Published:Updated:

காங். நிலைப்பாடு மாறினால் மறுபரிசீலனை: டி.ஆர்.பாலு

Vikatan Correspondent

சென்னை, மார்ச்.5,2011

தொகுதிப் பங்கீடு விஷயத்தில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை (தொகுதிகளின் எண்ணிக்கை) மாற்றிக் கொண்டால் மட்டுமே திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். (தொடர்புடையச் செய்தி: கூட்டணி முறிந்தது... மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகல்: உயர்நிலைக் குழு கூட்டத்தில் அதிரடி முடிவு) ##~~##

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு பின்னர் நிருபர்களிடம் கூறியது:

பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 6 பேரும் சந்தித்த பின்னரே ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார்கள். மாறாக, ராஜினாமா கடிதத்தை ஃபேக்ஸ் மூலமாக அனுப்பும் திட்டம் இல்லை.

அவர்கள் (காங்கிரஸ்) தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கோண்டால், கண்டிப்பாக ஆலோசனை நடத்துவோம். காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால், எங்களது முடிவை (மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறும் முடிவு) மறுபரிசீலனைச் செய்வோம்.

காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் தான் பிரச்னைகள் ஏற்பட்டதே தவிர, இவற்றுக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினாலும் நாங்கள் இன்னும் நண்பர்கள்தான். எங்கள் நட்பு தொடரும்," என்றார் டி.ஆர்.பாலு.