Published:Updated:

`ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாதான் காதலா?' - கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் கோல்ஸ்

உங்கள் ஆரோக்கியமான உறவுக்கு இவற்றைப் பின்பற்றினாலே போதும்.

`ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாதான் காதலா?' - கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் கோல்ஸ்
`ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாதான் காதலா?' - கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் கோல்ஸ்

`எப்போதாவது சண்டைனா ஓகே! எப்போதுமே சண்டைனா எப்படி மச்சான்! இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்' என்று நண்பர்களுக்கு தொல்லைகொடுக்கும் திருமணமான தேவதாஸ்கள் ஒருபக்கம் புலம்பிக்கொண்டிருக்க, 'வாழ்க்கைல நிம்மதியே இல்ல. உன்ன கல்யாணம் பண்ணுனதுக்கு ஒரு ...ய கல்யாணம் பன்னிருக்கலாம்' என்று கண்ணெதிரே நிம்மதி இருந்தும், பிரச்னைகளை மட்டுமே மனதில் சுமக்கும் பார்வதிகள் மறுபுறம் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கனவுகளோடு இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் ஆண்-பெண் இருவரும், ஏதோ ஒரு வகையில் கசப்பான நாள்களைக் கடக்க வேண்டியதாய் அமையும். இது தவிர்க்கமுடியாத ஒன்று. முதல் பார்வை, முதல் தீண்டல், முதல் முத்தம் என ரசித்து வாழ்ந்த நாள்கள் அனைத்தும் பச்சை பாவக்காயை வெறும் வயிற்றில் கடித்ததுபோல் கடுப்பு கலந்த கசப்பான அனுபவமாய் தோன்றுவதற்கு காரணம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிப்படை புரிதல் இல்லாமல் இருப்பதே காரணம். உங்கள் ஆரோக்கியமான உறவுக்கு இவற்றைப் பின்பற்றினாலே போதும்.

பழைய பூராணம் பாடாதீங்க:

கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன சண்டைகள் வருவது இயல்பு. சண்டையின்போது பொறுமை இழந்து பாத்திரங்கள் உடைவதும் சகஜம்தான். ஆனால், நலிந்த உடைந்த பாத்திரத்தை வைத்து காலம் முழுவதும் புராணம் பாடுவது மிகவும் தவறான செயல். அன்றைய பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. என்றைக்கும், பிரச்னைக்கான தீர்வுகளை தள்ளிப்போடாதீர்கள். அதிகபட்சம், தூங்குவதற்கு முன்பு மனம்விட்டுப் பேசி, அத்துடனே அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். விடியும் நேரம் புன்னகையோடு விடியும்.

நீ என்ன பெரிய ஒழுங்கா!

இந்த உலகத்தில் யாரும் 'பெர்ஃபெக்ட்' இல்லை என்பதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் தங்களின் காதல் உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்திவிடுவார்கள். அவற்றை 'சர்ப்ரைஸ் டின்னர்', 'ஸ்பெஷல் பார்ட்டி' போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிலரால் இப்படி 'ஃபேன்சி' ஸ்டைலில் வெளிப்படுத்த முடியாது. அதற்காக அவருக்கு உங்கள்மீது காதல் இல்லை என்று அர்த்தமாகிவிடாது. நீங்கள் நினைத்ததைவிட பல மடங்கு உங்களைக் காதலித்துக்கொண்டிருப்பார். ஷாப்பிங் மால், பீச், பார்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்லாமல் இருப்பதால், உங்கள்மீது காதல் இல்லை என்றாகிவிடுமா? எப்போதும் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பதால் அன்பு குறைந்துவிட்டது என்றாகிவிடுமா? உங்கள் விருப்பு வெறுப்புகளை சொன்னால்தானே, எதிரே உள்ளவர்களுக்கு புரியும். அதைப் புரிய வைக்க ஒருவருக்கொருவர் பழி சொல்லாமல், காதலோடு பழகிப் பயணியுங்கள்.

ஆரம்பம் வரைக்கும் போய் அலசி ஆராய்ந்து பார்க்கணும்:

'எப்போ பார்த்தாலும் பிரச்னை' என்று ஆரவாரம் செய்துகொண்டிருந்தால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடுமா? இருவருக்கும் பிரச்னை எதனால் உருவாகிறது? ஏன் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறோம்? இதுபோன்ற கேள்விகளை என்றைக்காவது உங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? தவறு செய்வது மனிதனின் இயல்பு. இதை இருவரும் புரிந்துகொண்டு, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருந்தாலே, நிம்மதி என்றைக்கும் நிலைத்து இருக்கும்.

ஹலோ! நான் இங்க இருக்கேன்!

அலுவலக வேலைகளை முடிந்தவரை வீட்டுக்கு கொண்டுவராதீர்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் செய்யலாம். அதற்கும் ஒரு எல்லையுண்டு. வீடு திரும்பியதும் லேப்-டாப்பை மடியில் வைத்துக்கொண்டு, மனைவியின் முகத்தைக்கூட பார்க்க நேரமில்லாமல் பணியில் மூழ்கி இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதல்ல. உங்களின் வருகைக்காகவே காத்துக்கொண்டிருக்கும் மனைவியின் எதிர்பார்ப்பப்பைப் பற்றி என்றைக்காவது யோசித்ததுண்டா? வீட்டில் இருப்பவர்களிடம் மனம்விட்டுப் பேசி, சிரிப்பது மிகவும் அவசியம். சுவிட்ச் தட்டினால் சிரிப்பதற்கும், அழுவதற்கும் நாம் லேப்-டாப் போன்ற இயந்திரம் அல்ல. உணர்ச்சிமிக்க மனிதர்கள் என்பதைப் புரிந்து நடந்தால், அடி உதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

இப்படி சில்லறை பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்காதீர்கள். சில்லறைகளிலே முடித்துக்கொள்வது பெட்டர்.