Published:Updated:

காவேரி மருத்துவமனையின் பரபரப்பு நிமிடங்கள்! #karunanidhi

காவேரி மருத்துவமனையின் பரபரப்பு நிமிடங்கள்! #karunanidhi
காவேரி மருத்துவமனையின் பரபரப்பு நிமிடங்கள்! #karunanidhi

காவேரி மருத்துவமனையின் பரபரப்பு நிமிடங்கள்! #karunanidhi

``கருணாநிதிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள், இன்னும் சற்றுநேரத்தில் மருத்துவ அறிக்கையை வெளியிடுவார்கள்''. - காவேரி மருத்துவமனையில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு சந்தித்துவிட்டுச் சென்றபின் நேற்று இரவு மீண்டும் அத்தனை செய்தி ஊடகங்களும் இப்படியான தகவலால் பரபரப்பானது. 

இத்தனைக்கும் காலையில்தான் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகச் சில புகைப்படங்கள் வெளியாகின.  'அவருக்கு ஒண்ணும் ஆகக் கூடாது', 'அவர் நலம்பெற்று மீண்டு மீண்டும் வரட்டும்' என்பது போன்ற பிரார்த்தனை குறுஞ்செய்திகள், வாட்ஸ் அப் இன்பாக்ஸ்களை எட்டிப் பார்க்க... அத்தனையையும் படித்துக்கொண்டே காவேரி மருத்துவமனை நோக்கி விரைந்தோம். 

எப்போதுமே வெறிச்சோடி இருக்கும் ஞாயிறு இரவு மின்சார ரயில் பயணங்கள், நேற்று மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. அனைவரிடமும் ஏதோ ஒருவித படபடப்பு... 'முத்தமிழறிஞர்... அவ்வளவு ஈஸியா இப்படியொரு பட்டம் கிடைச்சுடுமா? வேற யாருக்கு இப்படிப் பட்டம் இருக்கு சொல்லுங்க?', 'ஆமாம்மா! அப்பாதான் பேசினாரு... பிரேக்கிங் நியூஸ் போட்டுட்டு இருக்காங்களாம்'. ரயிலின் இரைச்சலுக்கிடையே இப்படியான குரல்கள் காதுகளை எட்டின. இதற்கிடையே மருத்துவமனையின் அறிக்கையும் வந்து சேர்ந்திருந்தது. 

'கருணாநிதியின் உடல்நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது முக்கிய உடற்குறியீடுகள் அத்தனையும் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளன. நிபுணர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ரயிலில் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கிச் செல்ல ஆட்டோவில் ஏறியதும், 'ஆஸ்பத்திரிகிட்ட ஒரே அடிதடி.. சண்டை.. கல்லெறிஞ்சிட்டு இருக்காங்கம்மா. பார்த்து இருங்க' என்று பதற்றத்துடனேயே கூறிவிட்டு மருத்துவமனைக்குச் சற்றுத் தொலைவில் நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். அறிக்கை வெளியான பின்பும்... கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள், 'கருணாநிதியின் உடல்நிலை குறித்த உண்மை அறிக்கை வேண்டும்! எங்களை ஏமாற்றாதீர்கள்' என்று போராடியதால் அங்கே சிறிது நேரம் அசாதாரண சூழல் நிலவியதாக அறிந்துகொள்ள முடிந்தது. இந்தத் தள்ளுமுள்ளுக்கிடையே கட்சித் தொண்டர்களில் ஒருவருக்கும் காவல் துறையினரில் ஒருவருக்கும்  சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும், குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் சற்று நேரத்தில் சூழலை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தார்கள். 
 

காவிரி மருத்துவமனையைச் சுற்றி 10 அடி தூரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகள்.. வேலிக்கு உள்ளே காவலர்கள் மற்றும் ஊடகத்தினர்.. அதற்கு அந்தப்புறம் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள். ஆனால், அனைவரது மனநிலையும் ஒருவித பதற்றத்துடனேயே இருந்தது. தொண்டர் கூட்டங்களிடையே உயர்ந்திருந்த கரங்களில் கருணாநிதியின் புகைப்படங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகளும் நிறையத் தென்பட்டன. கொடியும் புகைப்படமும் இல்லாதவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி போன்ற துண்டினைக் கழுத்தைச் சுற்றிப் போர்த்தியபடி நின்றுகொண்டிருந்தார்கள். 

இரவு 11 மணி.. உறக்கம் அங்கிருந்த தொண்டர்களின் முகங்களில் தெரிந்தாலும் அவர்களது குரல்களில் தெரியவில்லை. ‘வா... வா... தலைவா! எழுந்து வா... தலைவா!’ என்று காவேரி மருத்துவமனையை நோக்கி கரங்களை வானுயர உயர்த்தி உணர்ச்சிகள் அத்தனையும் திரட்டி ஒலித்துக்கொண்டிருந்தார்கள் அவர்கள். கருணாநிதி தனது 75-வது வயதில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதை, தான் முதன்முதலில் பார்த்தது பற்றி பிரமிப்புடன் விவரித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர். ``காலையிலேருந்து ஒண்ணுமே சாப்பிடலை. இந்த டீயாச்சும் குடி'’ என்று தனது அருகில் இருந்த பெண்ணுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தார் ஒருவர். அந்தப் பெண் உடுத்தியிருந்த சேலையில் உதயசூரியன் ஆங்காங்கே முளைத்திருந்தது. இத்தனை நாட்களாக அங்கிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு அங்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்த தேநீர்தான் உணவு என அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது. தேநீரும் தண்ணீர் பாட்டிலும்தான் இந்த ஒருவாரத்தில் காவேரி மருத்துவமனையைச் சுற்றிய பகுதிகளில் அதிகம் விற்கப்பட்டிருக்கின்றன. ஒருநாளைக்கு 500 ரூபாய்வரை லாபம் கிடைப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தண்ணீர் பாட்டில் விற்றவர்களில் ஒருவர். ஆண்கள், பெண்கள், சிறுவர்  - சிறுமியர் என வயது வரம்பற்று மக்கள் அங்கே நின்றுகொண்டிருந்தாலும், கூட்டத்தை முந்திக்கொண்டு முன்னால் வந்த சில மூன்றாம் பாலினத்தவர்கள் சட்டெனக் கண்ணில்பட்டார்கள்.

`அவர்கள் இனி திருநங்கைகள், திருநம்பிகள் என்றே அழைக்கப்படுவார்கள்’ என்று கருணாநிதி, அவர்களுக்கான கௌரவத்தைக் கொடுத்தது நினைவில் வந்து சென்றது. சிலர் கூட்டம் கூட்டமாகக் கூடி கருணாநிதிக்காக, ‘ஆன் தி ஸ்பாட்டில்’ சில பாடல்வரிகளைத் தாங்களே உருவாக்கிப் பாடிக்கொண்டிருந்தார்கள். 

‘சமத்துவபுரம் கொடுத்தது யாரு?...

வள்ளுவருக்கு உயரமா சிலை வெச்சது யாரு?..

பெரியாரின் அண்ணாவின் கொள்கை யாரு?..’ 

இப்படிக் குரல்கள் பாடிப் பாடி அடங்கிக்கொண்டிருந்தன. 

திடீரென்று மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியே வந்த கட்சிக்காரர் ஒருவர்,  ‘தலைவரின் உடல்நிலை நல்லாயிருக்கு. நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம். சீக்கிரமே வந்துடுவாரு. தொண்டர்களோட உடல்நிலை ரொம்ப முக்கியம் அதனால் எல்லாரும் கலைந்துசெல்லலாம்’ என்று தொண்டர்களிடையே ஒவ்வொரு பகுதியாகச் சென்று சொல்லிக்கொண்டிருந்தார்.  ‘தலைவருக்கு ஒண்ணுமில்லை... நல்லாயிருவாரா?’ என்று அவரின் கரங்களைப் பிடித்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  ‘நல்லாயிருவாரு...’ என்று கேட்டவர்களையும் கட்டியணைத்துச் சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தார் அவர். 

நள்ளிரவு 2 மணி... `நல்லாயிருக்கிறார்' என்கிற செய்தி வந்ததாலோ என்னவோ... கூட்டம் மெள்ள அமைதிகொள்ளத் தொடங்கியது.  தொண்டர்கள் தாங்கள் நின்றுகொண்டிருந்த இடங்களிலேயே ஆங்காங்கே சாலையில் கால் நீட்டிப் படுத்துக்கொண்டார்கள். சிலர் மருத்துவமனை அருகிலேயே இருந்த மேம்பாலத்துக்கு அடியில் படுத்துக்கொண்டார்கள். ‘என்னை ஒரு 4 மணிக்கா எழுப்பிவிடு..’ என்று குரல்கள் அருகில் இருந்தவர்களிடம் கூறிக்கொண்டிருந்தன. சிலர் குளிருக்கு இதமாகக் கட்சிக் கொடியையே போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உறங்குவதாகவும் தெரியவில்லை. 

இதற்கிடையேதான் காவேரி மருத்துவமனைக்குள்ளே ஓர் இயல்பான காட்சியைக் காணமுடிந்தது. மருத்துவமனையின் இருள் படர்ந்திருந்த ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த தனித்தனி அட்டைகளின் மேலே காவலர்களில் ஒரு பகுதியினர் அயர்ச்சியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் விழித்தபடியே படுத்திருந்தார்கள். அதில் சிலர் காதுகளில் இயர்போன் மாட்டப்பட்டிருந்தது. சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது அவர்களது முகங்களிலேயே தெரிந்தது. அருகில் படியில் அமர்ந்திருந்த காவலர்கள் இருவரில் ஒருவர் தனது குடும்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இத்தனை நாட்களாக அங்கே காவலில் இருப்பதால் அனேகமாக அவர் அவர்களை ‘மிஸ்’ செய்திருக்கக் கூடும். கூடியிருந்த பெரும்பாலானவர்கள் உறங்கச் சென்ற பிறகான பேரமைதிக்கு நடுவே பொழுது மெல்ல மெல்ல புலரத் தொடங்கியது.

இத்தனை நம்பிக்கைகளும் கருணாநிதியை நலம் பெறச் செய்யட்டும்!

அடுத்த கட்டுரைக்கு