Published:Updated:

ஃபேஷன் ஸ்டார் சுஹானா... கல்யாண விசாரணை!? - `அப்பா’ ஷாருக் பதில்

சமீபத்தில் சர்வதேச ஃபேஷன் இதழான `வோக்’, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கானை முதல்முறையாக நேரடி பேட்டியும், போட்டோ ஷூட்டும் நடத்தியிருக்கின்றனர்.

ஃபேஷன் ஸ்டார் சுஹானா... கல்யாண விசாரணை!? - `அப்பா’ ஷாருக் பதில்
ஃபேஷன் ஸ்டார் சுஹானா... கல்யாண விசாரணை!? - `அப்பா’ ஷாருக் பதில்

ந்த டிஜிட்டல் காலத்தில், சினிமா பிரபலங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அது வைரல் நியூஸ்தான்! அதுவும் அவர்களின் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம்... அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம். அவர்கள் எங்குப்  படிப்பார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? எங்கு `பார்ட்டி'க்குச் செல்வார்கள்? ஃபேவரைட் டூர் ஸ்பாட் எது? என்று நமக்குள் தோன்றும் பல கேள்விகளுக்கு, பதில்களை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்போம். 

இந்த மனநிலைதான், தோனியின் மகள் ஸிவாவின் சுட்டித்தனங்களை வைரலாக்கிக்கொண்டாடுவதும், கரீனா கபூரின் குழந்தை தைமுர் கான் எங்குச் சென்றாலும் மீடியாக்கள் கேமராவை தூக்கிக்கொண்டு அலைவதும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் பாய் ஃப்ரெண்ட் யாராக இருக்கும் என அலசுவதற்கான காரணம்!

PC: pinkvilla.com

அந்த வரிசையில், சமீபத்தில் சர்வதேச ஃபேஷன் இதழான `வோக்’, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கானை முதல்முறையாகப்  நேரடிப் பேட்டியும், கவர் போட்டோவுக்காக அவரை வைத்து போட்டோ ஷூட்டும் நடத்தியிருக்கிறார்கள். `வோக் பியூட்டி அவார்ட்ஸ் 2018’ நிகழ்ச்சியில், அந்தப் பிரத்யேக இதழை அப்பா ஷாருக் கானே வெளியிட்டுள்ளார்.

நேற்று, சமூகவலைதளங்களில் சுஹானாவின் படங்களும், ``சுஹானா என்ன செய்துவிட்டார் என்று அவரைப்  பேட்டி எடுத்தீர்கள்?”, ``அவர் ஒரு செலிபிரிட்டி கிட் ; அவரைப் போட்டோ ஷூட் செய்ததில் என்ன தவறு? என்பது போன்ற விவாதங்களுடன், #SuhanaKhan என்ற ஹேஷ்டேக்குடன் இந்தியளவில் டிரெண்ட்  ஆகிக்கொண்டிருந்தன. 

இதற்கிடையில், ஷாருக் கான் தன் ட்விட்டர்  பக்கத்தில், ``இவளை மீண்டும் என் கையில் தாங்குகிறேன்”,  என்று, அந்த இதழில் பிரதியை வெளியிட்ட தன் புகைப்படத்தைப் பதிவிட்டு நெகிழ்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில், ``வோக் பத்திரிகைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். சினிமா  நட்சத்திரங்களின் குழந்தைகளுக்கு ஒரு தளத்தை உருவாக்கிக்கொடுக்கிறீர்கள். இந்த போட்டோ ஷூட்டிற்காக சுஹானாவும் மிகவும் பொறுப்புடன் கடினமாக உழைத்திருக்கிறார். ஒரு தந்தையாக எனக்கு நெகிழ்ச்சியான நாள் இது!”, என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு நிருபர், சுஹானாவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு ஷாருக் கான், ``மற்ற பிரபலங்கள் போல, சுஹானாவுக்கு நானும் நிச்சயமாகத் திருமணம் செய்து வைப்பேன். பிரமாண்டமான வரவேற்பு விழா நடத்துவேன். நடக்கும்போது உங்களுக்கும் நிச்சயமாகக் கூறுவேன். நீங்கள் கண்டிப்பாக `மெஹந்தி' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்”, என்று நக்கலாகப்  பதில் கூறிவிட்டுச் சென்றார்.

PC: vogue

சுஹானாவின் பேட்டிக்கு அந்தப் பத்திரிகை ஒரு டீசரும் வெளியிட்டுள்ளனர். அதில் சுஹானாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

``நீங்கள் இதுவரை வெளியில் சொல்லாத ஒரு சீக்ரெட் சொல்லுங்கள்?" என்ற கேள்விக்கு, ``என்னுடைய சிறுவிரல்கள் இரண்டும் வளைந்து இருக்கும்.", என்று பதிலளிக்கிறார். ``உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் ஓர்  ஒற்றுமையான நல்ல குணம் என்ன?", என்ற கேள்விக்கு, ``இது நல்ல குணமாக என்று எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இருவருமே கூச்ச சுபாவம் கொண்டவர்கள்!” என்று கூறுகிறார். 

இந்தப்  பேட்டியில், அப்பா ஷாரூக் கானின் பிரபலத்தை எப்படி எடுத்துக்கொண்டீர்கள் என்ற கேட்க, ``நான் பள்ளியில் படிக்கும்போது, அப்பா என்னை காரில் பள்ளிக்கு அழைத்துச்செல்வார். அங்கிருப்பவர்கள் எல்லாரும் அவரைப் பார்ப்பார்கள்; அவரைப் பற்றி ஏதோ பேசுவார்கள். ஆரம்பத்தில் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ``அவர் சுஹானாவின் அப்பா!”, என்று மற்றவர்கள் கூப்பிடவே நான் விரும்பினேன். ஆனால், உண்மை வேறாக இருந்தபோது, அப்பா என்னைக்  கட்டியணைக்க வந்தாலும் தள்ளிவிடுவேன். ஆனால், போகப் போக எனக்கு எல்லாம் புரிந்தது. இப்போது நானும் அவரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!”, என்று கூறும் சுஹானாவும் திரைத்துறையில்தான் தன் எதிர்காலம் என்று தீர்மானித்துவிட்டார். இங்கிலாந்திலுள்ள பிரபல பள்ளியில் படித்துக்கொண்டிருப்பவர், அடுத்து நடிப்பு சம்பந்தப்பட்ட படிப்பைத்தான் தேர்வு செய்யவிருக்கிறாராம்.

முதலில் இவரின் ஆசையைப்  பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஷாருக்கும் அவர் மனைவி கெளரியும், இவர் பள்ளியில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் `தி டெம்பிஸ்ட்’ நாடகத்தில், `மிரண்டா’ கதாபாத்திரத்தில் சுஹானா நடித்ததைப் பார்த்து, வியந்திருக்கின்றனர். அப்பொழுதே சுஹானாவின் கனவுக்கும் ஓகே சொல்லியிருக்கின்றனர்.

பிரபலங்களின் குழந்தையாக இருப்பதற்கு மனோதிடம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்றும் சுஹானா கூறியிருக்கிறார். ``அதுவும் சமுக வலைதளங்களில், என்னுடைய படங்களை வைத்து என்னைத் தெரியாதவர்கள் `ட்ரோல்’ செய்யும் போதும், எரிச்சலடைகிறேன். என்னதான் நான் கண்டுகொள்ளாமல் சென்றாலும், சில நேரங்களில் நான் அதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.”, என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் சுஹானா.

அவர் கூறியதைப் போல, அவரின் முதல் பேட்டியையும் சமூகவலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்திருக்கின்றனர். அதற்கு சுஹானா, ``நம்மை வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்!” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்!