Published:Updated:

``ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!’’ - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள்

``ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!’’ - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள்

``ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!’’ - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள்

``ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!’’ - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள்

``ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!’’ - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள்

Published:Updated:
``ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை!’’ - புறக்கணிக்கப்பட்ட காஞ்சி, பொங்கும் வரலாற்று ஆய்வாளர்கள்

லகின் மற்ற எல்லா நகரங்களையும்விட காஞ்சி நகரம் வரலாற்றுச் சிறப்பால் உயர்ந்து நிற்கிறது. கலை, கல்வி, புராணம், வரலாறு, ஆன்மிகம்... என அனைத்துவிதங்களிலும் புகழ்பெற்ற நகரம் காஞ்சி. பாரத தேசத்தில் இந்த நகரத்தைப் புகழாத புராணங்களோ, காப்பியங்களோ, இலக்கியங்களோ சொற்பம் என்றே சொல்லலாம். 

`முத்தி தரும் நகரேழுள் முக்கியமாம் கச்சி.' ஆம், பாரதத்தின் ஏழு மோட்ச தலங்களுள் காஞ்சி முதன்மையானது. `இடையறு காசி, இடையறாக் காஞ்சி...’ என ஆன்மிக நூல்கள் குறிக்கின்றன. இடையில் `ஞ்' இருந்தால் காஞ்சி; இல்லாவிடில் காசி; முன்னது போக வாழ்வையும், பின்னது யோக வாழ்வையும் தரும் என்கிறது ஆன்மிகம். காஞ்சி நகரம் வேத காலத்திலேயே வில் வடிவில், வேகவதி ஆற்றை எல்லையாகக் கொண்டு 6 மைல் சுற்றளவுக்கு விரிந்து, மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் கொண்டு விளங்கியது. கௌதம புத்தர், ஆதி சங்கரர் வருகையால் ஆன்மிகச் சிறப்பைப் பெற்ற நகரமாக இது விளங்கியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழ்த்திசை நாடுகள் அனைத்தும் காஞ்சியின் பெருமையை உணர்ந்திருந்தது என்பதை யுவான் சுவாங்கின் வருகை விளக்குகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர ஆட்சிகாலத்தில் காஞ்சி, கலைக் கருவூலமாகவே மாற்றப்பட்டது என்பதை இங்கிருக்கும் ஆலயங்கள் இன்றும் சொல்லிவருகின்றன. 

`விழவறாக் காஞ்சி’ எனப் போற்றும் வகையில் எந்நாளும் திருநாளாக விளங்கும் புனிதத் தலம் இது. எங்கு நோக்கினாலும் ஆலயங்கள் இந்த நகரின் சிறப்பு. 1,008 சிவாலயங்கள், 108 விஷ்ணு ஆலயங்கள், சக்தி பீடமான காமகோடி காமாட்சி அம்மன் ஆலயம், கந்தபுராணம் தோன்றிய கந்தக் கோட்டம் என சகல தெய்வங்களுக்கும் இங்கே ஆலயங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் சமண, பௌத்த ஆலயங்களும் இங்கிருக்கின்றன. மலைமகள், திருமகள், கலைமகள் மூவரும் முறையே வழிபட்ட கச்சி ஏகம்பம், காயாரோகணம், கச்சபேசம் ஆகிய மூன்று தலங்களும் உள்ள நகரமிது. `நான்முகன் வழிபட்ட காஞ்சி, நிலமகளின் உந்தித் தானம்’ என்கிறது காஞ்சி புராணம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கல்வியில் சிறந்ததோர் காஞ்சி', `கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர்' என்ற புகழுரைகளின் வழியே இந்த நகரம் மிகச் சிறந்த கல்வி நகரமாக இருந்ததையும், நாளந்தா பல்கலைக்கழகத்தை விஞ்சும் மிகப் பெரிய கல்விக்கூடங்கள் இருந்ததையும் வரலாறு விளக்குகிறது. நாளந்தா பல்கலைக்கழகத் தலைவரான தர்மபாலர், பேராசிரியர் தின்னாகர், சீனம் வணங்கும் போதிதர்மர் ஆகிய மூவரும் தோன்றியது காஞ்சியில். பரிமேலழகர், பொய்கையாழ்வார், திருக்கச்சி நம்பிகள், வண்ணக் களஞ்சியம் நாகலிங்க முனிவர், வேதாந்த தேசிகர், ஷ்யாமா சாஸ்திரிகள், இசை மேதை நயினாப் பிள்ளை... என இங்கு பிறந்த மேதைகள் ஏராளம். சாணக்கியர், திருநாவுக்கரசர், ராமாநுஜர், திருமழிசையாழ்வார் பயின்றது இங்குதான். மணிமேகலை உபதேசம் பெற்று தொண்டாற்றியதும் காஞ்சியில்தான். அறவண அடிகள், வாமனசூரி, மல்லிசேனா போன்ற சமணப் பெரியோர்கள் வாழ்ந்ததும் இங்குதான். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்கள் வாழ்ந்த தலம் திருக்காஞ்சி. சுந்தரர் இடக்கண் பார்வை பெற்ற தலம் இது. 

கச்சி, கச்சியம்பதி, காஞ்சிபுரி, பிரளயசித்து, காமபீடம், மும்மூர்த்திவாசம், சிவபுரம், விண்டுபுரம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீரபுரம், சத்திய விரதக்ஷேத்திரம், முப்புவனவனம், பிரமபுரம், விமோசனபுரி... எனக் காஞ்சிக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள். காஞ்சி மரங்கள் மிகுந்திருந்ததால், `காஞ்சி’ என்றாகி, காஞ்சிபுரமானது என்பார்கள். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே சங்ககால திரையர்களின் தலைநகரமாக இருந்தது இந்த நகரம். 

பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம், காஞ்சி புராணம், திருவிளையாடற் புராணம், மணிமேகலை... எனக் காஞ்சியைத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் பாடியிருக்கின்றன. இன்றும் ஆலயங்கள், பட்டுப் புடவைகள்... என உலகளாவிய புகழைப் பெற்றுள்ளது காஞ்சிபுரம். இந்தக் காஞ்சிபுரத்துக்கு மேலும் பெருமை சேர்க்க இந்திய அரசு, `புராதன நகரம்’ என்ற அங்கீகாரம் அளித்து 'ஹிருதய்' என்ற சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தை 2014-ம் ஆண்டு அறிவித்தது.

2014-ம் ஆண்டு, ஜூலையில் மத்திய அரசின் முதல் நிதி நிலைத் தாக்கலின்போது பாரம்பர்ய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்ட துறையின் கீழ் (Heritage City Development and Augmentation Yojana, HRIDAY) `ஹிருதய்' என்ற சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்தம் 200 கோடி ரூபாய். 149-வது அறிவிப்பாக இந்தத் திட்டம் இருந்தது. 

2014-ம் ஆண்டின் நாடாளுமன்ற நிதிநிலை அறிவிப்புக்குப் பிறகு 2015, ஜனவரி 15 அன்று இந்தத் திட்டம் செயல்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. `இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிகப் பழைமையான நகரங்கள் மேம்படுத்தப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாரம்பர்ய நகரங்களின் அடிப்படை பண்பைச் சிதைக்காமல், அங்கு ஊரகத் திட்டமிடல், பாரம்பர்ய  அடையாளங்களை மீட்டெடுத்தல், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. மேலும், `பாரம்பர்ய நினைவகங்கள், இயற்கை வளங்கள், கோயில்கள், அதைச் சார்ந்த சொத்துகள் போன்றவற்றைப் புனரமைப்பதும் மீட்பதும் இந்தத் திட்டத்தின் பணியாக இருக்கும்’ என்று அறிவிக்கப்பட்டது. கூடுதலாக, `இந்தத் திட்டத்தின் கீழ் புறத்தூய்மை வசதிகள், அகன்ற சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தங்கள், பயணியர் சேவைகள், தகவல் மையங்கள் போன்றவை கட்டமைக்கப்படும்’ என்றும் சொல்லப்பட்டது. ஜனவரி 2015 முதல் 2017 மார்ச் வரையிலான 27 மாத காலங்களில் மொத்தம் 500 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் 12 நகரங்களில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் முறையாகச் செயல்பட்டதா, நிதி முறையாக திட்டங்களுக்குச் செலவழிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. காஞ்சியைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவே தெரியவில்லை. காஞ்சி தவிர இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட அஜ்மீர், அமராவதி (ஆந்திரப் பிரதேசம்), அம்ரித்சர், பதாமி, துவாரகை, கயா, மதுரா, பூரி, வாரணாசி, வேளாங்கண்ணி, வாரங்கல் நகரங்களிலும் இந்த ஹிருதய் திட்டம் செயல்பட்டதா என்பதும் தெரியவில்லை.  

மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் இதைப் பாராட்டினார்கள். இந்தத் திட்டத்தால் காஞ்சிபுரத்தில் உள்ள கலைப் பொக்கிஷங்கள், பாரம்பர்ய அடையாளங்கள், புராதனச் சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க சிறப்பு நிதி கிடைக்கும். மேலும், பல்வேறு புனரமைப்புப் பணிகள், சிறப்பு வசதிகள் கிடைக்கும் என்று ஆன்மிக அன்பர்களும் பொது மக்களும் மகிழ்ந்தார்கள். ஆனால், இன்றுவரை இந்தத் திட்டத்தால் ஒரு நன்மையும் திருப்பணியும் நடைபெறவில்லை என்பதே உண்மை. இந்தத் திட்டம் குறித்து உண்மையில் யாருக்குமே தெரியவில்லை என்பது வேதனையான விஷயம்.   

இந்தத் திட்டம் குறித்தும், இதன் நன்மைகள் குறித்தும் வரலாற்று ஆய்வாளர் கோமகனிடம் பேசினோம்...

``புராதன நகரங்களை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட இந்த ஹிருதய் திட்டம் உண்மையில் நல்ல விஷயம். இந்தத் திட்டத்தில் காஞ்சிபுரம் தேர்வு செய்யப்பட்டதும், மிக மிகச் சரியான தேர்வு. காஞ்சிபுரம்போல புரதான, மரபுச் சின்னங்கள் தெருவுக்குத் தெரு மலிந்து கிடக்கும் நகரம் இந்தியாவில் வேறெங்குமே இல்லை. இந்த நிலையில் மத்திய அரசால் தனித் திட்டமாக அறிவிக்கப்பட்ட ஹிருதய் திட்டம் ஒருவேளை இந்த நான்கு ஆண்டுகளில் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் காஞ்சி நகரமே அடிப்படை வசதிகளைப் பெற்றிருக்கும். காஞ்சியின் கலைகள், மரபுத் தொழில்கள், அடையாளச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். காஞ்சியின் பட்டு, இட்லி போன்ற தயாரிப்புகள்கூட தேசிய அளவில் புகழ் பெற்றிருக்கும். உலக அளவில் காஞ்சிபுரம் மீண்டும் ஒரு வெளிச்சம் பெற்று, அதிக கவனம் பெற்று, தொழில்முறையிலும் வளர்ச்சியடைந்திருக்கும். இந்த `ஹிருதய்' திட்டம் ஒட்டுமொத்த நகர வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம். ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு செயல்கூட அதற்காக நடைபெறவில்லை என்று அடித்துச் சொல்லலாம். அறநிலையத்துறை, மத்திய தொல்லியல் துறை போன்றவற்றால் இந்த நான்கு ஆண்டுகளில் சொற்பமான திருப்பணிகள் காஞ்சிபுரத்தில் நடைபெற்றிருக்கின்றன. கைலாசநாதர் கோயில் திருப்பணி, ஏகாம்பரநாதர் கோயில் புனரமைப்புப் பணி ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஹிருதய் திட்டம் ஒரு கல்லைக்கூட நடவில்லை என்றே தெளிவாகச் சொல்லலாம்’’ என்றார். 

இந்தத் திட்டம் செயலாக்கம் பெற்றிருந்தால், காஞ்சி நகரமே எல்லா வகையிலும் முன்னேற்றமடைந்திருக்கும் என்ற ஏக்கப் பெருமூச்சு அவருடைய பேச்சில் தெரிந்தது. அவருக்கு மட்டுமல்ல... தமிழக மக்கள் அனைவருக்குமே அந்த ஏக்கம் இருக்கிறதுதான்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism