Published:Updated:

``கலைஞருக்குப் பிடித்த கறுப்பன்; அவர் வளர்த்த `கறுப்பஞ்செடி!’ ’’ - வாகை சந்திரசேகர்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் வாகை சந்திரசேகர்.

``கலைஞருக்குப் பிடித்த கறுப்பன்; அவர் வளர்த்த `கறுப்பஞ்செடி!’ ’’ - வாகை சந்திரசேகர்
``கலைஞருக்குப் பிடித்த கறுப்பன்; அவர் வளர்த்த `கறுப்பஞ்செடி!’ ’’ - வாகை சந்திரசேகர்

``எனக்கு 12 வயசு இருக்கும்போது திண்டுக்கலில் தேர்தல் பிரசாரத்துக்கு கலைஞர் ஐயா வந்திருந்தார். அவரை தூரத்தில் இருந்து பார்த்தேன். அதுதான் நான் முதல்முறையா அவரைப் பார்த்த தருணம்...’’ எனப் பேச ஆரம்பித்தார் வாகை சந்திரசேகர்.

``சின்ன வயசுலேயே தலைவர் மேல அவ்வளவு ஈடுபாட்டோட இருப்பேன். அவர் எழுதிய ’பராசக்தி’, ’மனோகரா’ வசனங்களை எல்லாம் மனப்பாடமா வெச்சிருந்தேன்; இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். வசனங்களை மனப்பாடம் பண்ணி, நல்லா பேசுனதுனால, நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சு, சினிமாவுக்கும் வந்தேன். படங்கள் நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஒருநாள் தலைவரை கோபாலபுரத்தில் சந்திக்கப் போனேன். என்னைப் பார்த்து, `உன்னோட ‘பாலைவனச்சோலை’, `சுமை’, `சிவப்பு மல்லி’ படங்கள் எல்லாம் பார்த்திருக்கேன். சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்கு அப்புறம் நல்லா தமிழ் பேசுற நடிகன் சினிமாவுக்குக் கிடைச்சிருக்கான்’னு தலைவர் சொன்னதும், எனக்கு செம குஷி. அவர் வாயால இந்தப் பாராட்டை கேட்டதற்குப் பிறகு வேறென்ன வேணும். அன்றைக்கு இருந்து தலைவரோட நெருங்கிப் பழக்கக்கூடிய ஆளா இருந்தேன். வாரம் இரண்டு முறை அவரை நேரில் சந்திச்சிடுவேன். வெளியூரில் இருந்தா போனில் பேசிப்போம். 

1990-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நானும் கட்சிப் பணிகள் செய்ய ஆரம்பிச்சேன். திண்டுக்கலில் எம்.பி தேர்தலில் போட்டியிட வைத்தார்; தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தோட செயலாளராக என்னை நியமிச்சார்; 2016 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வைத்தார். என்மேல மிகுந்த பாசத்தோடு இருப்பார். நான் கொஞ்சம் முரண்டு பிடிப்பேன்; அவர்கிட்டேயும் சில நேரங்களில் விவாதம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் நிறைய அறிவுரைகள் கூறுவார். சின்ன வயசுலேயே என் அப்பா இறந்துட்டார். எனக்கு ஒரு நல்ல தலைவனாகவும் தகப்பனாகவும் தலைவர் கலைஞர்தான் இருந்தார்.  

2016 தேர்தலில் திருவான்மியூரில் நடந்த பிரசாரத்துக்கு எனக்கு ஆதரவு கேட்டுப் பேச வந்தார். ரிசல்ட் அன்னைக்கும் வேளச்சேரி தொகுதியோட முடிவை மட்டும் ரொம்ப தாமதமா வெளியிட்டாங்க. அதை டிவியில் பார்த்துக்கிட்டு இருந்த தலைவர், என்னை நேரில் பார்த்ததும், ‘சந்தர் உன் தொகுதியோட முடிவை மட்டும் ரொம்ப லேட்டா சொன்னாங்க. இருந்தாலும் நீ ஜெயிச்சிடுவனு எனக்குத் தெரியும்’னு சொன்னார். என்னை அவர் 'சந்தர்'னுதான் கூப்பிடுவார். நான் எப்போதும் அவரை 'அப்பா'னுதான் கூப்பிடுவேன்.

தலைவருக்கு நாய் ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு போயிருந்தபோது அங்கே ஒரு குட்டி நாய் இருந்தது. ’இது யாருடையது’னு அந்த ஹோட்டல்காரர்கிட்ட கேட்டதும், ‘தெரியலை சார். யாரோ விட்டுட்டுப் போயிட்டாங்க’னு சொன்னார். அந்த நாயை நான் தூக்கிட்டு வந்துட்டேன். அது ஒரு பேப்பர்ல குட்டி செய்தியாகூட வந்தது. அதைத் தலைவர் பார்த்து, `என்னய்யா கருப்பன் என்ன பண்றான்’னு கேட்டார். அந்தச் சமயம் அவர் வளர்த்த ஒரு நாயைப் பற்றியும் சொன்னார். கனிமொழி ஒரு கறுப்பு நாயைச் செல்லமா வளர்த்திருக்காங்க. அந்த நாய் இறந்ததுக்கு அப்புறம் அதை வீட்டுலேயே புதைச்சு, அந்த இடத்தில் ஒரு செடியை வளர்த்திருக்காங்க. அந்தச் சம்பவத்தை வெச்சு `கறுப்பஞ்செடி’னு ஒரு சிறுகதை எழுதினதா தலைவர் சொன்னார். இப்படி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துப்பார்.

எனக்கு தேசிய விருது கிடைச்சப்போ முதல் போன் தலைவர்கிட்ட இருந்துதான் வந்தது. ஒருமுறை எனக்குப் படப்பிடிப்பில் அடிபட்டபோதும் முதல் போன் தலைவர்கிட்ட இருந்துதான் வந்தது. அந்தளவுக்கு அக்கறையும் அன்புமாய் இருப்பார். என்னோட கல்யாணத்தைத் தலைவர்தான் நடத்தி வெச்சார். என்னோட மகன், மகள் கல்யாணத்தப்போ அவருக்கு உடம்பு சரியில்லாதனால நேரில் வர முடியல. அதனால, என் மகன், மகளை அவர் வீட்டுக்கு அழைச்சு ஆசிர்வாதம் பண்ணினார். எனக்கு பேத்தி பிறந்தப்போ அவரிடம் போய் காட்டினேன். அப்போது நான் எழுதின ஒரு கவிதையை அவர் காதில் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு, என் கையில் முத்தம் கொடுத்தார். அந்தக் கவிதை முரசொலி பத்திரிகையிலும் வெளியானது. 

என் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியம், தலைவர் கலைஞர் மாதிரி நான் நடிச்சதுதான். `நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து நாடகமாகப் போட்டேன். அதில் அவரோட 25 வது வயது, 45 வது வயது, 80 வது வயது... இப்படி மூன்று தோற்றத்தில் நடிச்சேன். இந்த நாடகத்துக்கு, ‘பேனா ஒரு போர்வாள்’னு தலைவர்தான் பெயர் வெச்சார். `25 வயது, 45 வயது ஓகே. உன்னால என்னோட 80 வயது தோற்றத்தில் நடிக்க முடியுமா’னு தலைவர் கேட்டார். `முதலில் உங்களுக்கு மட்டும் தனியா நடிச்சுக் காட்டுறேன். உங்களுக்குப் பிடிச்சா நாடகமாகப் போடலாம்’னு சொன்னேன். முழு நாடகத்தையும் பார்த்துட்டு அதைத் திண்டுக்கல் மாநாட்டில் நாடகமாகப் போடச் சொன்னார். பிறகு ஒருநாள், `இந்த நாடகத்தைப் படமாகவே எடுக்கலாம்’னு அவர்கிட்ட சொன்னேன். 'என் கதாபாத்திரத்துக்கு நீ பொருத்தமா இருப்ப... மற்ற கதாபாத்திரங்களுக்கும்  அதேமாதிரி அமையணுமே!’னு சொன்னார். இந்தப் படம் சம்பந்தமா பாரதிராஜா சார்கிட்டேயும் பேசியிருந்தேன். அப்புறம், அது அப்படியே நின்னுடுச்சு. இப்படி மறக்கவே முடியாத பல விஷயங்கள் தலைவருக்கும் எனக்கும் இருக்கு. அது என்றைக்குமே அழியாமல் இருக்கும்’’ - என மறைந்த கருணாநிதி குறித்து தன் நினைவுகளை மீட்டெடுத்துப் பகிர்ந்தார் வாகை சந்திரசேகர்.