Published:Updated:

அன்று சென்னை.. இன்று கோவை.. தொடரும் சொகுசு கார் விபத்து.. பறிபோகும் அப்பாவிகளின் உயிர்..!

அன்று சென்னை.. இன்று கோவை.. தொடரும் சொகுசு கார் விபத்து.. பறிபோகும் அப்பாவிகளின் உயிர்..!
அன்று சென்னை.. இன்று கோவை.. தொடரும் சொகுசு கார் விபத்து.. பறிபோகும் அப்பாவிகளின் உயிர்..!

தங்களது அன்றாட வாழ்க்கையை தொடங்கிய 6 எளிய மனிதர்களுக்கு, அந்தப் புதன்கிழமையே கடைசி நாளாகிவிட்டது. அதிகவேகமாக வந்த ஒரு சொகுசுகார், இவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள், உயிர் பலிகள் தொடங்கிவிட்டன. 1…2…3.. என்று கண் இமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மற்றும் குப்பாத்தாள், ருக்மணி ஆகியோர் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காகவும்; அதே பகுதியில் பூக்கடை நடத்தி பிழைத்துவந்த அம்சவேணி, வழக்கம்போல் பூக்கடையைத் திறப்பதற்காகவும்; தனியார் நிறுவனம் ஒன்றில் சுமைதூக்குபவராகப் பணியாற்றிவந்த ஶ்ரீ ரங்கதாஸ், அதே பணிக்குச் செல்வதற்காகவும்; குறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி, கல்லூரிக்குச் செல்வதற்காகவும்... இப்படி, இவர்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் கடந்த புதன்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டு வந்து சுந்தராபுரத்தில் நின்றபோதுதான்  அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது. ஆம், அந்த ஆறு உயிர்களும் ஓர் `ஆடி' காருக்குப் பலியாகின.

மேம்பாலப் பணி, பொள்ளாச்சி சாலை விரிவாக்கப் பணி என்று எப்போதையும்விட, இப்போது மிகவும் பரபரப்பாகக் காணப்படும் சாலைகளில் ஒன்றாக மாறிவிட்டது, சுந்தராபுரம். இந்தச் சூழ்நிலையில்தான், புதன்கிழமை காலை 9.30 மணி அளவில், வாகனங்கள் இருபுறமும் நகர்ந்துகொண்டிருந்தன. எப்போதும்போல, மக்கள் தங்களது பணிகளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். திடீரென அதிவேகத்தில் வந்த `ஆடி' கார் ஒன்று, அங்கு பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த மக்கள்மீது மோதியதில்தான் மேற்சொன்ன அந்த ஆறு பேரும் பலியாகினர். மேலும், இந்த விபத்து மூலம் மூன்று பேர் படுகாயமடைந்துவிட்டனர். 

இந்த நிலையில்தான், காரில் இருந்து வெளியே வந்த டிரைவர் ஜெகதீசனுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சொகுசு கார் என்பதால், ஜெகதீசனுக்கு பெரிய அளவில் காயம்  ஏற்படவில்லை. காயமடைந்தவர்களில் சுரேஷ் மற்றும் நடராஜ் என்பவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், சோமசுந்தரம் என்பவர், கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார், கோவை ரத்தினம் கல்லூரியின் தலைவர் மதன் செந்திலுக்குச் சொந்தமானது. அவரின் மற்றொரு நிறுவனமான, “SPAN EDUTECH  VENTURES PVT LTD” என்ற பெயரில்தான் அந்தச் சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது.

``அந்தச் சாலையில் 40 கி.மீ. வேகத்தில் வருவதே பெரிய சவால். இந்தச் சூழ்நிலையில், அந்தக் கார் கிட்டத்தட்ட 100 கி.மீ. வேகத்தில்

வந்தது. டிரைவர், மதுபானம் அருந்தியிருந்ததை அவர்மீது வீசிய வாடையை வைத்தே கண்டுகொள்ள முடிந்தது. டிரைவரின் குடிபோதையால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. சாலை விரிவாக்கம் செய்கிறோம் என்று சொல்லி பல நாட்கள் ஆகியும், இன்னும் பஸ் ஸ்டாப் கொண்டு வரப்படவில்லை; வேகத்தடையும் இல்லை. அதனால், இங்கு அடிக்கடி விபத்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆறு பேர் பலியானதற்குப் பிறகுதான் அதிகாரிகளுக்கு ஞானோதயம் வந்திருக்கிறது. இப்போதாவது அந்த இடத்தில் விரைவில் வேகத்தடை அமைத்தால் நன்றாக இருக்கும். அதேபோல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்கின்றனர், சுந்தாரபுரம் பகுதி மக்கள். இந்த விபத்தில் அந்தக் கார் மோதி, ஆட்டோ ஒன்றும், மின் கம்பம் ஒன்றும் சுக்குநூறாகியுள்ளன.

இதுகுறித்து காரின் உரிமையாளர் மதன் செந்திலிடம் பேசினோம். ``அந்த டிரைவர் எங்களிடம் இரண்டு வருடமாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். நன்றாகத்தான் வாகனம் ஓட்டிக்கொண்டு இருந்தார். இதற்கு முன்னாடி எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. எங்கள் கல்லூரியில்தான் தங்கியிருக்கிறார். அன்று காலை, பெட்ரோல் பிடித்துக்கொண்டு, என்னைப் பிக்-அப் செய்வதற்காக வந்திருக்கிறார். இதுதொடர்பாக அவருடைய ரூம் மேட், ஊழியர்களிடம் விசாரித்தேன். அவர்கள், `அவர் மது குடிக்கவில்லை' என்றுதான் சொன்னார்கள். மருத்துவப் பரிசோதனை முடிவில்தான் உண்மை தெரியவரும். டிரைவர் ஜெகதீசனை பணியைவிட்டு நீக்கப் போகிறோம். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

டிரைவர் ஜெகதீசன் மீது, 279, 304/2, 338 ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை குறித்த ரிப்போர்ட் கிடைத்ததும் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, ``அதிவேகமாக வந்ததுதான் விபத்துக்குக் காரணம். டிரைவரைக் கைது செய்துள்ளோம். வண்டியைப் பறிமுதல் செய்திருக்கிறோம். டிரைவரின் ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு எடுத்துள்ளனர். அந்த முடிவு வந்தால்தான், அவர் மதுபோதையில் கார் ஓட்டினரா என்பது தெரியவரும். மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடம் ஆலோசித்து அந்தப் பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை முடிவு செய்வோம். மாநகருக்குள், வேக அளவு இருக்கிறது. அதை மீறி, அதிவேகமாகச் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு, ஐஷ்வர்யா என்பவர், மதுபோதையில் `ஆடி' காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, கோவையில் டிரைவரின் அலட்சியத்தால், 6 அப்பாவிகளின் உயிர் பறிபோகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு