Published:Updated:

``வேலையை சுகி... ஸ்டெரெஸ்ஸெல்லாம் போயிடும்"- வழிகாட்டுகிறார் நடிகர் நாசர்! #LetsRelieveStress

``வேலையை சுகி... ஸ்டெரெஸ்ஸெல்லாம் போயிடும்"- வழிகாட்டுகிறார் நடிகர் நாசர்! #LetsRelieveStress
``வேலையை சுகி... ஸ்டெரெஸ்ஸெல்லாம் போயிடும்"- வழிகாட்டுகிறார் நடிகர் நாசர்! #LetsRelieveStress

நாசர்...  தமிழ் சினிமாவின் தனித்துவமான குணச்சித்திரம். நடிப்புப் பயிற்சிக் கல்லூரி மாணவர். கோல்டு மெடலிஸ்ட். அவதாரம், மாயன், உட்பட நான்கு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். அவரிடம் மன அழுத்தம் ஏற்பட்ட தருணங்கள் பற்றியும் அதிலிருந்து மீண்டது பற்றியும் கேட்டோம். 

``எனக்கு இப்போ அறுபது வயசாகுது. சிறுவயசுல மன அழுத்தமெல்லாம் கிடையாது. நான் சிறுவனா இருந்தப்போ இப்போ வளர்ற குழந்தைங்களுக்குக் கிடைக்கிற மாதிரியான வசதிகளோ சூழ்நிலைகளோ கிடையாது. 

அந்தக் காலத்துல எங்களுக்கு மன அழுத்தம், கோபம், டென்ஷன், பிடிவாதம் எதுவும் கிடையாது. `இந்த பொம்மை வாங்கிக் கொடுங்க. அந்த பொம்மை வாங்கிக் கொடுங்க'னுல்லாம் பேரண்ட்ஸை பெருசாத் தொந்தரவு செய்யமாட்டோம். பிளாஸ்டிக்ல ஒரு பெண்குழந்தை பொம்மைதான் அப்போ எல்லோர் வீட்டுலயும் இருக்கும். அதுவும் அதிகவிலை இருக்காது. 

 ஆனா, இப்போ உள்ள குழந்தைங்க காஸ்ட்லியான `டெடி பியர்' பொம்மை கேக்குதுங்க. அதைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டுதான் தூங்குதுங்க. அதை வாங்கிக்கொடுத்தே ஆகவேண்டியிருக்கு. 

அப்போதெல்லாம் விளையாட்டுனா வீட்டுக்கு வெளியேதான். கில்லி தாண்டு, கோலி, பம்பரம் விடுறது, கண்ணாமூச்சி, திருடன்-போலீஸ் விளையாட்டுகளைத்தான் விளையாடுவோம். எல்லாமே உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சி தர்ற விளையாட்டா இருந்துச்சு. ஆனா, இன்னைக்குச் சிறைப்பிடிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் குழந்தைங்க வாழவேண்டியிருக்கு.  

மனிதனைத் தவிர, பூமியில வாழ்ற மத்த உயிரினங்களுக்கு மன அழுத்தம்ங்கிறதே கிடையாது. தனக்கு உயிர் பயம் வரும்போது, அல்லது  தன்னைவிட பலம் வாய்ந்த மிருகம் தன்னைத் தாக்க வரும்போது மட்டும்தான் அதுங்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படும். மற்றபடி அதுங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கைதான். ஆனா, மனிதன் வாழ்க்கை அப்படியில்லை. முன்னேறணுங்கிறதுக்காக சமூகம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறதுதான் நமக்கு மன அழுத்தம் ஏற்பட காரணமா இருக்கு. 

நான் சமீபத்துல ஜப்பானுக்குப் போயிருந்தேன். உலகத்துலயே  வளர்ச்சியடைந்த நாடா ஜப்பான் இருக்கு. அங்குள்ள விஞ்ஞானம், கலாசாரம், பண்பாடு எல்லாமே மிகச்சிறந்த ஒரு ஆர்டர்ல இருக்கு. அங்குள்ள மக்களும் பொதுஇடங்கள்ல சமூக ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலாகட்டும், வயது முதிர்ந்தவர்களை மதிப்பதிலாகட்டும் மற்ற நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த உதாரணமா இருக்காங்க.  ஆனா, அங்குதான் தற்கொலைகளும் அதிகம் நடக்கிறதாச் சொல்றாங்க. 

ஜப்பானோட கம்பேர் பண்ணும்போது நம்ம நாட்டுல ஸ்ட்ரெஸ்னா என்னானு உணராம இருக்கிறதையே ஒரு வரமாதான் நான் நினைக்கிறேன். `வேலைனா அப்படித்தான் இருக்கும்'னு எடுத்துக்கிறதுகூட ஒரு வகையான பாசிட்டிவ் அப்ரோச்தான்.

விஞ்ஞானப் புரட்சி, நவீனத் தொழில்நுட்பப் புரட்சி, ஐ.டி செக்டர், நுகர்வுக் கலாசாரம் இதெல்லாம்தாம் மனிதர்களின் வாழ்க்கையை ரொம்பவும் அழுத்தத்துக்கு உள்ளாக்குது.  

அந்தக் காலத்துல, ஒருத்தருக்கு ஒரு கார் வேணும்னா ஒரு கார்தான் தாயாரிப்பாங்க. அதுவும் அவர் கேட்கிற வசதிகளோட இருக்கும். `ஹென்றி ஃபோர்டு' தான் இந்த நிலையை மாத்தினார். ஒரே மாதிரியான 100 நட்டு, 100 போல்ட்டு, 100 சீட்னு தயாரிச்சு காரை அசெம்பிள் பண்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தார்.

 நூறு வருஷத்துக்கு முன்ன நான் ஒரு கொத்தனார்னா, என் தொழிலை என் பையனுக்குச் சொல்லிக்கொடுப்பேன். அத கத்துக்கிறதுல அவனுக்கு எந்த ஸ்ட்ரெஸும் கிடையாது. அப்போ கல்விங்கிறது ஆத்மார்த்தமா இருந்துச்சு. அதையே  நான் பீஸ் வாங்கிக்கிட்டு மத்தவங்களுக்குக் கத்துக்கொடுத்தா எப்படி இருக்கும்? பணம் கட்டி கத்துகிறப்போ, பணம் பிரதானமானதா ஆகிப்போயிடுது.  

உதாரணமா காரைக்குடியில் `சேவல்' பட ஷூட்டிங்கின்போது ஒரு அருமையான வீட்டைப் பார்த்தேன். அந்த ஓனர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ சொன்னார். அந்த வீட்டைக் கட்டி கொடுத்தவங்களுக்குக் கட்டி முடிக்கும் வரை நல்ல சாப்பாடும் கட்டி முடிச்சதும் இரண்டு செட் வேஷ்டி, சேலைகளும் கொடுத்தோம்னார். இன்னிக்கு அப்படி முடியுமா?  

அப்போ இருந்த மக்களின் தொழில்முறை, வாழ்க்கைமுறை எல்லாமே வேறயா இருந்துச்சு. இன்னிக்கு எதைச் செய்தாலும் எதை யோசித்தாலும் பணத்தை மையமாக வைத்துத்தான் எதையும் யோசிக்க முடியுது. அப்போ கண்டிப்பா ஸ்ட்ரெஸ் வரத்தான் செய்யும்.

ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கிட்டு படிக்கிறது, போயிடுச்சு. அப்போதெல்லாம் வாத்தியார், பையனோட அப்பாவைப் பார்க்கும்போது,  `இவனுக்குக் கணக்கு வரலை ஆனா, தமிழ் நல்லா வருது... தமிழ் பண்டிட் ஆக்குங்க'னு தெளிவாச் சொல்லிடுவார். இன்னிக்கு, ஒரு கிளாஸ்ல 40 ஸ்டூடன்ட் இருக்காங்கன்னா 40 பேரும் `ஃபர்ஸ்ட் ரேங்க்' வாங்கணும்னு பெற்றோரும் சொல்றாங்க, ஸ்கூல் நிர்வாகமும் சொல்லுது. இதனால கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கைனு எல்லா இடத்துலயும் ஸ்ட்ரெஸ் வந்துடுச்சு. நிதானமான வாழ்க்கைமுறையிலேருந்து பதற்றமான ஒரு வாழ்க்கைமுறைக்கு மந்திரிச்சிவிட்ட மாதிரி நாம தள்ளப்பட்டுட்டோம். 

குறிப்பா நான் இருக்கிற சினிமா தொழில் ரொம்பவும் டென்ஷனானதுதான். இந்த சினிமா நான் தேர்ந்தெடுத்தது கிடையாது. நான் பிறவிக் கலைஞன் என்றெல்லாம் என்னைச் சொல்லமாட்டேன். நான் உருவாக்கப்பட்ட கலைஞன்தான்.

மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல பி.யூ.சி. படிச்சி ஃபெயிலாயிட்டேன். ஆனா, ஏர்ஃபோர்ஸ்ல வேலைகிடைச்சுச்சு. 21 வருஷத்துக்கு கான்ட்ராக்ட்ல கையெழுத்துப்போட்டு நாலு வருஷம் வேலை பார்த்தேன். அங்கிருந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்து எங்க அப்பாதான் என்னை நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில சேர்த்துவிட்டார். இந்தத் துறையில என்னை ஈடுபடுத்தினார். இத்தனைக்கும் நான் வீட்டுக்கு முதல் பையன். அவருக்கு என்னவோ மனசுல தோன்றியிருக்கு. 

நான் சினிமாவுல சேரும்போதுதான் முதன்முதல்ல மன அழுத்தத்தை உணர்ந்தேன். காரணம், நான் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்துல இருந்து வந்தவன். அதனால மாதச் சம்பள வாழ்க்கையைத்தான் பெருசா நம்பினேன். சினிமாவுல அது சாத்தியமில்லை. அது இன்னிக்கு வரைக்குமே நிரந்தரமான வருமானம் தரக்கூடியதா இல்லை. 

இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான படங்கள்ல நடிச்சிருக்கேன். நாலு படங்களை இயக்கி இருக்கேன். படம் இயக்கிறதுங்கிறது சுகமான விஷயம். ஆனா, அந்தப் படத்தை வெளியிடுறதுங்கிறது ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான விஷயம். நூறு வருஷ சினிமா சரித்திரத்துல ஒரு படம்கூட டென்ஷன் இல்லாம வெளி வந்ததுகிடையாது.

எனக்கு டென்ஷன், மன அழுத்தம் ஏற்பட்டுச்சுனா புத்தகங்கள் படிப்பேன். அதன் பாதிப்பில என் மனசுல தோன்றுனதை எழுதுவேன். நாடகங்கள் பார்க்கக் கிளம்பிருவேன். மற்றபடி இந்தத் துறையிலிருக்கும் சிரமங்கள் நல்லா தெரியுங்கிறதால என்னால யாருக்கும் பிரச்னை வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். அதுவே நமக்கு வர்ற பிரச்னைகள்ல பாதியைக் குறைச்சுடும். இதற்கேற்ற மனப்பாங்கை நான் வளர்த்துக்கிட்டேன். விளையாட்டுப் போட்டியில, வெற்றி தோல்விங்கிறதை நோக்கிப் போறதைவிட விளையாட்டு சந்தோஷமானதுங்கிற மனநிலைதான் முக்கியம்.

எனக்குப் பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள், `வேலையை சுகி'னு சொல்லிக் கொடுத்தாங்க. `ஸ்ட்ரெஸ்ஸெல்லாம் இருக்கட்டும்... நீ உன் வேலையைப் பாரு'ங்கிறதுதான் நான் கடைபிடிக்கிற வழிமுறை. நான் சந்தோஷமாக வேலை பார்க்க அது ரொம்பவே உதவியா இருக்கு" 

திறந்த புத்தகம் போல் தன் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் நாசர்.