Published:Updated:

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்... வார்த்தைகளை மட்டுமன்றி வாழ்க்கையையும் மாற்றிய கருணாநிதி!

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்... வார்த்தைகளை மட்டுமன்றி வாழ்க்கையையும் மாற்றிய கருணாநிதி!
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்... வார்த்தைகளை மட்டுமன்றி வாழ்க்கையையும் மாற்றிய கருணாநிதி!

`நடமாடும் கோயிலாக விளங்கும் மனித உடலைச் சீராக கவனித்துக்கொண்டாலே உள்ளமெனும் ஜீவஒளி பிரகாசிக்கும்' என்று அடிக்கடி கூறுவார் கருணாநிதி. அதனாலேயே தனது ஆட்சியில் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்தியாவிலேயே தமிழகம் சுகாதாரத்துறையில் முன்மாதிரி மாநிலமாக விளங்குவதில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு முன்னோடித் திட்டங்களை சுகாதாரத்துறையின்மூலம் கொண்டுவந்து, இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாகச் சென்னையை மாற்றியதிலும் அவரது பங்கு அதிகம்.  

தனது முதல் ஆட்சிக் காலத்தில் தொழுநோயாளர் மறுவாழ்வு இல்லங்கள், கண்ணொளித் திட்டத்தின் கீழ் இலவச கண்சிகிச்சை முகாம்கள் கொண்டு வந்தார். கருணாநிதி முதல் முறையாக முதல்வராகப் பதவி ஏற்ற காலத்தில், பள்ளி மாணவர்களுக்கான `கண்ணொளி வழங்கும் திட்டத்தை' அறிவித்தார். இதன்மூலம் 30 லட்சம் மாணவ மாணவிகள் கண் குறைபாடுகளுக்கான சிகிச்சை பெற்றனர். தாய் - சேய் நலத்திட்டங்கள் மூலம் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. 

கருணாநிதி ஆட்சியில்தான் மருத்துவமனைகளுக்கான உயர்ரக உபகரணங்கள் அதிகம் வாங்கப்பட்டன. சி.டி. ஸ்கேன் கருவிகள், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவிகள், ரத்தப் பரிசோதனைகளைத் துல்லியமாக உடனுக்குடன் அறிய உதவும் செமி-ஆட்டோ அனலைசர் (Semi-Auto Analyser) கருவிகள், மருத்துவப் பரிசோதனைக்காக மனித உறுப்புகளை வண்ணத்தில் படம் பிடித்துக் காட்டும் கலர் டோப்லர் (Colour Doppler) கருவிகள் எல்லாம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தன.  

தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும் `முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம்' 1989-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. குழந்தைகள் நலம் காக்க போலியோ ஒழிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து இந்தியாவுக்கே வழிகாட்டினார். (According to National Polio Surveillance Programme - W.H.O. Report). ஹெச்ஐவி பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி மழலையர் நலம் பேணும் திட்டத்தில் 1996-2001 காலகட்டத்தில் தமிழகம் இந்தியாவிலே முதலிடம் வகித்தது. அதைப்போலவே குழந்தைகள் மரண விகிதத்தைப் பெருமளவு குறைத்ததிலும் தமிழகம் மகத்தான சாதனை புரிந்தது. கிராமப்புற கழிவறைகள், பெண்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் எனச்  சிறப்பாகச் செயல்பட்டதற்காக 2000-வது ஆண்டில் அகில இந்திய அளவில் பாராட்டுதலைப் பெற்றதோடு ஜே.ஆர்.டி. டாட்டா விருதையும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசையும் சென்னை மாநகராட்சி பெற்றது. 

`வருமுன் காப்போம் திட்டம்'  பல லட்சம் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ உதவியைப் பெற்றுத்தந்தது. இத்திட்டத்தின் மூலம் 2006 - 2011-ம் ஆண்டுகளில் 14 ஆயிரத்து 594 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் சேவை இவருடைய ஆட்சிக்காலத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டது. 

24 மணிநேர மருத்துவ சேவைத் திட்டம், சுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்டன. கால்நடை பாதுகாப்புத் திட்டத்தை விரிவாக்கம் செய்து ஆசியாவிலேயே முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது இவரது மகத்தான சாதனை. கண்  உள் ஆடிகளுக்கு விற்பனை வரியை அறவே நீக்கினார். கண் சிகிச்சைப் பிரிவுகள், கண்புரை அறுவை சிகிச்சைகள் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தொடங்கியதும் இவரது முயற்சியே. 

60 வயதுக்கு மேற்பட்ட பரம்பரை சித்த வைத்தியர்களுக்கான சிறப்பு மாத உதவித் தொகையை 150 ரூபாயிலிருந்து 500 ஆக உயர்த்தியவர் கருணாநிதி. முறைப்படி சித்தவைத்தியம் செய்யும் மருத்துவர்களின் நலன் காக்க சட்டமும் கொண்டு வந்தார். 1997-ம் ஆண்டு `தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சித்த மருத்துவர்களின் நலனைப் பாதுகாத்தார். 

1997-98-ம் ஆண்டில் புற்றுநோய், இதய நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்படும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  

கருணாநிதி ஆட்சியில் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. `ஊனமுற்றோர்' என்ற வார்த்தையை `மாற்றுத்திறனாளிகள்' என்று சட்டபூர்வமாக மாற்றினார். அவர்களுக்குச் சிறப்புத்திட்டங்கள், சிறப்பு இட ஒதுக்கீடுகள், உதவித்தொகைகள்  வழங்கும் திட்டங்களையும் கொண்டுவந்தார். திருநங்கையர்களுக்கும் பல நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வார்தைகளை மட்டும் மாற்றாமல் அவர்களின் வாழ்வையே அந்தத் திட்டங்கள் மாற்றின. `வெண்குஷ்டம்' என்ற வார்த்தையை மாற்றி `வெண்புள்ளி நோய்' என்று அரசாணை வெளியிட்டவரும் கருணாநிதிதான். கர்ப்பிணிகளுக்கான விடுப்பு நாள்களை அதிகரித்தது, கர்ப்பிணிகளுக்கான முழு பரிசோதனைத் திட்டங்கள், பயிற்சி மருத்துவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தியது, ஸ்டான்லி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி உலக அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் சாதனை புரிய வைத்தது எல்லாம் இவரது ஆட்சியின் முத்திரைத் திட்டங்களே. 

முதியோர் நலனுக்காகவும் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தை 2007-ம் ஆண்டு கொண்டு வந்து அவர்களுக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கினார். 

 `கலைஞர் காப்பீடுத் திட்டம்' மருத்துவத்துறையில் பல மாற்றங்களை விதைத்தது. மருத்துவத்தை தனியார்மயமாக்கும் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டாலும் பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றார்கள். இந்தத் திட்டத்தின்மூலம் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறும் வாய்ப்பு கிடைத்தது. 

சுகாதாரத்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட கருணாநிதியின் இறப்பு அத்துறை சார்ந்த ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது!