Published:Updated:

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

மூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டி அது செயலூக்கம் கொள்வதற்கான சாத்தியங்களை நாடகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. எல்லா கலாசாரங்களிலும் நாடகத்துக்கு ஒரு தனித்த இடம் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வடிவங்களும், செயல்பாடுகளும் மாற்றமடைந்துவருவதை நாம் பார்க்க முடியும். இன்றைய சினிமாகூட நாடகத்தின் ஒரு வடிவம்தான்.  ஆனால், அது தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கிறது. நாடகமோ என்றைக்கும் மனித உடலைச் சார்ந்திருக்கிறது.  உடல்களின் அசைவுகளும், ஓசைகளும் காலம்காலமாக மனித மனத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கின்றன.  அசைவுகளையும் ஓசைகளையும் அடிப்படையாகக்கொண்ட நாடகம் போன்ற நிகழ்கலைகள் பல்வேறு சுவையுணர்வுகளை எழுப்பிச் சமூகத்தில் பரவலாக மதிப்பீடுகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. ராமாயணம், மகாபாரதம் போன்ற நம்முடைய காப்பியங்களின் கதையாடல்கள் கூத்து போன்ற நாட்டுப்புற நிகழ்வடிவங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே அக்காப்பியங்களின் கலாசார மதிப்பு பரவலாக ஊடுருவிச் சென்றுள்ளதை நாம் பார்க்க முடியும்.

இன்று நாடகத்தின் களன் மாறியுள்ளது.  தனிமை, மனஅழுத்தம், உறவுகளின் சிதைவு, மரணபயம் இவற்றால் பீடிக்கப்பட்டுள்ள தனிமனிதனுக்கு ஸ்பரிசம் மற்றும் கூட்டுணர்வுக்கான தளங்களை நாடவேண்டிய தேவை உள்ளது. அண்மையில் மெரினாவில் கூடிய இளைஞர்களின் சங்கமத்தை இத்தகைய ஒரு தேவையின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கமுடியும்.  இன்று ஒற்றைக் குரல்களின் ஆதிக்கங்களும், அபாயங்களும் பெருகியுள்ள நிலையில் பன்மைக் குரல்கள் மற்றும் சிறுகதையாடல்கள் செயல்படும் தளம் குறித்த தேவை அதிகமாக உள்ளது. அண்மையில் காஷ்மீர் இளைஞர்களின் எதிர்ப்புக் குரல்கள் குறித்த ஓர் ஆவணப்படத்தில் ஓர் இளம்பெண் இசைத்தன்மையுடன்கூடிய ஒரு பாடலை முழக்கமிடும்போது ஒரு பெரும் ஒருங்கிணைப்பு உருவானதைப் பார்க்க முடிந்தது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கலாசாரப் பிடிப்புகள்கொண்ட மனிதவள மேம்பாடு குறித்த விழிப்புஉணர்வு பரவலாகி வருகிறது. சமூகம் மேலும் மேலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்துவரும் நிலையில், மனிதன் தன்னுடைய உடலின் உள்ளார்ந்த ஆற்றல்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான களன்களை நாடவேண்டிய தேவை உள்ளது.

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

இன்றைய பின்நவீனக் காலகட்டத்தில் காப்பியங்களின் மறுவாசிப்பு என்பது உலகம் முழுவதும் ஒரு முக்கியமான அரங்கச் செயல்பாடாக உள்ளது.  சமகால நுண்ணுணர்வுக்கான தளங்களை அவைகளில் அடையாளம் காண்பதும், நுண் அரசியலுக்கான உரையாடல்களை அவைகளில் முன்னெடுப்பதும் இன்று முக்கியமான பின்நவீனச்  செயல்பாடுகளாக உள்ளன. அதற்கு நம்முடைய இலக்கியம், நுண்கலைகள், வரலாறு, தத்துவம் ஆகியவை குறித்த அறிதல் முறைகள் கூர்மைப்பட வேண்டியுள்ளது.  இன்று இயற்கை வளங்கள் நசுக்கப்படும் சூழலில் இயற்கையுடனான நம்முடைய உறவை மீட்கச் சூழலியல் வாதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் ஓர் அரங்க  வடிவத்தைக் கையிலெடுக்க வேண்டிய தேவை உள்ளது. நாடகம் எளிமையாக உடலின் அதிர்வுகளை முன்நிறுத்தி எண்ணற்ற சிறுகதையாடல்களை உரையாடிச்செல்லும் திறன்கொண்டது.  முக்கியமாகப் பால் வேறுபாட்டின் இறுக்கங்கள் நீங்க,  நாடக உடல்கள் சங்கமிக்க வேண்டிய ஒரு கலாசாரக் காலகட்டம் இது.  உலகமயமாக் கலுக்குப் பிறகு, கலாசாரங்களின் தனித்தன்மைகள் முடக்கப்பட்டு வரும் சூழலில் கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் எல்லையற்ற சிறுகதையாடல் தளங்களை வழங்கும் இடமாக இன்று நாடகவெளி உள்ளது.

தமிழில் நாடகத்தின் இத்தகையப் பயன்பாட்டையும், நிகழ்வையும் முன்னெடுப்பவர் களாகத் தீவிரமாக இயங்கிவரும் ச.முருகபூபதி, பிரசன்னா ராமசாமி, பிரளயன் போன்றோரைக் குறிப்பிட முடியும். இவர்களால் அண்மைக் காலங்களில் நிகழ்த்தப்பட்ட செறிவான சில முயற்சிகளைக் கவனப்படுத்த விரும்புகிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

ச.முருகபூபதியின் ‘மாயக்கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி’

ச.முருகபூபதியின் நாடகங்கள் ஒரு நிலவெளி அரங்குக்குரிய தன்மைகளுடன் அதிகாரத்தால் சுரண்டப்படும் பல்வேறு உயிரிகளின் குரல்களை எதிரொலிப்பவை.  இந்த நாடகத்தில் ஆதிக்கத்தால் உருக்குலைந்த எண்ணற்ற வாழ்நிலைகளின் வலிகளைச் சுமந்து வெவ்வேறு வடிவங்களில் பறவைகளாக, பூச்சிகளாக, விலங்குகளாக கோமாளிக் கலைஞர்கள் நாடக நிலத்தின் நினைவுகளுடன் உறவாடுகிறார்கள்.  மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் வலுப்பெற்ற நம் நிலத்தின் இந்தக் கோமாளிகள் வரலாறெங்கும் நிரம்பியுள்ள வாதைகளை, யுத்தத்தின் கதைகளை, கண்காணிப்பு அரசியலை நகையாடும் ஒத்திகைக் களமாக நாடக நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

மலையரசன் முருகன் குறத்தி இணைப்பிலிருந்து உத்வேகம் பெற்று குறத்தியைத் தேடும் விதமாகவே இந்தக் கோமாளிக் காதலர்களின் பயணம் உள்ளது.  வாழ்வின் பொருட்டு நிலம் முழுவதும் விசிறியடிக்கப்பட்டவர்கள் இவர்கள்.  இந்த எளிய மக்களை பொம்மைகளாக்கி பொம்மலாட்டங்கள் யாருக்காகவோ நிகழ்கின்றன. ஆனால், பொம்மைகள் உயிர்பெற்று அதே கயிறுகளால் சூத்திரதாரியை இறுக்கிக் கட்டும் கலகமும் நிகழும்தானே. உலகமெங்கும் சொந்த அரசுகளால் சித்திரவதை செய்யப்படும் மக்கள், குவியல்குவியலாகப் புதைக்கப் படுகின்றனர். குழந்தையின் பிணத்தைப் புதைக்க விரும்பாத தாய், குழந்தையோடு அலைகிறாள் நாடக நிலமெங்கும்.

பாறைக் கோட்டோவியங்கள் முதல் இன்றைய ஓவியங்கள் வரை சமூகம் கலை வழியே தன்னை நிகழ்த்தி உயிர்ப்பித்துக் கொள்ளும் எத்தனங்களை இந்தக் கோமாளிகள் தொடர்ந்தபடி உள்ளனர்.  துணிகளும், கயிறுகளும், கூடைகளும் மனித உடல்களுடன் இணைந்து ஜாலங்களை நிகழ்த்துகின்றன. தமிழ்ச் சமூகத்தின் தொன்மச் சடங்குகளை, சமூக அவலங்களைச் சாடும் கருவிகளாக்கிக் கலக உடல்களை நாடகவெளியில் முன் நிறுத்துகின்றனர் நடிகர்கள். நிகழ்வின் உக்கிரமான இசை மற்றும் காட்சி அதிர்வுகளுடன் இன்றைய நுண்ணரசியல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

பிரசன்னா ராமசாமியின் ‘சக்திக் கூத்து’

கௌரவர் சபையில் அவமானப்படுத்தப்பட்ட திரௌபதியின் உதவியற்ற நிலையை முன் நிறுத்தி பெண்ணுக்கு எதிரான காலம்காலமான வன்முறை குறித்த கலையின் கூக்குரலை இசை, நடனம், கவிதை சூழ ஓர் உக்கிரமூட்டும் அனுபவமாகப் படைத்துள்ளார் பிரசன்னா ராமசாமி. ஈழப் போரை மையமாகக்கொண்டு பொதுவாகப் போர்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களுக்கு எதிரான குரல்களை வெளிப்படுத்தும் இந்த நாடகம் மகாபாரதத்தில் கண்ணன் போன்று உதவ யாருமில்லாத இன்றைய சூழலில் பெண் தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்ட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அவ்வகையில் பாரதியின் சக்தியைப் போற்றும் கவிதைகள் இதற்கான உத்வேகமாக அமைகின்றன.

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்


பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதியின் உக்கிரக் குரல் வெளிப்படுகிறது. அரசனின் மகளாகப் பிறந்து அரசர்களுக்கு வாழ்க்கைப்பட்ட திரௌபதிக்கே பலர் கூடியிருக்கும் அரசவையில் இத்தகைய பாதுகாப்பற்ற நிலை என்றால் எளிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது நாடகம். திரௌபதியின் குரலில் கல்வி நிறைந்த மேலோரின் மௌனத்தைக் கேள்விக்குட்படுத்தும் பாரதியின் மனநிலையை இன்றைய காலத்துக்குப் பொருத்தி, போர்களில் நிகழும் பெண் மீதான வன்முறை, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசு, மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்த எதிர்ப்புக் குரலாக ஒலிக்கிறது இந்த நாடகம், மனிதர்கள் மற்றும் நாடுகளிடையே எல்லா தளங்களிலும் நிகழும் ஆதிக்கப் போராட்டங்களையும் இது நினைவுபடுத்துகிறது.

இலக்கியச் சொல்லாடல்கள், கவிதைகள், தொன்மங்கள், காலங்களின் படிமங்கள், பாத்திரங்கள் என ஒரு பன்முகத் தளத்தில் இயங்குகின்றன பிரசன்னாவின் நாடகங்கள். இசை நடன அசைவுகளின் ஊடாக, இவைகளுக்கிடையிலான நுண்தொடர்புகளையும், லயத்தையும் முன்னெடுப்பவராக இருக்கிறார் இவர்.  இந்த நாடகமும் ஒளியின் லயங்கள் என்பதாகவே படைக்கப்பட்டுள்ளது.  பல்வேறு செவ்வியல், நாட்டார் கலை மற்றும் நவீன இசை நடன வடிவங்களின் கூட்டியக்கத்தில் இவை நுண்சலனங்களை உருவாக்குகின்றன. இந்த அதிர்வுகள் ஒரு சுதந்திர ஆன்மாவின் குரலைத் தட்டி எழுப்புகின்றன.

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

கேள்வி பலவுடையோர், கேடிலா நல்லிசையோர்,
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்,
மேலோரிருக்கின்றீர்.

வெஞ்சினமேன் கொள்கிலிரோ?


என்று துச்சாதனனால் இழுத்துவரப்படும் திரௌபதி கூக்குரலிடும்போது நம் சூழலின் படித்த வர்க்கத்தின் செயலற்ற தன்மை குறித்த பல்வேறு கேள்விகள் தோன்றுகின்றன.  ஈழக் கவிஞர்களின் பாடல்வரிகளில் இதற்கு இணையானதோர் அவலம் உலக அரங்கில் அரங்கேறிக்கொண்டிருப்பதை நாடகம் நினைவுபடுத்திச் செல்கிறது.

பாரதி மற்றும் சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் ஊடாக இசை, நடனம் சூழ நாடகத்தில் ஒரு பெரும் பயணம் நிகழ்கிறது.  பெண் பாத்திரமாக ரோகிணியும், இசை நடனக்காரராக ரேவதிகுமாரும் கர்நாடக ராகங்கள் மற்றும் நாட்டுப்புற நடன வடிவங்கள் சார்ந்து இந்த உணர்வோட்டங்களுக்கு ஒரு செறிவான இயக்கம் அளிக்கின்றனர். நெல்லை மணிகண்டனின் தப்பாட்டமும், உறுமி இசையும் சூழலுக்குத் தேவையான உக்கிரத்தை வழங்குகின்றன. துணிகள் திரைகளாகவும், குறியீடுகளாகவும் சிறப்பான படிமங்களை வழங்குகின்றன. துணிக்கடையில் பல்வேறு இனப்படுகொலைகளின் ரத்தம் தோய்ந்த துணிகளை வாங்குவது, பாஞ்சாலி நீளமான  ‘விக்கை’த் துறப்பது என ஒரு நவீன உரையாடல் களம் நாடகத்தில் உருவாகிறது. சமகாலப் பெண்நிலை மற்றும் அதிகாரச் சூழல் குறித்த பல அதிர்வுகளை ஒரு குறியீட்டுத் தளத்தில் நாடகம் செறிவாகக் கையாள்கிறது

முடக்கப்பட்ட கலாசார உடல்கள் கிளர்ந்தெழும் நாடகவெளி - வெளி ரங்கராஜன்

பிரளயனின் இயக்கத்தில் ‘வஞ்சியர் காண்டம்’

சிலப்பதிகாரக் கதையாடல்களின் பெண்நிலைகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள ஒரு செறிவான நாடகம் இது.  சிலப்பதிகாரத்தின் பெரும்பாலான பெண் பாத்திரங்கள் ஆண்களின் தவறான பார்வைகளால் அல்லலுறுபவர்களாகவும், தாங்கள் செய்யாத குற்றத்துக்குத் தண்டனையை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய துயரங்களின் ஊடாக அவர்கள் பெற்ற விவேகம் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் திறன்களை அவர்களுக்கு வழங்குகிறது.  வழிபாட்டு உணர்வுடன் கண்ணகிக் கோட்டத்தை நாடும் மக்கள்திரளுக்கு நடுவே, கண்ணகியுடன் நேரடித் தொடர்புகொண்ட செவிலித்தாய் காவற்பெண்டு, கண்ணகியின் தோழி தேவந்தி, கண்ணகிக்கு அடைக்கலம் தந்த ஆயர்குலப் பெண் மாதரியின் மகள் ஐயை, கண்ணகியின் அடித்தோழி நாகமணி ஆகிய நால்வரும் கண்ணகியினுடைய  வாழ்க்கையின் துயரச் சம்பவங்களை நினைவுகூர்வதாக நாடகம் அமைந்துள்ளது.  வாழும்போது பெண் உணர்வுகளை மதிக்காது அலட்சியப்படுத்தும் ஆண்கூட்டம் இறந்தவுடன் கோட்டமெடுத்துக் கொண்டாடுவதை வியப்புடனும் விரக்தியுடனும் பார்த்து கையறுநிலையில் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளையும், கண்ணகியுடன் கொண்ட உறவுநிலைகளையும் நினைவுகூர்ந்து உரையாடுவதாக நாடகம் விரிவுகொள்கிறது.  வழிபாட்டுக்கும், நினைவுகூரலுக்குமான இருவேறு படிநிலைகள் முன் நிறுத்தப்பட்டு போர்த்தெய்வம் கொற்றவை வழிபாட்டின் முன் தாங்களே உண்மையில் தோற்கடிக்கப்பட்டதின் வலிகளை உணர இறைஞ்சுகிறார்கள்.

பழங்குடித்தன்மைகொண்ட ஒரு மலைச் சூழலில் வெவ்வேறு படிநிலைகளில் வழிபாட்டு ஊர்வலங்களும், துயர்மிகு வாழ்வுக்கணங்களின் நினைவுகூரல்களுமாகச் செறிவான காட்சிப் படிமங்களுடன் நாடகம் நிகழ்த்தப்பட்டது.  குழுப்பாடல்களும், நடனங்களும், ஊர்வலங்களும் ஒரு தொன்மைச் சித்திரத்தை வழங்கின. வாழ்க்கையின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் எண்ணற்ற மனித நிலைகள் குறித்த பரிவை இச்சிறுகதையாடல்கள் பல தளங்களில் வெளிப்படுத்திச் சென்றன. காப்பியச் சம்பவங்களுடன் நேரடித் தொடர்பற்று ஆனால், அதிகம் பாதிப்புறும் விளிம்புநிலை மக்களின் எதிர்வினைகளும் இணையாக ஒலிப்பதை நாடகத்தில் பார்க்க முடிந்தது.

நிகழ்விடத்தைக் கற்பனையுடனும், படைப்புத்தன்மையுடனும் பயன்படுத்தும் நிலையிலேயே இந்த நாடகங்கள் சமகாலத்துக்குரிய மன அதிர்வுகளை உருவாக்குபவையாக இருக்கின்றன.  இதுபோன்ற செறிவான முயற்சிகள் சிறு குழுக்களால் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இன்றி அவ்வப்போது முன்னெடுக்கப்படும் நிலையிலேயே தமிழ் நவீன நாடகச் சூழல் உள்ளது. இவை நிறுவன பலமின்றி சிறுபான்மை குழுக்களாகவே இயங்கினாலும், சமகாலச் சிந்தனை மற்றும் மனித உறவுநிலைகள் குறித்த உரையாடல்களை முன்னெடுப்பவைகளாக உள்ளன.