Published:Updated:

``பிராணயாமம் என் உடல், உள்ளம் இரண்டையும் லேசாக்குது!'' நடிகை ரோகிணி #LetsRelieveStress

எனக்கு ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா மியூசிக் கேட்பேன். இசைக்கு மனத்தை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் இருக்கு. எக்சர்சைஸ் பண்ணுவேன். இப்போ பிராணயாமம் பண்ண கத்துக்கிட்டேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிராணயாமம் பண்றேன். அது என் உடல், உள்ளம் இரண்டையும் லேசாக்குது. 

``பிராணயாமம் என் உடல், உள்ளம் இரண்டையும் லேசாக்குது!'' நடிகை ரோகிணி #LetsRelieveStress
``பிராணயாமம் என் உடல், உள்ளம் இரண்டையும் லேசாக்குது!'' நடிகை ரோகிணி #LetsRelieveStress

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு... என 200 படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர் நடிகை ரோகிணி. இப்போது `அப்பாவின் மீசை' என்கிற படத்தையும் இயக்கிவருகிறார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,  நடிகை, இயக்குநர்... எனப் பல ஆளுமைத் திறன்கள் உள்ளவர். அவருக்கு வாழ்க்கையில் மன அழுத்தம், மன இறுக்கம் தந்த தருணங்கள்... அதிலிருந்து வெளிவர அவருக்கு உதவிய வழிமுறைகள் குறித்துக் கேட்டோம்... 

``வாழ்க்கைங்கிறது மண்ணைக் கீறிக்கொண்டு, சுழன்று, கிழித்தோடும் நதியைப்போலத்தான் பலசமயங்கள்ல இருக்கு. இதுல இன்பம், துன்பம், நஷ்டம், லாபம்னு மாறி மாறி நிகழ்ந்துக்கிட்டுத்தான் இருக்கும். அஞ்சு வயசுலயே என் அம்மா இறந்துட்டாங்க. ஒரு பெண் குழந்தைக்கு அம்மா இல்லைன்னா எவ்வளவு கஷ்டம்ங்கிறதைச் சொல்லவேண்டியதே இல்லை. அதன் பிறகு குழந்தை நட்சத்திரம், மலையாளப் படங்கள்னு என் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்துச்சு. 

மலையாளப் படங்களில் நடிச்சுச்சுக்கிட்டிருந்தேன். ஹீரோயினா நான் நடிச்ச முதல் மலையாளப் படத்தோட ஹீரோவா ரகுவரன்தான் நடிச்சார். அதுக்குப் பிறகு நான் வேறு திசையிலும், அவர் வேறு திசையிலும் பயணம் செய்தோம்.

பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா ஹீரோயினா நடிக்கணும்கிற கனவு எனக்கும் இருந்துச்சு. சினிமாவுல முன்னணி ஹீரோயினா நான் வரணும்னு நெனைச்சுக்கிட்டிருந்த நேரத்துலதான் மணிரத்னம் சாரோட கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) படத்துக்கு டப்பிங் பேசுற வாய்ப்புக் கிடைச்சுது. நானும் கிடைச்ச வாய்ப்பைச் சரியாச் செய்வோம்னு செய்தேன். அதுக்குப்பிறகு, தெலுங்குல ராம்கோபால் வர்மாவோட  `சிவா', தமிழ்ல ஷங்கரோட `ஜென்டில்மேன்’,  `இந்தியன்’, மணிரத்னம் சாரோட `இருவர்’, `ராவணன்’ ஆகிய படங்களின் ஹீரோயின்களுக்கு நான் வாய்ஸ் கொடுத்தேன்.

சினிமாவுல ஏதாச்சும் ஒரு விஷயத்தை நாம ஈடுபாட்டோட செய்துட்டு, அதுல பேரும் வாங்கிட்டோம்னா அந்த வாய்ப்புதான் திரும்பத் திரும்ப நமக்குக் கிடைக்கும். என் விஷயத்துலயும் ஓரளவு அப்படித்தான் நடந்துச்சு. என்னோட வாழ்க்கைச் சூழலால நானும் அதைத் துணிஞ்சு ஏத்துக்கிட்டேன். ரகுவும் நானும் திருமணத்துல இணைஞ்சோம்.

எங்க மகன் ரிஷிதான் எங்க உலகம். ஆனா, வாழ்க்கையோட சில முரண்கள், மனிதர்களைப் பிரிச்சுடுது. மனுஷங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் சந்தர்ப்பங்கள் முந்திக்கொள்ளுதுனு சொல்லுவாங்க. எதிர்பாராதவிதமா அவர் இறந்துட்டார். ரிஷியின் எதிர்காலத்தை வடிவமைக்கவேண்டிய மொத்தப் பொறுப்பும் என்கிட்ட வந்துச்சு.

தொடர்ந்து அதை நோக்கிய ஓட்டத்துல ஓடிக்கிட்டு இருக்கேன். இப்போ என் பையன் அமெரிக்காவுல மெடிசன் பண்றான். அவனைப் பிரிஞ்சி இருக்குறது ரொம்பக் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, அவனோட படிப்புத் தேவைக்கான பணத்துக்காகத்தான் நாங்க பிரிஞ்சிருக்கோம்ங்கிறது எனக்கு உந்துசக்தியா இருக்கு. 

இந்தக் குடும்பம், தொழில், பொருளாதாரம், மகனின் எதிர்காலம்... எல்லாத்தையும் தனி ஆளா எதிர்கொள்றப்போ ஸ்ட்ரெஸ் வரத்தான் செய்யும். ஆனா, அந்த ஸ்ட்ரெஸ்தான் என்னை அடுத்த அடுத்த கட்டத்துக்குப் போகச் செய்யுது. 

எனக்கு ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா மியூசிக் கேட்பேன். இசைக்கு மனத்தை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் இருக்கு. எக்சர்சைஸ் பண்ணுவேன். இப்போ பிராணயாமம் பண்ண கத்துக்கிட்டேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிராணயாமம் பண்றேன். அது என் உடல், உள்ளம் இரண்டையும் லேசாக்குது. 

இது தவிர இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த  நூல்களை வாசிப்பேன். எதிர்காலத்துல இயற்கை விவசாயம் பண்ணணும்ங்கிற ஆசை இருக்கு. இயற்கையை மீறிய சக்தி எங்க இருக்கு? அதனால இயற்கையைத்தான் நான் தெய்வமா வழிபடுறேன்’’ என்கிறார் ரோகிணி கண்களில் நம்பிக்கை மிளிர!