Published:Updated:

கருணாநிதி பள்ளிகளில் கணினியைத் துணைப் பாடநூலாக்கியது எந்த ஆண்டு தெரியுமா?

கருணாநிதி பள்ளிகளில் கணினியைத் துணைப் பாடநூலாக்கியது எந்த ஆண்டு தெரியுமா?
கருணாநிதி பள்ளிகளில் கணினியைத் துணைப் பாடநூலாக்கியது எந்த ஆண்டு தெரியுமா?

எவ்வளவு தூரம் ஓடுகிறோமோ அவ்வளவு உயரம் தாண்ட முடியும்” என்பார் கருணாநிதி. ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் கலந்துகொண்டது உயரம் தாண்டுதல் போட்டியல்ல; தடை ஓட்டம். ஓடிக்கொண்டே தடைகளைத் தாண்டியவர் கருணாநிதி. கணினியை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?

ருணாநிதிக்குப் பல முகங்கள்; பல அவதாரங்கள். அரசியல்வாதி, பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, சமூகப் போராளி, கட்சித் தலைவர் என அந்தப் பட்டியல் அவர் வயதைத் தாண்டி நீளும். இந்த நீளமான பயணத்தில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் தொழில்நுட்பத்தின் மீதான அவரின் அறிவும் நம்பிக்கையும். தொழில்நுட்பம் மட்டுமல்ல; மொழி, சட்டம், அதிகாரம் என எதுவுமே மக்கள் நலனுக்காகப் பங்காற்ற வேண்டுமென்பதில் கருணாநிதி திடமாக இருந்தார். மக்களுக்கு உதவாத எதுவும் பெரிதில்லை; அல்லது எந்தப் பெரிய விஷயமும் மக்கள் நலனுக்குப் பங்காற்ற வேண்டும். அதுதான் கருணாநிதியின் எண்ணமாக இருந்தது.

94 ஆண்டுகளில் தொழில்நுட்பம் தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை அதன் முகம் மாறும்போதும், அதை வரவேற்று அதற்கேற்ற விஷயங்களை திறம்படச் செய்தவர் கருணாநிதி.

வானொலி:

இந்தியாவின் முதல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது 1923ல். அப்போது கருணாநிதி பிறக்கவும் இல்லை. அவர் பிறந்தது 1924ல். ஆனால், வானொலியை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர்களில் முதன்மையானவர் கலைஞர். ``தலைவர் குரலை முதல்ல ரேடியோலதாம்ப்பா கேட்டேன். அப்புறம்தான் அவர் எப்போ மீட்டிங் பேசினாலும் போய் உக்காந்துடுவேன்” என்னும் உடன்பிறப்புகள் இன்றும் ஏராளம் உண்டு.

தொலைக்காட்சி:

ரேடியோவுக்குப் பிறகு தொலைக்காட்சி வந்தது. பொழுதுபோக்காக மட்டுமே இருந்த தொலைக்காட்சி ஒரு கட்டத்தில் உலகைத் தெரிந்துகொள்ள உதவும் கருவியானது. அமெரிக்காவை அன்னனூர் குடிசைக்குத் தொலைக்காட்சியால் கொண்டு வர முடியும் என்பதைக் கருணாநிதி உணர்ந்தார். தமிழக மக்களுக்குத் தொலைக்காட்சியை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்; அதைச் செய்தும் முடித்தார். இன்றும் கிராமப்புறங்களில் அந்தத் தொலைக்காட்சி வழியே கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் பல ஆயிரம் பேராவது இருக்கும். 

கணினிக்காலம்:

உலகமயமாக்கலுக்குப் பிறகு மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் அதிகமாக நுழையத் தொடங்கின. அவற்றை வரவேற்கும் விதமாக டைடல் பார்க்கும் தொடர்ந்து ஐ.டி. பார்க் பலவற்றையும் கொண்டு வந்தவர் கருணாநிதி. அதற்கென தனி அமைச்சகத்தையும் உருவாக்கினார். இந்தத் துறையில்தான் இனி அதிக வேலைவாய்ப்பு என உருவான சமயம். கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பொறியியல் படிக்க ஏதுவாகக் கிராமப்புற மாணவர்களுக்குத் தனி ஒதுக்கீடும், நுழைவுத் தேர்வை ரத்து செய்தும் உத்தரவிட்டவர் கருணாநிதி. மென்பொருள் துறையில் தமிழக மாணவர்கள் அதிகமானோர் பங்காற்ற உதவின இந்த இரண்டு உத்தரவுகளும். 

லேப்டாப்கள் தனி மனிதனுக்கு மிகப்பெரிய பலம் என்பதையும் கருணாநிதி உணர்ந்திருந்தார். அதனால்தான் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் என்பதை 2011ல் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதையே சில தினங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவும் அறிவித்து, பின்னர் ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு வழங்கினார். 

வேறு என்னவெல்லாம் செய்திருக்கிறார் எனப் புதுக்கோட்டை அப்துல்லாவிடம் கேட்டபோது ``1969ல் கலைஞர்தான் பாடநூல் வாரியத் தலைவர். அப்போதே கம்ப்யூட்டர் பற்றிய துணைப் பாடத்தை பள்ளிகளில் வைத்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்தபோது செமி கண்டக்டர்தான் கணினி உலகின் முக்கிய விஷயம் என்பதை உணர்ந்து அதற்கும் தனிப் புத்தகம் கொண்டு வந்தார்” என்றார்.

சமூக வலைதளங்கள்:

கடிதம் எழுதிய காலத்திலிருந்து ட்விட்டரில் அறிக்கை வெளியிடும் வரை எல்லா டெக்னாலஜியிலும் தன்னை இணைத்துக்கொண்டார் கருணாநிதி. பெயருக்கு ஒரு அக்கவுன்ட் என்றில்லாமல், தினமும் ஆக்டிவாகவே இருந்தன அவரது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள். இனி சமூக வலைதளங்கள்தாம் மாற்றத்திற்கான விதைகள் என்பதைக் கலைஞர் உணர்ந்து களமிறங்கியபோது அவரது வயது 89. அதனாலே ஐடியில் அந்த வயதையும் சேர்த்திருந்தார் இந்த டெக்னாலஜி காதலன். சொல்லப்போனால் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் ஐ.டி. விங் கருணாநிதிதான். அவர் தொண்டர்கள் அதைப் புரிந்து செயல்படத் தொடங்கியது சென்ற ஆண்டில்தான்.

``எவ்வளவு தூரம் ஓடுகிறோமோ அவ்வளவு உயரம் தாண்ட முடியும்” என்பார் கருணாநிதி. ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் கலந்துகொண்டது உயரம் தாண்டுதல் போட்டியல்ல; தடை ஓட்டம். ஓடிக்கொண்டே தடைகளைத் தாண்டியவர் கருணாநிதி. அவருக்கு உலகத் தரத்திலான, அட்வான்ஸ்டு மருத்துவமுறைகள் தரப்பட்டன. தனது கடைசி மூச்சு வரை அப்டேட் ஆக இருந்தவர் கருணாநிதி. ஒருவேளை எதிர்காலத்தில் இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் தொழில்நுட்பம் வந்தாலும் வரலாம். அப்படி வந்தால், அதன் மூலம் முதல் உயிர்த்தெழுவது கருணாநிதியாகத்தான் இருக்கும். அவரது ட்ராக் ரெக்கார்டு அப்படி!

அடுத்த கட்டுரைக்கு