Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

திண்ணையில கெடந்த கெழவன உத்து உத்துப் பாத்தான் முத்து மணி.

 இது மனுச மூட்டையா? பாவ மூட்டையா?

போர்வைக்குள்ள ஒரு உலகம் இருக்க முடியுமா ஒரு மனுசனுக்கு? இந்த ஆறுக்கு ரெண்டரை திண்ணை இருக்கே... இது தான் இந்தாளு பூமி. பொத்திப் படுத்திருக் கிற இத்த போர்வைதான் ஆகாயம். கண்ணு தொறந்துகெடந்தா... பகல்; மூடிக்கெடந்தா... ராத்திரி. வந்து வந்து போற நெனப்புதான் சந்திர சூரியரும் நட்சத்திரங்களும். சாகவிடாத சீக்கு ஒண்ணு இருக்கு போலயிருக்கு மனுசனுக்கு. அது வந்திருச்சு இந்தாளுக்கு.

சீக்குக்கும் சுழியனுக்குமான 'சென்மப் பகை’ தீருற மாதிரி தெரியல.

''ஏய் சீக்கே! ஒண்ணு நீ என்னைவிட்டுப் போயிறணும்; இல்ல நான் மண்ண விட்டுப் போயிறணும். என் உடம்புல இல்லாத உறுப்பு மட்டும்தான் இன்னும் வலிக்காம இருக்கு. இது ஒரு பொழப்பு; இதுக்கொரு பொறப்பு. பொழைக்க வக்கில்ல; சாகத் தைரியமில்ல. இருந்து என்ன சொகத்தக் கண்டேன்? ஏலே எமா! வாரியா இல்லையாடா? வாடா... வந்துடறா.''

''பெரியப்பா... பெரியப்பா.''

மூன்றாம் உலகப் போர்

''இதென்னாடா கூத்தா இருக்கு? எமன் வந்துட்டானா? கேட்ட சத்தம்... கேக்காத வார்த்தை... என்னியத்தானா? இல்ல காது கீது கனாக் காணுதா?''

''பெரியப்பா... முத்துமணி வந்துருக்கேன். எந்திரிங்க.''

வெளிய போர்வை பொத்தி, உள்ள தோலைப் பொத்திப் படுத்திருந்த எலும்புக் கூடு எந்திரிச்சு ஒக்காருது; நரைச்ச முடி யோட துருத்தி நிக்குது சத்தில்லாத சவம்.

தாடியும் மீசையும் சடை புடிச்ச குடுமியுமா முழிச்சு முழிச்சுப் பாக்குது தலையோட பெறந்த தார்க்குச்சி. கண்ணுல மட்டும் உசுரு மினுக்மினுக்குன்னு மின்னிக்கிட்டு இருக்கு.

''என்னியவா கூப்பிட்ட..?''

''ஆமா பெரியப்பா.''

யாத்தே! என்னிய ஒறவு சொல்லிக் கூப்புடுதா ஒரு உசுரு?

முப்பது வருசமா மூத்திரம்கூட விழுகாத பூமியில பொதுபொதுன்னு மழை பேஞ்சா எப்பிடியிருக்கும்? அப்பிடியிருக்கு சொந்தம் அத்துப்போன சுழியனுக்கு. 'பெரியப்பா’-ங்கற ஒத்தச் சொல்லுல குளுந்து கூதலடிக்குது கெழவனுக்கு.

வெளியேறலாம்னு கண்ணு வரைக்கும் வந்து நின்ன உசுரு, விசுக்குன்னு உள்ள போயி மண்டை, கபாலம், எலும்பு, நரம்பு, இருதயக்கூடு எல்லா இடத்துலயும் 'பசபச’-ன்னு பரவி உக்காருது.

கையில இருந்த அஞ்சாறு பொட்டலத்த ஒண்ணொண்ணாப் பிரிச்சான் முத்துமணி. ஒண்ணுல சீயம் - ஒண்ணுல அதிரசம் - ஒண்ணுல பால்கோவா - ஒண்ணுல அல்வா... இப்பிடிப் பல தினுசுல பலகாரங்க.

மூன்றாம் உலகப் போர்

வாசனையே அறியாம மூடிக்கிடந்த மூக்கு நரம்புகளும் நமத்துப்போன நாக்கு நரம்புகளும் ஆயிரந்தலை ஆதிசேசன் மாதிரி பட்டுன்னு எந்திரிச்சுப் படம் எடுத்து நிக்குதுக.

ஆவலாதி பெரட்டி எடுக்குது கெழவன.

தொண்ணாந்து கெடந்த பிள்ள பண்ட பாத்திரத்துல கையவிட்டுக் கண்டமேனிக்கு ஒலப்பும் பாருங்க... அப்படி எல்லாப் பலகாரத்தையும் பிச்சு எறிஞ்சு பிரிச்சு மேயுது பெருசு. தொட்டுப் பாக்குறாரு; பிட்டுப் பாக்குறாரு; தின்னு பாக்குறாரு; மென்னு பாக்குறாரு. முதல் பால் குடிக்கிற கன்னுக் குட்டி கடைவாய் ஒழுகி நிக்கிற மாதிரி, மென்னு திங்கிறது உள்வாய் கொள்ளாம ஒழுகுது ஒரு பக்கமா.

தீண்டுற பொருளும் திங்கிற பொருளும் மெதுக்மெதுக்குன்னு இருக்கணும் சுழிய னுக்கு. அந்த 'மெதுக்மெதுக் சமூகத்தி’ல யிருந்து சகலத்தையும் வாங்கிட்டு வந்துட் டான் முத்துமணி; வளைச்சு வளைச்சு மாட்டுறாரு.

''ஏ... ரூப்கலா! தாத்தாவுக்கு ஓடிப் போயித் தண்ணி கொண்டுவா.''

''ஆகா... இந்தச் சக்கரைக்குட்டிக்கு நான் தாத்தனா? அது எம் பேத்தியா?''

''அந்தத் திண்ணைத் தாத்தாவப் பாத் தாப் பாவமா இருக்குப்பான்னு சொல் லிட்டா பெரியப்பா உம் பேத்தி. அன்னைக்கியிருந்து -

படுத்தா உன் நெனப்பு;

பாயெல்லாம் கண்ணீரு''

நாட்டு மருந்து வேலை செய்யுதோ இல்லையோ, அவன் போட்ட நாட்டுப் பாட்டு வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு சட்டுன்னு.

என்னையும் ஒரு உருப்படின்னு நெனைக்க ஒரு உசுரு இருக்கா?

கெழவன் பொலபொலன்னு அழுத கண்ணீரு பூந்தியில விழுகுது.

கருப்பட்டிப் பால்ல விழுந்த ஈயி பறக்க முடியாமத் தவிக்கிற மாதிரி, பால்கோவாவுல ஒட்டுன நாக்குல இருந்து வர மாட்டேங்குது வார்த்தை.

''ஏலே... முத்... மணி... எனக்கு... கொல்லி... வப்பியாடா... கொல்லி?''

கெழவன் கையக் கெட்டியாப் புடிச்சுக் கிட்டான் முத்துமணி.

''ஒனக்குக் கொள்ளிவைக்கவா நான் வந்திருக்கேன்? பொழைக்கவைக்க வந்திருக் கேன். எனக்குப் பெத்த அப்பன்தான் இல்லேன்னு போயிருச்சு. பெரியப்பன் நீயாச்சும் இரு. இன்னைக்கிருந்து நாந்தான் ஒனக்கு எல்லாம்.''

தின்ன மிச்சத்தத் தலமாட்டுல வச்சுப் படுத்த பெருசு, எறும்பு கடிக்கத்தான் எந்தி ரிச்சுப் பாத்துச்சு; மிச்சத்தையும் தின்னுட் டுப் படுத்திருச்சு.

பாகம் பிரிச்சுக் கட்டுன புது வீட்டுல பால் காய்ச்சக்கூட அப்பன் ஆத்தாளக் கூப்பிடாத பய, பெரியப்பன மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறான்.

வயசானதுகள வசியப்படுத்துறது ரொம்ப லேசு. சின்னதுகளுக்கும் கெழடு களுக்கும் ரெண்டு வேணும். திங்கத் தின் பண்டம் வேணும்; தொட்டுப் பேசத் தொணைக்கு ஆளு வேணும். ரெண்டுக்கும் ஏற்பாடு பண்ணிட்டான்.

மீனறியாத தண்ணியா? முத்துமணி வைக்காத கண்ணியா? பிரியத்தக் கொட்டு றான் பெரியப்பன் மேல. எந்த ஊருக்குப் போனாலும் ஏதாச்சும் ஒண்ணக் கையில புடிச்சு வந்துடறான்.

திண்டுக்கல் போனா - தலப்பாக்கட்டி பிரியாணி;

மதுரைக்குப் போனா - அம்மா மெஸ் அயிரை மீன் கொழம்பு; இல்ல கோனார் கடைக் குடல் கொழம்பு.

திருநெல்வேலிக்குப் போனா - இருட்டுக் கடை அல்வா.

ஸ்ரீவில்லிப்புத்தூர் போனா -  பால் கோவா.

கோவில்பட்டிக்குப் போனா - கடலை மிட்டாய்.

சாத்தூர் போனா - காராச்சேவு.

பழநிக்குப் போனா - பஞ்சாமிர்தம்.

தேனிக்குப் போனா - நாகர் கடை பரோட்டா.

பெரியகுளம் போனா - மாம்பழம்.

மலைப் பக்கம் போனா - பன்னிக் கறி; திருட்டு மான் கறி.

உசிலம்பட்டிக்குப் போனா - சக்கரைச் சேவு.

இப்படி வாங்கியாந்து கெழவன் தின்ன முடியாதபடிக்குத் திண்ணையில குமிச்சுட் டான் குமிச்சு.

இத்தன வருசமா முதுகுல ஓடிப்போயி ஒட்டிக்கிட்ட சுழியன் வயிறு மாதிரியே சப்பழிஞ்சுகெடக்கு அவரு தலகாணி. அதுல ரெண்டு மூணு ஓட்டை வழியா மஞ்சப் பூத்துப்போன பருத்திப் பஞ்சுக 'எம் பேருதான் தலகாணி’ன்னு எட்டி எட்டிப் பாக்குதுக.

மண்ணுல பொதைச்சா மக்காத பொருளு பாலித்தீனும் பிளாஸ்டிக்கும் மட்டுமில்ல; சுழியன் போர்வையும்தான். அந்தப் போர்வையில எடைக்கு எடை அழுக்கு இருக்குன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாக; நனைச்சுப் பாத்தா நம்புவாக.

'எந்திரி’ன்னான் பெரியப்பன.

எந்திரிச்சான் கெழவன்.

மூன்றாம் உலகப் போர்

புடுங்கி எறிஞ்சிட்டான் அவர் பூர்வீகச் சொத்தை. பத்தமடைப் பாயி - பவானி சமக்காளம் - போடி தலகாணி - சென்னி மலைப் போர்வை - தண்ணி குடிக்கத் தலமாட்டுல கூசா - கால்மாட்டுல எச்சி துப்ப ஏனம். பொழப்பே புதுசாகிப்போச்சு சுழியனுக்கு. காத்திகை மாசத்துல உப் போடையில ஊத்து எடுக்கிற மாதிரி உடம்புக்குள்ள ஊறுது ரத்தம்.

கருத்தமாயும் சிட்டம்மாவும் என்னமோ ஒரு கூத்து நடக்குதுன்னு எட்டி எட்டிப் பாக்குறாக.

''பெரியப்பா எந்திரி! யாரு வந்துருக் காகன்னு பாரு.''

கண்ணைக் கசக்கி முழிச்சு, முழிய உருட்டி உருட்டித் தெரட்டித் தெரட்டிப் பாத்தாரு சுழியன்.

கையில பொட்டியப் புடிச்சு நிக்கிறாரு நாவிதரு லட்சுமணதாசு.

கெழவன் சட்டையக் கழத்தி வெந்நியில முக்குன துண்டைப் புழிஞ்சு, மேலு காலெல்லாம் சுத்தபத்தமாத் துடச்சு விடுறாரு தாசு.

'பெரிய மனுசன மதிக்கறானப்பா...’ - இது சுழியன் நெனப்பு.

'இந்த வீச்சம் போகாம மனுசன் தொழில் செய்ய முடியுமா?’ - இது நாவிதர் நெனப்பு.

புறங்கைய வச்சு ரெண்டு தாடையிலயும் ஒரு தேப்பு தேச்சுப் பாத்தாரு தாசு.

''யப்பே... கருவேலங்காடு கன்னத்துல முளைச்சிருக்குடா சாமி.''

நிலத்துல பச்சைக் கோரை முளைச்சி ருக்குன்னு வச்சுக்குங்க... மட்டைக் கலப்பை போட்டாலே போதும் - வேரை அத்து எறிஞ்சிரும் அத்து. பார்த்தீனியம் மண்டிக்கெடந்தா மட்டைக் கலப்பைக்கு மட்டுப்படுமா? சட்டிக் கலப்பை போட்டாத்தான் சரிவரும்.

தேங்காய் எண்ணெயச் செழிம்பா ஊத்தித் தடவித் தடவி ஊறவச்சாரு தாடிய. தலையெல்லாம் முள் காடா இருக்கு. கத்திரியில முள் காடு வெட்டி முடிச்சுக் கருவேலங்காட்டுல எறங்குது கத்தி.

பொம்பள கைப்பாடு இல்லாம முப்பது வருசமா முத்தி மரத்துப்போன திரேகம், நாவிதர் கைபட்ட சில்லரை சொகத்துல சொக்கிச் சுருண்டு தூங்கியேபோகுது.

மல்லு வேட்டி, மல்லியப்பூச் சட்டை, தங்கச் சரிகை போட்ட துண்டு, நடந்தாத் தெருவே திரும்பிப் பாக்கிற ஆணியடிச்ச செருப்பு. ஏழெட்டு வருசத்துக்கப்பறம் மந்தைக் கடையில டீ குடிக்கச் சொந்தமா நடை நடந்து போறாரு சுழியன்.

ந்தையில ஒக்காந்து சுழியன் பண்ற அதிகாரத்துல சும்மா அட்டணம்பட்டியே கதி கலங்குது.

''ஏண்டா! சிங்கம் சீக்குல கெடக்குன்னு நரியெல்லாம் கூடி நாட்டாமை பண்றீகளா? டீ - அஞ்சு ரூவாயா? வடை - ரெண்டம்பதா? சீயம் - மூணு ரூபாயா? எங்கிட்ட ஒங்க பருப்பு வேகாதுறி. ஒரு நியாய தர்மம் வேணாமா ஊருல? கடைசியா ஒரு ரூபாய்க்கு டீ குடிச்சவன் நானு. நான் பழைய காசுதான் கொடுப்பேன்; நீபழைய டீயே கொடு போதும்.''

''போகப் போற நாளையில புது மாப்ள வேசம் பாரு'' முனகிக்கிட்டே டீய ஓங்கி ஆத்திக் கொடுத்தான் பால்பாண்டி.

'ஏலே! ஒன் பேர்லதான் பால் இருக்கு;  டீயில இல்லடா’ன்னு லந்து பண்ணிக் கிட்டே பத்து ரூவாயக் கொடுத்தவரு டீயக் குடிச்சு முடிச்சிட்டு இன்னொரு பத்து ரூவாய எடுத்து நீட்டுனாரு.

''கோவணத்துல காசு இருந்தாக் கோழி கூப்புடப் பாட்டு வருதா கெழவனுக்கு. ஏற்கெனவே கொடுத்துட்டீகல்ல. எதுக்கு இன்னொரு பத்து?''

பளிச்சின்னு பொறி தட்டுது சுழியனுக்கு.

''முந்தி மாதிரி நெனவு நிக்க மாட்டேங் குதுப்பா. மறந்து மறந்துபோயிருது கழுத'' சில்லரைக் காசை வாங்கிச் சேப்புல போட்டுக்கிட்டு நெஞ்சை நிமித்தி நடந்து போகுது பெருசு.

''பாரப்பா! கட்டையில போக வேண்டி யது கடை வீதியில  போகுது''- ஊரே வேடிக்கை பாத்து வினயம் பேசுது.

''மீன் குழம்பு வச்சிருக்கேன்; சாமைச் சோறு ஒரு உருண்டை இருக்கு. சாப்புடறீகளா?'' எதார்த்தமாத்தான் கேட்டா சிட்டம்மா; சீறிட்டாரு சுழியன்.

''சொறி நாயி திங்குமா உன் சோத்த? 'அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி; தம்பி பொண்டாட்டி தம் பொண்டாட்டி’ன்னு சொல்லுவாக. ஒரு நாள் ஒரு பொழுதாச்சும் உன் புருசன் திங்கிற சோத்தப் போட்டிருப்பியா எனக்கு? என் தட்டுல ஒரு நல்ல மீன்ல நடுத்துண்டம் கண்டதுண்டா? எம் பிள்ளை முத்துமணி கவனிச்சுக்கிருவான். செத்த மீன நீங்களே தின்னுட்டுப் புருசனும் பொண்டாட்டியும் ஒத்தக் கட்டில் போட்டு ஒண்ணாப் படுத்துக்குங்க.''

கருத்தமாயிக்கும் சிட்டம்மாவுக்கும் ஒண்ணும் புடிபடல.

''இந்தாளுக்குப் பேய்கீயி புடிச்சிருச்சா? புத்திகித்தி பெரண்டுபோச்சா? திண்ணையில கெடந்த உசுரு தெருவுல நடந்து போறது சந்தோசமாத்தான் இருக்கு. ஆனா தலப்பெரட்டுப் பண்ணி அலையுதே... செருப்பு புதுசுன்னு சொல்லி, அதத் தலைக்கு வச்சுப் படுக்குதே. அதிருக்கட்டும் அந்தக் களவாணிப் பய எதுக்கு இந்தாளக் கொம்பு சீவி விடறான்? சோழியன் குடுமி சும்மா ஆடாதே! சுடுகாட்டு மண்டையோட்டுலகூட நாக்கை உள்ள செலுத்தி ரத்தம் தேடுற நாயி, இந்தக் கெழவன மட்டும் ஏன் முட்டிக்கு முட்டி மோந்து பாக்குது? பெத்த தாய் தகப்பனுக்குப் பச்சை தண்ணிகூட மோந்து கொடுக்காத பய, நாறிப்போன பெரியப்பன் முதுகை நக்கி நக்கிப் பாக்குறான்னா, என்னமோ இருக்கப்பா. இருக்கட்டும். உண்மை தெரியாமலையா போகப்போகுது? கத்தரிக்கா முத்துனா சந்தைக்கு; காரணம் முத்துனா சந்திக்கு.''

பெரியப்பனுக்கு ரேடியாப் பொட்டி ஒண்ணு வாங்கிக் கொடுத்தான் முத்துமணி. தலமாட்டுல நின்னு அது காதுக்குள்ள கத்திக் கிட்டே கெடக்கு. பாட்டுக் கேக்கலேன்னா இப்பவெல்லாம் உறக்கமே வருதில்ல.

10 மணிக்கு மேலதான் போடறான் பழைய பாட்டு. பாகவதரும் சின்னப்பாவும் சுப்புலச்சுமியும் பெரிய நாயகியும் சும்மா சண்டமாருதம் பண்ணிச் சரளிவரிசை பாடுவாக பாருங்க... காது பெறந்ததுக்குக் கவுரதி வேற என்ன இருக்கு - இவங்க பாட்டக் கேக்கறதத் தவிர.

'பக்த கௌரி’ என்ற படத்தில்   யு.ஆர்.ஜீவ ரத்தினம்.’

- ரேடியோக்காரி சொன்னவுடனே ''வா ஆத்தா வா! வந்துட்டியா''ன்னு வரவேற்புப் படிச் சிட்டாரு சுழியன்.

''சோலையிலே ஒரு நாள் என்னையே
தொட்டிழுத்தே முத்தம் இட்டாண்டி -
சகியே! ''

என்னையேங்கிற வார்த்தைய அந்தம்மா ஒரு அழுத்து அழுத்தி   'என்னை...ய்...ய்..யே...’ன்னு  பாடி, ஏகாரத்து மேல ஒரு சங்கதி போட்டுக் கமகத்துல ஒரு ஆட்டு ஆட்டறபோது உசுரு போயி உசுரு வருதே... ''ஏ பாவி மகளே! கொன்னு குலைய அக்காதடி'' செத்துப்போன சீவரத்தினத்தச் செல்லமாகக் கொஞ்சிக் கிட்டாரு.

கொஞ்சுன மயக்கத்துலயே குறட்டையும் விட்டுட்டாரு பாவம்.

விடிய்ய்ய...

சுழியன் போட்ட பெருங்கூச்சல்ல காத்து கிழிஞ்சு கந்தலாகிப்போச்சு.

''யாத்தே... என் பையக் காணோம்.''

மாடு கன்டெல்லாம் வெறிச்சு வெறிச்சுப் பாக்குதுக... பயந்து ஓடுங்குதுக பஞ்சாரத்துக் கோழியெல்லாம். வாசல் தெளிக்க வந்த சிட்டம்மா சருவச் சட்டியத் தவறவிட்டுட்டு நின்ட எடத்துல நின்டுபோனா நிலையப் புடிச்சு.

''பையக் காணமப்பா... என் பையக் காணோம்'' - சுழியன் ரெண்டாங் கத்துக் கத்தவும் வீதியில போன ஒண்ணு ரெண்டு ஆளுகளும் வீட்டுக்குள்ள வந்துட்டாக.

'யண்ணே... என்ன பையிண்ணே?''- பதறாமத்தான் கேட்டாரு கருத்தமாயி.

''பணப் பையிடா பாவி பணப் பையி'' - பதர்றாரு சுழியன்.

''பணம்னா எம்புட்டு?''

''ஒண்ணா ரெண்டா? ஒரு லச்சத்தி இருவத்தோராயிரம்டா.''

''லச்சமா? ஏதுண்ணே ஒனக்கு அம்புட் டுப் பணம்?''

''எம் பங்கு நிலத்த வித்த காசுடா. எடுத்தவன் அடிமாண்டு போயிருவான். நீ எடுத்தியா?''

''நான் எடுப்பனா? அது சரி! உம்

பங்கைத்தான் ஒத்திவச்சிருந்தியே... எப்பிடி வித்த? யாருக்கு வித்த?''

''முத்துமணிதானப்பா வித்துக் கொடுத் தான். ஏக்கர் நாலு லச்சம். ஒண்ணே முக்காலுக்கு ஏழு லச்சம். ஒத்திக்கு

அஞ்சரை போக ஒண்ணரை லச்சம் கையில கொடுத்தான் முத்துமணி. அதுல நாலாயிரம் செலவு போக மிச்சம் வச்சிருந்தேன்பையில. தலகாணிக்குள்ள வச்சுப் படுத்திருந்தேன். யாரு எடுத்தி ருந்தாலும் கொடுத்துருங்கப்பா. நான் சாகிற போதாவது சந்தோசமாச் சாகணும்; கும்பு டறன் குடுத்துருங்க.''

எல்லாரும் எல்லா இடத்துலயும் தேடு றாக; ஒண்ணும் சிக்கல.

சீதையப் பிரிஞ்ச ராமன் மரம்மட்டை செடிகொடியெல்லாம் பாத்து, 'நீ பாத்தியா..? நீ பாத்தியா’ன்னு கேட்ட மாதிரி, 'கருத்தமாயி! நீ பாத்த..? சிட்டம்மா! நீ பாத்த...? கோழிக்

குஞ்சே! நீ பாத்த..? குட்டியாடே! நீ பாத்த..?’ன்னு கத்திக் கதறிப் பித்துப் புடிச்சுப்போனாரு சுழியன்.

''யண்ணே! எல்லா இடத்துலயும் தேடி யாச்சு; இல்ல. உம் பணம் எங்கேயும் போயிராது; இங்கதான் இருக்கும். கண்டு புடிச்சிருவோம். பணம்தான போச்சு... உசுரா போயிருச்சு? ஒக்காருண்ணே!''

திண்ணையிலே சாஞ்சு ஒக்காந்தசுழியன் சடார்னு சரிஞ்சாரு. கொஞ்ச நேரம் வாய் வழியா மூச்சுவிட்டாரு. கண்ணுல கறுப்பு முழி உள்ள ஓடிப்போயி ஒளிஞ்சுபோச்சு. வெள்ளை முழி மட்டும் வெளிய தெரியத் தலை தொங்கிருச்சு. ஒருச்சாச்சு விழுந்ததுல உசுரு போயிருச்சு.

ரே சோகமாகிப்போச்சு.

குழிக்குள்ள பொணம் தள்ளுற நேரத் துக்குத்தான் வந்து சேர்ந்தான் முத்துமணி.

'கெழவனுக்கு மறதி இருக்குன்னுதான் பணப் பைய வாங்கிவச்சேன். நெனச்ச மாதிரியே சொல்லாமச் செத்துப்போயிட் டான் கெழவன். நிலத்த வித்த வகையில நமக்கு ஏழெட்டு லச்சம் மிச்சம்; மறந்து செத்த வகையில ஒண்ணே கால் மிச்சம். பெரியப்பன் குழிக்குள்ள; ரகசியம் மனசுக் குள்ள. ரெண்டையும் புதைச்சிர வேண்டிய துதான்’ - முடிவு பண்ணிட்டான் முத்து மணி.

இடது புறங்கையில சின்னப்பாண்டி மண்ணுத் தள்ளி முடிக்கவும் கண்ணத் தொடச்சுக்கிட்டே கருத்தமாயும் மண்ணுத் தள்ளுனாரு.

முத்துமணி மனசுக்குள்ள ஓடுது ஒரு சுடுகாட்டுக் கணக்கு:

'மண்ணுக்குள்ள விழுந்தவன் நெலத்த வாங்கியாச்சு. மண்ணுத் தள்ளுறவன் நெலத்தையும் வாங்கிட்டா சோலி முடிஞ்சுச்சு.’

- மூளும்