Published:Updated:

கிளாமர் பாய்க்கு கிடைத்த முள்படுக்கை... இம்ரான் கானுக்கு காத்திருக்கும் கசப்பு மருந்துகள்!

கிளாமர் பாய்க்கு கிடைத்த முள்படுக்கை... இம்ரான் கானுக்கு காத்திருக்கும் கசப்பு மருந்துகள்!
கிளாமர் பாய்க்கு கிடைத்த முள்படுக்கை... இம்ரான் கானுக்கு காத்திருக்கும் கசப்பு மருந்துகள்!

பாகிஸ்தான் புதிய பிரதமருக்கு காத்திருக்கு சவால்கள் அதிகம்.

பாகிஸ்தானில் முதன்முறையாக புட்டோ, நவாஸ்ஷெரிப் குடும்பத்தை சாராதவர் ஒருவர் பிரதமர் பதவியில் அமர்கிறார். அகில இந்தியாவிலும் பாப்புலரான இம்ரான்கான் பாகிஸ்தானின் புதிய பிரதமர்.. குத்துச்சண்டை வீரராக இருந்து உகாண்டா நாட்டு அதிபர் ஆனவர் இடி அமீன், ஏ.சி. மிலன் ஜாம்பவான் ஜார்ஜ் வியா ( லைபிரிய அதிபர்) ஆகியோருக்கு பிறகு விளையாட்டு உலகில் இருந்து ஒரு நாட்டின் பிரதமர் பதவியை அடைந்தவர் இம்ரான்கான். இந்த கிளாமர்பாய்க்கு கிடைத்தது சொகுசு படுக்கை இல்லை. இம்ரான்கானை பிரதமர் ஆக்கியதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் தேர்தல் தினத்தில் தலிபான், ஐ.எஸ். அமைப்புகளின் ஆதரவும் இம்ரானுக்கு இருந்தது. ''வாக்காளர்களே நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதாக இருந்தால் தெக்ரி இ இன்ஷாப் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருந்து விடுமுறையை என்ஜாய் பண்ணுங்கள்'' என்று ஐ.எஸ் அமைப்பு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருந்தது. 

Photo courtesy: Twitter/@ImranKhanPTI

1997-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய இம்ரானால் முதல் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 21 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தனிப் பெரும்பான்மை கட்சியாகி ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறது அவரின் கட்சி. இதற்காக அவரின் உழைப்பு அபரிமிதமானது. இந்தியாவை குறை கூறியே இம்ரான் வெற்றி பெற்றாலும். அணுகுண்டு வைத்திருக்கும் ஒரு நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் அவர் அமரப் போகிறார். கிரிக்கெட் களத்தில் சந்தித்ததை விட பல மடங்கு சவால்களை
இனிமேல் அவர் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆட்சியில் இருந்த நவாஷின் முஸ்லீம் லீக் கட்சி, பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து எதிர்கட்சியாக செயல்படும். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது முதல் சவாலாக இருக்கும். கூட்டணி கட்சிகளையும் சமாளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

சர்வதேச நிதி மையத்திடம் 12 பில்லியன் டாலர்கள் கடன் வாங்க இம்ரான் திட்டமிட்டுள்ளார். 2013- ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் ஆட்சியில் அமர்ந்ததும் 6.6 பில்லியன் டாலர்கள் வாங்கினார். இந்த தொகையை பாகிஸ்தான் திருப்பி செலுத்தவிவ்லை.  ஏற்கெனவே கடன் இருக்கும் பட்சத்தில் சர்வதேச நிதி மையம் இன்னொரு கடன் வழங்காது. ஆனால், இம்ரானோ அந்த நிதி கிடைத்து விடும். அதை வைத்து பாகிஸ்தானை புதிய பாகிஸ்தான் ஆக்கி காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.  நாட்டை நிர்வகித்த அனுபவம் இதுவரை அவருக்கு இல்லை. கடனாக கிடைக்கும் நிதியில்  ஊழல் எதுவும் நடந்தால் இம்ரான் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ``பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிந்து போய் கிடக்கிறது. பாகிஸ்தானிகள் வரி செலுத்த தயாராக இல்லை. மக்களை வரி செலுத்த வைக்க வேண்டும். முந்தைய பாகிஸ்தான் அரசுகள் மக்கள் பணத்தை கையாண்ட விதத்தால் மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை போய் விட்டது ''என்று கூறும் இம்ரானுக்கு பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

சர்வதேச நாடுகளுடன் உறவை பேணுவதிலும் இம்ரானுக்கு அனுபவம் குறைவு. கிரிக்கெட் உலக கவர்ச்சி இங்கே எடுபடாது. சீனா பாகிஸ்தான் தவறு செய்தாலும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் உறவை பேணுவதில் இம்ரானுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானை முன்வைத்துதான் அமெரிக்கா -பாகிஸ்தான் நல்லுறவு மேம்படும். இம்ரான்கான் தலிபானை நேரடியாக ஆதரிப்பவர். தலிபான்கள் மீண்டும் தலையெடுத்தால் அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. 

2012-ம் ஆண்டு மலலா சுடப்பட்ட சமயத்தில், இம்ரான் கான். 'ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்திற்குட்பட்டு தலிபான்கள் போராடுகிறார்கள்' என்று பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கினார். இம்ரான்கானின் பேச்சு ஆப்கானிஸ்தான் அரசுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இம்ரான்கானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்குமளவுக்கு ஆப்கானிஸ்தான் சென்றது. அப்போது இம்ரான்கான் ஒரு கட்சித் தலைவர். இப்போதோ பாகிஸ்தான் பிரதமர். எனவே, இம்ரானின் ஒவ்வொரு வார்த்தைகளையும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும். 

பாகிஸ்தானை பொறுத்தவரை  அந்நாடு உருவாகி  71 ஆண்டுகால வரலாற்றில் 33 ஆண்டுகள் ராணுவ ஆட்சியாளர்கள்தான் அதிகாரத்தில் இருந்துள்ளனர். ஆட்சியில் யார் அமர்ந்தாலும்  ராணுவம் தங்களுக்கு சாதகமாக இருக்கவே விரும்பும். வெற்றி பெற்ற பின் இம்ரான், ``சமதானத்தை நோக்கி இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தார். நாங்கள் இரு அடி முன் வைப்போம்'' என்றார். பாகிஸ்தான் ராணுவம் ஒரு போதும் இந்தியாவை நண்பனாக்கி கொள்ள விரும்பாது. பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரை  `இந்தியா நிரந்தர எதிரி நாடு' அவ்வளவுதான். பெரும்பான்மை இல்லாத இம்ரான் நினைத்தால் கூட இந்தியாவுடன் நட்பு பாராட்டி விட முடியாது. இம்ரான் இந்தியாவை நெருங்கினால் பாகிஸ்தானில் மீண்டும் ஒரு ராணுவ ஆட்சியாளர் உருவாவார் என்பதே நிதர்சனம். 

கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் நவாஷ் ஷெரிஃப். இஸ்லாமபாத்தில் இந்தியா டுடே செய்தியாளர் ஒருவரை பிரேக்ஃபாஸ்ட்டுக்கு அழைத்தார். அந்த செய்தியாளரிடம் நவாஸ் ஷெரிப், ``இந்தியாவுடன் சமாதானத்தை மட்டுமே விரும்புகிறேன், இந்தியாவிடம் இருந்து மின்சாரம் வாங்கவும் திட்டமிட்டுள்ளேன்'' என்று மகிழ்வுடன் கூறினாராம். நடந்தது என்ன? பதன்கோட், யூரி தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்  நடத்தியது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவையும் இந்தியா துண்டித்து பல ஆண்டுகளாகி விட்டது. ஒரு கிரிக்கெட்டராக இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் தங்கள் நாடுகளில் விளையாட வேண்டுமென்று இம்ரான், கருதினால் தீவிரவாதத்தை வேரறுத்தால்தான் முடியும். பாகிஸ்தானையும் தீவிரவாதத்தையும் பிரித்து விட்டால், அதுவே இம்ரானுக்கு கிடைத்த பெரிய வெற்றி.

பாகிஸ்தானை கிரிக்கெட் ஆட்டத்திலும் நம்ப முடியாது. 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ஆட்டத்தில் 74 ரன்களுக்குள் சுருண்டு விழுந்து கிடந்தது. கடைசியில் உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு திரும்பியது. அந்த அணிக்கு இம்ரான்கான்தான் கேப்டனாக இருந்தார். இப்போது பாகிஸ்தான் நாட்டுக்கே அவர் கேப்டன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் போலவே இம்ரான் மூவையும் அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.

அடுத்த கட்டுரைக்கு