Published:Updated:

ஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடு, ஹஜ் யாத்திரை! #HajYatra

ஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடு, ஹஜ் யாத்திரை! #HajYatra
ஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடு, ஹஜ் யாத்திரை! #HajYatra

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை, பொருள் வளமும் உடல் நலமும் பெற்ற முஸ்லிம்களின் கடமையாகிறது

ரிறைக் கோட்பாடு எனும் ஏகத்துவக் கலிமா , தினமும் ஐந்து வேளை தொழுகை, ஆண்டில் ஒருமுறை ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது, வசதியுள்ளவர்கள் தமது செல்வத்திலிருந்து இரண்டரை விழுக்காடு ஏழைகளுக்குக் கட்டாய தானமான ஜகாத் வழங்குவது, மக்காவிலுள்ள கஃஅபா எனும் இறை ஆலயத்துக்குச் சென்று, 'ஹஜ்' எனும் கடமையை நிறைவேற்றுவது என்ற ஐந்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளாகும். இந்த ஐம்பெரும் கடமைகள் இஸ்லாத்தின் தூண்கள். அதில் ஒன்றுதான் ஹஜ் யாத்திரை எனும் கடமை.

ஹஜ் யாருக்கெல்லாம் கடமை?

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை பொருள் வளமும், உடல் நலமும் பெற்ற முஸ்லிம்களின் மீது கடமையாகிறது. பொருள் வளமிருந்து உடல் நலம் நலிவுற்றிருந்து, பயணம் செய்ய இயலாதவராய் இருந்தாலோ, உடல் ஆரோக்கியம் இருந்தும் பொருளாதார வசதி இல்லாதிருந்தாலோ அவர் மீது ஹஜ் கடமையாகாது. இந்த ஹஜ் கடமை, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யவேண்டியதாகும். அதற்குப் பிறகு மீண்டும் ஹஜ் செய்வது உபரியான வணக்கமாகவே கருதப்படும்.

ஏன் மக்கா செல்ல வேண்டும்?

உலகில் கட்டப்பட்ட முதல் இறை ஆலயம் மக்காவிலுள்ள கஃஅபா எனும் இறைஆலயம். இந்த ஆலயத்தை நபி இப்ராஹீம்(அலை) அவரது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் இணைந்து புதுப்பித்ததாக இறைமறைக் குர்-ஆன் எடுத்துக் கூறுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்த இறைஆலயத்தில் 'தவாஃப்' எனும் வலம்வருதலை மேற்கொள்வார்கள். அங்கு எவ்வித பூஜையோ, புனஸ்காரமோ, உண்டியலோ, எந்த ஓர் உருவமோ எதுவுமே இல்லை. அங்கு அவர்கள் அந்தக் கட்டடத்தை வழிபடவும் இல்லை. கஃஅபாவின் ரட்சகனான அல்லாஹ் ஒருவனையே வழிபாடுவார்கள். உலகிலுள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் நடத்தப்படும் தொழுகையைப் போல்தான் அங்கும் ஐந்துவேளை தொழுகை நடத்தப்படுகிறது. 

அவ்வாறெனில், ஏன் மக்கா செல்லவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? உலகிலுள்ள கறுப்பர், வெள்ளையர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்று கூடும் சமத்துவ மாநாடுதான் ஹஜ். 'தொழுகை' உள்ளூர் சமத்துவத்தைப் போதிக்கிறது என்றால், ஹஜ் உலகளாவிய சமத்துவத்தைப் போதிக்கிறது. 

ஹஜ்ஜில் என்ன செய்வார்கள்?

வழக்கமான தொழுகையைத்தவிர, இறை ஆலயமான கஃஅபாவை ஏழுமுறை வலம் வருதல், மகாமே இப்ராஹீம் எனும் இடத்தினருகே சிறப்புத் தொழுகை, இரண்டு இரக்காஅத் தொழுதல், ஜம்ஜம் நீர் அருந்துதல், ஸஃபா மர்வா எனும் இரு குன்றுகளுக்கிடையே ஏழுமுறை  நடத்தல், குறிப்பிட்ட பகுதியில் ஆண்கள் மட்டும் குதியோட்டம் ஓடுதல், ஆண்கள் தலைமுடியை மழித்தல், பெண்கள் தலைமுடியின் சிறுபகுதியைக் கத்தரித்தல்... இந்தக் கிரியைக்குப் பெயர் 'உம்ரா' எனப்படும். இதை முடித்துவிட்டு, 'மினா' எனும் இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்குவார்கள். 

'அரஃபா' எனும் மைதானத்துக்குச் சென்று இறைவனிடம் பிரார்த்தனை புரிவார்கள். 'முஸ்தலிபா' எனும் இடத்துக்குத் திரும்புவார்கள். சைத்தானை அடையாளப்படுத்தும் மூன்று உயரத் தூண்கள் மீது மூன்று நாள்கள் சென்று கல்லெறிந்துவிட்டுத் திரும்புவார்கள். ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஏதேனும் ஒரு பிராணியை இறைவனுக்காகப் பலியிடுவார்கள். இதுதான் ஹஜ். 

மதீனா ஏன் செல்கின்றார்கள்?

மக்காவிலிருந்து ஹஜ் முடித்த புனிதப் பயணிகள், அங்கு நபிகள் நாயகம் அமைத்த மதீனா பள்ளிக்குச் சென்று அங்குள்ள பள்ளியில் வழக்கமான தொழுகைகளைச் செய்வார்கள். அங்கு சிறப்பு வழிபாடு எதுவும் இல்லை. நபிகளார் அடங்கப்பட்ட இடத்தில்தான் பள்ளிவாசல் அமைந்துள்ளது. அங்கு சென்று அண்ணல் நபிகளாரின் வாழ்வியல் பாடத்தை நினைவுகூர்வதற்காகச் செல்கின்றார்கள்.

இஹ்ராம் எனும் வெள்ளாடை

ஹஜ்ஜுக்குச் செல்லும் 'ஹாஜிகள்' எனும் புனிதப் பயணிகளில் ஆண்கள், வழக்கமான உடைகளை அணிய அனுமதி இல்லை. மேல் ஒரு உடுப்பு, கீழ் ஒரு உடுப்பு என்ற இரண்டு வெள்ளாடைகளை அணிந்துகொள்வார்கள். இந்த ஆடையே 'இஹ்ராம்' எனப்படும். உலகிலுள்ள பெரும் பணக்காரர்கள் ஒரே உடையில் வரும்போது, வெவ்வேறு நாட்டவர்கள் ஒரே உடையில் வரும்போது எல்லோரும் இறைவனின் அடிமைகள் எனும் சமத்துவ உணர்வையே விதைக்கிறது. இங்கு வி.ஐ.பி-க்கான எந்த சிறப்பு வழிபாடோ, வாசலோ இல்லை. எல்லாரும் ஓர் இறைவனின் அடிமைகள்.

ஹஜ் எனும் ஏகத்துவ மாநாடு

இந்த ஹஜ்ஜுக்கென்று வரலாறு உண்டு. நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வியலோடு தொடர்புகொண்டதுதான் ஹஜ். ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டதால், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் பூசாரி குடும்பம், உயர் பதவி, தந்தை, உறவு, ஊர் யாவற்றையும் துறந்து மேற்கொண்ட ஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடுதான் ஹஜ். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்கு புகட்டப்பட்ட நீரின் நினைவாக இன்றும் ஹாஜிகள் 'ஜம் ஜம் நீர்' அருந்துகின்றார்கள். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மனைவியார் அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் ஓடிய இடத்தில்தான் ஹாஜிகள் ஓடுகிறார்கள்.

ஓரிறைக் கோட்பாட்டுக்காக, ஒரே இறைவனின் கட்டளைக்கேற்ப மகனையும் அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம்(அலை) அவர்களின் அந்தத் தியாகச் செயலைத்தான் இன்றும் உலக முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடுவதன் வாயிலாக நினைவு கூறுகின்றார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மகனை அறுக்கத் துணிந்தாலும் மனிதப்பலியை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக இறைவன் ஓர் ஆட்டை அனுப்பி பலியிடச் செய்கிறான். அதனாலேயே ஆடு, மாடு, ஒட்டகம் இந்த மூன்றில் ஒரு பிராணி 'குர்பானி' கொடுக்கப்படுகிறது.

நபிகளார்(ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவப் பரப்புரையை மேற்கொண்ட தொடக்க காலத்தில் ஓரிறை ஆலயத்தில் அன்றைய அரபிகள் 360 சிலைகளை வைத்து வழிபட்டனர். அவற்றை அகற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் ஒரே இறைவனை வழிபடும் ஓரிறைக் கேந்திரமாக மாற்றினார்கள். ஒரே இறைவன் என்ற அந்த ஏகத்துவ முழக்கத்தைத்தான் ஹாஜிகள் எனும் புனிதப் பயணிகள் உரத்து முழங்குகின்றார்கள்.

ஹஜ்ஜின் நோக்கம்

மனிதர்கள் இறைவனுக்கு அஞ்சி வாழ்வதற்காகவே வழிபாடுகள் கடமையாக்கப்பட்டன. இந்த ஹஜ்ஜின் அடிப்படை நோக்கம் இறையச்சம். இறைவனை அஞ்சி வாழும் நல்லடியார்களை உருவாக்குவதுதான் ஹஜ்ஜின் நோக்கம். இறைவனை அஞ்சி வாழும் ஒழுக்கத் தூய்மையான மனிதர்கள்; இறைவனை அஞ்சி வாழும் சமுதாயம். இதுதான் ஹஜ் தரும் செய்தி. 

அடுத்த கட்டுரைக்கு