Published:Updated:

காங்.-திமுக இடையிலான பிரச்னை தீர்க்கப்படும்:பிரணாப்

Vikatan Correspondent

புதுடெல்லி, மார்ச் 5,2011

காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணிப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார். ##~~##

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் இன்று அவர் கூறுகையில், "எங்களது அரசியல் உறவில் சில நேரங்களில் பிரச்னைகள் வரலாம். பிரச்னைகளை உருவாகும் அதேவேளையில், அவற்றுக்கு தீர்வுகாணும் திறனும் எங்களுக்கு உள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று உறுதி கூறுகிறேன்," என்றார்.

முன்னதாக, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. அதேவேளையில், அக்கட்சி அதிக இடங்களுடன் கூடிய நிபந்தனைகள் விதித்தது.

இதுகுறித்து வெளிப்படையாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று நடைபெறவுள்ள திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.க. உரிய முடிவெடுப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது குறித்து திமுக தரப்பில் தீவிரமாக அலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழலில், திமுக உடனான ஏழு ஆண்டு கால உறவு முறிந்துவிடாது என காங்கிரஸ் மேலிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.