Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் வசந்த பாலன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் வசந்த பாலன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

'விகடன் தலையங்கம் படிச்சீங்களா மாப்ள... கொன்னுட்டான்ல கொம்பன் (விகடன் தாத்தாவை)!'' என்று என் தாத்தா சிலாகித்துப் பேச, என் அப்பாவும் ஆமோதிப்பார். மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே அப்படி ஓர் உறவும் உரையாடலும்அதிகாலை யிலேயே டிகிரி காபியுடன் தொடங்கும்.

'ஒரு ஜோக்கை விகடன் அட்டையில போட்டதுக்கு அரெஸ்ட் பண்ணிட்டான் பாத்தீங்களா மாப்ள. சனி, ஞாயிறு கோர்ட் லீவு. ஒரு ஜோக்கைப் பாத்துப் பயப்படுற அளவுக்கு அரசாங்கம் நடத்துறாங்க!'- ஆச்சியின் மடியில் படுத்துக்கொண்டே இதைக் கேட்டுக்கொண்டு இருப்பேன். கோர்ட்டில் ஹெட் கிளார்க்காக இருந்த தாத்தா, அதிகாலை 5 மணியில் இருந்து திருவாசகம், அந்தாதியுடன் இந்து, விகடன் என எல்லா பத்திரிகைகளை யும் படித்துத் தீர்ப்பார்.

நானும் விகடனும்!

புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ருசி, அங்கு இருந்துதான் கிளம்பி யது.  நாவல் பழ ருசி போல உள்நாக்கு வரை ஒட்டிக்கொண்டு இன்றுவரை விதவிதமான புத்தகங்களுடன் வாழும் புழுவாக என்னை அந்த ருசி மாற்றிவைத்திருக்கிறது.  

அப்பா, மின்சார வாரியத்தில் கிளார்க் ஆக இருந்தார். அலுவலகத்தில் புக் கிளப் நடத்திக்கொண்டு இருந்ததால், எல்லா வார இதழ்களும் வீட்டுக்கு வரும். விகடன் ஜோக்குகளை... கார்ட்டூன்களை அவ்வளவு ஆர்வமாகப் பார்ப்பேன். எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'பயணி கள் கவனிக்கவும்’, சுஜாதா எழுதிய 'ஆ’, 'பூக்குட்டி’ தொடர்கள், ஸ்டெல்லா புரூஸ், மேலாண்மை பொன்னுச்சாமி, உத்தம சோழன், என விகடனில் வரும் தொடர் களை இடைவிடாது படிக்கத் தொடங் கினேன். 'எப்பப் பாத்தாலும் என்ன கையில கதைப் புத்தகம்? இப்ப ஒருத்தனுக்கு வெளக்குமாறு  பிய்யப்போகுது’ என அம்மா கத்திக்கொண்டே இருப்பாள்.

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளில் நூலகத்திலேயே பழியாகக்கிடப்பேன். விழிப்பு உணர்வு சிறுகதைப் போட்டியை விகடன் நடத்தி யது. வெற்றி பெற்ற சிறுகதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு, சிறுகதை எழுத வேண்டும் என்ற மயக்கம் ஏற்பட்டது.

'தாத்தாவின் குடை’ என்று டைட்டிலுடன் விகடன் முகவரிக்கு அனுப்பினேன். அப்போது ஏற்பட்ட உணர்வை எப்படிச் சொல்வது? அது ஒருவிதமான மகிழ்ச்சி. மயக்கம். முதல் காதல் போன்ற ஒருவிதக் கிளர்ச்சி. இனி, வாழ்க்கையில் எப்போதும் ஏற்படவே ஏற்படாத ஓர் உணர்வு அது.

10 நாட்களில் 'கதையைப் பிரசுரிக்க  இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று விகடனில் இருந்து ஒரு கடிதம் வந்தது. பள்ளியில் அனைவரிடமும் விகடன் கடிதத்தைக் காட்டி பெருமை அடித்துக்கொண்டே இருந்தேன். தம்பியின் உண்டியலில் அவன் சேர்த்துவைத்திருக்கும் பணம்; புடவைக்கு அடியில், அஞ்சறைப்பெட்டி யில் அம்மா வைத்திருக்கும் சிறுவாடு; கிழிந்தபோன பர்ஸில் ஆச்சி வைத்தி ருக்கும் பணம் எல்லாம் என் கதை ஆர்வத்தின் விளைவால் ஸ்டாம்ப்புகளாக மாறின. 100 சிறுகதைகள் எழுதி இருப்பேன். தவறிப்போய் ஒரு கதைகூட பிரசுரம் ஆனது இல்லை. படிப்பு நினைவில் இருந்து தப்பத் தொடங்கியது!

விருதுநகர் பொட்டலில் பருத் திப் பால் குடித்துக்கொண்டே, 'ஏன்டா ஒரு கதைகூட வர மாட்டேங்குது? வேற ஏதாவது வழியிருக்கா பாப்போம்’ என, விருதுநகரில் யாரெல்லாம் பத்திரிகைகளில் எழுதுறாங்க எனத் தேடிப் போய், விருதை ராஜா, விருதை கே.டி.ஆர்.சேகர் இரண்டு பேரையும் பார்த்தேன்.

''முதல்ல வாசகர் கடிதம் எழுதுங்க தம்பி. அப்புறம் மெள்ள மெள்ள கதை வரும்'' என்றனர்.

அடுத்த வாரமே விகடனில் என் வாசகர் கடிதம் வந்தது. 'ஜி.பாலன், விருதுநகர்’ என  வாசகர் கடிதம் வந்த விகடனை சைக்கிள் ஹேண்டில் பாரில் வைத்துக்கொண்டு ஊரையே குறுக்கும் நெடுக்குமாக அளந்தேன். ஐந்து விகடன்கள் வாங்கினேன். அதற்குப் பிறகும் வாசகர் கடிதம் பல முறை வந்தது. கதைதான் வந்தபாடு இல்லை!

கதைகளுக்குள் பஞ்சு மிட் டாய் உருளையாகச் சுற்றிக்கொண்டு இருந்தவன் சினிமா உலகத்துக்குள் உதவி இயக்குநராக வந்து சேர்ந்தேன்.  ஷங்கர் சாரிடம் 'ஜென்டில்மேன்’ படத் தில் கடைசி உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். 'ஜென்டில்மேன்’ படம் வெளிவந்தது. விகடன் 50 மார்க் தந்தது. இயக்குநர் உட்பட எங்கள் யூனிட்டே கொண்டாடினோம்!

இணை இயக்குநரிடம் கேட் டேன், 'ஏன் சார், நூத்துக்கு அம்பது மார்க் ஆவரேஜ் மார்க்தானே? இதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு சந்தோஷப்படுறீங்க? எங்க தமிழ் வாத்தியார்கூட இதைவிட அதிகமா மார்க் போடுவாரே!’

நானும் விகடனும்!

என்னை அவர் முறைத்துப் பார்த்தார். 'தமிழ் சினிமாவிலயே '16 வயதினிலே’ படத்துக்குத்தான் 62 1/2 மார்க்... 'நாயகன்’ படத்துக்கு 60 மார்க், ’ என்று மெதுவாக விகடனின் மதிப்பெண் மகிமையைப் பற்றிய  கதைகளை சரம்சரமாக என் மீது ஏவிவிட்டார்.

சக உதவி இயக்குநர்கள் விகடன் கதை களை விலாவரியாகச் சொன்னார்கள்.  'விகடன்ல 50 மார்க் வாங்கற மாதிரி படம் எடுத்துட்டு, நான் செத்துருவேன் மாப்ளே...’, ' ஒரு நல்ல படத்தை ஓடவைக்கிற சக்தி விகடனுக்கு இருக்கு மாப்ள...’, 'சவுத்ல நிறை யப் பேர் விகடன் விமர்சனத்தைப் படிச்சுட்டுத்தான் படத்துக்கே போவாங்க!’ என்று புள்ளிவிவரக் கணக்குகளை அடுக்கினார்கள். அதன் பிறகு விகடனின் விமர்ச னங்களை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

விகடனில் ஜெயமோகன் எழுதிய 'சங்கச் சித்திரங்கள்’ தொடரைப் படித்த பிறகே ஜெயமோகனின் பிற படைப்புகளைத் தேடிப் பிடித்துப் படித்து அவர் ரசிகன் ஆனேன். சுஜாதாவின் 'கற்றதும்... பெற்றதும்...’, எஸ்.ராமகிருஷ்ணணின் 'துணையெழுத்து’, வண்ணதாசனின் 'அகம் புறம்’, நாஞ்சில்நாடனின் 'தீதும் நன்றும்’, ஃபிரான்சிஸ் கிருபாவின் 'மல்லிகைக் கிழமை’, செழியனின் உலக சினிமா தொடர், ஞாநியின் ஓ... பக்கங்கள்,  இப்படி எப்போதுமே விகடன் என் ஜன்னலாக இருந்தது... இருக்கிறது!

நான் இயக்கிய முதல் படம் 'ஆல்பம்’ படத்தின் விமர்சனம் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து வந்தது. அப்போதைய மன அழுத்தத்தில் அதைக் கவனிக்கவில்லை.  'வெயில்’ படத்தின் முன்னோட்டமாக இயக்குநர் ஷங்கர் சார் பேட்டி. அதில் நான், ஷங்கர் சார், பாலாஜி சக்திவேல், சிம்புதேவன் இருக்கிற டபுள்ஸ்பிரட் படம் விகடனின் நடுப் பக்கத்தில் வந்தது. இன்றும் அது ஃப்ரேமுக்குள் இருந்தபடி என் வீட்டுச் சுவரை அலங்கரிக்கிறது.

விருதுநகர் தெருக்களின் அழகை ரசித்த விகடன், முழுப் பக்கம் 'வெயில்’ ஸ்டில்ஸைப் பிரசுரித்து இருந்தது. 'வெயில்’ ரசிகர்களால் கவனிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 'வெயில்’ விமர்சனம் 43 மார்க்குடன் வந்தது. ஒரு படைப்பாளியாக எனக்கு அந்த மதிப்பெண் திருப்தி தரவில்லை. அடுத்த வாரம் 'வெயில்’ வெற்றியையும் என்னையும் பற்றி நா.கதிர்வேலன் எழுத்தில் அழகான பேட்டி வந்தது.

கேன்ஸ் போய் வந்த பிறகு ஒரு பேட்டி, தேசிய விருது கிடைத்த பிறகு ஒரு பேட்டி, இயக்குநர் பாலசந்தர், பாரதிராஜா, அடூர் கோபாலகிருஷ்ணன், லோகித தாஸ், சிபி மலயில், மம்மூட்டி, சேரன் போன்றவர்களின் பேட்டிகளில், 'பிடித்த படம் வெயில்’ என்று குறிப்பிட்டதைத் தவிர்க்காமல் வெளியிட்டது, 'வெயில்’ படத்தை தமிழின் மிக முக்கியமான படங்கள் வரிசையில் அமர்த்தியது.

புதுமுகங்களுடன் பரிசோதனை முயற்சியாக 'அங்காடித் தெரு’ படம் தொடங்கிய சமயம், அட்டைப் படத்தில், சுவர் விளம்பரங்களில்  'அங்காடித் தெரு’ ஸ்டில்ஸைப் போட்டு புதுமுகங்களை விகடன் ஊக்குவித்தது. 'அங்காடித் தெரு’ பற்றிய கவனம் தமிழ் சினிமா எங்கும் பரவியது. அந்தப்

நானும் விகடனும்!

படத்தைப்பற்றி மூன்று பேட்டிகளை வெளியிட்டு 'அங்காடித் தெரு’ முக்கியமான படம் என்ற தோற்றத்தை விகடன் ஏற்ப டுத்தியது.

'அங்காடித் தெரு’ விமர்சனத்தில் குறைகள் என்று எதையும் குறிப்பிடாமல் பாராட்டி 47 மார்க் போட்டது. அடுத்த வாரம் 'நான் வசந்தபாலன் ஆனது எப்படி?’ என்ற பேட்டியை வெளியிட்டது. இன்றைக்கு இருக்கும் வசந்தபாலன் பற்றிய மாற்று சினிமா தோற்றத்தை விகடன்தான் உலகத்துக்கு உணர்த்தியது.

விகடனின் முதிர்ச்சியும் அடர்த்தியும் நேர்த்தியும் அழகியலும் இலக்கியமும் பூத்துக் குலுங்கும் இளமையும் குறையாத சுவாரஸ்யமும் நேர்மையும்தான் விகடனின் வெற்றி ரகசியம்!''