Published:Updated:

157 கெடா விருந்து... பெண்களுக்கு அனுமதியில்லை..! - மலையாம்பட்டி பொங்களாயி அம்மன் கோயில் உக்கிரத் திருவிழா

157 கெடா விருந்து... பெண்களுக்கு அனுமதியில்லை..! -  மலையாம்பட்டி பொங்களாயி அம்மன் கோயில் உக்கிரத் திருவிழா
News
157 கெடா விருந்து... பெண்களுக்கு அனுமதியில்லை..! - மலையாம்பட்டி பொங்களாயி அம்மன் கோயில் உக்கிரத் திருவிழா

இரவு 11 மணிக்கு அம்மனுக்குச் சிறப்பு பூஜை செய்து, ஒரு பெண் ஆட்டைப் பலி கொடுக்கிறார்கள். 'தனக்குப் பிரசவ வலி எடுத்தபோது, உதவிக்குப் பெண்கள் வராததால் பெண் ஆட்டையே பலி கொடுக்க வேண்டும்' என்பது அம்மனின் விருப்பமாம். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்துள்ள 157 ஆடுகள் பலியிடப்படுகின்றன. 

பெண் என்றால் தெய்வம். பெண் என்றால் பக்தி. பெண் என்றால் அன்பு. எல்லாவற்றுக்கும் முதலும் முடிவுமாக இருப்பவள் அவளே! ஆகவேதான், `பெண் சாபம் பொல்லாதது’ என்கிறார்கள். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசவோ, தாக்கவோ பயப்படுகிறார்கள். ஆணை விடப் பெண்ணுக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால்,  உலகமே முன்னால் வந்து குரல் கொடுக்கிறது. தவறு செய்தவர்களைத் தண்டிக்கிறது. பல ஊர்களில் பெண்கள், காவல் தெய்வங்களாக இருந்து மக்களைக் காத்துநிற்கும் வரலாறுகளும் உண்டு. 

இந்தச் சூழலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் அம்மன், தன் கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது; ஆண்கள் மட்டுமே நுழைய வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறாள் என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும். 

முழுக்க முழுக்க ஆண்கள் வழிபாடு செய்யும் கோயிலாகத்தான் இருக்கிறது பொங்களாயி அம்மன் கோயில். ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில்தான் இந்த அம்மன் குடிகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்குச் சமபந்தி கிடா விருந்து படைக்கிறார்கள். இந்த விருந்திலும் சரி, வழிபாட்டிலும் சரி ஆண்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொங்களாயி அம்மன் கோயிலின் வரலாறு குறித்து, அதன் தர்மகர்த்தாவும் திருவிழா குழுத்தலைவருமான செல்வராஜிடம் பேசினோம். 

``200 வருஷத்துக்கு முன்னாடி கெடமலையில பொங்களாயிங்கிறவங்க வாழ்ந்திருக்காங்க. அவங்க நிறைமாத கர்ப்பிணியா இருந்தபோது, விடாம மழை பெய்ஞ்சிருக்கு. அந்த நேரத்துல அவங்களுக்குப் பிரசவ வலி வேற எடுக்க ஆரம்பிச்சிருச்சு. புருஷன்கூட பக்கத்துல இல்ல. சொந்தக்காரங்களும் உதவிக்கு வரல. வேறு வழியில்லாம, மழையில நனைஞ்சுக்கிட்டே மலையில் இருந்து கீழே இறங்கி வந்திருக்காங்க. அப்பல்லாம் சாதிப் பிரச்னை அதிகமாக இருக்குமாம். அவங்க மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த பொண்ணுங்கிறதால வேறு சமூகத்தைச் சேர்ந்தவங்க யாரும் உதவி செய்ய வரல. வலியில துடிச்சுக்கிட்டே வந்த பொங்களாயி, இங்க இருக்கிற அரச மரத்தடியில விழுந்துட்டாங்களாம். அவங்களோட அபயக்குரல் யாரோட காதுக்கும் கேட்கல. கொட்டுற மழையில அவங்களுக்கு ரெண்டு அழகான ஆண் குழந்தைங்க பிறந்திருக்கு. ஆனா, அவங்க கீழே விழுந்ததுல அடிபட்டு ரெண்டு குழந்தைகளுமே இறந்துபோச்சாம். 

தன்னைக் காப்பாற்ற யாரும் முன்வராத கோபத்திலயும் குழந்தைங்க செத்துப்போன துக்கத்திலயும் அவங்க சாபம் விட்டுருக்காங்க.. `இந்த ஊரே பசி, பட்டினியில தவிக்கட்டும்.  குழந்தை பாக்கியம் இல்லாம எல்லாரும் தவிப்பாங்க. மழை பெய்யாம நிலமெல்லாம் காஞ்சு போகட்டும்’னு சொல்லிட்டு, மலை மேல ஏறிப் போய்ட்டாங்களாம்.  அதுக்குப் பிறகு அவங்க கீழே இறங்கி வரலன்னு பேச்சு இருக்கு. ஆனா, அவங்க விட்ட சாபம் மட்டும் பலிச்சிடுச்சு. பல வருஷத்துக்கு இங்கே நிறைய பேருக்கு குழந்தையே பிறக்காமப் போயிருச்சாம். பசி, பஞ்சம் வந்து நிறைய பேரு செத்துப்போயிருக்காங்க. என்ன செய்றதுன்னு தெரியாம ஊர்ப் பஞ்சாயத்துக்காரங்க எல்லாம் கூடிப் பேசியிருக்காங்க.

ஆனா ஒரு மாற்றமும் வரல. 

அப்போதான், கொல்லிமலையில் இருந்து கெடமலைக்குப் போன மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி, மலையாம்பட்டிக்கு வந்திருக்காங்க. அரச மரத்தடியில உட்கார்ந்துக்கிட்டு எல்லாரும் கூடிப் பேசிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்காங்க. ஊரு நிலைமை தெரிஞ்சதும், அந்தப் பாட்டி ஒரு உண்மையைச் சொல்லியிருக்காங்க. ``இந்த அரச மரத்தடியில ஒரு கல் இருக்கே, அது வேற யாரும் இல்ல... பல வருஷத்துக்கு முன்னாடி சாபம் விட்ட பொங்களாயிதான். அவளை அம்மனா நினைச்சுக் கும்பிட்டீங்கன்னா எல்லாம் நல்லபடியா நடக்கும், ஆனா, இந்தப் பூஜையில பொண்ணுங்க யாரும் கலந்துக்கக் கூடாது. ஆண்களே எல்லாத்தையும் செய்யணும்’னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அந்தப் பாட்டி சொன்னபடியே ஆண்கள் எல்லாம் ஒண்ணுகூடி பூஜை பண்ணியிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் இந்த ஊர்ல குழந்தை சத்தமே கேட்டிருக்கு..." என்கிறார் செல்வராஜ். 

ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பெருக்கில் நடக்கும் பொங்களாயி அம்மன் கோயில் திருவிழாவுல முழுக்க முழுக்க ஆண்கள் கூட்டமே நிரம்பி வழிகிறது. கோயில் பூசாரியாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாதன் என்பவரே இருக்கிறார். 'பெண்கள் வாடையே கூடாது' என்பதால், அவர் தலைமையில் கிடா வெட்டி பொங்கல் வைப்பது வரை எல்லா வேலைகளையும் ஆண்களே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான பொருள்களைக்கூட பெண்கள் தொட  அனுமதிப்பதில்லை. கோயில் இருக்கும் பகுதிக்குள் கூட பெண்களை அனுமதிப்பதில்லை. 

பொங்களாயி அம்மனுக்குக் காவல் தெய்வங்களாக அருகிலேயே காளி, இண்டங்கருப்பசாமி இருவரும் இருக்கிறார்கள். முதலில் அவர்களுக்குத்தான் பூஜை செய்ய வேண்டும். அதன்பிறகு, இரவு 11 மணிக்கு அம்மனுக்குச் சிறப்பு பூஜை செய்து, ஒரு பெண் ஆட்டைப் பலி கொடுக்கிறார்கள். 'தனக்குப் பிரசவ வலி எடுத்தபோது, உதவிக்குப் பெண்கள் வராததால் பெண் ஆட்டையே பலி கொடுக்க வேண்டும்' என்பது அம்மனின் விருப்பமாம். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்துள்ள 157 ஆடுகள் பலியிடப்படுகின்றன. 

ஆட்டு இறைச்சியை பெரிய பாத்திரங்களில் கொட்டி விடிய விடியச் சமைக்கிறார்கள். சாதிப் பாகுபாட்டால் பொங்களாயி இறந்தார் என்பதால், அனைத்துச் சாதியினரும் இந்த விருந்தில் பங்கேற்கிறார்கள். அனைவருக்கும் இங்கு கறி விருந்து பரிமாறப்படுகிறது. இந்த விருந்தில் பங்கேற்க அதிகாலை முதலே, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை பக்தர்கள் வரிசைக்கட்டி நிற்கிறார்கள். ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் பிற மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களும் விருந்தில் பங்கேற்கின்றனர். 

பொங்களாயி அம்மன் திருவிழாவில் நடக்கும் கறி விருந்தில் பங்கேற்பவர்களுக்கு ஒரேயொரு கட்டுப்பாடு உண்டு... கறிச்சோற்றை யாரும் வீட்டுக்கு எடுத்துச்செல்லக்கூடாது!