Published:Updated:

``திருநங்கைகள் எல்லாத் தளங்களிலும் வேலை செய்ய வேண்டும்!'' - எழுத்தாளர் ரேவதி

``திருநங்கைகள் எல்லாத் தளங்களிலும் வேலை செய்ய வேண்டும்!'' - எழுத்தாளர் ரேவதி

நான் கஷ்டப்பட்டது மாதிரி என்னுடைய இளைய தலைமுறை கஷ்டப்படக் கூடாது.

``திருநங்கைகள் எல்லாத் தளங்களிலும் வேலை செய்ய வேண்டும்!'' - எழுத்தாளர் ரேவதி

நான் கஷ்டப்பட்டது மாதிரி என்னுடைய இளைய தலைமுறை கஷ்டப்படக் கூடாது.

Published:Updated:
``திருநங்கைகள் எல்லாத் தளங்களிலும் வேலை செய்ய வேண்டும்!'' - எழுத்தாளர் ரேவதி

ஜூலை மாதம், பால்புதுமையினருக்கான மாதமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் இதற்காக ஊர்வலங்கள், நாடகங்கள், இலக்கிய

நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வரிசையில், குயர் சர்வதேச திரைப்பட விழா கடந்த வாரம் சென்னை கோத்தே இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக எழுத்தாளர், நாடகக் கலைஞர் ரேவதியின் `வெள்ளை மொழி’ ஓரங்க நாடகம் நிகழ்த்தப்பட்டது. சமூகத்துக்காகவும் பெண்களுக்கான பிரச்னைகளுக்காகவும் திருநங்கைகள் தொடர்ந்து செயல்பட்டுவருவது பற்றி அவரிடம் பேசினேன்.  

``ஆரம்பத்தில் நான் திருநங்கை சமுதாயத்தோடு இணைந்து டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பிறகு, 2000-ல் பெங்களூரு `சங்கமம்’ என்ற அமைப்பில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தேன். இந்த அமைப்பு, Sexual Minority-க்காக வேலைபார்க்கும் தொண்டு நிறுவனம்.  சங்கமம் மூலம் பெண்கள், பழங்குடி மக்கள், தலித் மக்கள் பற்றியும் அவர்களின் சிக்கல் பற்றியும் கற்றுக்கொள்ள முடிந்தது. இவர்களின் பிரச்னைகளோடு திருநங்கை சமூகத்தின் பிரச்னையையும் மக்கள் மத்தியில் பேசி, விழிப்புஉணர்வு ஏற்படுத்த முடிந்தது. 2008-ல் அந்த அமைப்பின் தலைவரானேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் காலகட்டத்தில்தான் என்னுடைய எழுத்து வேலையை நான் தொடங்கினேன். முதல் முயற்சியாக, தமிழகத்தில் இருக்கும் திருநங்கைகளின் பேட்டியை உள்ளடக்கிய `உணர்வும் உருவமும்’ என்ற நூலை 2004-ல் கொண்டுவந்தேன். இதற்கு எழுதப்பட்ட விமர்சனத்தைப் பார்த்துவிட்டு, பெங்குயின் பதிப்பகத்தார் அதை ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்காக என்னிடம் பேசினார்கள். அப்போது `நான் என்னுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். அதைத் தருகிறேன். அதை நேரடியாக ஆங்கிலத்தில் கொண்டுவாருங்கள்' என்றேன். அப்படித்தான் `The Truth About Me' என்ற என்னுடைய வாழ்க்கை வரலாற்று  நூல் வெளிவந்தது. அதை `வெள்ளை மொழி' என்ற பெயரில் தமிழிலும் இன்னும் சில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த இரண்டு நூல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த இரண்டு புத்தகங்களையும் 300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். இதனால் எனக்குப் பல கருத்தரங்கங்கள், எழுத்தாளர்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் கொடுமை, திருநங்கைகள் பற்றிய விழிப்புஉணர்வு என என்னால் இயன்றதைச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறேன்.

இதன் தொடர்ச்சியாக இப்போது `A Life in Trans Activism'  என்ற நூல் டெல்லி ஜூபன் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. இது, பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்.

கன்னடத்தில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் `பதுக்கு பயலு’ என்ற பெயரில் கௌரி லங்கேஷ் கொண்டு வந்தார். கன்னடத்தில் வந்ததும்தான் இது நாடகமாக மாற்றப்பட்டு, கிட்டத்தட்ட 85 இடங்களில் நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்குத் திருநங்கைகள் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை இயக்கியவர் முனைவர் எம்.கணேஷ். இவர் கர்நாடகாவில் உள்ள எக்கோட்டில் நடிப்புப் பள்ளி ஆசிரியராகவும், `ஜனமனதாட்டா' என்ற நாடகக் குழுமத்தின் இயக்குநராகவும், சிவமோக ரங்காயனா இயக்குநருமாகவும் இருக்கிறார்.

என்னுடைய நாடகத்தில் என் கதாபாத்திரத்தில் என்னையே நடிக்கவைத்தார். பெங்களூருவைவிட்டு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னால் எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபட முடியவில்லை. இதற்கு என்னுடைய அப்பாவின் உடல்நிலையும் என்னுடைய வயசும் ஒரு காரணம். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளிவந்த `வெள்ளை மொழி' என்ற என்னுடைய கதையை, அதே பெயரில் ஓரங்க நாடகமாக நான் நிகழ்த்திவருகிறேன். இதற்கு எனக்கு உதவியாக இருந்து நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் பேராசிரியர் மங்கைதான். தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து இடங்களில் என்னுடைய நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறோம். இன்னும் அதிகமான இடங்களில் இதை நிகழ்த்த வேண்டும். ஆனால், போதிய பொருளாதார வசதி இல்லாததால், எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. தமிழக அரசு உதவி செய்தால், இந்த நாடகத்தை கர்நாடகத்தின் எல்லா கிராமப் பகுதிகளிலும் நிகழ்த்தி, திருநங்கைகள் மற்றும் பெண்கள் பற்றிய புரிதலையும் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தியதைப்போல இங்கும் ஏற்படுத்த முடியும். பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் மிக மோசமான பாலியல் வன்முறைகள் நடந்துவரும் இந்தக் காலகட்டத்துக்கு, இது தேவையான ஒன்று.

என்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என எனக்குத் தெரியாது. இப்போதே என்னுடைய வயதும் என்னுடைய பொருளாதாரமும் என்னால் இன்னும் தீவிரமாக இயங்கவிடாமல் செய்துகொண்டிருக்கின்றன. என்னுடைய ஆசையெல்லாம் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் எல்லா தளங்களிலும் திருநங்கைகள் வேலைபார்க்கும் சூழல் உருவாக வேண்டும். இப்போது ஒருசிலரால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. அது இன்னும் வளர்ச்சியடைய வேண்டும்.

குடும்பங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு, சமூகத்தில் நிலையான ஒரு மதிப்புடன் அவர்கள் வாழ வேண்டும். பாலினம் சார்ந்த தவிர்ப்புகள் இருக்கக் கூடாது. `பாலினம்' என்ற கட்டமே இருக்கக் கூடாது என்பதுதான் என் எண்ணம். ஆனால், இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை” என்றுதான் எழுத வந்தது குறித்தும் நடிக்க வந்தது குறித்தும் உரத்த குரலில் பதிவுசெய்தார்.  

அவரது கனவு ஒன்றும் மிகப்பெரிய கனவல்ல. நிச்சயம் நிறைவேறக்கூடிய கனவுதான். அதற்கு அவர்களைப் புரிந்துகொண்டு சகமனிதராக மதித்தாலே போதும். இந்தக் கனவு எளிதில் நனவாகிவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism