Published:Updated:

ஒரு எந்திரனும் சில ஜென்டில்மேன்களும்! ஷங்கருடன் சிஷ்யர்களின் கெட்-டுகெதர் #25YearsOfDirectorShankar

சனா

இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆனதையொட்டி அவரின் , உதவி இயக்குநர்கள் அவருக்காக பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர். இதுபற்றி இயக்குநர் பாலாஜி சக்திவேல் கட்டுரையில் கூறியுள்ளார்.

``என் ஆரம்பகால ரூம் மேட்டும் பின்நாள்களில் இயக்குநரான வெங்கடேஷ் மூலமாகதான் இயக்குநர் ஷங்கர் எனக்கு அறிமுகம். வெங்கடேஷூம் ஷங்கரும் 'வசந்தகால பறவை' படத்துல ஒண்ணா வேலை செய்தாங்க. ஷங்கர் அந்தப் படத்தின் இணை இயக்குநர். அவரோட அறிமுகம் கிடைக்கலைனா சினிமாவில் நான் இருந்திருப்பேனானு தெரியலை. ஷங்கர், நல்ல மனிதர்'' என்று உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். 

‘இயக்குநர்’ ஷங்கரின் 25 ஆண்டுகாலப் பயணத்தில் அவருடன் பயணித்த அவரின் உதவி இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து அவரை சந்தித்து கௌரவித்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்பு பற்றியும் இயக்குநர் ஷங்கர் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல். 

'என்ன பாஸ்.. படம் எப்படியிருக்கு' இதுதான் ஷங்கர் என்கிட்ட பேசுன முதல் வார்த்தை. 'வசந்தகால பறவை' படம் பார்த்துட்டு வந்து நின்னுட்டு இருந்தேன். ‘என்ன பாஸ் படம் எப்படி இருக்கு’னு விசாரிச்சார். என் கருத்துகளைச் சொன்னேன். பொறுமையா கேட்டுக்கிட்டார். மற்றவர்கள் சொல்லவரக்கூடிய விஷயத்தை ஷங்கர் எப்பவும் கேட்டுப்பார். அவருடைய முதல் படம் 'ஜென்டில்மேன்' காலத்திலிருந்து அவருடன் இருக்கேன். அதில் ஷங்கருடைய உதவி இயக்குநராக வொர்க் பண்ணிணேன்.  அந்தப் படம் ரிலீஸாகி நேற்றுடன் இருபத்தைந்து ஆண்டுகள் ஆயிருச்சு. அதைக் கொண்டாடனும்னு அவருடன் வேலைபார்த்த உதவி இயக்குநர்கள் முடிவு பண்ணினோம். சிலர் மட்டும் வெளிநாடுகளில் இருந்தனால வர முடியல.

இந்த 25 வருஷங்கள்ல அவர்ட்ட ஒர்க் பண்ணும்போது பலமுறை சொதப்பியிருக்கோம். சில சொதப்பல்களை மட்டும் சொல்றேன். 'ஜீன்ஸ்' பட க்ளைமாக்ஸ் ஷூட்டிங். ``இது கல்யாண மாலை,  இதை வாடமா ஏசி அறையில வெச்சிரு.. மாலை வாடிட்டா நல்லாயிருக்காது. காட்சியோட தொடர்ச்சி இல்லாம போயிரும். பத்திரமா பார்த்துக்கோ'னு ஷங்கர் சார் சொன்னார். மாலையை ஏசி அறையில பத்திரமா வெச்சிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பா சுத்திக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல ஷங்கர் சார், ``மாலை எங்கேடா''னு கேட்டார். ஏசி அறையை நோக்கி ஓடினேன். அறை பூட்டியிருக்கு. சாவி என்கிட்ட இல்லை. என்ன பண்ணுறதுனே தெரியல. வெடவெடத்துப் போய் ஷங்கர் சார் முன்னாடி நின்னேன். 'போடா'னு.. ஒரே வார்த்தையில சொல்லி முடிச்சிட்டார். மாலை வாடக்கூடாதுனு அவ்வளவு கண்ணும் கருத்துமா இருந்த எனக்கு அதோட சாவியை வாங்கி பத்திரப்படுத்தணும்ங்கிறது முக்கியமா தெரியாமப்போயிடுச்சு. 

`சாமுராய்' படம் எடுத்து முடிச்சுட்டு `காதல்' படத்துக்காக நிறைய தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன். 'க்ளைமாக்ஸ் காட்சியை மாத்துனா படம் எடுக்குறேன்'னு சொன்னாங்க. நான் வருத்தமா ஷங்கர் சார் ஆபிஸ்ல உட்கார்ந்து இருந்தேன். 'உனக்காக நான் படம் எடுக்குறேன்''னு. சொல்லி கதையைக்கூட கேட்காமல் படம் எடுத்தார். இப்படி உதவி இயக்குநர்கள் பலருக்கும் உதவி செஞ்சு கொடுத்திருக்கார்.

30 உதவி இயக்குநர்கள் ஒண்ணா சேர முடிவெடுத்து அதற்கான வேலைகள்ல இறங்கினோம். அதுக்குனு தனியா வாட்ஸ்அப் குரூப் ஒண்ணை ஆரம்பிச்சோம். முதலில் இந்தச் சந்திப்பை பெரிய விழாவாக கொண்டாடலாம்னு முடிவு பண்ணினோம். முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், அந்த எண்ணத்தை கைவிட்டுட்டு எங்களுக்கிடையேயான சந்திப்பாக அதைச் சுருக்கினோம். வெள்ளை சட்டை, புளூ பேன்ட். இதுதான் எங்களுக்கான டிரெஸ் கோடு. எல்லாரும் இந்த கலர் டிரஸ்லதான் வந்தோம். 

ஷங்கர் சார் பற்றிய ஒவ்வொரு உதவி இயக்குநர்களோட நினைவுகளையும் எழுதிவாங்கி அதை தொகுத்து புத்தகமாக உருவாக்கி அதை அவருக்கு பரிசா கொடுக்க நினைச்சோம். சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஷங்கர் சாரிடம் சொன்னோம். அப்ப அவர் கேட்ட கேள்வி, ‘எதற்கு இதெல்லாம்?'  பிறகு, எங்கள் அன்பைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார். மாலையிலிருந்து இரவுவரை நாலஞ்சு மணிநேரம் எங்களோடு நேரம் செலவழித்தார். பழைய நினைவுகள் பற்றி பேசிட்டு இருந்தோம். ஒவ்வொரு உதவி இயக்குநரிடமும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்டார். எல்லாரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டு குரூப் போட்டோ எடுத்துக்கிட்டோம். எங்களுடைய பரிசை அவர்கிட்ட கொடுத்தோம். ரொம்ப நெகிழ்ந்தார்.

இயக்குநர்கள் வசந்தபாலன், அட்லி, மாதேஷ்னு இப்ப இயக்குநர்களாக இருக்குறவங்களும் வந்திருந்தாங்க. எங்க எல்லாருக்கும் மறக்க முடியாத சந்திப்பாக அது அமைந்தது. அவர் இன்னும் பல உயரங்களை எட்டுவார். அவரிடம் கற்ற பாடத்தை ரிவிஷன் பண்றமாதிரி இருந்தது இந்த சந்திப்பு. ஷங்கர் சாருக்கு நன்றி.”