Published:Updated:

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!
முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

டந்த 10 நாள்களாக தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் சென்னை காவேரி மருத்துவமனையில்தான் குவிந்திருந்தது. முதுமையும் நோய்மையும் வாட்ட, வதங்கிய பூப்போல கருணாநிதி சிகிச்சைபெற்றது அங்குதான். ஜனாதிபதியும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர்  கவலைதோய்ந்த முகத்தோடு  மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்தார்கள். 'எப்படியும் மீண்டு வந்துவிடுவார்' என்ற நம்பிக்கையுடன் காத்திருந்திருந்த தொண்டர்கள், இன்று துயரத்தில் தவிக்கிறார்கள்.  மாலை 6.10 மணிக்கு  கருணாநிதி காலமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

செப்டம்பர் 2016-க்கு முன்புவரை தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மிகப்பெரிய உடல்நலப் பாதிப்புகள் எதுவுமில்லை. 2000 மே மாதத்தில் முதுகுவலிக்காகவும், 2008 மே மாதத்தில் கழுத்துவலிக்காகவும் ஓரிரு நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார். மற்றபடி, உடல்நிலை சரியில்லையென்று அவர் படுத்ததில்லை. உடல் எடையைத் தாங்கும் சக்தி கால்களுக்கு இல்லாமல் போனதால், சில ஆண்டுகளுக்கு முன்பு சக்கர நாற்காலிக்கு மாறினார் கருணாநிதி. அதற்குப் பிறகான பாதிப்புகள்தான், அவரை முழுவதுமாக முடக்கிப்போட்டன. 

2016 செப்டம்பரில் முதல்முறையாக நெஞ்சு சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பிரச்னைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளால் ஒவ்வாமை ஏற்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அவரின் உடல் முழுவதும்  கொப்புளங்கள் வந்தன. மருத்துவர் கோபால் தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சையளித்தது.  கொப்புளப் பிரச்னைக்குத் தோல் மருத்துவர் இயேசுதாசன் சிகிச்சை கொடுத்தார். அதன்பின் முழுமையாக ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்தக் கொப்புளங்களின் ரணம் வாட்ட, இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்பட்டார் கருணாநிதி. படுக்கையில் மாற்றங்கள் செய்தும் அவருக்கு அதே பிரச்னைகள் தொடர, டிசம்பர் ஒன்றாம் தேதி  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரே வாரத்தில்  குணமடைந்து வீடு திரும்பினார் கருணாநிதி.

மீண்டும் ஒரு வாரத்தில் அவருக்கு சுவாசக் கோளாறும் நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது. அப்போதுதான், அவருக்கு முதல்முறையாக ’ட்ரக்கியோஸ்டமி ட்யூப்’ பொருத்தும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. 

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

இயற்கையாகச் சுவாசிக்க முடியாத நேரத்தில், வாய் மற்றும் மூக்கின் உதவியின்றி நேரடியாக நுரையீரலுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் கருவிதான் ’ட்ரக்கியோஸ்டமி’. தொண்டையில் துளையிட்டு இதைப் பொருத்துவார்கள். காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கருணாநிதிக்கு அந்தக் கருவியைப் பொருத்தினார். அறுவைசிகிச்சை முடிந்து, ஒரு வாரத்தில் வீடு திரும்பினார் கருணாநிதி. அதற்குப் பிறகு, எட்டு மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். தேவையானபோது மருத்துவர்கள் வந்து சிகிச்சையளித்தனர். அதன்பிறகு, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் அவர் தவிர்த்துவந்தார்.

2017, ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த ’ட்ரக்கியோஸ்டமி டியூப்’ அகற்றப்பட்டு, இரண்டாவது முறையாகப் புதிய டியூப் பொருத்தப்பட்டது.  2018  ஜனவரியில் பல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். 2018 பிப்ரவரி 15-ம் தேதி, அவருக்கு மூன்றாவது முறையாக, ’ட்ரக்கியோஸ்டமி டியூப்’ மாற்றப்பட்டது. 

இதற்கிடையே, தொண்டையில் ’ட்ரக்கியோஸ்டமி டியூப்’ இருப்பதால், உணவு எடுத்துக்கொள்வது பிரச்னையானது. அதனால், வயிற்றில் துளையிட்டு, ’பெக் டியூப்’ (Percutaneous endoscopic gastrostomy -PEG) வழியாக அவருக்கு உணவளித்துவந்தார்கள். வயிறு இரைப்பை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி இதற்காக சிகிச்சை தந்தார்.   

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கருணாநிதிக்கு ஜூலை 18-ம் தேதி நான்காவது முறையாக காவேரி மருத்துவமனையில் ’ட்ரக்கியோஸ்டமி கருவி’ மாற்றம்செய்யப்பட்டது. அன்றிரவே வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால் எழுந்த காய்ச்சல் அவரை வாட்டியெடுத்தது. உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைய,  அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை தந்தனர். இந்த நிலையில், திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே, ஜூலை 28-ம் தேதி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ஆம்புலன்ஸில் அவர் அழைத்துச் செல்லப்பட்டது இதுவே முதல்முறை. காவேரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள  ஐ.சி.யூ பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 

28-ம் தேதி இரவு, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. குறிப்பாக, ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, இதயத்துடிப்பும் குறைவாக இருந்தது. ஆனால், உடலின் பிற உறுப்புகள் சீராக இயங்கின. மறுநாள் காலை அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால். கருணாநிதியின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகழ்பெற்ற கல்லீரல் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா, கடந்த வாரம் இரண்டு முறை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலையைப் பரிசோதித்தார். 

முதுகுவலி முதல் கல்லீரல் பாதிப்பு வரை... கருணாநிதியின் மெடிக்கல் ரிப்போர்ட்!

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியது. கல்லீரல் பாதிக்கப்பட்டதால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய்த்தொற்றும் ஏற்பட்டது. அதன்வீரியம் அதிகமாக இருந்ததால், சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. மஞ்சள் காமாலை நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளும் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை. இந்த நிலையில், நேற்று காலை முதல் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகிக்கொண்டே வந்தது. சிறுநீரகம் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, உடலுக்குள் செல்லும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் என அடுத்தடுத்த தொடர் பாதிப்புகளால் நிலை மோசமானது. உறுப்புகளின் இயக்கத்தைச் சீராக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம், கருணாநிதியின் வயது மூப்புதான் என்கிறார்கள்.

கருணாநிதிக்கு சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ இருந்ததில்லை. அந்த ஒரு காரணத்தினால்தான் கல்லீரல் பாதிக்கப்பட்ட பிறகும், அவர் உடல் உறுப்புகள் ஓரளவுக்கேனும் இயங்கிவந்தன. ஆனால், நேற்று மாலைமுதல், ஒவ்வோர் உறுப்பாக செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. மருத்துவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை. 

ஜூலை  28-ம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த கருணாநிதி, 11 நாள்களுக்குப் பிறகு, சிகிச்சை பலனின்றி காலமானார்.  

அடுத்த கட்டுரைக்கு