Published:Updated:

``அங்கமாலி டைரீஸ்... அந்தக் குடும்பத்துக்கு இருக்கும் செருக்குதான் சுவாரஸ்யமே!’’ - பகுதி 21

``அங்கமாலி டைரீஸ்... அந்தக் குடும்பத்துக்கு இருக்கும் செருக்குதான் சுவாரஸ்யமே!’’ - பகுதி 21
News
``அங்கமாலி டைரீஸ்... அந்தக் குடும்பத்துக்கு இருக்கும் செருக்குதான் சுவாரஸ்யமே!’’ - பகுதி 21

`மலையாள கிளாசிக்’ தொடரின் 21 வது பகுதி. `அங்கமாலி டைரீஸ்' படம் குறித்த விரிவான கட்டுரை.

`ஈ மா யு' என்கிற படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் முக்கிய பாத்திரத்தைச் செய்திருந்த செம்பன் வினோத்தான், `அங்கமாலி டைரீஸ்' படத்தை எழுதியவர் என்பதறிந்து வியப்பாக இருந்தது. அதை ஒரு கதை என்றே சொல்லிவிட முடியாது. ஒரு நீண்ட யோசனை, திறனாய்வு மற்றும் ஓரிரு தலைமுறையினரின் உளவியல் என்றெல்லாம் சொல்ல வேண்டும். படத்துக்கு எந்த மாதிரி திரைக்கதை எழுதிக்கொண்டார்கள் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. ஆனால், திரையில் எக்கச்சக்கமாகப் பொருத்தப்பட்ட காட்சிகளால் நமக்கு வந்து சேருகிற வாழ்க்கை, இயக்குநரால் எழுதப்பட்டது. இப்படத்தின் விசேஷமே அதுதான்!. பலருக்கும் விலக்கம் நேர்ந்ததுகூட அதனால்தான். என்ன செய்வது, சினிமா வளர்ந்தவாறு இருக்கும் ஒன்று. அது நம்ம வீட்டுத் தோட்டத்தில் கட்டப்பட்ட மாடு மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. படம் பரபரவென்று பறந்தது. இதற்கு முன்னால் வந்த `பிரேமம்' இந்தக் கூறுகளை அறிமுகம் செய்து விலகி இருந்ததைக் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

படத்தின் கதையைச் சொல்வதற்கு முன்னே வேறு சில விஷயங்கள் இருக்கின்றன. காரணம், படம் கதைக்கு வெளியே பல விஷயங்களைச் சொல்லியவாறு இருக்கிறது. ஒரு மின்னலாய் வந்து விட்டுப்போன ஆளுக்குக்கூட ஒரு மனம் கொடுத்திருப்பார்கள். நாயகனின் அம்மாவுக்கு ஒரு குளோசப் கிடையாது. அதேநேரம் அவர்களைப் பற்றி நாம் முழுமையாய் அறிவோம். படம் தொடங்கும்போது வருகிற தாதா, மலைப்பாம்பின் கறியைச் சாப்பிடுகிறார். அவர் தேவைதானா இந்தக் கதைக்கு? ஆனால், படம் முழுமையடைய அவர் வேண்டியிருந்திருக்கிறார். படத்தில் நடித்த அத்தனைபேரும் புதுமுகங்கள். அது இல்லாமல் நமக்கு உவப்பூட்டக்கூடிய எத்தனையெத்தனை முகங்கள், அதற்கு ஒரு முடிவே இல்லை. இப்படத்தில் நேராகச் சொல்ல ஒரு கதையுண்டு. ஆனால், பக்கவாட்டுகளில் துணுக்குகளாய் வந்து சேருகிற அனைத்துமே அக்கதையின் பல்வேறு திறப்புகளாய் இருந்தவாறிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வின்சென்ட் பெப்பே ஹீரோ. அவனது கதைதான் இது. அவனுடன் இருக்கிற நண்பர்களின் வாழ்வும் கதைப்போக்காகத் தொடர்கிறது. பெப்புக்கு அம்மா, தங்கை இருக்கிறார்கள். அப்பா தண்டத்துக்கு வெளியூரில் ஒரு காமாசோமா தொழில் பண்ணுகிறார். நடுத்தரக் குடும்பம். அங்கமாலியின் சுவாரஸ்யமே அவர்களுக்கு இருக்கக்கூடிய செருக்குதான். அதுவே பிழைப்புக்கு உதவும். அப்படிச் சிறு வயதிலிருந்தே அந்த ஊரின் கால்பந்தாட்டக் குழுவின் தலைவனும் பயில்வானுமான பாபுஜியின் வீரதீர சாகசங்களுக்கு மயங்கி, அவனைப் பின்தொடர்பவர்களாக இருக்கிறார்கள் பெப்பும் அவன் நண்பர்களும். பையன்களும் ஒரு குரூப் அமைத்துக்கொண்டு வளர்கிறார்கள். குடி, டாவடித்தல் எல்லாம் நடக்கிறது. பீர் பீப் போர்க் எல்லாம் சாப்பிட்டுத் தேறுகிறார்கள். கல்லூரியில் அடிதடி. விழுப்புண்கள். சிறு வயதிலிருந்தே ஆதர்சமான சீமா, பெப்புக்கு இப்போது காதலியாகவும் இருக்கிறாள். அவ்வப்போது முத்தமிட்டுக் கொஞ்சிக்கொள்கிற காதல் கிளிகள்.

பாபுஜி ஒருநாள் கடைத்தெருவில் குத்தப்பட்டு இறக்கிறார்.

அவனைக் கொன்றவர்கள் ரவியும் ராஜனும்.

வாழ்க்கை இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.

பள்ளியில் பத்திலும் பன்னிரண்டிலும் எல்லாம் பார்டரில் பாஸ் பண்ணி வந்து, கடைசியாய் கல்லூரியில் கிடைத்த பி.ஏ-வையும் முழுமை செய்யமுடியவில்லை. ஏரியாவில் பெப் கேபிள் டிவி வைத்து சுமாராய் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறான். சக்கி என்கிற ஒரு காதலியுண்டு. அப்படியென்றால், பழைய காதலி என்னவானாள் என்கிற கேள்வி வருகிறதல்லவா... பசையுள்ள இடம் வந்ததும் ஒட்டிக்கொண்டு அவள் தனது சிங்கப்பூர் புருஷனுடன் எஸ்கேப்!. இப்போதைய காதலி சில கோர்ஸுகள் முடித்தவுடன் ஜெர்மனிக்குப் பறக்க வேண்டியவள். பெப்பும் அவளோடு பறந்து அங்கே செட்டிலாக ஒரு விதியிருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறான். எப்படியும், எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். இவனுக்கு என்றில்லை, நண்பர்களுமே அதற்குத்தான் வழி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கமாலி மக்கள் அசைவ ஆள்கள். பன்றி இறைச்சி அங்கே தண்ணீர்போல போகும். பெரிய வணிகமும்கூட!. நண்பர்களுடன் பெப் அதற்கான முயற்சிகளில் இறங்கும்போது ரவியையும், ராஜனையும்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களும் அங்கமாலிக்காரர்கள்தாம். தெரிந்த பையன்கள்தாம். பிழைப்புக்குப் பல காரியம் பார்த்தபிறகு, யாரையோ ஒருவரை வலுக்கட்டாயமாகக் கிளம்பச் சொல்லி இந்தத் தொழிலில் வந்து உட்கார்ந்து தங்களை நிலை நிறுத்திக்கொண்டவர்கள். அவர்களிடம் வியாபாரம் படிகிறது. இவர்கள் கடையை ஆரம்பிக்கிறார்கள். வெற்றிகரமாக அது நடக்கவும் செய்கிறது. ஆனால், ரவியுடனும் ராஜனுடனும் மோதவேண்டிய சூழல்கள் உருவாகின்றன. பகை நாட்டு வெடிகுண்டுகளாக வெடிக்கிறது. ஒருவன் கொல்லப்படுகிறான். அதில் பெப்பும் ஓரிரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவருகிறார்கள். கேஸை முடிக்கப் பணம் வேண்டும். நிறைய வேண்டும்.

லிச்சி டேவிட் ஊருக்குத் திரும்பியிருக்கிறாள். படிக்கிற காலத்தில் குடும்பத்துடன் வெளியூருக்குப் போன குடும்பத்தைச் சேர்ந்தவள். இவனைக் காட்டிலும் மூன்று வயது பெரியவள். சக்கிக்கும் இவனுக்குமிடையே இருக்கிற புகைச்சலைத் தீர்த்துவைக்க லிச்சி முயற்சி செய்கிறாள். பெப் சக்கியிடம் சொல்லிவிட்டு வருவது பிரேக்கப். சரிப்பட்டு வராது என்கிறான். கேஸ் அது இது என்றிருக்கிறேன், அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்பது காரணம். சக்கி அவனுடைய வாழ்விலிருந்து வெளியேறிச் செல்கிறாள். ஒரு போலீஸ்காரியை பெப்பின் நண்பன் மணமுடிக்கிற அன்று குடி, சாப்பாடு, நடனம் போன்ற கொண்டாட்டங்களுக்கு அப்புறம், லிச்சியிடம் பேசிக்கொண்டு ரோட்டில் நடக்கிற பெப்பிடம் அவள், `நான் உனக்குப் பெண் பார்க்கட்டுமா?' என்று கேட்கிறாள். நர போதையில் இருக்கிறாள் அவள்.

அவள் பார்ப்பதாய்ச் சொன்ன பெண், அவளேதான்!.


நான்கு பக்கமும் உள்ள சந்துகளில் புகுந்து முடிந்தவரை பணம் உண்டாக்குகிறார்கள். சாட்சி சொல்லாதிருக்க ரவிக்கும், ராஜனுக்கும் பணம் கொடுக்கிறார்கள். கொல்லப்பட்ட ஆளின் அம்மாவுக்கும், அவனுடைய உறவினர் பையன்களுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. லிச்சி திருமணம் முடிந்த கையோடு ஒரு வாரத்தில் துபாய்க்குச் சென்று தனது வேலையில் இணைந்து கொண்டு விட்டாள். திருவிழா நடக்கிறது. ரவியும், ராஜனும் பெப்பின் வீட்டுக்கு வந்து குடித்து, திருவிழாவைக் களிக்கிறார்கள். கொஞ்சம்பேர் வில்லன்கள் இருக்கிறார்கள். இறந்துபோன பையனின் உறவுக்காரர்கள். அவர்கள் பெப்பைக் கொல்ல முயன்று, அதில் ஒரு நண்பன் இறந்துபோகிறான். கைக்குழந்தையுடன் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த ரவியும் குத்தப்பட்டு மரணமடைகிறான். 

இவர்களுடைய சாவுக்குப் பின்னர் அங்கமாலி கொஞ்ச நாள்களுக்கு அமைதியாய் இருந்திருக்கும். இப்போது குடி, பன்றி இறைச்சியுடன் வாரத்தின் இறுதி நாள்களை நண்பர்கள் கொண்டாடும்போது எனக்கு அவர்கள் போன் பேசுவதுண்டு என்கிறான் பெப். அவன் இப்போது அவனது மனைவி லிச்சியுடன் துபாயில் இருக்கிறான். செட்டிலாகியாயிற்று. இதற்குமேல் நாகரிகமான கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா என்று அவன் முயற்சி செய்யக்கூடும், இல்லையா?

இது என்ன வெறும் ரவுடிகளின் படம் என்று நினைக்கிறவர்கள் இல்லாமல் போவப் போவதில்லை.

மூன்று வேளை உண்டு, நல்ல உடை உடுத்தி, சீரான கூரைக்குக் கீழே சுகமாய்ப் போர்த்திக்கொண்டு தூங்குகிறவர்களை சினிமா, உச்சி முதல் பாதம் வரை சொல்லி அலுத்து முடிந்துவிட்டது. உலகெங்கிலும் குரல் அமுக்கப்பட்டவர்களின் எழுச்சி நிகழ்ந்தவாறு இருப்பதால், விளிம்பு நிலை மக்களின் வாழ்வு கலையிலும் இலக்கியத்திலும் சினிமாவிலும் மேலெழுந்தவாறு இருக்கிறது. ஒரு ஞாயிற்றுக் கிழமையில்  நாம் சட்டையை மாட்டிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போனால், சிக்கனோ மட்டனோ கிடைத்துவிடும். பல பொருள்கள் மட்டுமல்ல, எவ்வளவோ வசதிகளைக் காசிருந்தால் கைக்கருகில் கொண்டு வரலாம். ஆனால், நாமறியாத மறுபக்கத்தில் பிழைப்புக்கான அடிதடியுண்டு. சர்க்கஸ் உண்டு. வலுவுள்ளது பிழைத்து, நோஞ்சானாயிருப்பது அப்படியே முழ்கடிக்கப்படுகிற சம்பவங்கள் சர்வ சாதாரணமாய் உண்டு. பட்டினியில் செத்துப்போகிற குழந்தைகளைப் பற்றின செய்திகளை யார் அறிகிறோம், அறிந்தால் என்ன பொருட்படுத்துகிறோம்? நாம் நமது வேலையைப் பார்ப்பதுபோல, அவர்கள் தங்கள் பிழைப்புக்குக் கரணம் போட்டுக் கொண்டிருப்பார்கள். நீதி எந்த ரயிலில் எப்போது வந்து இறங்குமோ, அவர்களைப் பற்றின சினிமாக்கள் வருவதைத் தடுக்க முடியாது. வெறும் டப்பாவைக் காட்டி காசடிக்கிற ஈனப்பயல்கள் எல்லாம்கூட இந்தக் கதைகளையே சொல்ல வருவதைக் கவனியுங்கள்.

இதையெல்லாம் படம் பார்த்த கொந்தளிப்பில் நான் அடுக்குவதே தவிர, இப்படத்தில் நியாய தர்மம் எதுவும் பிரசங்கம் செய்யப்படவில்லை. பல காட்சிகளில் நமது மனம் நிறைகிற தருணங்கள் உண்டு. கதைப்படி லிச்சியுடன் பெப் நடந்தான் என்பது லைன். ஆயின் அது என்ன மாதிரி ஒரு காட்சி? வீட்டிலிருந்து பைக்கை எடுத்து தங்கையை ஏற்றிக்கொள்ளப் போகும்போது, இவளைக் கட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதே என்று துவங்கி ரோட்டில், தெருவில் அவன் பார்க்கிற காட்சியை எல்லாம் சொல்லிப் போகிற மனப்போக்கைத் தொடர்வது ஒன்று போதும். அதைப்போல டைட்டிலின்போது ஒரு திருவிழா துவங்குவதற்கான சப்தங்களை அரைகுறையாகச் சொல்லும்போதே, நாம் எதற்கோ முனைப்பு கொள்கிறோம். பையன்கள் ஒரு சடலத்தின் கையை உடைக்கிற காட்சியொன்று வருகிறது. அதற்குப் பின்னால் கொஞ்சம் அறம். நான் படித்திருக்கிறேன், மனிதனுக்கு கஷ்டங்கள் வரும்போதுதான் வயது அதிகரிக்கத் துவங்குகிறது என்கிற ஒரு எண்ணவோட்டம் அவ்வளவு பொருத்தமான இடத்தில் வரும். எழுத்தாளனான செம்பன் வினோத்தைக் கட்டியணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

எல்லோரும் புதுமுகங்கள் என்பதற்குத் தலைமேல் அடித்து சத்தியம்தான் பண்ணவேண்டும். அசத்தலான பாடல்கள். திடுக்கிட வைக்கிற எடிட்டிங். ஒளிப்பதிவாளர் எங்கேயாவது சரி விடு பாத்துக்கலாம் என்று வழுக்கவே இல்லை. அவர் கட்டி வைத்து கட்டுப்பாட்டுடன் கொண்டு வந்த மூட், இதோ இன்னும் கண்ணில் நிற்கிறது!. `ஈ மா யு' அற்புதமான படம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படத்தை இயக்கிய லிஜா ஜோஸ்தான் அதையும் செய்தார். அவ்வளவு அற்புதமான படம். அதன் உள்ளடக்கம், போக்கு, மனித உணர்வுகளை எடுத்துவைத்த நோக்கம் அத்தனையுமே பிரமாதம்!. முழுமையான திரைக்கதை கொண்டு நடந்த அந்தப் படம் அது ஒரு முழுமையான சினிமா. நான் அதைக்காட்டிலும் இதைத்தான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

ஏற்றுக்கொள்வதையும், மறுப்பதையும் அவர்களுடைய விருப்பத்துக்கும் விட்டு விடலாம்.

குறைந்தபட்சம் இவ்வளவு ஜனங்களை வைத்துக்கொண்டு அதை நெருடலில்லாமல் கொண்டு சென்ற லிஜோ, இதற்குமேல் எம்மாதிரி எளிமையையும், அல்லது பிரமாண்டத்தையும் கையாள முடியும். தப்பித்தவறி ஓர் அறிவுஜீவி மாதிரி பேசிவிடாத அவருடைய எளிமையில் மக்களின் மீதான நோக்கமொன்று உண்டு. நான் அதைத்தான் விசேஷம் என்று மயங்குகிறேன். நல்ல மனம், அதனால் நல்ல படைப்பு என்பது பல சூத்திரங்களில் ஒன்றாய்கூட இருக்கலாம். ஆனால், ரத்தம் தெறிக்கிற படங்களில்கூட நெகிழ்வைச் சாத்தியப்படுத்த எவ்வளவோ பார்வைகள் விரிவடைந்திருக்க வேண்டும்.