
படங்கள் : பாலாஜி
பொதுவாக நவீன நாடகங்கள் நிகழும் அரங்கங்கள் நிறைவது அரிது. ஆனால், இயக்குநர் பா. இரஞ்சித் மற்றும் அவரின் தோழர்களால் நடத்தப்படும் ‘நீலம்’ அமைப்பும் ஜெய்பீம் மன்றமும் இணைந்து நடத்திய ‘மஞ்சள்’ நாடக நிகழ்வன்று காமராஜர் அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. நாடகப்பிரதியை எழுதியவர், தொடர்ச்சியாக சாதி மறுப்புச் செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் ஜெயராணி. நிகழ்த்திக் காட்டியது ‘கட்டியங்காரி’ நாடகக் குழு. பொதுவெளிகளிலும் கவனம் ஈர்க்கும்வகையில் தலித் கலைச்செயல்பாடுகள் செல்வாக்கு பெற்று வருவதன் அறிகுறி இது என்று சொல்லலாம்.
மேலும், தலித் அடையாளத்தின் கீழும் அதிகம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் அருந்ததியர்கள். ‘தலித்துகளின் தலித்’தாக இருக்கும் அருந்ததியர்களின் முக்கியப் பிரச்னையான, மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் இழிவு குறித்து அதிகம் விவாதிக்கப்படுவது இல்லை. ஆனால், இந்த ‘மஞ்சள்’ நாடகம் முழுக்க இந்தப் பிரச்னை குறித்தே கவனப்படுத்தியது.

மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து 2003-ல் ஆர்.பி.அமுதன், ‘பீ’ என்னும் ஆவணப்படத்தை இயக்கியிருந்தார். பிறகு, ‘செந்தமிழ் நாடென்னும்போதினிலே’ எனும் ஆவணப்படத்தையும் வெளியிட்டார். மலம் அள்ளும் பெண்ணின் ஒருநாள் வாழ்க்கை ஆவணப்படுத்தப்பட்டிருந்த இந்தப் படத்தின் பின்னணியில் ‘செந்தமிழ் நாடென்னும்போதினிலே’ பாடல் ஒலிக்கும். சமீபத்தில் திவ்யா இயக்கிய ‘கக்கூஸ்’ என்னும் ஆவணப்படமும் பொதுவெளியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தியச் சமூகத்தின் முக்கியமான பிரச்னையான இந்த இழிவு குறித்துக் கவனம் ஈர்க்கும் இத்தகைய படைப்புகளின் வரிசையில் முக்கியமான ஒரு கலைச்செயல்பாடு ‘மஞ்சள்’ நாடகம்.
இந்த நாடகம் எழுப்பும் அவசியமான கேள்விகள்:
*மற்றவர்களால் இழிவுபடுத்தப்பட்டாலும் ஆபத்து நிறைந்திருந்தாலும், ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் மலம் அள்ளுகிறார்கள், செப்டிக் டேங்க்கில் இறங்கித் தூய்மைப் பணியை மேற்கொள்கிறார்கள்?
*எல்லாவற்றுக்கும் கருவிகள் கண்டுபிடிக்கும் விஞ்ஞானமும் அரசும் ஏன் மலம் அள்ளுவதற்கும் செப்டிங் டேங்க்கைச் சுத்தப்படுத்துவதற்கும் கருவிகள் கண்டுபிடிக்கவில்லை? வெறுமனே அரசாணைகளைத் தாண்டி ஏன் நடைமுறையில் அரசாலும் நீதிமன்றத்தாலும் இந்தக் கொடுமையைத் தடுக்க முடியவில்லை?

அடுத்த கேள்வி, பார்வையாளர்களான நமக்கு. ‘இப்படியான ஒரு பிரச்னை குறித்து ஏன் வெகுமக்கள் சமூகம் அக்கறை இல்லாமல் இருக்கிறது, குறைந்தபட்சம் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதையே அது ஏன் பொருட்படுத்துவது இல்லை?’ நாடகத்தின் முதல் காட்சியும் இதையே அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.
குப்பைகளை அள்ளும் பெரிய சாக்குப்பையிலிருந்து மனிதர்கள் வெளியே வருகிறார்கள். குப்பைகளைச் சேகரிக்கிறார்கள். பார்வையாளர்களை நோக்கி வீச எத்தனிக்கும் தொனியுடன் உறைந்து நிற்கிறார்கள். மேலே எழுப்பப்பட்ட கேள்விகள், இந்தக் குப்பைகளைப்போல சுலபத்தில் ஒதுக்கிவைத்துவிட்டுப் போகக்கூடியவை அல்ல. மனித மலத்தை மனிதரே அள்ளும் இழிதொழிலின் காரணம், இருப்பு, பின்னணி ஆகியவை குறித்து நாடகம் விரிவாகப் பேசுகிறது. சாதிக்கும், இந்துமதத்துக்கும், பார்ப்பனியத்துக்கும், தேசிய அரசியலுக்கும் உள்ள தொடர்பு ஆகியவையும் நாடகத்தில் காட்சிகளாக விரிகின்றன.
கர்ப்பிணிப் பெண் மலம் அள்ளி சுத்தம்செய்கிறார். “பொதுவா, மாசமா இருந்தா மசக்கைன்னு குமட்டும். ஆனா, எனக்கு இந்த மலநாத்தமே குடலைப் பிரட்டுற மாதிரி குமட்டும்” என்கிறார். கர்ப்பிணிப் பெண்களைப் பொதுச்சமூகம் அணுகும் கருணைப்பார்வைகூட இவர்களுக்கு மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘காக்க காக்க’ என்று கந்தசஷ்டிக் கவசம் பின்னணியில் ஒலிக்க, ஆதிக்கச் சாதிப் பெண், மலம் அள்ளும் பெண்ணை வசைபாடுவது பதியப்படுகிறது. ‘வட்டக்குறுமுலை வடிவேல் காக்க; பிட்டமிரண்டைப் பெருவேல் காக்க’ என்ற கந்தசஷ்டிப் பாடலுக்கும் துப்புரவுப் பணியால் கைகள் காய்ந்து இடுப்புவலிக்கு உள்ளாகும் தூய்மைத் தொழிலாளரின் துயரத்துக்கும் இடையிலான முரண் அவல நகைச்சுவையாக விரிகிறது. “எல்லா பொம்பளைங்களும் ஒண்ணுன்னு நினைக்காதீங்க” என்கிற குரல் வித்தியாசங்களின் அரசியலை முன்வைக்கிறது. ‘பெண்ணியம்’ என்று பொதுவாகப் பேசப்பட்டாலும் ஆதிக்கச் சாதிப் பெண்களுக்கான பிரச்னைகளும் ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கான பிரச்னைகளும் வெவ்வேறு என்பதை நாடகம் காத்திரமாய் வலியுறுத்துகிறது.

“ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது” என்ற அண்ணல் அம்பேத்கரின் வரிகளை நினைவுபடுத்துகின்றன தொடரும் காட்சிகள். வைதீகச் சொல்லாடல்களுடன் குழந்தைக்குச் சாதி என்னும் இறுக்கமான கயிறு அணிவிக்கப்படுகிறது. அது காலாகாலத்துக்கும் தொடர்கிறது. பள்ளியில் நன்றாகப் படித்தாலும் கழிப்பறையில் பிரச்னை என்றால், தலித் குழந்தைகளை வைத்துச் சரிசெய்ய முயலும் அவலம் சமூக யதார்த்தமும்கூட.
சரி, இவ்வளவு தூரம் துயரமும் அவமானமும் இருந்தும் மலக்கூடையை ஏன் அவர்கள் தூக்கிச் சுமக்கிறார்கள். மரணம் வாய் பிளந்திருக்கும் செப்டிங் டேங்க்கில் ஏன் மறுபடி மறுபடி இறங்குகிறார்கள்? இந்தக் கேள்விகளை நாம் அவர்களிடம் கேட்டாலும் உண்மையில் இது நம்மைப் பார்த்து நாம் எழுப்பவேண்டிய கேள்விகள்.

மலம் அள்ளும் தொழிலைவிட்டு வெளியே வந்தவர்களுக்கு எல்லா வேலைகளும் மறுக்கப்படுகின்றன. ஒருவர் ஹோட்டலில் சர்வர் வேலை கேட்கிறார். “உன்னை வேலையில் சேர்த்துக்கிட்டா, யாருடா சாப்பிட வருவாங்க?” என்று கேட்கிறார் உரிமையாளர். மலம் அசுத்தமானது என்பதைவிடவும் மலம் அள்ளும் தொழிலாளர்களே அருவருப்பானவர்கள் என்கிற பிம்பத்தின் பின்னுள்ள சாதியத் தூய்மைவாத மனநிலை ஆராயப்பட வேண்டியது.
நவீன யுகத்தில் வாழ்கிறோம். விதவிதமான வினோதமான கருவிகளை விஞ்ஞானம் அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட நாம் சாதனங்களுக்கு அடிமையாகும் அளவுக்குக் கருவிகளின் காலம்தான் இது. ஆனாலும், மனித மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழிப்பதற்கான கருவியை இந்தச் சமூகமும் அரசும் பயன்படுத்தி மனித மாண்பைக் காப்பாற்ற மறுப்பது ஏன்? ‘சட்டப்படி ஒழித்துவிட்டோம்’ என்று சொல்லிவிட்டு ரயில்வே துறையே ஏன் மலத்தைச் சுத்தப்படுத்துவதற்கு மனிதர்களை நியமிக்கிறது? செப்டிங் டேங்க்கில் இறங்கிச் செத்துப்போனவர்களுக்கான நீதி ஏன் இன்னும் மறுக்கப்படுகிறது? நீதிமன்றங்கள் ஏன் இதில் கவனம் செலுத்துவது இல்லை? பாதிக்கப்பட்டவர்களால் வழக்கு தொடரப்படும்போதும் அரசின் பொய்ப் பதில்கள் குறித்து ஏன் கேள்விகள் எழுப்புவது இல்லை?

‘சாதியில் கீழான இவர்களே இந்த இழிவைச் சுமக்க வேண்டும் என்ற நம்முடைய சாதிய மனநிலைதான் இதற்குக் காரணம்’ என்று அழுத்தமாகக் குற்றம் சாட்டுகிறது ‘மஞ்சள்’.
‘துப்புரவுத் தொழில் புனிதமானது’ என்றும் ‘அடுத்த பிறவியில் தோட்டியாகப் பிறக்க விரும்புகிறேன்’ என்றும் சொன்ன காந்தியத்தையும் ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் பம்மாத்து பண்ணும் இந்துத்துவ அரசியல் அதிகாரத்தையும் பகடி செய்கிறது இந்த நாடகம். 90-களில் உருவாகி எழுச்சிபெற்ற தலித் இலக்கியத்துக்கும் தலித் கலைக்கும் அடிப்படையான அம்சம் எதிர் அழகியல். பொதுவான அழகியல், புனிதம் என்று கட்டமைக்கப்பட்டவற்றைத் தலைகீழாக்குவதே தலித் இலக்கியச் செயல்பாடு.
ஒரு மழைநாளை மற்றவர்கள் எப்படி இனிமையான அனுபவங்களுடன் நினைவுகூர்கிறார்கள் என்று காட்சிப்படுத்திவிட்டு, மலக்கூடை சுமந்து செல்பவர்கள் மழையைக் கண்டு அச்சப்படும் காட்சியையும் இணையாக முன்வைக்கிறது நாடகம். “அன்னைக்கு மழை பேஞ்சப்ப தலையில் இருந்த மலமெல்லாம் என் முகத்தில் வழிஞ்சது. ஓரமா ஒதுங்கப்போனப்போ கடைக்காரரும் விரட்டிவிட்டார். என்னையே எனக்குப் பிடிக்காமப் போனது அப்பதான்” என்ற குரல், நமது பொதுவான உணர்வுகளிலிருந்து விலகியது, விலக்கப்பட்டது.
‘மஞ்சள்’ என்றால் மற்றவர்களுக்கு எல்லாம் புனிதம், அழகு. ஆனால், மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கோ மஞ்சள் என்றால் அசிங்கம், அவமானம், அடிமைத்தன நிர்பந்தம், இழிவு என்று புனிதத்தைக் கவிழ்த்துப்போடும் இந்த நாடகம் ஆதரவான மனநிலைகொண்ட பார்வையாளர்களைத் தாண்டி, பொதுவெளியில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்று.