Published:Updated:

இரவுகளில் நண்பர்களோடு உரையாடிய இடத்திலேயே நீங்காத்துயில் கொண்ட கருணாநிதி!

தி.மு.க தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்படும்போதெல்லாம் பெங்களூருவில் இருக்கும் தனது மகளின் இல்லத்துக்குச் சென்று ஒரு வாரம் இருந்துவிட்டு வருவார்.

இரவுகளில் நண்பர்களோடு உரையாடிய இடத்திலேயே நீங்காத்துயில் கொண்ட கருணாநிதி!
இரவுகளில் நண்பர்களோடு உரையாடிய இடத்திலேயே நீங்காத்துயில் கொண்ட கருணாநிதி!

`` `வாழ்கையில் போராட்டம் இருக்கலாம். ஆனால், போராட்டமே வாழ்க்கையாகிவிடக் கூடாது' என்பார்கள். ஆனால், எனக்கு வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது'' என்று ஒருமுறை கலைஞர் கருணாநிதி கூறினார். பதின்மூன்று வயதில் திருவாரூர் தெருக்களில் தொடங்கிய அவரது போராட்டம் மெரினா வரையிலும் நீடித்திருக்கிறது.

தமிழர் வாழ்வு நலம் பெற, அவர் அரசியல் ரீதியாகவும் அரசு ரீதியாகவும் மரணம் வரையிலும் மரணத்துக்குப் பின்னும் போராடிய போராட்டங்கள் ஏராளம்.

``பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்...

படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன

தென்றலைத் தீண்டியதில்லை 

தீயைத் தாண்டி இருக்கிறேன்'' 

என 70 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய `பராசக்தி' திரைப்படத்தின் வசனமே அவரது வாழ்க்கையாகிப் போனது.

ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பெரியாருக்கு இணையாக எவராலும் சிந்திக்க முடியாது. அந்தச் சிந்தனையைப் பாமரரும் புரிந்துகொள்ளும்விதமாக அறிஞர் அண்ணாவைப் போல் எவராலும் எழுத முடியாது. பெரியாரின் சிந்தனை, அண்ணாவின் எழுத்து அத்தனையையும் தன் அரசியல் மூலம் சட்ட வடிவமாக்கி மக்கள் பயனடையச் செய்தவர் கருணாநிதி.

திராவிட இயக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பெரிதும் உதவின. எம்.ஜி.ஆர்தான் தன் திரைப்படங்களின் வாயிலாகத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தி.மு.கவைக் கொண்டுசேர்த்தார். ஆனால், மக்கள் திமுகவைக் கீழே வைத்துவிட்டு, எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டனர்.

1952 பராசக்தி தொடங்கி 1972 - ல் எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து பிரிந்து போகும்வரை அரசியலில் ஏறுமுகமாக இருந்த கருணாநிதியின் அரசியல் கிராஃப் அதன் பிறகுதான் இறங்குமுகமானது. 

1956 - ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற இடங்கள் 15 .

1962 - ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற இடங்கள் 50.

1967-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற இடங்கள் 138

1971 - ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற இடங்கள் 184

1972 - அக்டோபர் 14 - ம் தேதி கட்சிப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்குகிறார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவு.

1977-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வெற்றிபெற்ற இடங்கள் 48. எதிர்க்கட்சியாக தி.மு.க அமர வேண்டிய நிலை ஏற்படுகிறது.

1980 - ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற இடங்கள் 38

1984-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற இடங்கள் 24

1987 டிசம்பர் 24 -ம் தேதி எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்றது. ஆனால், தமிழ் ஈழப் பிரச்னையால் ஓர் ஆண்டிலேயே 1991 ஜனவரியில் ஆட்சியை இழந்தது.

1991 - நடைபெற்ற மே 21- ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மீண்டும் உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் பறவையாக 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.

இப்படியாக திமுகவின் தேர்தல் சரித்திரத்தில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறியே நிகழ்ந்திருக்கின்றன.

1976 முதல் 1989 வரை 13 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் தலைமையிலான அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க் கட்சியாகவும் செயல்பட வேண்டிய நிலை. இது திமுகவுக்கு மிகப் பெரிய `வனவாச காலம்' என்றே சொல்லலாம். இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட கட்சியையும் கட்சித்தொண்டர்களையும் கட்டுக்கோப்பாக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் வைத்திருந்து இருக்க முடியுமா? என்பது சந்தேகமே. அதற்கு அசாத்தியமான துணிச்சலும் மனக்கவலைகளை மடை மாற்றிக்கொள்ளும் குணமும் அவருக்கு இருந்ததுதான் காரணம்.

பொதுவாக தி.மு.க தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்படும்போதெல்லாம் பெங்களூருவில் இருக்கும் தனது மகளின் இல்லத்துக்குச் சென்று ஒரு வாரம் இருந்துவிட்டு வருவார். ஆனால், அங்கிருந்தாலும் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதுவதையும் முரசொலியில் வர வேண்டிய செய்திகளைப் பார்வையிட்டு ஒப்புதல் அனுப்பவும் அவர் தவறுவதில்லை. 

ஒரு முறை அவர் பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, உடல்நலம் குன்றியிருந்த அவரது முதல் மனைவியின் இறப்புச் செய்தி துண்டுச் சீட்டாக அவர் கைக்கு வருகிறது. அதைப் பார்த்துக் கலங்கிய அவர் தன் கலக்கத்தை வெளியில் காண்பிக்காமல் சட்டைப்பையில் வைத்துவிட்டு தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுத்தான் கூட்டத்தை முடித்தார். வலிகளை வலிமையாக்கி அதையே வாழ்க்கையாக்கிக் கொண்டதற்கு இந்த நிகழ்வொன்றே மிகச் சிறந்த உதாரணம். 

`குறளோவியம்' தீட்டிய கலைஞருக்குத் திருவள்ளுவருக்குக் கோட்டம் அமைக்கவேண்டும் என்பது பேராவலாக இருந்து வந்தது. 1974 - ம் ஆண்டு செப்டம்பர் 18 - ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட வள்ளுவர்கோட்டத்தைக் கலையழகும் சிலையழகும் மிக்கதாகப் பார்த்துப் பார்த்து செதுக்கச் செய்தார். ஆனால், எமர்ஜென்சி அமலுக்கு வந்ததால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் ஆசை ஆசையாகக் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை இவரால் திறக்கமுடியவில்லை. 

1976 - ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் வள்ளுவர் கோட்டத்தை அப்போதைய கவர்னர் ஆட்சியில் திறந்துவைக்கப்பட்டது. ``மகளின் திருமணத்தைக் கீற்றுப் பந்தலில் பார்த்து மகிழும் தாயைப்போல் முரசொலி அலுவலகத்திலிருந்து என் வாழ்நாள் குறிக்கோளில் ஒன்றான வள்ளுவர் கோட்ட திறப்புவிழாவைப் பார்த்து மகிழ்கிறேன்'' என்று குறிப்பிடுகின்றார். தன்னுடைய தாளாமுடியாத மனச்சோகத்தை இப்படி ஆற்றுப்படுத்துகிறார்.   

அரசியல் பிரச்னையோ, சொந்த வாழ்க்கை பிரச்னையோ இவற்றால் மனக் கவலையடைந்தால், இரவு பொழுதுகளில் தனக்கு நெருக்கமான நண்பர்களுடனோ, குடும்பத்தினர்களுடனோ மெரினா கடற்கரையிலிருக்கும் அண்ணா சமாதி அருகில் அமர்ந்து இளைப்பாறுதல் அடைவது வழக்கம். சில வேளைகளில் நள்ளிரவு வரை நிலவுகால ஒளிவெள்ளத்தைப் பார்த்து மகிழ்ந்துவிட்டு வருவார்.

`கல்லக்குடிப் போராட்டம்', `இந்தி எதிர்ப்புப் போராட்டம்', `விலைவாசி உயர்வு போராட்டம்' எனப் போராடும்போதெல்லாம் சிறை செல்ல வேண்டி வரும். சிறையிலிருந்தாலும் படிப்பதையும், எழுதுவதையும் கருணாநிதி நிறுத்தமாட்டார். சிறையிலிருக்கும்போதே திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். `சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்' என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அவர் 13 முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதல்வராகவும் பலமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். அதிக நாள்கள் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்திருக்கிறார். 

எத்தனையோ தடைகள் போராட்டங்கள் வந்தாலும் அவர் எப்போதும் தன்னை சுறுசுறுப்பாகவும், உழைத்துக்கொண்டிருப்பவராகவுமே வைத்திருந்தார். ஒன்று படிப்பார் அல்லது எழுதுவார், இல்லாவிட்டால் பேசுவார். இவற்றுடன் எல்லாச் சூழ்நிலைகளிலும் நகைச்சுவை இழையோட பேசி சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்குவார். இதனால்தான் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மன அழுத்தம் இல்லாத லட்சியத் தலைவராக கருணாநிதி திகழ முடிந்தது.