான நூலில், `ஆண்டவர் பொறுமையுள்ளவர்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மை, நாம் ஒவ்வொருவரும் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே அவர் மிகவும் பொறுமையாக இருக்கிறார். ஆகவே, அவருடைய பொறுமையையும் இரக்கப் பெருக்கத்தையும் உணர்ந்து, நாம் நம் குற்றங்களை உணர்ந்து, திருந்தி வாழ்வதே சிறப்பான செயல். எனவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்பை நழுவவிடாமல், மனம் திருந்தி இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்!

அடுத்த கட்டுரைக்கு