Published:Updated:

`உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்!’ - தாகூர் நினைவுதினப் பகிர்வு

கலைஞர்களை எப்போதும் மரணம் வென்றுவிட முடியாது. தாகூர் தன் படைப்பின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைஞன். 

`உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்!’ - தாகூர் நினைவுதினப் பகிர்வு
`உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்!’ - தாகூர் நினைவுதினப் பகிர்வு

ருநாள் மதிய வேளையில் தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திக்கொண்டு வெளியே கவிஞர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அவரது வெளிநாட்டு விருந்தினர்களும் இருந்தனர். அவர் தபால் நிலையத்தைக் கடக்கும் போது, ஒருவர் ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பெரிய செய்தி ஒன்றும் இருக்காது என்று தனது பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். அருகில் இருந்தவர் கடிதத்தை படிக்கத் தூண்டியதும், உடனே தபாலை பிரித்துப் படித்தார். அதிலிருந்த செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை. அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய `கீதாஞ்சலி‘ படைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதியிருந்தது. அவர் வேறு யாருமல்ல நமது தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர்தான்.

சிந்தனையாளர்களுக்கே உரிய நீண்ட தாடி, ஆடம்பரமில்லாத ஒரு தோற்றம், தீர்க்கமான கண்கள் இவைதாm தாகூர். 1861- ம் ஆண்டில் மே மாதம் 7- ம் தேதி தனது குடும்பத்தின் கடைசி மகனாகப் பிறந்தவர். குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக இருந்ததால் கவிதை, நாவல், நாடகம், சிறுகதை எனப் பல துறைகளில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார். இருந்தாலும், பள்ளிக்கல்வி என்ற வடிவத்தின் மீது நம்பிக்கையற்றவராக இருந்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டவர் தாகூர். திடீரென கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேறி இயற்கையின் எழில்களை ரசிக்க ஆரம்பிக்கிறார். தன் சிறு வயது முதல் தான் இறக்கும் தருவாய் வரையிலும் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பை அளித்துள்ளார். 

பல இலக்கியவாதிகளும் தாகூரின் சிறுகதைகளை வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும்போது, தாகூர் தன்னை கவிஞராக அழைப்பதையே விரும்பினார். காதல், கோபம், விடுதலை, இழப்பு, தனிமை, சமயம், குழந்தை இலக்கியம் என்று தனது எல்லா உணர்வுகளையும் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளார். 

``இந்தியாவே விழிப்பாயிரு…

உன்னுடைய தலை(மை) பணிவுடையதாக இருக்கட்டும்

உன் விடுதலை ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும்"  

என்றும் தன் உணர்வைப் பாடியிருக்கிறார். தாகூர் சிறந்த சொற்பொழிவாளரும் கூட. இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு வரையிலும் சொற்பொழிவாற்றினார்.

1912-ல் ஆங்கிலத்தில் 103 பாடல்களுடன் வெளியான தன்னுடைய கீதாஞ்சலி தொகுப்புக்கு 1913–ல் நோபல் பரிசு பெற்றார். ஐரோப்பாவைத் தவிர்த்து நோபல் பரிசு பெற்ற முதல் மனிதர். ஆசியாவிலும் முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும், இந்தியாவில் இதுவரையிலும் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே மனிதர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

மனித நேயத்தைப் பெரிதும் மதித்த தாகூர் உலகளாவிய சகோதரத்துவம் சார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார். நம்முடைய தேசிய கீதம் மட்டுமல்லாது வங்க தேசத்தின் தேசிய கீதமும் இவர் எழுதியதுதான். ஆகவே, இவற்றின் குறியீடாகத்தான் இவரின் பயணத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

சர்வதேசியவாதம் என்ற கருத்தின் ஒரு கூறாகவும், கல்வி முறையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கனவின் வெளிப்பாடும்தான் இவர் தொடங்கிய `சாந்திநிகேதன்’ கல்வி நிலையம். இங்கு வெளிநாட்டவரும் கூட தங்கிப் படிக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தனது வருவாய் எல்லாவற்றையும் இதற்காகவே செலவழித்தார். தாய்மொழி வழிக்கல்வி இன்றியமையாததாகக் கருதிய தாகூர், ஆங்கிலத்தையும் ஆதரித்தார். குழந்தைகளின் கல்விக்கும், பெண்கல்விக்கும் அதிக முக்கியத்துவத்தை அன்றைய காலகட்டத்திலேயே வழங்கினார். குழந்தை மனப்பான்மையுடன் இருந்தால்தான் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்று நம்பினார். அதனாலேயே, சாந்திநிகேதன் கல்வி நிலையத்தின் மூத்த குழந்தையாகவே தன்னை பாவித்துக்கொண்டார். இந்த சாந்தி நிகேதன் கல்வி நிலையம்தான் தற்போது விஷ்வ பாரதியாக வளர்ந்து நிற்கின்றது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், சாந்தி நிகேதனில் பிறந்தார். தாகூரின் கருத்துகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பிரபல இயக்குநர் சத்யஜித் ரே இருவரும் சாந்தி நிகேதனில் படித்தவர்கள். தாகூரின் எழுத்துகள் சத்யஜித்ரேவைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

பெண்களை மைய கதாபாத்திரமாகக் கொண்ட தாகூரின் `THE BROKEN NEST’ என்ற குருநாவலை `சாருலதா’ என்ற பெயரில் திரைப்படமாக்கினார் ரே. தாகூர் எப்படி முதல் நோபல் பரிசை வென்றாரோ, அதேபோல அவரது கல்வி நிலைய மாணவனும் இந்தியாவின் முதல் ஆஸ்கரை வென்றார். தாகூரின் பல கதைகளை சத்யஜித் ரே திரைக்காவியமாக்கினார். தாகூரும் சத்யஜித் ரேவும் ஓவியர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாகூரின் பல சிறுகதைகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் காபுலி வாலா என்ற கதை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு கதை, குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கதை.

வங்கத்தில் மிகப்பெரிய எழுத்தாளரான  சரத் சந்திரர், தாகூரை `குருதேவ்’ என்றே அழைப்பார். ஒருமுறை வாசகர் ஒருவர், `நீங்கள் தாகூரை குருதேவ் என்று அழைக்கிறீர்கள். ஆனால், அவர் எழுதுவது எதுவும் புரியவில்லையே’ என்று கேட்க, சரத் சந்திரர், `நாங்கள் உங்களுக்காக எழுதுகிறோம். தாகூர் எங்களுக்காக எழுதுகிறார்’ என்றாராம்.

இதேபோல, தன்னைவிட வயதில் மிக சிறியவரான புரட்சிகர கவிஞர் நஸ்ருலுக்குத் தன்னுடைய புத்தகத்தைச் சமர்ப்பித்தார். நஸ்ருல் சிறையிலிருந்தபோது அங்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். தாகூர் தொடர்ந்து கடிதம் எழுதியபின் அதை நிறுத்திக்கொண்டார். தமிழின் மகாகவி பாரதியாரும்கூட தாகூரை `கீர்த்தியடைந்தால் மஹான் ரவீந்திரரைப் போல கீர்த்தியடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. மொழி பெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி’ என்று புகழ்ந்துள்ளார்.

நோபல் உட்பட பல விருதுகளை வென்ற தாகூருக்கு பிரிட்டிஷ் அரசும் அவர் புலமையைப் பாராட்டி `சர்’ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன் `சர்’ பட்டத்தைத் திருப்பியளித்தார். விடுதலைக்கான தன் குரலையும், பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்துக்குத் தனது எதிர்ப்பையும் தொடர்ந்து தன் படைப்புகள் மூலம் தெரிவித்து வந்தார். விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய காந்தியோடு மிகுந்த நட்புணர்வு கொண்டிருந்தார்.

என்றும் கற்றுக்கொண்டிருக்கும் தாகூர் தன்னுடைய 60 வயதில்தான் ஓவியங்கள் வரையத் தொடங்குகிறார். சுமார் 5,000 ஓவியங்களை வரைந்துள்ள தாகூரின் ஓவியங்களுள் சில புகழ்பெற்றவை. 

சூரியன் மறையும் அந்திம நேரத்தில் தனிமையில் அமர்ந்து, மரத்தின் நிழற்தோற்றத்தை ரசித்த தாகூர் 1941 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். குழந்தைகளின் மனம், தெளிவான சிந்தனையுடன் சுதந்திரத்தையும் தனிமையையும் விரும்பி வாழ்ந்த தாகூர், இந்திய இலக்கியத்தில் மறுமலர்ச்சி செய்தவர். கலைஞர்களை எப்போதும் மரணம் வென்றுவிட முடியாது. தாகூர் தன் படைப்பின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைஞன்.