Published:Updated:

நம் மனதோடு பயணிக்கும் டிராவலர்ஸ் - `நண்பர்கள்'

நம் மனதோடு பயணிக்கும் டிராவலர்ஸ் - `நண்பர்கள்'
நம் மனதோடு பயணிக்கும் டிராவலர்ஸ் - `நண்பர்கள்'

`டேய் மச்சான்... நண்பர்கள் தினம் வரப்போகுது. எங்க போயி கொண்டாடலாம், என்ன ப்ளான்?' என, சுற்றி உள்ளவர்களின் கூச்சல் கடந்த வாரம் அதிகமாகவே கேட்டது. உலகத்தில் இருக்கும் எந்த உறவும் சாதாரணமானதல்ல. நம் மனதோடு ஒன்றிணைந்து பயணிக்கும் பயணிகளில் என்றுமே மறக்க மறுக்க முடியாத டிராவலர்ஸ் `நண்பர்கள்'தான். முதல் காதலின் நினைவுகளுக்குக் குறைந்ததல்ல நண்பர்களின் சேட்டைகள். அப்படிப்பட்ட சேட்டை ஃப்ரெண்ட்ஸ் கதைதான் இது.

5 மணிக்கு டான்னு அலாரம். 5:30-க்குக் குளியல். 6 மணி முதல் படிப்பு. 8 மணிக்கு, காலை உணவு. 8:30-க்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும். இப்படி ஏகப்பட்ட கடுமையான சட்டங்கள்கொண்ட விடுதி அது. இந்த ரூல்ஸைப் பின்பற்றவில்லை என்றால், `பெரம்பால்' நல்ல வரவேற்பு இருக்கும். இடைப்பட்ட நேரத்தில், குழுவாய் நின்று பேசவோ, சத்தமாகச் சிரிக்கவோ கூடாது. மின்னணு உபகரணங்களைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. வெளியிலிருந்து எந்த உணவு வகையும் கோட்டுக்கு இந்தப் பக்கம் வரக் கூடாது. `ஏன்டா... இப்டிலாமா ரூல்ஸு?'னு வாயைப் பிளக்கவைக்கும் அளவுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். ஏற்கெனவே பெற்றோரைப் பிரிந்து வாழும் அவர்களுக்கு, இவை மிகவும் சிரமமாக இருந்தது. இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு நடுவே முளைத்தது இவர்களின் அழகான நட்பு.
 
வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்தவள் ப்ரீத்தி. கட்டுப்பாடுகளே வாழ்க்கை என வாழ்ந்தவள் அபி. அதுவரை பாசம் என்றால் பணம் இருந்தால்தான் வரும் என நினைத்திருந்த அபிக்கு, ப்ரீத்தியின் அன்பு முழுமையைக் கொடுத்தது. விவரம் தெரிந்த நாள் முதல் அபியின் பெற்றோர், சகோதரர்கள்மூலம் தப்பித்தவறிகூட ஒரு பருக்கைச் சோறும் அவள் வாயில் விழுந்ததில்லை. இது அவளுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்தது. மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்தவள் அபி. அத்தனையும் ப்ரீத்தியின் அளவு கடந்த பாசத்தால் மீண்டு வந்தாள்.

இரண்டு வருட விடுதி வாழ்க்கை. மிகவும் சுட்டிப்பெண்ணான ப்ரீத்தி, அபியை சோகமாகவே வைத்திருப்பாளா என்ன? தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கிறாளோ இல்லையோ, போடப்பட்ட அத்தனை விடுதி நிபந்தனைகளையும் உடைக்க வேண்டும் என்பதே ப்ரீத்தியின் லட்சியம். இதற்கு கூட்டாளிதான் அபி. `ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்' என்று இதில் பெருமைவேறு பேசித் திரிந்தனர். 5 மணி அலாரம் அடித்ததும், உடம்பு சரியில்லை எனப் பொய் சொல்லிவிட்டு தூங்குவதும், பாதுகாவலருக்குத் தெரியாமல் சுவர் ஏறி குதித்துத் தின்பண்டங்கள் வாங்குவதும், வகுப்புக்குத் தாமதமாகப் போவதும், சாக்பீஸால் அடித்து விளையாடுவதும் என அத்தனை கோட்பாடுகளையும் வெற்றிகரமாக உடைத்துவிட்டனர். ஒருகட்டத்தில் எல்லை மீறி, குளியலறையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். பிறகு, தலைமை ஆசிரியர்களிடம் இவர்கள் `1000 வாலா' பட்டாசுகள் வாங்கியது வேறு கதை. 

இத்தனை சுட்டித்தனங்களுடன், பள்ளி வாழ்க்கையைக் கடந்து சென்றவர்கள், ஒருகட்டத்தில் நினைவுகளை மட்டுமே சுமந்தபடி நிரந்தரமாகப் பிரிந்து சென்றனர். காரணம், அதே கட்டுப்பாடு, கோட்பாடுகள். இந்தமுறை விடுதி ரூல்ஸ் அல்ல. திருமணம், அலுவலகம், குடும்பம், குழந்தைகள் போன்றவை. எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்திருந்தாலும், நினைத்த மறுகணமே தொடர்புகொள்ள வசதிகள் இருந்தாலும், மனிதனின் எல்லையற்ற ஓட்டம், வட்டமாக அல்ல நீளமாக மட்டுமே போய்க்கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் வட்டமாக மாறும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

எந்த உறவுமே, நம் கூடவே இருக்கும்போது அதன் மதிப்பு தெரியாது. விடுதியில் சேர்க்கும் வரை பெற்றோரின் பாசம் புரியாது. சந்தோஷமோ துக்கமோ அதைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கும்போதுதான் உடன்பிறந்தவர்களின் முக்கியத்துவம் புரியும். இப்படி வாழ்க்கையில் `மிஸ்' செய்யும் அனைத்தையும் ஒரே ஒரு நல்ல நண்பனால் மட்டுமே கொடுக்க முடியும். கண் அசைவை வைத்து நம் மனதில் நினைப்பவற்றைப் புரிந்துகொள்ள லைஃப் பார்ட்னரால் மட்டும்தான் முடியுமா என்ன? மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு வாடிய முகத்தைக் கண்டு மனைவியிடமிருந்து தன் நண்பனைக் காப்பாற்றுவதும் நண்பர்கள்தானே! ரத்த சொந்தங்கள்கூட சுயநலமாக வாழும் இந்தக் காலத்தில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் அனைத்து நண்பர்களுக்கும், `நண்பர்கள் தின வாழ்த்துகள்!' பிஸியான வாழ்க்கையில் கொஞ்சம் நண்பர்களுக்காக பிரேக் எடுத்துக்கொள்வது தவறில்லையே!