Published:Updated:

ஆறு வயதில் வறுமை, ஒரே ஆண்டில் மூன்று பிலிம்ஃபேர்... நடிகை மீனா குமாரியின் வரலாறு! #MeenaKumari

ஆறு வயதில் வறுமை, ஒரே ஆண்டில் மூன்று பிலிம்ஃபேர்... நடிகை மீனா குமாரியின் வரலாறு! #MeenaKumari
ஆறு வயதில் வறுமை, ஒரே ஆண்டில் மூன்று பிலிம்ஃபேர்... நடிகை மீனா குமாரியின் வரலாறு! #MeenaKumari

இந்திய சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தைத் தன் வசப்படுத்தியிருந்த `மகா நடிகை' மீனா குமாரியின் 85-வது பிறந்தநாளுக்காக, கூகுள் டூடுல் உருவாக்கியிருக்கிறது.

ந்திய சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தைத் தன் வசப்படுத்தியிருந்த `மகா நடிகை' மீனா குமாரியின் 85-வது பிறந்தநாளுக்காக, கூகுள், டூடுல் உருவாக்கியிருக்கிறது. ட்விட்டர் வலைதளத்தில் #MeenaKumari என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் இருக்கிறது. இப்படி அனைவராலும் கொண்டாடப்படுபவர்களின் வாழ்க்கை, அத்தனை சாதாரணமானதாக இருப்பதில்லை. பல தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்களைக் கடந்தால்தான், காலங்கள் தாண்டியும் புகழப்படும் இடத்தைப் பெறவேண்டியிருக்குமோ? மீனா குமாரியின் வாழ்க்கையும் அப்படிதான். கிட்டதட்ட நம்ம ஊர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் போன்றது.

வறுமை காரணமாக ஆறு வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர் மீன குமாரி. 30 வருடங்களுக்கும் மேலாக 90 திரைப்படங்கள் நடித்தவர். ஒரே ஆண்டில் மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்குத் தேர்வான ஒரே நடிகை என்ற வரலாற்றுச் சாதனை படைத்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில், அப்பாவின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், அந்தத் திருமண வாழ்க்கையின் வலிகள், அந்த வலியை நீக்க மருந்தாக நாடிய மது, அந்தப்  போதை பழக்கமே உடலை உருக்கி, 38 வயதிலேயே, தன் சாதனைகளை மட்டுமே ரசிகர்களின் நினைவுகளில் வைத்துவிட்டுச் சென்றவர் மீனா குமாரி.

1933-ம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவின் கீழிருந்த பாம்பாயில் பிறந்த இவரின் நிஜப்பெயர், மெஹஜபின் பானு ( Mahjabeen Bano). இந்தித் திரைப்பட இயக்குநர் விஜய் பட் இயக்கிய, `லேதர்ஃபேஸ்’ என்ற திரைப்படத்தில் ஆறு வயதில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு, தன் நடிப்பு மற்றும் குரல் வளத்தால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். உருது மொழியில் கவிதைகள் எழுதுவதிலும் மீனா குமாரிக்கு ஆர்வம். அவர் இறப்புக்குப் பிறகு, அவரின் இரண்டு கவிதை தொகுப்பு புத்தகங்களைப் பிரபல பாடலாசிரியர் குல்சார் வெளியிட்டார்.

தன் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் கண்ணீர், தனிமை, ஏமாற்றம், வலிகளையே சந்தித்தவர் மீனா குமாரி. அவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்களும் அப்படியே இருந்தன. தேசிய ஊடகங்கள் பலவும் இவர் வேதனைப்படுவதற்காகவே பிறந்திருக்கிறாரா என்பன போன்ற விவாதங்களை நடத்தியதுண்டு. ஆனால், கலைத்துறையில் இவரின் திறமையை மிஞ்ச ஆளே இல்லாமல் இருந்தது. மீனா குமாரியின் குரல், பொக்கிஷமான ஒன்றாகவே கருதப்பட்டது. இவரின் காலகட்டத்துக்கு நடிகையான மதுபாலா, ``மிகவும் வித்தியாசமான கவர்ச்சிகரமான குரல்" என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

PC: wiseshe.com

`சாஹிப் பிபி அவுர் குலாம்’ (Sahib Bibi Aur Ghulam), `பகீஸாஹ்’ (Pakeezah), `பாய்ஜு பவ்ரா' (Baiju Bawra ), யஹுதி (Yahudi), `பஹு பேகம்’ (Bahu Begum) எனப் பல சூப்பர் ஹிட் படங்களில் இவரின் கதாபாத்திரம் பரவலாகப் பேசப்பட்டது. 1963-ம் ஆண்டில், `சாஹிப் பிபி அவுர் குலாம்’ படத்தின் `சொட்டி பாஹ' கதாபாத்திரத்துக்கும், `ஆர்த்தி' படத்தின் ஆர்த்தி குப்தா கதாபாத்திரத்துக்கும், `மைன் சுப் ரஹுங்கி' படத்தின் காயத்ரி என்ற கதாபாத்திரத்துக்கும் என ஒரே ஆண்டில் மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுக்குத் தேர்வானார். ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்களுக்குத் தேர்வான ஒரே நடிகை என்ற வரலாற்றைப் படைந்தார் மீனா குமாரி.

மீனாவுக்கு வெள்ளை நிறம் என்றால், அவ்வளவு பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில், வெள்ளைப் புடவைதான் அணிவார். வெள்ளை நிறத்தில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் வாங்கிவிடுவார். நடிப்பு, பாட்டு, நடனம், எழுத்து எனச் சகலகலாவல்லவியாக இருந்த மீனா குமாரி, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏமாற்றங்கள் சூழ்ந்தவராக இருந்தார். இந்தி நடிகர் தர்மேந்தரா உட்பட சில இளம் நடிகர்களுடன் காதல் என்கிற செய்திகள், அவரை எப்போதுமே சுற்றித் திரியும். அதற்குக் காரணம், பல இளம் நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கி உதவினார். மீனா குமாரியின் அன்பைப் பலரும் பயன்படுத்திக்கொண்டனர் என்றும் கூறப்படுவதுண்டு.

PC: english.newstracklive.com

1952-ம் ஆண்டு, கமல் அம்ரோஹி என்ற தன்னைவிட வயதில் மிக மூத்தவரான இந்தித் திரைப்பட இயக்குநரை மணந்தார் மீனா குமாரி. கணவனின் சந்தேக நோய், மீனா குமாரியின் வாழ்க்கையைக் குலைத்தது. அவரை அடித்தும் மிரட்டியும் துன்புறுத்தினார் கமல் அம்ரோஹி. சண்டையும் சச்சரவுமாக 10 வருடங்கள் கழிந்த திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார் மீனா குமாரி. இந்த மன உளைச்சல் காரணமாக, குடிக்க ஆரம்பித்து, அதற்கு அடிமையானார். 1968-ம் ஆண்டு, கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியது. 4 வருட போராட்டத்துக்குப் பிறகு, 1972 மார்ச் 31 ம் தேதி மரணமடைந்தார் மீனா குமாரி.

இவருக்குக் கலைத்துறையில் அளித்த பட்டப் பெயர் என்ன தெரியுமா..?

`ட்ராஜிடி க்யூன்'! (துயரங்களின் ராணி)

அடுத்த கட்டுரைக்கு