Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!
நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!

நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

பிரீமியம் ஸ்டோரி

“பவளக்காரத் தெரு... சென்னையின் பழைமையான அடையாளங் களில் ஒன்று. சென்னையின் யூத வணிகர்கள் வைரம் மற்றும் பவள வியாபாரத்தில் கோலோச்சிய இடம்.   

நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!

                                 பாதயாத்திரை  தொடங்கும் மக்கள்...    தேர் ஏறும் தண்டாயுதபாணி

அவர்களுக்குப்பின் இன்று நகரத்தாரின் பாரம்பர்யம் மீதமிருக்கும் இடம்.

இதுவே, பெரியாரிடம் பிணக்கு உருவானபோது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட இடம். திமுக என்ற இயக்கத்தின் வித்து விதைக்கப்பட்ட இடம்.

பவளக்காரத் தெருவில் வரிசையாக வண்டிகள். சாதாரண வண்டிகள் அல்ல. ஆடி, ஹோண்டா சிட்டி என்று உயர்தர கார்கள். அவற்றில் இருந்து பட்டுப்புடவைகள் சரசரக்க வெறும் காலுடன் இறங்கி நடக்கும் வைரக் கம்மலும் நெக்லஸ்களும் தரித்த பெண்கள். இன்று இங்கு நகரத்தார் நடத்தும் ஒரு திருவிழா.   

நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!

சென்னையின் மறக்கப்பட்ட ஒரு வீதியாக எனக்கு அது தோன்றவில்லை. சாரிசாரியாக ஆண்களும் பெண்களும் குழுமிக் கொண்டு இருந்தார்கள். வேணுகோபால சுவாமி கோயில் தாண்டியதும் கண்ணில்பட்டது சிறிய தேர் ஒன்று. தேர் நின்ற இடம் தேவகோட்டை நகரத்தார் சத்திரம். அழகான வெளிமாடம், வாசற்கதவில் அற்புதமான மர வேலைப்பாடுகளுடன் கதவு, தாழ்வாரம், அதை ஒட்டிய அறையில் சகல அலங்காரத்துடன் தண்டாயுதபாணி. வெள்ளி மயில் வாகனத்தில் நகைகளும் கையில் வேலும் மாலைகளுமாக...கண்சிமிட்ட மறந்து பார்த்துக்கொண்டிருந் தோம். உத்தரத்தில் தொங்கிய அழகிய மூங்கில் கூடைகள், உட்புறக் கதவின் அருகில் முத்தப்ப செட்டியார் பாடிய லக்குமி பாடல் - `காடுவெட்டிப் போட்டுக் கட்டிய நிலந்திருத்தி வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு அன்றைக்கு வந்த எங்கள் அம்மா! இலக்குமியே என்றைக்கும் நீங்காதிரு...'

அதன் அருகில் கவியரசு கண்ணதாசனின் வரிகள்... `நாடுவிட்டு நாடு சென்று நாட்டார் குணமறிந்து, நல்லவரைக் கெட்டவரை நயமாகப் பகுத்துணர்ந்து, பாடுபடும் மக்களுக்குப் பாங்காக பொருள் கொடுத்து, அடக்கமாக வாழ்ந்துவிட்டு அதிகமாகப் பொருள் சேர்த்து தாய்நாடு திரும்பியவர் தனவணிகர் எம்குலத்தோர்'.    

நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!

யார் இந்த நகரத்தார்? புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை சமஸ்தானங் களைச் சார்ந்த 96 கிராமங்களில் வாழ்ந்த இவர்கள், ஒருகாலத்தில் உப்பு வணிகம் செய்துவந்த வணிகர்கள். விவசாயம் அதிகம் பலன் தராத பகுதிகளில் வாழ்ந்த இவர்கள், கொடுக்கல் வாங்கல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள். சமஸ்தானங்களையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.ஆங்கிலேயர் காலத்தில், அவர்கள் தடம்பதித்த வெளிநாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வாணிபத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். பர்மா, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளை 1850-60களில் ஆங்கிலேயப் படைகள் கைப்பற்றிய பின்னர், அந்த நாடுகளில் வாணிபம் செய்யத் தொடங்கினார்கள். கடல்கடந்து செல்லத் தயங்கவில்லை. இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள், பர்மாவின் அரிசி வாணிபம், மலேசியாவின் ரப்பர் தோட்டங்கள் போன்றவை அவர்களது சமயோசித முதலீட்டின் பலன்கள்.

1869-ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதும், இவர்களது வாணிபம், கப்பல் போக்குவரத்து அதிகரிப்பால் உலகெங்கும் பரவியது. அரிசி, மர வாணிபம் என்று அனைத்துத் தொழில்களிலும் முத்திரை பதித்தார்கள். பர்மாவின் தேக்கு கொண்டு அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட ஜன்னல், கதவுகள், தூண்கள், ஆத்தங்குடி ஓடுகள், தனித்துவமான சமையல் முறை, தனித்துவிடப்பட்ட பெண்களின் பொருளாதார சுதந்திரம், முடிவெடுக்கும் திறன் என அனைத்தையும் கற்றுக்கொண்டு விட்டார்கள். கப்பல்களில் பயணப்பட்ட வணிகர்களுக்குச் சென்னை நகரம்தான் தாய் வீடு.

முருகரைத் தங்கள் முதற்கடவுளாக வரித்துக்கொண்டவர்கள் நகரத்தார். பாம்பன் சுவாமிகள் பாடிய சண்முக கவசத்தில், `இன மென தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க' என்று முருகரைச் செட்டியாகவே பாவிக்கிறார்.

காளஹஸ்தி, சிதம்பரம், ராமேஸ்வரம் போன்ற தேவாரத் தலங்களுக்குத் திருப்பணி செய்தார்கள். தைப்பூசம் அன்று காவடிகள் ஏந்தி செட்டிநாடு முதல் பழநி வரை பாதயாத்திரை மேற்கொள்வது இவர்கள் வழக்கம். மலேசிய நாட்டின் முருகர் கோயில்களில் திருவிழாக்களை நடத்துகிறார்கள். சென்னையிலும் தைப்பூசம் அன்று பவளக்காரத் தெருவின் சத்திரங்களில் தேர் மற்றும் பாதயாத்திரை தொடங்கி திருவொற்றியூர் பெரிய சத்திரம் வரை செல்கிறார்கள். திருவொற்றியூர், செட்டியார் என நம்பப்படும் பட்டினத்தார் சமாதியான இடம் என்பதால் இவர்களின் கூடுதல் மரியாதையைப் பெறுகிறது.   

நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்!

சென்னையில் நகரத்தாருக்கென மூன்று சத்திரங்கள் தொடங்கப்பட்டன...தேவகோட்டை சத்திரம், காரைக்குடி சத்திரம் மற்றும் ரங்கூன் சத்திரம். தேவகோட்டை சத்திரம் கடந்து காரைக்குடி சத்திரம் வந்தால், அதன் வாசலில் பெரிய வெள்ளித் தேர். அதே அழகிய வேலைப்பாடுகளுடன் வாசற்கதவு, மரத்தூண்கள், மேல்தளத்தில் இங்கும் ஒரு தண்டாயுதபாணி. மரத்தால் ஆன உட்கூரை, சர்வ அலங்காரங்களுடன் முருகர். கூட்டத்தில் மூச்சு முட்ட, மீண்டும் தேவகோட்டை சத்திரம் வந்து மாடியில் ஐக்கியம் ஆகிவிட்டேன். பழைய, புதிய கட்டடங்களின் வாசல்களில் மக்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். பச்சைக் கயிறு கட்டி, பச்சை நிறத்தில் பொடி பூசிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

`வடிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷம் காதைப் பிளக்க ஒருவழியாக மக்கள் தேரோடு சாரிசாரியாக நடக்கத் தொடங்குகிறார்கள். பொறுமையாக நானும் பின்னால் நடக்கிறேன். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குடிக்க, உண்ண என்று ஏதேனும் இலவசமாகத் தருகிறார்கள். ரோஸ் மில்க், பழரசம், பிஸ்கட், பால், மோர் என்று கலந்து கட்டி உள்ளே தள்ளியபடி நடக்கிறேன்.உமா பதிப்பகத்தார், அம்பத்தூர் நகரத்தார் மன்றம், யாழினி பதிப்பகம், மயிலாப்பூர் நகரத்தார் மன்றம், அண்ணா நகரத்தார் மன்றம் என்று பெயர் பதாகைகளுடன் சிலரும், பெயர், விளம்பரம் ஏதுமில்லாமல் பல வீடுகளின் வாசல்களில் அந்தந்த வீட்டாரும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

1949 செப்டம்பர் 17 அன்று திமுக  வரலாற்றில் இடம்பெற்ற இடம், இதே தெருவில் உள்ள கதவு எண் 7. ஆங்கில எழுத்தாளர் விஷ்வநாத் கோஷ் எழுதியிருந்த கட்டுரையைக் கவனமாக கைப்பேசியில் சேமித்து வைத்திருந்தேன். தந்தை பெரியாருடன் பிணக்கு ஏற்பட்ட பின், செப்டம்பர் 18,  1949-ல் ராபின்சன் பூங்காவில் கூடி, திமுக நிறுவப்பட்டது என்ற செய்தி அனைவரும் அறிந்தது. ஆனால், அதற்கு முந்தைய தினம் கதவு எண் 7, பவளக்காரத் தெரு என்ற முகவரியில் திராவிட ஃபெடரேஷன் கூடி, பெரியாரின் தலைமை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இது, ஹிந்து நாளிதழின் செப்டம்பர்19, 1949-ம் தேதியிட்ட பதிப்பில் வெளிவந்திருக்கும் செய்தி. பழைய எண் 7-ல் இன்று ஐந்து மாடி அபார்ட்மென்ட் ஒன்று வானளாவி நிற்கிறது.

வரலாற்றுச் சின்னங்களை எத்தனை எளிதாகத் தகர்த்து விடுகிறோம்? திராவிடத்தின் வரலாறு சென்னை நகரத்து வீதிகளில் மறைந்து கொண்டிருக்கிறது. பெருமூச்சுடன் நடையைத் தொடர்கிறேன், நகரத்தாருடன். தம்பு செட்டி நிறுத்தத்தில் ஆரஞ்சு விநியோகம் நடக்கிறது.பார்த்தபடியே ராயபுரம் ரயில்வே மேம்பாலம் வரை நடக்கிறேன். அங்கும் மௌனமாக நின்றுகொண்டிருக்கிறது, நூற்றாண்டைத் தாண்டிய ரயில் நிலையம். சென்னையின் அடையாளங்களையும் வரலாற்றையும் கொஞ்சம் அசைபோட விரும்பினால் பவளக்காரத் தெருவுக்கு அவசியம் செல்ல வேண்டும். மாசி மகத்தன்று சென்றால் நகரத்தாரின் விருந்தோம்பலையும் சேர்த்து ரசிக்கலாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு